சென்னை தீவுத்திடலில் ஒரு தகரக் கொட்டகை போட்டு தகரம் வெளியே தெரியாமல் பெரிய வெள்ளைப் படுதாவில் மூடி ஒரு புத்தகக் கண்காட்சி நடந்து இன்று முடிய இருக்கிறது அல்லவா, அது பற்றி பிரபு காளிதாஸ் கொடுத்த பேட்டி கீழே. என்னைப் போல் திட்டாமல் நல்ல மாதிரியே கொடுத்திருக்கிறார். பொதுவாகவே யாரும் யாரையும் அவர் இவர் என்று குறிப்பிடுவது மரியாதைக் குறைவாகத் தெரியும் எனக்கு. ”கார்த்திக், அப்பா வந்துட்டாரா பாரு” என்று அவந்திகா சொன்னால், ஏன் அவுரு இவுருன்னு அவமரியாதையா சொல்றே என்று சண்டைக்குப் போவேன். ஊருக்குத்தான் உபதேசம். எனக்கு அவர் இவர் என்றுதான் வரும். ஆனால் ரஜினிகாந்த் பரவாயில்லை. அவுங்க இவுங்க என்றே குறிப்பிடுகிறார், பேசுகிறார். ஆனால் சமயத்தில் குரங்கு, நாய் போன்ற ஜந்துக்களையும் அவுங்க இவுங்க என்று சொல்லும் போதுதான் என்னமோ போல் இருக்கிறது. ஆமாம், ஜக்கி வாசுதேவும் குரங்கையும் மனிதரையும் அவுங்க இவுங்க என்றுதான் சொல்கிறார். ஒருவேளை கன்னடத்தில் அவர் இவருக்குப் பதிலாக அவுங்க இவுங்க என்று சொல்வார்களோ? தெரியவில்லை. எப்படியோ, பிரபுவின் அவுங்க இவுங்கவை பெரிதும் ரசித்தேன்.