I have closed the road of the mouth and opened the secret way; I have escaped by one cup of wine from the frenzy of speech.
ஜலாலுத்தீன் ரூமி
ஞாயிற்றுக்கிழமை அன்று பதினோரு மணிக்கு ’துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி பேச வேண்டும். பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதியது. ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடிக்க மூன்று நாள் போதாதா என வேறு வேலைகளில் மூழ்கினேன். கடைசியில் பார்த்தால் அந்த சிறுகதைத் தொகுப்பு அப்படிப்பட்டதாக இல்லை. குறைந்த பட்சம் பதினைந்து நாட்களைக் கோரும் படைப்பு. காலை எட்டரை மணிக்குத்தான் குறிப்புகள் எடுக்கவே உட்கார்ந்தேன். அந்த நேரம் பார்த்து ஒரு ஃபோன். செய்தி அறிந்தேன். அதற்குப் பிறகு 50 அழைப்புகள். எதையும் எடுக்கவில்லை. எல்லாமே ஒரே செய்தியாகத்தான் இருக்கும்.
எனக்குக் கோபம். என்னை அப்பன் அப்பன் என்று அழைத்தவன் தன் கடமையைச் செய்யும் முன் இடைவழியில் விட்டுவிட்டுப் போய் விட்டான். வேண்டுமென்றேதான் போனான். தெரிந்தேதான் போனான். அவனுக்கு எல்லாமே விளையாட்டு. மரணமும் விளையாட்டு. அப்படி நான் புரிந்து கொள்கிறேன்.
நான் மனித உறவுகளைப் பேணாதவன். அது பற்றிய உணர்ச்சி இல்லாதவன். மரத்துப் போன மனம். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் காலை – நான் சின்மயா நகரில் இருந்தேன் – ஹமீது எனக்கு போன் செய்து – அப்போது அவருடைய ஒரே நண்பன் நான் தான் – சாரு, சுந்தர ராமசாமி இறந்து விட்டார் என்றார் ரொம்பப் பதற்றத்துடன். ஓ என்றேன். அவர் பக்கம் மௌனம். எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. அப்புறம் அவரே என்னை நினைத்தாரோ – என்ன நினைத்திருப்பார், அவர் கெட்ட வார்த்தை பிரயோகிப்பதில்லை, அதனால் எப்படித் திட்டியிருப்பார் என்று யூகிக்க முடியவில்லை – ஃபோனை வைத்து விட்டார்.
என் தம்பி ஒருநாள் காலை ஏழு மணிக்கு ஃபோன் செய்தான். நைனா செத்துட்டாங்கண்ணெ… ஓ, அப்படியா, சரி, இப்போ நான் ஒரு முக்கியமான கட்டுரை எழுதிக்கிட்டிருக்கேன். மதியம் ஒரு மணிக்குள்ள முடிச்சுடுவேன்னு நினைக்கிறேன். மூணு மணிக்குள்ள வந்துடுறேன். அதுக்கு மேல ஆச்சுன்னா பாடியை எடுத்திடுங்க.
குமார் மரணம் அப்படியானதல்ல. குமார் இளங்குருத்து. இன்னும் வாழவே ஆரம்பிக்காதவன். வாயார என்னை அப்பன் அப்பன் என அழைத்த ராஸ்கல். அன்பின் மொத்த வடிவமே அவன் தான். அவ்வப்போது அது வெறுப்பின் தீ நாக்காகவும் மாறும். மிகச் சமீபத்தில் உயிர்மை புத்தக வெளியீட்டில் என் பின் வரிசையில் அமர்ந்திருந்தான். கண்களைப் பார்த்தேன். திருப்பிக் கொண்டான். அப்புறம் கொஞ்ச நேரம் சென்று தற்செயலாகத் திரும்பிய போது அவன் இருக்கை காலியாக இருந்தது. இப்போது நிரந்தரமாகப் போய் விட்டான் படுபாவி.
