இறைவி விமர்சனம் முழுமையாக…

இறைவிக்கு இதற்கு முன்பு எழுதிய விமர்சனம்:

http://charuonline.com/blog/?p=4569

கார்த்திக் சுப்பராஜின் ’ஜிகிர்தண்டா’ வித்தியாசமான கமர்ஷியல் சினிமாவாக இருந்ததால் ’இறைவி’ வெளிவந்த முதல்நாளே போய்ப் பார்த்தேன்.  சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கை காலைக் கட்டி செப்டிக் டாங்க்கில் போட்டு விட்டது போல் இருந்தது.  இது ஒரு மோசமான படம் என்றால் கூட வெறுமனே கடந்து போய் விடலாம்.  ஆனால் தமிழ்நாட்டுக் கலாச்சார அவலத்தின் குறியீடாக, மதிப்பீடுகளின் வீழ்ச்சியின் அடையாளமாக விளங்குகிறது ’இறைவி’.

அருள் (எஸ்.ஜே. சூர்யா)  ஒரு சினிமா இயக்குனர்.  அவருடைய படம் ஒன்று வெளிவராமல் கிடக்கிறது.  உலக மகா காவியம்.  அவரே அதைப் பலமுறை சொல்லிக் கொள்கிறார்.  முழுநேரமும் – காலையில் ஆறு மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணி வரை – குடித்துக் கொண்டு கிடக்கிறார்.  காரணம், தன்னுடைய உலக மகா கலைப்படைப்பு வெளிவராமல் தூங்குகிறது.   அருளின் தம்பி ஜெகனும் (பாபி சிம்ஹா) நண்பன் மைக்கேலும் (விஜய் சேதுபதி) சேர்ந்து குடிக்கிறார்கள்.  குடி, குடி, குடியோ குடி.  எல்லோருமே செயின் ஸ்மோக்கிங்.  ஏதாவது அர்த்தபூர்வமாகப் பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை.  சூர்யாவுக்கு ஆறு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை.  குழந்தை பள்ளிக்கூடம் கிளம்பும் நேரத்தில்தான் பாரிலிருந்தே போதையுடன் தள்ளாடியபடி வீட்டுக்கு வருகிறார் சூர்யா.  மனைவி கொஞ்சமாக முகம் சுளிக்கிறார்.  இப்படியே இருக்க மாட்டேன், ஒருநாள் டிவோர்ஸ்தான் என்று மிரட்டுகிறார்.  ஆனாலும் அந்தக் காலத்து நளாயினி மாதிரிதான் கணவனைப் புரிந்து கொண்டு அவன் குடிப்பதையும் புரிந்து கொள்கிறார்.  கூடையில் தூக்கி வைத்துக் கொண்டு தேவடியாள் வீட்டுக்குப் போவாரோ என்று பார்த்தேன்.  ம்ஹும்.  அருள் நல்லவர்.  தேவடியாள் வீட்டுக்கெல்லாம் போக மாட்டார்.   தன் உலக மகா காவியம் வராமல் தள்ளிப் போகிறதே என்ற கவலையில்தானே குடிக்கிறார்?

நண்பன் மைக்கேலுக்கு ஒரு காதலி.  அவளுக்கு இந்தக் காதல் கத்தரிக்காய் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை.  ஆண் பெண் உறவின் அடிப்படை செக்ஸ் என்ற மூன்றெழுத்து.  இவ்வளவு ’புரச்சி’  பேசும் பெண் ஏன் செக்ஸ் என்ற சாதாரண வார்த்தையைச் சொல்ல வெட்கம்?  மூன்றெழுத்து மூன்றெழுத்து என்கிறாளே தவிர அது என்ன மூன்றெழுத்து என்று சொல்ல மாட்டேன் என்கிறாள்.  நாமாகத்தான் செக்ஸ் என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  அந்தப் ’புரச்சிப்’ பெண்ணிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி நச்சரித்துக் கொண்டே இருக்கிறார் விஜய் சேதுபதி.  அவளோ மூன்றெழுத்து மூன்றெழுத்து என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார். வெறுத்துப் போன விஜய் சேதுபதி தன் பெற்றோரிடம் உங்கள் இஷ்டப்படியே நீங்கள் பார்க்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறார்.   நடந்து கொண்டிருப்பது என்ன 1960ஆ?  இப்போதெல்லாம் ’திருமணம் பண்ணாமலே சேர்ந்து வாழ்தல்’ என்பது சர்வசாதாரணமாகி விட்ட நிலையில் அது பற்றி ஏன் மைக்கேல் யோசிக்கவில்லை?  யோசனை என்ற விஷயத்துக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் டாக்டர் உள்பட எல்லோரும் பைத்தியம் என்றால் அங்கே என்ன லாஜிக் எதிர்பார்க்க முடியும்?  அப்படித்தான் இருந்தது படம் பூராவும்.  விஜய் மணக்கும் பெண் அஞ்சலி.  முதலிரவில் அஞ்சலி வந்து கட்டிலில் அமர்ந்ததும் சிகரெட்டைப் பற்ற வைக்கிறார் விஜய்.  அடப்பாவிகளா, இப்படியெல்லாம் நோவா கிரகத்தில் கூட நடக்காது போலிருக்கிறதே?  ஓ சிகரெட் குடிப்பீங்களா?  இது அஞ்சலி.  தோபார், நான் இஷ்டப்பட்டு உன்னைக் கட்டிக்கல.  பலவந்தப்படுத்தியே திருமணம் செய்து வைத்தார்கள் என்று சொல்லி விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டு விடுகிறார் விஜய்.

