கண்ணுக்குப் புலனாகாத தடையும் ஓர் நற்செய்தியும்…

என் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன், என் மீது கண்ணுக்குப் புலனாகாத தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று.  சிலர் நான் ஏதோ இட்டுக் கட்டிச் சொல்கிறேன் என்று நினைப்பார்கள்.  பலமுறை இது பற்றி உதாரணங்களுடன் எழுதியிருக்கிறேன்.  இன்னும் சில உதாரணங்கள் தருகிறேன்.

ஆஃப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் உள்ள சர்வாதிகார  நாடுகளில் எழுத்தாளர்களை அரசாங்கமே நாடு கடத்தும்; இல்லாவிட்டால் கொன்று விடும்; அல்லது அவர்களாகவே தப்பித்து ஐரோப்பா சென்று விடுவார்கள். இடதுசாரி அரசாக இருந்தால் எழுத்தாளர்களை அரசாங்கமே ஐரோப்பிய நாடுகளுக்குத் தூதராக அனுப்பி விடும்.  ஹூலியோ கொர்த்தஸாரும் அலெஹோ கார்ப்பெந்த்தியரும் (Alejo Carpentier) இதற்குச் சிறந்த உதாரணங்கள்.  கொர்த்தஸார் பாரிஸில் எக்ஸைலாக வாழ்ந்தார்.  கார்ப்பெந்த்தியர் தூதராக இருந்தார்.

ஆனால் தமிழ்நாட்டில் அரசாங்கத்தினால் எழுத்தாளர்களுக்குப் பிரச்சினை இல்லை.  ஏனென்றால், ஆளும் வர்க்கத்தினருக்கு எழுத்தாளர்களைத் தெரியாது.  அப்படியே தெரிந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை.  யானை, கரப்பான் பூச்சி பற்றிக் கவலைப்படுமா?  ஆனால் எழுத்தாளருக்கு இங்கே அச்சுறுத்தலாக இருப்பது கலாச்சார சூழல்.  உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஆங்கில செய்தித்தாளிலிருந்து ஒரு அம்மாள் கூப்பிட்டார்.  XYZ-இல் உங்களை ஒரு fortnightly column எழுதச் சொல்லியிருக்கிறார்கள்; முடியுமா என்றார்.  (கரும்பு தின்னக் கூலியா?) சரி என்றேன்.  அப்போது XYZ என்ற பெயரை நான் கேள்விப்பட்டதில்லை.  ஏதோ Week மாதிரி ஒரு பத்திரிகையாக இருக்கும் என்று நினைத்தேன்.  பிறகு விசாரித்ததில் என்னை போனில் தொடர்பு கொண்ட பத்திரிகையின் வட இந்தியப் பதிப்பின் பெயர்தான் XYZ  என்றும் அது வட இந்தியா முழுதும் பிரபலமான தினசரி என்றும் தெரிந்தது.  அதோடு அதற்கு லண்டன் பதிப்பும் உண்டு என்று அறிந்தேன்.  ஆக, ஒரு கட்டுரை எழுதினால் அகில இந்தியப் பதிப்பில் அது வெளிவரும்.  லண்டன் பதிப்பிலும் வரும்.  ரொம்பக் குஷியாகி ரெண்டே நாளில் எழுதி அனுப்பினேன்.  அம்மாளிடமிருந்து தகவலே இல்லை.  அனுப்பின மறுநாள் போன் செய்து கேட்டேன்.  எக்ஸிடம் கொடுத்து விட்டேன் என்றார்.  எக்ஸ் என்பது சென்னை எடிட்டர்.  அதற்கு மேல் என்ன செய்வது, விட்டு விட்டேன்.  கிணற்றில் விழுந்த கல் மாதிரி இருந்தது.  அம்மாள் கேட்டது, நான் கொடுத்தது எல்லாம் டிசம்பர் இரண்டாம் வாரம்.  ஜனவரி முதல் தேதியிலிருந்து வரும் என்றார்.  வரவில்லை.  மக்யாநாளும் வரவில்லை.  இப்படியே தினமும் பத்திரிகையை வாங்கிப் பார்த்து ஏமாந்து போய் அம்மாளுக்கு ஃபோன் போட்டேன்.  ”எடிட்டரின் மனைவி ஐ.சி.யூ.வில் இருக்கிறார்.  அதனால் தாமதமாகி இருக்கலாம், விசாரிக்கிறேன்.”   மிகவும் இறுகிய குரலில் சொன்னார்.

