கடந்த ஒரு மாதமாக ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறேன். அதனால் ஜூன் 15-ஆம் தேதி வந்த அந்த அவதூறுகளுக்கு இன்றுதான் பதில் எழுத முடிந்தது. அது என்ன முக்கியமான பணி என்று கூட சொல்லி விடுவேன். ஆனால் சொன்னவுடனே செய்வினை வைத்து காரியத்தைக் கெடுத்து விடுகிறார்கள். எனக்கும் இம்மாதிரி மூட நம்பிக்கைகளையெல்லாம் விட்டொழித்து விட்டுப் பகுத்தறிவு பக்கம் நகர்ந்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் மூட நம்பிக்கைகள்தானே பலமாக வேலை செய்கின்றன? இதோ சீலே கிளம்புகிறேன் என்று இணைய தளத்தில் எழுதி விட்டால் பல நூறு பேர் அதைத் திட்டி எழுதி சபிக்கிறார்களா, அடுத்த நாளே சீலேயில் ராணுவப் புரட்சி நடந்து விடுகிறது! அப்புறம் எப்படிப் போவது? இதற்காகவே யாரிடமும் சொல்லாமல் துருக்கி போய் வந்தேன்.
இதுவே ஜூன் 15 அன்று வெளிவந்த அவதூறுக்கு இன்று பதில் எழுத நேர்ந்ததன் காரணம்.
பொதுவாகவே எழுத்தாளன் என்றால் ஒரு பைத்தியத்தைப் போல, ஒரு கிரிமினலைப் போல பார்க்கிறது தமிழ் சமூகம். நான் அடிக்கடி சொல்லி வருகிறேன், எழுத்தாளனைக் கொண்டாடாத சமூகம் இது என்று. கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை, தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். யார் என்று பார்த்தால், பொதுஜனம் இல்லை. பொதுஜனத்துக்கு எழுத்தாளன் என்றால் யார் என்றே தெரியாது. அவமானப்படுத்துவது யார் என்றால், ஊடக நண்பர்கள். லஞ்சம் வாங்காத ஒரு ஐஏஎஸ் அதிகாரியை முதல்வர் நாற்காலியில் அமருங்கள் என்று எழுதுவதற்கு எந்தக் கூச்சமும் அடையாத ஊடகங்கள் எழுத்தாளனை மட்டும் எந்தத் தயக்குமுமின்றி அவமானப்படுத்துகின்றன. ஏன் சாமி, லஞ்சம் வாங்காமல் வேலை பார்க்க வேண்டியது ஒரு அதிகாரியின் கடமை. அதற்காக முதலமைச்சர் பதவியா? என்ன வேடிக்கை இது?
சில மாதங்களுக்கு முன்பு என்னைப் பற்றி அவமானகரமாக ஒரு பேட்டி விகடனில் வந்திருந்தது பற்றி நான் காட்டமாக எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். நான் தியானம் செய்யும் புகைப்படத்தைப் போட்டு, அய்யய்யோ இதைக் கொஞ்சம் என்னான்னு வந்து பாருங்க என்ற தலைப்புடன் வந்திருந்தது என் பேட்டி. அதில் அந்தத் தலைப்புதான் அவமானகரமானது. பவர் ஸ்டார் சீனிவாசனைப் போல் என்னைச் சித்தரித்திருந்தது அந்தத் தலைப்பு. ஏன், நான் தியானம் செய்தால் அது அவ்வளவு நகைப்புக்குரியதா? நான் என்ன விதூஷகனா?
இப்போது தி இந்து நாளிதழ் அந்தக் காரியத்தை எல்லா எழுத்தாளர்களுக்கும் செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் இந்துவில் பணி புரிவோர் கவிஞர்கள், நாவலாசிரியர்கள். ஆனால் அதில் வந்த அவதூறு செய்திக்கு அவர்கள் காரணமாக மாட்டார்கள். என் மதிப்புக்குரிய இருவரையே நான் சுட்டுவேன். அரவிந்தனும் சமஸும். நான் கிட்டத்தட்ட சமஸின் பி.ஆர்.ஓ. மாதிரியே செயல்பட்டதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதனால் என்ன, அவருடைய குரு பீடம் ஜெயமோகன். அது பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னைத் தட்டாமல் இருக்கலாம் அல்லவா? தன் எழுத்தைப் பாராட்டியவன் என்ற உணர்வைக் கூட மூடி விட்டதா, குருபீடத்தின் மீதான பக்தி? இன்னமும், இவ்வளவுக்குப் பிறகும் நான் சமஸைப் பாராட்டுவேன். ஏனென்றால், ராமச்சந்திர குஹாவுக்குப் பிறகு விரும்பிப் படிக்கும் கட்டுரைகள் அவருடையவைதான்.
