பா. வெங்கடேசனை 20 ஆண்டுகளுக்கு முன்னால் அறிவேன். ஹொகனேக்கல்லில் நடந்த இலக்கியச் சந்திப்பில் அவரோடு நிறைய உரையாடியிருக்கிறேன். அவருடைய குரல் மிகவும் வித்தியாசமாக ஒரு பாடகனின் குரலைப் போல் தனித்து ஒலிக்கும். ஆளும் கெச்சலாக இருப்பார். தமிழவன், எஸ். சண்முகம் குழுவைச் சேர்ந்தவர் என்பதாக என் மனதில் பதிந்திருந்தார். அந்தக் குழுவின் மீது எனக்கு அவ்வளவாக மரியாதை கிடையாது. கலாரசனை இல்லாதவர்கள் என்று எண்ணம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு உயிர்மை கூட்டத்தில் தமிழவனை சந்திக்க நேர்ந்தது. அந்தச் சந்திப்பு 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. பார்த்தவுடன் அவர் கேட்டது, என்ன இந்த அளவுக்கு முதுமை தட்டிப் போயிருக்கிறீர்கள்? என்றார். என்னைப் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் எப்படி இவ்வளவு பாந்தமாக உடம்பை வைத்துக் கொண்டிருப்பீர்கள் என்றே கேட்டு அனுபவம் கண்டிருக்கிறேன். வீ. அரசுவை ஒவ்வொரு ஆண்டும் புத்தக விழாவில் சந்திக்க நேரும். ஒவ்வொரு ஆண்டும் அதே கேள்விதான். எப்படி இப்படி பளபளவென்று இளமையாக இருக்கிறீர்கள்? ஆனால் தமிழவனுக்கு நான் கிழவனாகத் தெரிந்தேன். இந்த ஆள் 25 ஆண்டுகள் சென்றும் இன்னும் கடுகத்தனை கூட மாறவில்லையே என்று மனதுக்குள் ஆச்சரியமடைந்தேன்.
எனவே பாகீரதியின் மதியத்தை மிக மிக அவநம்பிக்கையுடன் தான் தொடங்கினேன். தமிழவன் கோஷ்டியைச் சேர்ந்தவர்களால் ஒரு வரி கூட இலக்கியம் செய்ய முடியாது என்றே நினைத்து முதல் வாக்கியத்தை வாசிக்கத் தொடங்கினேன்.
எழுத்தாளன் என்பதை விடவும் வாசகன் என்று சொல்லிக் கொள்வதிலே பெருமை கொள்பவன் நான். உலக இலக்கியத்தைத் தேடித் தேடி வாசிப்பவன். என் வாழ்நாளின் வாசிப்பில் இப்படி ஒரு நாவலை நான் படித்ததில்லை. பாகீரதியின் மதியம் போல் மார்க்கேஸ் கூட எழுதவில்லை. பாகீரதியின் மதியம் ஒரு உலக சாதனை. Dictionary of Kazars-ஐ (செர்பிய எழுத்தாளர் மிலோராத் பாவிச் எழுதியது) உலக சாதனை என்பார்கள். அந்த நாவலெல்லாம் பாகீரதியின் மதியத்துக்கு உறை போடக் காணாது.
ஆனால் பா. வெங்கடேசனின் தாண்டவராயன் கதை நான் படித்ததில்லை. அந்த நாவல் பற்றி கடையநல்லூர் நண்பர் முகம்மது ரியாஸ் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
நண்பர் யமுனை செல்வன் பாவண்ணன் மொழிபெயர்த்த பருவம் நாவலையும், பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ படிக்கும் படி அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். அந்த சமயம் தான் பா.வெங்கடேசனின் புதிய நாவலான ‘ பாகீரதியின் மதியம் ‘ வெளியீட்டு விழா. அதில் சாரு கலந்து கொள்வதாக இருந்தது. சாரு கலந்து கொள்வதால் அந்நாவலின் மீது எதிர்பார்ப்பு கூடியது. வெளியீட்டு விழாவிற்கு சென்ற நண்பர் சாரு அந்நாவலை மிகவும் பாராட்டி பேசியதாக கூறினார். சில நாட்களுக்கு பிறகு சாரு பேசிய அவ்விழாவின் கணோளியை பார்த்த போது ‘பாகீரதியின் மதியத்தை’ படிப்பதற்கு முன்னால் ‘தாண்டவராயன் கதையை’ படிக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால் அந்நாவல் இப்போது பதிப்பில் இல்லை. யமுனை செல்வன் தன் கல்லூரி நூலகத்தில் அந்நாவல் இருப்பதாக கூறி அரிய ஓலைச் சுவடியை கைமாற்றுவது போல் கொடுத்தார்.