தயாரிப்பாளரிடம் மத்தியஸ்தம் போகிறார்கள் சூர்யாவின் மனைவியும் தந்தையும்.  ஆறு கோடி கொடுத்து படத்தை வாங்கிக் கொள்ளச் சொல்கிறார் தயாரிப்பாளர்.

ஆறு கோடிக்கு என்ன செய்வது என்று சகோதரர்களும் நண்பன் விஜய் சேதுபதியும் தந்தையும் மருமகளும் ஆஸ்பத்திரியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  ஏனென்றால், சூர்யாவின் அம்மா நீண்ட நாட்களாக கோமாவில் இருக்கிறார்; படம் பூராவும் குடித்து விட்டுக் கத்துவது போலவே அந்த ஆஸ்பத்திரி அறையிலும் கத்துகிறார் சூர்யா.  ஒரு மனிதன் அதிகபட்சம் எத்தனை டெசிபலில் கத்த முடியும்?  அந்த அளவுக்குக் கத்துகிறார்.  நர்ஸ் வந்து ஆட்சேபிக்கிறார்.  அவர் போனதும் மறுபடியும் அதே டெலிபலில் கத்துகிறார் சூர்யா.  மறுபடியும் நர்ஸ் வந்து ஆட்சேபிக்கிறார்.  மறுபடியும் அதே டெலிபலில் கத்துகிறார் சூர்யா.  என்ன, போரடிக்கிறதா?  உண்மையைச் சொன்னால் பத்து நிமிடத்திலேயே நான் தியேட்டரை விட்டு வெளியே ஓடியிருப்பேன்.  ஆனால் கடைசி சீட்டில் அமர்ந்திருந்ததால் 15 பேர் காலை மிதித்துக் கொண்டு போக வேண்டும்.  மேலும், இருட்டில் படிக்கட்டில் தவறி விழாமல் போவதும் கஷ்டம்.  அதனால் இடைவேளை வரை காத்திருந்து இடைவேளை என்ற வார்த்தையைப் பார்த்ததும் ஓடியே வந்து விட்டேன்.

ஒரு படம் மோசமாக இருப்பதால் ஒன்றும் பிரச்சினை இல்லை.  ஆனால் சமூகச் சீரழிவை ஊக்குவிக்கிறது இறைவி என்பதுதான் பிரச்சினை.  ஆறு கோடிக்கு ஒரு இறைவி சிலையைத் திருடி விடலாம் என்கிறார் பாபி.  சூர்யா ஆட்சேபிக்கிறார்.  இந்த விஷயம்தான் நான் மேலே குறிப்பிட்ட ஆஸ்பத்திரி சீனில் விவாதிக்கப்பட்டது.  பாபியோ நான் ஏற்கனவே வெற்றிகரமாகத் திருடி விற்றிருக்கிறேன், நோ ரிஸ்க் என்கிறார்.  விவாதத்தின் முடிவில் சரி, திருடு என்று அனுமதி கொடுப்பவர் தந்தை ராதா ரவி.  அதற்கு அவர் சொல்லும் காரணம், ஒரு கலைப்படைப்பை வெளியே கொண்டு வருவதற்காக இன்னொரு கலைப்படைப்பைத் திருடுவதில் தப்பு இல்லை.

அட அடா, என்ன ஒரு மகத்தான தத்துவம்!  சிலைத் திருட்டு பற்றி சினிமாவில் வரக் கூடாது என்று சொல்லவில்லை.  ஏதோ கடையில் போய் சிகரெட் வாங்குவதைப் போல சிலை திருடுவது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  அதுதான் பிரச்சினை.  இந்தப் படத்தைப் பார்க்கும் இளைஞர்களும் சிலை திருடுவது என்பது டீ குடிப்பது போலத்தான் என்று யோசிப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

இறைவி என்றால் இறைவனின் பெண்பால். பெண்களை உயர்த்திப் பேசும் படம் இது என்று பல பேட்டிகளில் சொன்னார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.  அது என்னவென்று பார்த்தால், அஞ்சலி பாத்திரம் அந்தக் காலத்து நளாயினி போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது.  அஞ்சலி கர்ப்பமும் ஆகிறாள்.  அந்த நிலையில் பழைய காதலியிடம் வருகிறார் விஜய்.  ”ஏய் இப்போ நீ என்னதான் சொல்றே?”  அந்தப் பெண் மறுபடியும் மூன்றெழுத்திலேயே நிற்கிறாள்.  ”இவ்ளோ காலம் நீ உன் பெண்டாட்டியைத் தொட்டிருக்காமயா இருப்பே?” என்றும் கேட்கிறாள்.  அப்போது அவள் வீட்டுக்கு ஒரு இளைஞன் வருகிறான்.  அவனைக் காத்திருக்கச் சொல்லி விட்டு அஞ்சலி உள்ளே வரும் போது விஜய் கேட்கிறார்.