பீடிகை போதும், விஷயத்துக்கு வருகிறேன். மனுஷ்ய புத்திரன் பற்றி தி இந்து கொடுத்திருக்கும் செய்தி இது:
அள்ளிவிடு கையெழுத்தை!
”புத்தகக் காட்சியில் எழுத்தாளர்கள் கையெழுத்துப் போடுவது விசேஷம் அல்ல. ஆனால், புத்தகக் காட்சியின் எல்லா நாட்களிலும் தன்னுடைய ‘உயிர்மை’ அரங்கில் உட்கார்ந்து கொண்டு கையெழுத்துப் போடுவதையே ஒரு வேலையாகக் கர்ம சிரத்தையோடு செய்து கொண்டிருந்தார் மனுஷ்ய புத்திரன். கையெழுத்துக் கவிஞர்.”
சினி பிட்ஸ், சினி மசாலா, சினிமா நேசன் போன்ற பத்திரிகைகளில் நடிகைகள் பற்றிக் கிசுகிசு செய்திகள் எழுதுவோர் தான் மேற்கண்ட மொழியில் எழுதுவார்கள். தி இந்து எப்போதிருந்து அந்தப் பத்திரிகைகளின் தரத்துக்குத் தாவியது? ஒரு எழுத்தாளனிடம் கையெழுத்து வாங்குவதென்பது எப்பேர்ப்பட்ட விஷயம்! இன்று – இதைப் படிக்கும் உங்களிடம் தி. ஜானகிராமனின் கையெழுத்துப் போட்ட மோகமுள் நாவல் இருந்தால் அது எப்பேர்ப்பட்ட பொக்கிஷத்துக்குச் சமம்?! அப்படித்தான் ஒவ்வொரு வாசகரும் தனக்குப் பிடித்த எழுத்தாளரின் கையெழுத்தைப் பெறுகிறார்கள். காஃப்கா எழுதிய நாவலின் கையெழுத்துப் பிரதியின் மதிப்பு இன்றைய தினம் எத்தனை கோடி பெறும் தெரியுமா? ஆக, அப்படி ஒரு காரியத்தைப் பாராட்டி எழுதாமல் “அள்ளிவிடு கையெழுத்தை” என்றால் என்ன அர்த்தம்? ஏதோ பாபா கோவில் வாசலில் சாம்பிராணி போடும் மஸ்தானைப் போல தமிழின் முக்கியமான கவிஞர் ஒருவருக்கு அறிமுகம் கொடுத்தால் எப்படி?
அப்புறம் எஸ்.ரா., ஜெயமோகன், சாரு நிவேதிதா மூவரும் தாதாக்களாம்! ”என்னாச்சு நம்ம தாதாக்களுக்கு?” என்று ஒரு தலைப்பு!
”சமகாலத் தமிழ் இலக்கியத்தின் மூன்று பெரும் தாதாக்களான ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் மூவர் தொடர்பாகவும் இந்தப் புத்தகக் காட்சியில் ஒரு சர்ச்சையும் இல்லாமல் போனது வாசகர்களுக்கு ஒரு ஏமாற்றம்தான். “அதிலும் யாரையாவது, எதையாவது போட்டுத் தாக்கும் சாரு நாளுக்கு நாள் இப்படி ‘ரொம்ப நல்லவர்’ ஆவது நாட்டுக்கு சுவாரஸ்யம் இல்லை” என்று வெளிப்படையாகவே பலரும் பொங்கியதைக் கேட்க முடிந்தது.”
மேற்கண்ட பத்தியை ஒரு மேல்சாதித் திமிர் பிடித்த கை தான் எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது எனக்கு. இதில் சாதி எங்கேயிருந்து வந்தது என்று கேட்கிறீர்களா? அதாவது, காலனித் தெருவிலிருந்து படித்து முன்னேறி ஒருவன் மேட்டுக்குடிக்கு வந்தால், என்னடா, பழைய ரவுடித்தனத்தையெல்லாம் காணம் என்று கேட்கும் மேல்சாதித் திமிரைத்தான் மேற்கண்ட பத்தியில் நான் காண்கிறேன்.