ஒரு வாரம் சென்று போன் செய்தேன்.  அதே பதில்.   ஐசியூ.  அடப்பாவிகளா, எடிட்டரின் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றால் பத்திரிகை வராதா?  அதுவும் அகில இந்திய எடிஷன்?  அப்புறம் நான் ஃபோன் செய்யவில்லை.  போன் டார்ச்சர் கொடுக்கிறார் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்து விட்டால் என்ன செய்வது?  ஏனென்றால், அதே ஆங்கில செய்தித்தாளில்தான் அதற்குச் சில மாதங்கள் முன்பு எனக்கு ஒரு ஒத்தாசை செய்திருந்தார்கள்.  என் மீது ஒரு அவதூறு கிளம்பிய போது, அது அப்பட்டமான ஒரு பொய்க்கேஸ் என்று தெரிந்து எந்தப் பத்திரிகையிலும் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட போது வேலை மெனக்கெட்டு அந்த ஒரு ஆங்கில பத்திரிகை மட்டுமே அந்தச் செய்தியை கால் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.  அதிலும் அந்தக் கடைசி வரியை ஆயுள் பரியந்தம் மறக்க மாட்டேன்.  ”லோக்கல் டெபுடி கமிஷனரை விசாரித்தோம்.  எதுவும் எஃப்.ஐ.ஆர். போடவில்லை என்றார்”.   அடப்பாவிகளா, ஏன் உள்ளே தள்ளவில்லை என்று வெளிப்படையாகக் கேட்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன்.

இவ்வளவுக்கும் காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.  அந்தப் பத்திரிகைக்கு மட்டும் என் மீது என்ன கோபம்?  இதற்கெல்லாம் அந்த அம்மாள்தான் காரணம் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.

ஒரு ஆண்டு சென்றது.  அந்த ஆண்டு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பேச நான் அழைக்கப்பட்டிருந்தேன்.  முதல் நாள் விழா முடிந்து மாலை மதுபான விருந்தின் போது ஒரு பெண் என்னிடம் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு, என்ன இப்படிச் செய்து விட்டீர்கள் என்றார். என்ன செய்தேன் என்றபோது அவர் சொன்னார்.  ஒரு ஆண்டுக்கு முன்பு அவரது பத்திரிகைக்குத் தொடர் கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்டதற்கு நான் பதிலே சொல்லவில்லை; அமைதியாக இருந்து விட்டேன்.  ஏன் இப்படிச் செய்தீர்கள்?  நான் உங்கள் எழுத்துக்கு விசிறி.  அதனால்தான் கேட்டேன்.  அந்தப் பெண் பஞ்சாபைச் சேர்ந்தவர்.

இப்போது புரிகிறதா, கண்ணுக்குப் புலனாகாத தடை என்றால் என்னவென்று?

என்னிடம் தொடர் கட்டுரை கேட்கச் சொல்லி தில்லித் தலைமை கேட்டிருக்கிறது.  இங்கே சென்னை அலுவலகத்தில் அமுக்கி விட்டார்கள்.  இதைச் செய்தது அந்த அம்மாள்தான் என்று புரிந்து கொண்டேன்.  தில்லிப் பெண்ணிடம் விளக்கினேன்.  எனக்கே நேரடியாக அனுப்பி விடுங்கள் என்றார்.  மூன்று ஆண்டுகள் என் கட்டுரைகள் வந்தன.  பிறகு நானே நிறுத்தி விட்டேன்.  (கட்டுரைகள் எழுதிப் பயனில்லை; நம்முடைய நாவல்கள் ஆங்கிலத்தில் போக வேண்டும்.)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று ஆகச் சிறந்த அறத்தைப் பேசும் திருவள்ளுவரே ஒரு இடத்தில் சாபம் விட்டிருக்கிறார்.  யாரைத் தெரியுமா?  ஒருத்தருக்கு இன்னொருத்தர் உதவி செய்யும் போது அதைக் கெடுப்பவரைத்தான் திருவள்ளுவர் சபிக்கிறார்.  1330 குறளிலேயே திருவள்ளுவர் மனிதனைச் சபிக்கும் இடம் அது ஒன்றுதான்.  (இன்னொரு இடத்தில் கடவுளை சபிக்கிறார்.)

சரி, அந்த அம்மாளுக்கு என் மீது என்ன வெறுப்பு?  தெரியவில்லை.  அந்த அம்மாள் எல்கேஜி படித்துக் கொண்டிருந்த காலத்தில் (அல்லது பிறக்கவே இல்லையோ?) நான் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை விமர்சித்து எழுதினேன்.  அதுதான் காரணமாக இருக்கலாம்.  வேறு எந்தக் காரணத்தையும் என்னால் யூகிக்க இயலவில்லை.