ஜனவரியில் ஜெய்ப்பூரியில் நடந்த ஐந்து நாள் இலக்கிய விழாவுக்கு நான் சென்றிருந்த போது நான் அங்கே தனியாக ஐந்து நாட்கள் தங்கக் கூடாது என்ற எண்ணத்தில், முன்னாலேயே சொன்னால் நான் தடுத்து விடுவேன் என்று நினைத்து, திட்டமிட்டு நான் தங்கிய விடுதியிலேயே வந்து தங்கினான். ஐந்து நாட்கள் எனக்கு உதவி செய்வதற்காக வந்தவனுக்கு நான் உதவ வேண்டியதாகி விட்டது. என்னால் நடக்க முடியவில்லை சாரு, நீங்கள் போங்கள், நான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன் என்பான். நான் கிளம்புங்கள் விடுதிக்கே போய் விடுவோம் என்று சொல்லிக் கிளப்பிக் கொண்டு வந்து விடுவேன்.
அவன் குடியால் செத்தான் என்று சொல்பவர்கள் அறியாதவர்கள். குஷ்வந்த் சிங் சாகும் போது நூறு வயதாக மூன்று மாதங்கள் பாக்கி. சாவதற்கு முன் தினம் கூட விஸ்கி குடித்து விட்டுத்தான் படுத்தார். குடியால் யாருமே சாக மாட்டார்கள். எப்படிக் குடிக்கிறோம் என்பதே கேள்வி. எனக்கு ஆகப் பிடித்த உணவு ஆட்டுக்கால் பாயா காலை உணவுக்கு, மதியம் ஆட்டுக் கறி பிரியாணி. தொட்டுக் கொள்ள மூளை வறுவல், ரத்தப் பொரியல், கோலா உருண்டை. (கோலா உருண்டை என்பது ஆட்டுக் கறியைக் கொத்தி சிறிய அளவு போண்டா மாதிரி செய்வது.) இப்படி ஒரு மாதம் – ஒரே மாதம் போதும் – சாப்பிட்டால் ஆசான் எனக்கும் ஒரு இரங்கல் கட்டுரை எழுத நேரும். அப்படியானால் ஆட்டுக் கறி சாப்பிட்டு செத்தான் என்று சொல்வீர்களா?
குமார் கையில் எப்போதும் சிகரெட் புகையும். அது கூட காரணமாக இருக்கலாம். எல்லாவற்றையும் விட அவன் பதற்றமாகவே இருந்தான்.
அந்த ஐந்து தினங்களில் அவனை நான் அதிகம் புரிந்து கொண்டேன். அவன் செஷனை ஆரம்பிக்கும் போது மட்டுமே அவன் அருகில் இருப்பேன். இரண்டாவது ரவுண்டுக்கு எழுந்து விடுவேன்.
ஒருநாள் குடி பற்றிப் பேச்சு வந்தது. இதோ பார் குமார், எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்பப் பிடித்த விஷயம் குடிதான் என்றேன். தெரியும் என்றான். கூடவே நான் ஜோதிடரைப் பார்த்த கதையையும் நினைவு கூர்ந்தான்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ? நான் ஒரு ஜோதிடரைப் பார்க்கப் போனேன். அவரிடம் யாரும் கை காண்பிப்பதில்லை. அவர் மரண தினத்தையும் சொல்லி விடுவார். எனக்கு மரண பயம் இல்லை. காரணம், மரண தினம் தெரியும். இருந்தாலும் இவர் அதை மாற்றிச் சொல்லி விட்டால்?
சரி, ஒரு கணக்கு வைத்துக் கொள்ளலாம். ஐந்து ஆண்டு என்று சொன்னால் சில காரியங்களைச் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டு என்றால் சில காரியங்கள். ஒரு ஆண்டு என்றால், மொழிபெயர்ப்பாளரின் கழுத்தில் கத்தி வைத்து ஆறு மாதத்திலேயே மொழிபெயர்ப்பை முடிக்கச் செய்து, வெளியிட்டு, ஆங்கில வாசகர்கள் என் எழுத்தை எப்படி எதிர்கொள்கிறார்களெனப் பார்ப்பது. சரி, உங்களுக்கு இன்னும் ஒரு வாரம்தான் என்று சொல்லி விட்டால்?