ஏன் சாமிகளா, நான் நல்லவனாக மாற சந்தர்ப்பமே கிடையாதா? தப்பு செய்து விட்டு அடி வாங்கியேதான் சாக வேண்டுமா? 20 வயது வரை தீண்டத்தகாக சேரியில் கிடந்தேன். பிறகு இலக்கியத்துக்கு வந்த பிறகும் என்னை ரௌடியாகவே பாவித்து போட்டுத் தாக்கிக் கொண்டேயிருந்தால் நானும் எப்போதுதான் உங்களைப் போல் அங்கவஸ்திரம் போடுவது?
அது என்ன தாதா? மூன்று வியக்தி என்று எழுதுங்களேன்? வியக்தி என்று எழுத கை கூசியது என்றால் மூன்று ஆளுமைகள் என்று எழுதித் தொலையுங்களேன்? அது என்ன தாதா? ஜெயமோகனும், எஸ்.ரா.வும், நானும் இந்த இடத்தை அடைய எங்கள் குடும்பத்தினர் செய்த தியாகம் எவ்வளவு தெரியுமா? லௌகீக காரியங்களையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் இந்த அளவுக்கு எழுதிக் குவித்திருக்க முடியுமா? ஒரு எழுத்தாளன் நான்கு ஜென்மம் எடுத்துச் செய்ய வேண்டிய வேலையை நாங்கள் மூவரும் செய்து கொண்டிருக்கிறோம். அதைப் பற்றிய மரியாதை உங்களுக்கு வேண்டாம், அவமானப்படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா? அதிலும் சாருவுக்கு ஸ்பெஷல் மரியாதை. யாரையாவது, எதையாவது போட்டுத் தாக்குவதுதான் என் வேலையாம்! எதைத் தாக்கியிருக்கிறேன், யாரைத் தாக்கியிருக்கிறேன்? எல்லாம் என் சினிமா விமர்சனம் செய்கிற வேலை. வந்து கொண்டிருப்பது பெரும்பாலும் குப்பை சினிமா. அதைத் தாக்கினால் மதத்தின் தீர்க்கதரிசியைத் தாக்கி விட்டது போல் ஊரே திரண்டு என்னை அடிக்கும். அதுதான் சர்ச்சை. ஊர் வாயில் அடி பட்டுச் சாவதுதான் சர்ச்சை. பிறகு எது சர்ச்சை? இந்து என்ன சொல்கிறது தெரியுமா? வருடா வருடம் ஊரிடம் அடிபட்டுச் சாவாயே? ஏன் இப்போதெல்லாம் அடிபடுவதில்லை? இதுதான் அவர்களின் கவலை. என்னை எல்லோரும் அடிக்க வேண்டும். அதுதான் நான் ஈடுபடும் சர்ச்சை. அது இந்த வருடம் நடக்கவில்லை. மற்றபடி எந்நாளும் சர்ச்சையில் ஈடுபடுவது ஜெயமோகன் தான். சிவாஜிக்கு நடிக்கத் தெரியாது; எம்ஜியாருக்குப் பேசத் தெரியாது. எம்ஜியார் பேசுவதைப் போலவே எழுதிக் காண்பித்தவர் ஜெ.
ஆசிரியர்களிடம் எம்ஜியார் சொன்னாராம். உங்களிடம் பைப்பு இருக்கு; பம்பு இல்லே.
ஆசிரியர்களுக்குப் புரியவில்லை. பிறகுதான் ஒருவர் விளக்குகிறார். உங்களிடம் படிப்பு இருக்கு; பண்பு இல்லே.
