ஒரு பெரிய மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால் அந்திமழையில் நிலவு தேயாத தேசம் முடிவதற்கு இன்னும் இரண்டு அத்தியாயங்களே எஞ்சியிருக்கும் நிலையில் அப்படியே நிற்கிறது. இந்த மொழிபெயர்ப்பு வேலை அவசரம். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் ரொம்பவும் சொதப்புகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நான் படித்த ஆண்டாள் மொழிபெயர்ப்பில் பல முக்கியமான விடுபடல்கள் இருந்தன. ஒரு பாசுரத்தின் அடிச்சரடான விஷயமே காணவில்லை. அர்ச்சனா வெங்கடேசனின் The Secret Garland என்ற நூல்தான் அது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் மிகவும் ஆர்வத்துடன் வாங்கிய புத்தகம் அது. ஏமாற்றி விட்டது. இவ்வளவுக்கு அர்ச்சனா அமெரிக்காவில் வாழ்பவர். ஏ.கே. ராமானுஜனின் நம்மாழ்வார் மொழிபெயர்ப்புதான் இவற்றில் ஆகச் சிறந்ததாக உள்ளது. அவரது சங்க இலக்கிய மொழிபெயர்ப்பும்.
நேற்று முழுவதும் பர்த்ருஹரியின் வைராக்ய சதகத்தில் ஒரு பாடலை ஆங்கிலத்தில் எடுக்க முயன்றேன். யாராவது நல்லபடியாக மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று பார்த்தால் யாருமே கிடைக்கவில்லை. சம்ஸ்கிருதப் பிரதியின் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பாகவே இருந்தது எல்லாம். சம்ஸ்கிருத மூலத்தை சரி பார்க்காவிட்டால் எல்லாம் சரியாகவே தோன்றும். ஆனால் மூலமும் தெரிந்தால் ஆபத்து. ஒரு நாள் ஆயிற்று. கடைசியில் சுதிர் கக்கட் (Sudhir Kakkar என்ற பெயரின் கடைசியில் வரும் r இன் உச்சரிப்பு ‘ட’ என்று வரும் கிட்டத்தட்ட. தமிழில் ழ மாதிரி அந்த ‘ட’. அதாவது, ‘ழ’வுக்கும் ‘’ட’வுக்கும் இடையில் வரும். ஆனால் பேச்சு வழக்கில் ட தான் உச்சரிப்பு. அலிகர் தப்பு. அலிகட் சரி) எழுதிய The Devil Take Love என்ற நாவலில் கடைசியில் நான் தேடிய பாடலின் மொழிபெயர்ப்பு கிடைத்தது.
கீழ்வரும் இரண்டு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பு நோக்குங்கள். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பாதிரியாரின் மொழிபெயர்ப்பை விட சுதிர் கக்கட்-இன் மொழிபெயர்ப்பு எவ்வளவு தரம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
A dog, wretched, worn out, lame, deaf, without a
tail, and covered with sores, overcome with hunger, and
with a piece of broken pot tied round his neck, still runs
after his mate. Love destroys even that which is already
dead.
மேற்கண்ட மொழிபெயர்ப்பைச் செய்தது
REV. B. HALE WORTHAM, B.A. M.RA.S. RECTOR OF EGGESFORD, NORTH DEVON. ஆண்டு 1886.
“Feeble, blinded, lamed, ears and tail bitten off, covered in wounds, pus sores flowing, body crawling with worms, starving, shrivelled neck garlanded with an alms-pot shard, a dog will still follow a bitch. Lust swats even those already dead.”
இந்த மொழிபெயர்ப்பு சுதிர் கக்கட்.