இந்நாவலைப் படித்த போது ஒரே ஒரு விஷயம் தான் மனதில் தோன்றியது. இப்படிப்பட்ட ஒரு படைப்பை படைத்த எழுத்தாளர் அப்படைப்பு வெளியான பிறகு உள்ள சூழ்நிலையை எப்படி எதிர் கொண்டிருப்பார். நிச்சயமாக அதை எதிர்கொள்வதற்கு ஒரு அசாத்தியமான மன உறுதி வேண்டும். இல்லாவிட்டால் மனபிறழ்வு தான். ஏனென்றால் இந்நாவல் நூறு பிரதி விற்றிருக்குமா என்பதே சந்தேகம் தான். அச்சடிக்கப்பட்டு மீதாமான பிரதியை பழைய புத்தகக் கடையில் பதிப்பகமே விற்றிருக்கிறது. அதிலும் செல்லரித்து விலை போகாத பிரதிகளை எழுத்தாளரே வாங்கியிருக்கிறார்.
‘தனிமையின் நூறு ஆண்டிற்கு’ நிகரான கதை சொல்லலையும், ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ‘ – க்கு நிகரான பிரமாண்டத்தையும் கொண்டது தாண்டவராயன் கதை. சொல்லப்போனால் என்னளவில் தனிமையின் நூறாண்டை விட தாண்டவராயன் கதை சிறந்தது என்பேன்.
பார்வையை இழந்த ஒரு பெண்ணை குணப்படுத்த அவள் கணவன் மேற்கொள்ளும் பயணமே இந்நாவல். ஒரு கட்டத்தில் அந்தத் தம்பதிக்கு , அவன் மனைவியின் பார்வையை சரிப்படுத்த மருந்து நிஜவுலகில் இல்லை என்றும் ஆனால் கதைகளின் உலகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாவிலில் இப்படி ஒரு பகுதி வருகிறது.
” கதைகளுக்குள் நுழைந்த பிறகு நான் என்பது கிடையாது, கதைகள் மட்டுமேதான் உண்டு, நாம் செய்ய வேண்டியதெல்லாம் கதைகள் சுழன்று சுழன்று ஒரே மருந்தாக திரண்டு நம் கைகளில் குழைந்து இறங்கும் அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது மட்டும்தான்”
இதுதான் நாவலின் சாரமே.
சூழ்நிலையின் காரணமாக மனைவியை பிரிந்து இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு பயணமாகிறான் அவள் கணவன். அதுவரை இங்கிலாந்தில் பயணமான
கதை இந்தியாவிற்கு மாறுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம், சுல்தான்களின் சாம்ராஜ்யம் , அப்போதைய சாதி அமைப்பு, சாதிய ஒடுக்குமுறை என்று நாவல் பல தளங்களுக்குள் மிக ஆழமாக பயணிக்கிறது.
இந்நாவலை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்வது பா. வெங்கடேசனின் கதை சொல்லும் முறையும், எழுத்தும் நடையும். ஒரு கவிக்கே உரித்தான லாகவத்தோடு மொழியை கையாளுகிறார். அவருடைய எழுத்து நடையில் நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீசிய எழுத்தாளரான யோசே சரமகோவின் ( José saramgo) தாக்கத்தை உணர முடிகிறது. ஒரு வாக்கியம் ஏழெட்டு வரிகளுக்கு நீளும். ஒரு பத்தி நான்கைந்து பக்கங்கள் வரை செல்லும். நாவலில் இரண்டு அத்தியாயங்கள் நாட்டார் பாடல் வடிவில் கிட்டத்தட்ட ஐம்பது பக்கங்கள் வரை எழுதப்பட்டிருக்கிறது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்நாவலை பண்ணிரெண்டு வருடங்கள் எழுதியிருக்கிறார். நாவலுக்கான நடையை கண்டையவே இரண்டு வருங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது. தனக்கு மிகப் பிடித்த எழுத்தாளாராக மிலன் குந்தேராவை குறிப்பிடும் அவர் , தனது நாவலில் குந்தேராவின் தாக்கத்தை உணர முடியும் என்கிறார்.
உலக அளவில் பேசப்பட வேண்டிய நாவல் இது. ஆனால் நூறு பிரதி கூட விற்காத நிலை நினைக்கும் போது கண்ணீர் தான் வருகிறது.
– முகம்மது ரியாஸ்
10:30 PM
22-06-2016