இதை உடனே விகடனில் தூக்கிப் போட்டு விட்டார்கள். ஒரே சர்ச்சை. என்ன சர்ச்சை? ஊரே திரண்டு ஜெயமோகனை தர்ம அடி அடித்தது. எப்போதும் நான் வாங்குவேன். அப்போது ஜெ. வாங்கினார். அடுத்து, தமிழை ரோமன் லிபியில் எழுதலாம் என்று எழுதினார். அடுத்த சர்ச்சை. விகடன் தேவர் பத்திரிகை. சொன்னவர் ஜெயமோகன். ஹிண்டு ஆங்கில நாளிதழ் சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் பார்ட்டி தலைவர்களுக்காக நடத்தப்படுவது. இதுவும் ஜெ. தான். இப்படி வாராவாரம் சர்ச்சைகளைக் கிளப்பி எப்போதும் எல்லோர் வாயிலும் இருப்பவர் ஜெ. அவரை அல்லவா ‘யாரையாவது, எதையாவது போட்டுத் தாக்கும் ஜெயமோகன் நாளுக்கு நாள் இப்படி ‘ரொம்ப நல்லவர்’ ஆவது நாட்டுக்கு சுவாரஸ்யம் இல்லை” என்று எழுதியிருக்க வேண்டும்?
ஆனால் எப்படி எழுதுவார்கள்? தி இந்து ஒரு பதிப்பகத்துக்கு விளம்பரதாரராக விளங்குவது போலவே ஜெயமோகனுக்கும் விளம்பரதாரராக செயல்பட்டு வருகிறது. உதாரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.
சமஸ் திமுக தலைவர் கருணாநிதியிடம் பேட்டி எடுக்கிறார். பேட்டியின் முதல் வாக்கியமே ஜெயமோகன் பெயர் உச்சரிப்பிலிருந்து துவங்குகிறது. கருணாநிதியின் மேஜையில் ஜெயமோகனின் அறம் தொகுதி இருந்தது. இதுதான் கட்டுரையின் தொடக்கம். நான் உடனே கருணாநிதிக்கு வேண்டிய இன்னொருவரிடம் கேட்டேன். அவர் மேஜையில் இன்னும் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன? (ஏனென்றால் அவர் ஒரே சமயத்தில் பத்து புத்தகங்களைப் படிப்பவர்.) அவர் மேஜையில் அப்போது இருந்த பல நூல்களில் மனுஷ்ய புத்திரனின் அந்நிய நிலத்தின் பெண்ணும் இருந்திருக்கிறது. ஆனால் இந்து மனுஷுக்கு விரோதம். காரணம் ஒன்றும் பெரிதல்ல. இந்து ‘எஸ்’ பதிப்பகத்தின் சென்னை பிரிவாக இயங்கி வருகிறது. ‘எஸ்’ பதிப்பகம் என்று சொன்னதன் காரணம், உண்மைப் பெயரைச் சொன்னால் கேஸ் போட்டு விடுவார்கள். அதனால்தான் கிசுகிசு பாணியில் எழுதியிருக்கிறேன். நீங்கள் என்ன முயன்றாலும் கண்டு பிடிக்க முடியாது. க்ளூவே இல்லை. ’எஸ்’ பதிப்பகத்தில் 60 பக்கத்துக்கு ஒரு புத்தகம் வெளிவரும். உடனே ஒரு முழுப்பக்கத்துக்கு தி இந்துவில் முந்தாநாள் வந்த அந்தப் புத்தகத்துக்கு மதிப்புரை வந்து விடும்.
ஏன் நண்பர்களே, இவ்வளவு அறம் பேசுகிறீர்களே, இதெல்லாம் உங்களுக்கு அறம் மாதிரியா தெரிகிறது? மகாத்மா பற்றி நான் அதிகம் தெரிந்து கொள்வது சமஸ் மற்றும் ஆசை கட்டுரைகளில்தான். அந்த மகாத்மா கூறிய, தன் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்த அறம் இதுதானா? ஆங்கிலத்தில் Nepotism என்பார்கள். நமக்கு வேண்டியவர்களைத் தூக்கி விடுவது; வேண்டியவர்களுக்கு ஆதாயம் தேடித் தருவது. ஒரு பத்திரிகை என்றால் நடுநிலைமை வேண்டாமா? இப்படி ஒரு எழுத்தாளருக்கும் ஒரு பதிப்பகத்துக்கும் விளம்பரம் செய்து கொண்டிருப்பதுதான் பத்திரிகை தர்மமா?