”யார் அவன்?”

“நீயே புரிஞ்சுக்கோ.”

விர்ரென்று வெளியே போகிறார் விஜய்.   வீட்டுக்குள் அந்த இளைஞன் அவளுடைய லேப்டாப்பைக் கொடுத்து விட்டு ”சரி பண்ணிட்டேன் அக்கா” என்கிறான்.  அக்கா என்று இரண்டு முறை சொல்கிறான்.  லேப்டாப்பைக் கொடுத்து விட்டுப் போய் விடுகிறான்.  அடுத்ததுதான் இயக்குனர் புரிந்து கொண்ட பெண்ணியம் மிளிரும் காட்சி.  ஜன்னல் வழியே விஜயைப் பார்த்துக் கதறி அழுகிறாள் காதலி.  திருமணம் செய்து கொள் என்று சொன்ன போது மூன்றெழுத்து வார்த்தை சொன்னவள்!

முற்றிய பைத்தியக்காரர்களின் விடுதியில் அந்தப் பைத்தியங்களுக்கெல்லாம் ஆறு ரவுண்டு MC பிராந்தியை ஊற்றிக் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது இறைவி படம்.  இடைவேளை வந்தது.  விழுந்தடித்து ஓடி வந்தேன்.

இறைவி பற்றி நான் எழுதியதைப் பலரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.  எந்தக் காட்சியிலும் நம்பகத்தன்மை இல்லை; ஃபாண்டஸி படத்தில் கூட அதற்கான ஒரு தர்க்கம் இருக்க வேண்டும்.  இறைவியில் அப்படி எதுவுமே இல்லை.  எல்லா காட்சிகளிலும் செயற்கைத்தன்மை.  எதுவுமே நம்பும்படியாக இல்லை.  ஒரு சினிமா இயக்குனர் இப்படியெல்லாம் பொறுக்கித்தனமாக நடந்து கொள்வார் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை.  படத்தில் நான் மிகவும் கோபமடைந்த காட்சி, தயாரிப்பாளரிடம் சூர்யா மன்னிப்புக் கேட்கும் காட்சி.  மனைவி, தகப்பனார் ஆகியோரின் வற்புறுத்தலால்தான் மன்னிப்புக் கேட்க சம்மதிக்கிறார்.  அப்படி மன்னிப்புக் கேட்கும் போது தயாரிப்பாளர் தன் கால்களைத் தூக்கி மேஜையில் வைத்து என் காலைத் தொட்டுக் கும்பிட்டு மன்னிப்புக் கேள் என்கிறார், அதிலும் பலர் முன்னிலையில்.  இந்தக் காட்சி தயாரிப்பாளர் தொழிலுக்கே நேர்ந்த அவமானம்.  நிஜவாழ்வில் ஒரு தயாரிப்பாளர் கூட இத்தனை பேர் எதிரில் என் காலில் விழுந்து மன்னிப்புக் கேள் என்று சொல்ல மாட்டார்.  எல்லாமே போலி; எல்லாமே பொய்.  அப்புறம் சிலை திருடுவதைக் கூட பெட்டிக் கடையில் போய் சிகரெட் வாங்கி வா என்ற பாணியில் விவாதித்துத் திருடுகிறார்கள்.  இந்த casual மனோபாவம்தான் இந்தப் படத்திலிருந்து பாதியில் ஓடி வரத் தூண்டியது.  பாதி வரை பார்த்த படத்துக்கு விமர்சனமா என்கிறார்கள்.  படமே மலக்கிடங்கு என்கிறேன்.  அப்புறம் அதில் எப்படி நீண்ட நேரம் அமர முடியும்?

fetish என்பதற்கு முழு உதாரணம், இறைவி.  யாரும் fetish படம் எடுப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை.  ஆனால் இதெல்லாம் பெண்ணியம், பெண்களைப் பெருமைப்படுத்தும் படம் என்று சொல்லப்படுவதுதான் கலாச்சார சீரழவின் அடையாளம்.

பின்குறிப்பு:  இறைவியை கடுமையாக விமர்சிப்பதால் பல கண்டனங்கள் வந்தன.  ஒரு விஷயத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நான் சூர்யா நடித்த 24 என்ற குப்பைக்கு விமர்சனம் எழுதவில்லை.  பீட்ஸா, ஜிகிர்தண்டா என்ற சுவாரசியமான சினிமாவைக் கொடுத்தவர் என்ற ஒரே நல்ல எண்ணத்தில்தான் இறைவி முதல் நாள் முதல் காட்சிக்குப் போனேன்.