70000 ரூபாய்தான் செலவு. பத்து ரெமி மார்ட்டின் பாட்டலை வாங்கி ஒரு வாரம் பூராவும் குடிப்பது. மரணத்தோடு அப்படித்தான் விளையாட முடியும். அப்படித்தான் விளையாடினான் என் ராட்சசப் பிள்ளையும்.
அந்த ‘ஒரு வாரம் ரெமி மார்ட்டின்’ கதையை ஞாபகப்படுத்தினான் குமார்.
சரி குமார், உயிர் போய் விடுமே?
வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம் சாரு?
அவன் கேள்வி தீர்மானமாக இருந்தது.
நேரில் போகவில்லையா சாரு? ஐம்பது பேர் கேட்டு விட்டார்கள். ஒரே காரணம்தான். நெஞ்சு வலியால் செத்து விடுவேன். அவனை என்னால் உயிரற்ற உடம்பாகப் பார்க்கும் தெம்பு எனக்கு இல்லை. என்னால் ஒரு பேய்ப்படம் கூட பார்க்க முடியவில்லை. நெஞ்சு வலி வந்து விடுகிறது. பேய்ப் படத்தை விடுங்கள். NH 14 என்று ஒரு படம் பார்த்தேன். நெஞ்சு வலி. நேராக படத்தின் இறுதிக் காட்சிக்குப் போய் விட்டேன். இப்படிப்பட்ட பலஹீனமான இதயத்தை வைத்துக் கொண்டு அந்தப் படுபாவிப் பயலை எப்படிப் போய்ப் பார்ப்பது?
அவந்திகா கேட்டாள், குமரகுருபரன் ஏன் இறந்தார்?
குடி.
(வேறு மாதிரி சொன்னால் அவளுக்குப் புரியாது. சொல்லி விளக்கவும் எனக்குப் பொறுமை இல்லை.)
ஏன் குடித்தார்?
கவிதை எழுதினால் குடித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும்.
ஓ…
சிறிது யோசனைக்குப் பிறகு அவளே கேட்டாள், நம் ரூமியும் குடிப்பாரோ?
(ஜலாலுத்தீன் ரூமி அவளுக்குப் பிடித்த கவி)
வைன் இல்லாத ஒரு ரூமி கவிதை இல்லை.
ஆச்சரியமாக இருக்கிறதே.
இதில் என்ன ஆச்சரியம் அம்மு? உலகுக்கு ஒளி கொடுக்கிறான் கவிஞன். அதற்காக அவன் அந்த ஒளியிலேயே கரைந்து போகிறான்.
எந்தவித அஞ்சலிக் குறிப்பும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். குமர குருபரனா, யார் அவர் என்று கேட்டேன் என்ற விஷம் தோய்ந்த அஞ்சலிக் குறிப்பையும் பார்த்து நொந்து போயிருந்தேன். விஷமில்லாத அஞ்சலிக் குறிப்பை அவர் எழுதியதே இல்லையே என்றார் நண்பர். ஆஹா, எனக்கு என்ன மாதிரி விஷம் வைப்பார் என்று என்னால் பார்க்க முடியாமல் போவதுதான் மரணத்தின் விளையாட்டு என்றேன். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டு மணிக்கு குமார் என்னோடு பேசினான். உன்னிடம் எனக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூடவா இல்லை என்றான். அப்பனுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் போய் விட்ட உனக்காக நான் ஏன்டா கண்ணீர் சிந்த வேண்டும் என்றேன்.
சொன்னேனே தவிர என்னிடம் கண்ணீரைத் தவிர வேறு எதுவும் மிச்சமில்லை.
***
அறம் பொருள் இன்பம் என்ற தொகுப்பிலிருந்து…
கேள்வி:
அடுத்த தலைமுறை எழுத்தாளனாக வர வரும்புபவர்கள் அவசியம் கொள்ள வேண்டிய தன்மை எதுவென்று நினைக்கிறீர்கள்?