நான் இப்போது எழுதிக் கொண்டிருப்பது தவறு என்றால் சொல்லுங்கள்; பொதுவில் மன்னிப்புக் கேட்கிறேன். மேலும், கௌதம சித்தார்த்தனை மிகக் கேவலமாக அவமதித்திருக்கிறார்கள். குஷ்புவை வைத்து அவருடைய புத்தக வெளியீடு நடத்தியதற்காக, சன்னி லியோனியையே வைத்து நடத்துவேன் என்று சொன்னதாக எழுதியிருக்கிறார்கள் இந்துவில். அவர் அப்படிச் சொல்லவே இல்லை என்று சத்தியம் செய்கிறார். (இணைப்பு: கௌதம சித்தார்த்தனின் கடிதம்). எப்படி இருக்கிறது பாருங்கள் கதை! அரசியலில் ஒழுக்கம் வேண்டுகிற பத்திரிகை எந்தத் தரத்துக்கு இறங்கி வந்து ஒரு எழுத்தாளனைப் பற்றி அவதூறு செய்திருக்கிறது! சன்னி லியோனியையே வரவழைப்பேன்! ஆனால் எழுத்தாளர் இப்படிச் சொல்லவே இல்லை!
இன்னொரு விஷயம் கடைசியாக. எழுத்தாளர்கள் இன்னமும் பிச்சைக்காரர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காரணம், யாரும் புத்தகங்கள் வாங்குவதில்லை. இன்னொரு மிக மிக முக்கிய காரணம், ஊடகங்கள் கொடுக்கும் ஊதியம். இன்னமும் எழுத்தாளனுக்கு 750 வார்த்தைகளில் ஒரு கட்டுரை எழுதினால் 1000 ரூபாய்தான். அதே கட்டுரையைக் கொஞ்சம் வெட்டி 650 வார்த்தைகளில் போட்டால் 750 ரூபாய் கொடுக்கிறார்கள். கேட்டால் பத்திரிகை நட்டத்தில் நடக்கிறது என்கிறார்கள். ஆனால் பத்திரிகையில் ஆசிரியராக இருப்பவரின் ஊதியம் 2 லட்சம். இணை ஆசிரியருக்கு ஒன்றேகாலிலிருந்து ஒன்றரை. துணை ஆசிரியர்களுக்கு 60000. ஆனால் எழுத்தாளனுக்கு ஆட்டாம் புழுக்கை. தினமலர் மட்டுமே விதிவிலக்கு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே 800 வார்த்தைகளுக்கு 5000 ரூபாய் கொடுத்தார்கள். ஆங்கிலப் பத்திரிகைகளில் கூட அப்போது அந்த அளவு கொடுத்ததில்லை. இந்த ஆசிரியர்கள் பத்திரிகை முதலாளியிடம் இது பற்றி எடுத்துச் சொல்ல மாட்டார்கள். ஏன்? தன் கை நிரம்பினால் போதும். எழுத்தாளன் செத்தால் நமக்கென்ன?
எப்பேர்ப்பட்ட சமூகம்டா சாமிகளா!
(வம்பு பிடித்தவன் என்று இன்றோடு எனக்குத் தடை உத்தரவு பிறப்பித்து விடுவார்கள் தி இந்துவில். கவலையில்லை.)
***
கீழே கௌதம சித்தார்த்தன் தி இந்துவுக்கு எழுதி வெளிவராத கடிதம்:
ஒரு விளக்கக் கடிதம்.
அன்புள்ள தி ஹிந்து தமிழ் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவிற்கு
வணக்கம்.
இன்றைய ஹிந்துவில் என்னை பற்றிய ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. எந்த வெகுஜன பத்திரிகைகளும் (தினமலர் பத்திரிகை தவிர்த்து) என் எழுத்தியக்கத்தை கண்டு கொள்ளாமல் மறைக்கும் சூழலில் நீங்கள் மட்டுமே என் எழுத்துக்கள் பற்றி ஒரு அறிமுகம் செய்திருக்கிறீர்கள். (சென்ற வருடமும் நீங்கள்தான் என் எழுத்துகளை அறிமுகப்படுத்தியதோடு செய்தி வெளியிட்டு என்னை முதன்மைப் படுத்தியிருந்தீர்கள்.)
