நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுராக் காஷ்யப்பின் படத்தைப் பார்க்கப் போகிறேன். நாளை. அசோகமித்திரனுக்கும் அனுராக் காஷ்யப்புக்கும் ஒரு ஒற்றுமை. அ.மி.யிடம் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டால் கல்கி என்பார். ஆனால் அசோகமித்திரனோ காஃப்கா, கம்யு போன்றவர்களை விட பெரும் சாதனையாளர். அதேபோல் அனுராக் காஷ்யப்புக்குப் பிடித்த இயக்குனர் பாலா. அவர் தயாரிப்பில் உருவான உட்தா பஞ்சாபும் கொடுமை. ஆனால் அனுராக் காஷ்யப்பினால் ஒரு மோசமான படைப்பை உருவாக்கவே முடியாது. அவருடைய கடைசி படமான பாம்பே வெல்வெட் வரை பார்த்து விட்டேன். Auteur என்ற வார்த்தைக்கு இந்தியாவில் நாம் சுட்டிக்காட்டக் கூடிய முதல்தர கலைஞன் அனுராக் தான். ராவணன் போன்ற மொக்கைகளை அவ்வப்போது கொடுத்தாலும் மணி ரத்னத்தையும் இதில் சேர்க்கலாம். அவர் உருவாக்கிய புதிய சினிமா மொழிக்காக. ஆனால் அனுராக் தனித்துவமான கலைஞன். சினிமாவை நம் ஆட்கள் தொழில்நுட்பமாகப் (craft) பார்க்கிறார்கள். சினிமா கலை. அதிலும் அனுராக் இந்திய வாழ்வின் இருண்ட பகுதிகளைக் கலையாக்குகிறார். தென் கொரியாவின் கிம் கி டுக்கைப் போல. மணி ரத்னம் படம் என்றால் படம் எப்படி என்று கேட்கலாம். ஆனால் கிம் கி டுக், அனுராக் காஷ்யப் படங்களுக்கு அந்தக் கேள்வி பொருந்தாது. அனுராக் படம் என்றால் அனுராக் படம்தான். படம் எப்படி என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவில் எந்த ஒரு எழுத்தாளரும் சினிமா கலைஞரும் அனுராக் அளவுக்கு விளிம்பு நிலை மனிதர் மீது அக்கறை காட்டியதில்லை. விளிம்பு நிலை மனிதர் என்றால் ஏழை அல்ல; தில்லியில் நிர்பயா என்ற புனைப்பெயரில் அறியப்படும் பெண்ணை வன்கலவி செய்து கொன்றார்கள் அல்லவா, ஐந்து பேர்… அந்த ஐந்து பேரும்தான் விளிம்பு நிலை மனிதர்கள். நாளை பிரபுவும் நானும் செல்கிறோம். (மதிப்புரை எப்போதும் போல் ஏஷியாநெட்டில் சனிக்கிழமை வெளிவரும்…)
ட்ரைலர்