முதலில் நான் கம்னாட்டி படம் என்றே படித்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் முகநூலில் பிரபு காளிதாஸ் இந்தப் படத்தைப் புகழ்ந்து எழுதித் தள்ளியிருப்பதைப் படித்து விட்டு சரியாக எழுத்துக் கூட்டிப் படித்தேன். பொதுவாக எனக்கு மலையாளப் படங்கள் பிடிக்காது. அவர்களின் சென்ஸிபிலிட்டிக்குள் என்னால் நுழைய முடிவதில்லை. முன்பு மலையாள செக்ஸ் படங்களும் அப்படித்தான். பிடிக்காது. மலையாள கலைப் படங்கள் (அடூர்) என்றால் காத தூரம் ஓடி விடுவேன். ரொம்பப் பேர் பிரேமம் பாருங்கள் என்றார்கள். அந்தப் பெயரே எனக்கு அலர்ஜி. அதனால் பார்க்காமலே இருந்தேன். பிறகுதான் ஒருநாள் எதேச்சையாகப் பார்த்து மிரண்டு போனேன். இப்போது பிரபு காளிதாஸ் கம்மட்டி பாடம் படத்தைப் பார்க்காவிட்டால் நீங்கள் சினிமா ரசிகனே இல்லை என்று போன் செய்து மிரட்டி விட்டார். பிரபுவுக்கும் எனக்கும் சினிமாவில் நூற்றுக்கு நூறு ஒத்துப் போகும். (இலக்கியத்தில் கொஞ்சம் உரசல் உண்டு. அது இங்கே வேண்டாம்.)
கம்மட்டி பாடம் எங்கே பார்க்கலாம் என்றால் வேளச்சேரியில் 9.45 ஷோ. மூணேகால் மணி நேரப் படம். வீட்டுக்கு நள்ளிரவு திரும்பினால் பப்பு ஸோரோ இரண்டும் ரகளை செய்து (அப்பா வந்து விட்டாராம். அதனால் ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதித்து) ஊரைக் கூட்டி விடும். அது கூடப் பரவாயில்லை. பப்புவின் பின்னங்கால் ஒன்று ஊனமாகி விட்டதால் குதிக்கிற குதியில் ஊனம் இன்னும் வலுப்பட்டு மறுநாளிலிருந்து நடக்க முடியாமல் போய் விடும். அதனால் நள்ளிரவில் திரும்புவது சாத்தியமே இல்லை. எங்காவது வேளச்சேரி பஸ் ஸ்டாண்டிலேயே படுத்துத் தூங்கி விட்டு மறுநாள் காலை திரும்பலாம் என்று பார்க்கிறேன். ஜாக்கிரதையாக செல்ஃபோன், செயின் எல்லாவற்றையும் வீட்டிலேயே வைத்து விட்டுப் போக வேண்டும். ஆமாம், இப்போதெல்லாம் போலீஸ்காரர்கள் சந்தேகக் கேஸில் பிடிக்கிறார்களா?