இந்த இடத்தில நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பிற பத்திரிகைகளில் வேலை செய்யும் முக்கியமான எழுத்தாளர்களை தங்களது பத்திரிகைகளில் கண்டுகொள்ளக் கூடாது என்று ஒரு விதி இருக்கும் போல் தெரிகிறது. எங்கள் தினமலர் இதழ் இந்த விதியை என்றோ உடைத்து விட்டது. (சமீபத்தில் கல்கி இணை ஆசிரியரான திரு அமிர்தம் சூர்யா அவர்களின் நேர்காணல் வெளியிட்டுள்ளது. மற்றும் ஹிந்து OP-ED ஆசிரியர் திரு சமஸ் அவர்களின் “யாருடைய எலிகள் நாம்?” நூல் விமர்சனம்..) நீங்களும் அந்த விதியை உதாசீனப் படுத்தி எழுத்துக்களை மட்டுமே பரிசீலனை செய்து வெளியிடுகிறீர்கள். நன்றியும் பாராட்டுக்களும்.
ஒரு சரியான பத்திரிகை அறம் என்பது எழுத்தாளனைப் பார்க்காமல் எழுத்துக்களைப் பரிசீலிப்பதுதான்.
ஹிந்து வை வாங்கியதும் உடனே நடுப்பக்கத்தைத்தான் புரட்டுவேன். அதில் வரும் இலக்கியம் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதேபோல தினமலரில் வெளிவரும் இலக்கியப்பகுதி மிகவும் பிடிக்கும்.
இன்றும் அதேபோலப் புரட்டினேன். என்னைப்பற்றிய செய்தி வந்திருந்தது. ஒரு சிறு பத்தியாக இருந்தாலும், என் எழுத்தியக்கதிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தீர்கள்.
அடுத்த பத்தியில் அதிகம் விற்ற நூல்கள் என்று எதிர் வெளியீட்டில் வெளிவந்திருக்கும் “இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு” என்ற நூலை வெளியிட்டிருந்தீர்கள். ஆனால், நான் கேள்விப்பட்ட வரையில் எனது நூலான “முருகன் – விநாயகன்: மூன்றாம் உலக அரசியல்” நூல்தான் அதிகப் பிரதிகள் விற்றிருப்பதாகத் தெரிவித்திருந்தனர். “போன வருடம் பெருமாள் முருகன்.. இந்த வருடம் முருகன் – விநாயகன்” என்று என் நண்பர்கள் எதுகை மோனையாக பாராட்டியிருந்தனர். நான் உடனே, எதிர் வெளியீடு அனுஷ் அவர்களிடம் தொலைபேசி செய்து பேசினேன். இரண்டு நூல்களுமே இணையாக விற்றிருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால், “அதிகம் விற்ற நூல்கள்” வரிசையில் “இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு” இடம் பிடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய சாதி,மத,இனவாதச் சூழலில் வெண்டி டோனிகர் போன்ற மாற்றுச் சிந்தனையாளர்களை நோக்கி மாறிவரும் வாசிப்புச் சூழலை இனங்காண வைக்கிறது. சாதி,மத,இனவாத நுண்ணரசியல் கருத்துக்களை முன்வைத்து செயல்படும் என் எழுத்துக்களுக்கு இந்தச் சூழல் பெரும் உத்வேகத்தையும் எழுத்து வேகத்தையும் தருகிறது.
என்னைப் பற்றிய செய்தியில் ஒரு சிறு தவறு. அதில் நான் சொல்லியதாக கடைசி நான்கு வரிகள் நான் எங்கும் சொல்லவில்லை. “நயன்தாராவை அழைத்திருந்தேன். பதிப்பாளர் வேண்டாம் என்றதால், விட்டுவிட்டேன். சரி என்று சொல்லியிருந்தால், சன்னி லியோனையே அழைத்து வந்திருப்பேன்..” இந்தச் சொற்கள் அந்தச் செய்திக்கு மேலும் ஒரு வாசக சுவாரஸ்யம் தரும் என்று நீங்கள் சேர்த்திருக்கலாம். அல்லது, நான் புத்தகக் காட்சியில் இப்படிச் சொல்லித் திரிவதாக சில “அன்பு கெழுமிய” நண்பர்கள் சொல்லியிருக்கக் கூடும்.
“அடுத்தது யார்..? நயன்தாராவா?” என்று என்னை ஒரு சில இலக்கியப் பெருந்தகைகள் கிண்டலாகச் சீண்டும்போது, “ஆமாம்.. நயன்தாராவைத்தான் அழைத்து வருகிறேன்..” என்று எரிச்சலில் சொல்லியிருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு வந்திருக்கலாம்.