ஆர்.எஸ்.பிரபு
சென்னை-90
பதில்:
இப்போதைய இளைஞர்களுக்குத் தமிழ் சரியாக எழுதத் தெரியவில்லை. ஒரே ஒரு வாக்கியத்தைக் கூட சரியாக எழுதத் தெரியாதவர்கள் 400 பக்கத்தில் நாவல் எழுதுகிறார்கள். தமிழை நினைத்தால் பயமாக இருக்கிறது. இன்னொரு பிரச்சினை, படிப்பு. 5000 ஆண்டு இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழில் எதையுமே படிக்காமல் முகநூலில் எதை எதையோ கிறுக்கி விட்டு, தாங்களும் எழுத்தாளர் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு அலைகிறது பெரும் கூட்டம். ஒரு சிவில் சர்விஸ் தேர்வுக்குப் படிக்கும் அளவுக்குக் கூட ஒரு எழுத்தாளன் படிக்கத் தயாராக இல்லை என்றால் என்ன செய்வது? மனித உடல் பற்றிய தேர்ந்த அறிவும் பயிற்சியும் இல்லாத ஒரு சர்ஜன் கத்தியைக் கையில் எடுக்க முடியுமா? அதை விடப் பல நூறு மடங்கு அறிவையும் ஞானத்தையும் கோருவது இலக்கியம்.
அப்படிப்பட்டதோர் ஞானத்தை சமீபத்தில் நான் குமரகுருபரனின் கவிதைகளில் கண்டு மலைத்தேன். அவருடைய இந்தக் கவிதையைப் பாருங்கள்:
மழை இருக்கும் ஓரிரவு
எதையெதையோ விளைவிக்க
அதன் துளியொன்றைப் பிடித்து
வானேறும் மனம் கீழே வர மறுக்கிறது
இவ்வாறே, புறாக்கள் அமரும் மாடம் ஒன்றில்
மழை பெய்ததைப் பார்த்தேன்
அங்கே நெருப்பாக இருந்தது மழை
இட்லிப் பூக்களின் ரோஸ் வண்ணத்தில்
மழை வான்கோ வாக இருந்தது
எல்லாமே இருக்கிறபடிதான் இருக்கின்றன
மழை யாவற்றையும் அசைய வைக்கிறது
என்பதைச் சொல்ல யாரும் தேவையில்லை.
இறந்த பிறகு சாம்பல் நனைக்கும்
மழை ஒன்றை எனக்குப் பிறகு
நீங்கள் யாரெனும் பாடுங்கள்.
தவிர, இறந்தபின்னும் தனியே இருக்க
நாயும் விரும்புவதில்லை
ஆமென்.
குமரகுருபரனின் இன்னொரு கவிதையிலிருந்து:
உருப்படாது என்று நாம்
எட்டி உதைக்கிற கல்லில் இருக்கிறது
ஒரு மலை.
ரசனை என்பது உன் மார்புகளை
கையேந்தி முத்தமிடும்போது
வளர்கிறது தாயே.
இன்னொரு கவிதை:
சொல் புதைந்த மண்ணின் கொடி
கொடி படர் இடம் பூரா பெருவேர் மரம்
வேர்த் திளைப்பில் ஞாலம்
ஞாலப்பறவையில் வான்
வான் தூய்த்தலில் நட்சத்திரம்
நட்சத்திரக்கருவில் ஒளிக்குழந்தை
குழந்தைக் கேள்வியில் ஞானம்
ஞானத் தேடலில் பதில்
பதில் மெனக்கெட்டுப் பொதிரும் மண் சொல் மரம் கொடி
பறவை ஒளி வான் கரு குழந்தை ஞால வாழ்வும்
சொல் எனப் புதையும் இறுதி,பின்
உயிர்க்கும் மற்றொரு சொல்.
இந்தக் கவிதைகளைப் பற்றி அற்புதம் என்ற வார்த்தையைத் தவிர வேறு என்ன சொல்ல? குமரகுருபரன் என்ற இந்தக் கவிஞனின் பெயரை நேற்று மதியம் வரை நான் கேள்விப்பட்டதில்லை என்பதற்காக வெட்கப்படுகிறேன். அறிமுகப்படுத்திய நண்பர் அருணாசலத்துக்கு நன்றி. இதுவரை அறிமுகப்படுத்தாததற்குக் கொஞ்சம் வருத்தம். சமீபத்தில்தான் குமரகுருபரனின் ”ஞானம் நுரைக்கும் போத்தல்” என்ற கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. வாங்கிப் படியுங்கள்.
***