மற்றபடி இது பெரும்பான்மையான ஆண்களுக்குள் புலனாகாமல் மறைந்திருக்கும் ஒரு ஆணாதிக்கப் பார்வை. திரைப்படம் மற்றும் அரசியல் சார்ந்த ஆண் பிம்பங்களை வெளியீட்டு விழாவிற்கு அழைத்து வரும் போது ஏற்றுக் கொள்ளும் ஆண்கள், பெண் பிம்பங்களை அழைத்து வந்தால் மட்டும் அவர்களை மிகவும் வக்கிரமான மனநிலையில் எதிர்கொள்ளும் போக்கு என்பது நுனி மீசையில் திறந்து கொள்ளும் விகாரமான இழிப்பாக இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த வரிகளில் தி ஹிந்து தமிழ் வாசகனுக்கான வாசக சுவாரஸ்யம் சுத்தமாக இல்லை. மாறாக கலாய்ப்புதான் தூக்கலாக நிற்கிறது. இது இலக்கியக் கலாய்ப்பு அல்ல.வெகுஜனக் கலாய்ப்பு. நான் கலாய்ப்புக்கு எதிரானவன் அல்ல. கலாய்ப்பு என்பது வேறு.. பகடி என்பது வேறு..
கலாய்ப்பு என்பது எந்தவிதமான தரிசனமும் தேடலும் அற்ற மேலோட்டமான வெகுஜனப் பார்வை.
பகடி என்பதோ வரலாற்றை, வாழ்வியலை, சமூகத்தை எள்ளிநகையாடும் தரிசனக் கீற்று. தீவிரமான மாற்றுப் பார்வை.
” மொத்தமா உசுரு எடுக்கறது எமன்.. கொஞ்சம் கொஞ்சமா உசுரு எடுக்கறது உமன்..” இது ஒரு கலாய்ப்பு.
“இப்பேர்ப் பட்ட ராமனின் பாதம் பட்டுத்தானா நான் சுய உருவம் பெற்றேன் என்று அகலிகை மீண்டும் கல்லானாள்..” என்பது பகடி. இவை சட்டென முன் வைக்கும் சுருக்கமான விளக்கம். நான் மேலும், இந்தச் சொல்லின் வேர்ச் சொல்லுக்கோ, சொல்லிலக்கணத்திற்கோ (Etymology) அழைத்துப் போகப் போவதில்லை.
என்னை நேர்காணல் செய்த தி ஹிந்து ஆசிரியர் குழு நண்பரிடம் இன்னொரு செய்தியைத் தெரிவித்திருந்தேன். “என்னுடைய நவீன சிறுகதைத் தொகுப்பான “பச்சைப்பறவை” யை வெளியிட்டுப் பேசிய திரைப்பட இயக்குனர் திரு. சற்குணம் அவர்கள், அந்த நூலின் 20 பிரதிகளை வாங்கி அங்கு கூடியிருந்த வாசகர்களுக்கு அளித்தார்” இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கலாம். இது இலக்கியம் சார்ந்த தமிழ்கூறு நல்லுலகிற்கு ஒரு நம்பிக்கையை ஊட்டும் விதத்தில் அமைந்திருக்கும்.
மற்றபடி
தமிழ் கூறு நவீன இலக்கிய உலகில் என் பிம்பத்தை வெகுஜன கலாய்ப்பு கொண்ட முகமாக கட்டமைப்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. தயவு செய்து உங்களோடு சண்டை போடுவதாக எண்ண வேண்டாம். இது ஒரு விளக்கக் கடிதம், அவ்வளவே..
இந்த நீண்ட கடிதத்தை உங்கள் இதழின் வாசகர் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறைந்த பட்சம் இதன் மையக் கருத்துக்கள் கெடாமல் சுருக்கியாவது.
என்னைப் பின்தொடரும் ஒரு தீவிர இலக்கிய வாசகனுக்கு நான் வேறு எந்த விதத்தில் என் பக்க விளக்கத்தைத் தெரிவிப்பது?
என் செய்தியை வெளியிட்டதற்கு மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
அன்புடன்
கௌதம சித்தார்த்தன்.