இதேபோல் இன்னொரு சம்பவம்.  அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையில் உள்ள அத்தனை பேருமே என் நெருங்கிய அல்லது கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள்.  அந்த அலுவலகத்துக்குப் போனால் மணக்கும் காஃபியும் நண்பர்களின் அன்பான விசாரிப்பும் விசேஷம்.  அங்கே சுந்தரம் என்ற நண்பர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  என் மீது வன்மம் கொண்டு அலைகிறார் என்று தெரிந்தது.  அவருடைய முகநூலைப் பார்த்தால் என் மீது ஒரே அர்ச்சனை.  நல்லது.  என்னை வெறுக்க ஒருவருக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்.  என்னை வெறுப்பது அவருடைய உரிமை.  அதில் நான் தலையிடவே முடியாது.  ஆனால் அதற்காக ஒரு பத்திரிகையைப் பயன்படுத்தலாமா?  சந்தர்ப்பம் கிடைக்கும் போது என் மீது புழுதிவாரித் தூற்ற ஒரு பொதுவான பத்திரிகையைப் பயன்படுத்துவது எவ்வளவு அற்பத்தனமான செயல் என்று ஏன் அந்த நண்பருக்குத் தெரியவில்லை?  சரி, அவருக்கு ஏன் என் மீது கொலைவெறி தெரியுமா?

பொதுவாகவே என்னை வெறுக்க ஒருவருக்கு என்னைப் பற்றிய வதந்தியே போதுமானதாக இருக்கிறது.  ”அவுரு ராஜா சாரைத் திட்டியிருக்காரு.”  அவ்ளோதான்.  ஜென்மத்துக்கும் பகை.  அந்தக் குறிப்பிட்ட கட்டுரையைக் கூட படித்திருக்க வேண்டாம்.  நான் வருஷத்துக்கு 300 கட்டுரை எழுதுகிறேன்.  இத்தனை ஆண்டுகளில் எத்தனை இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  இதில் இளையராஜா பற்றிய கட்டுரை ஒன்று.  பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா பாப் மார்லி பற்றி மோசமாகப் பேசியதால் அதை விமர்சித்தேன்.  தமிழர்களுக்கு இளையராஜா எப்படியோ அப்படித்தான் பாப் மார்லி எனக்கு.  அதை மனதில் வைத்துக் கொண்டா ஒருவர் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு என் மீது விரோதம் பாராட்டுவார்?  பாராட்டட்டும், தப்பில்லை.  சந்தர்ப்பம் கிடைக்கும் போது பத்திரிகையின் மூலம் அவதூறு செய்யலாமா?  பத்திரிகை என்பது பொது இல்லையா?  அவர் அதில் வேலை செய்கிறார் என்பதற்காகத் தனக்குப் பிடிக்காதவனை அடிக்கலாமா?  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்களே, அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லையா?  ஏற்கனவே எழுத்தாளன் என்றால் பிச்சைக்காரன் மாதிரி வாழ்கிறான்.  அதில் இந்த மாதிரியெல்லாம் அடி வாங்க வேண்டுமா?  ஏற்கனவே நினைத்தேன்.  எக்ஸ் என்பவர் என் நண்பர்.  நெருங்கிய நண்பர்.  அவர் பற்றி எத்தனையோ பாராட்டி எழுதியிருக்கிறேன்.  ஒரே ஒரு முறை அவர் எழுதியதை விமர்சித்து எழுதினேன்.  உடனே சுந்தரம் மூலம் அவருக்கு செய்தி போய் விட்டது.  நீங்கள் எழுதியதை சுந்தரம் பிரிண்ட் அவுட் எடுத்துக் குடுத்தாரு என்று எதேச்சையாக நண்பர் சொன்னார்.   அடப்பாவி, நான் அந்த நண்பரைப் பாராட்டி நூறு முறை எழுதினேனே, அதையெல்லாம் அவரிடம் காண்பித்தீரா?

சரி, இனிமேல் உங்கள் சங்காத்தமே வேண்டாம்.  பெரிய கும்பிடு.  ஆனால் என்ன, உங்கள் நண்பர்களை விரட்டி விடுகிறீர்கள்.  நஷ்டம் எனக்கில்லை.  சொல்லப்போனால் பெரும் லாபம்தான்.

கண்ணுக்குப் புலனாகாத தடையில் பல்வேறு வடிவங்கள் உண்டு.  நான் இதுவரை எத்தனையோ இலக்கியக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன்.  அதெல்லாம் காற்றோடு போயிற்று.  சமீப காலமாகத்தான் ஷ்ருதி டிவி நண்பர் அதை ஒளிப்பதிவு செய்து யூட்யூபில் பதிவேற்றம் செய்து வந்தார்.  அதற்கும் வந்தது முடிவு.  அவர் அப்படிச் செய்ததால் உலகெங்கும் உள்ள தமிழ் தெரிந்த வாசகர்கள் என் பேச்சைக் கேட்க முடிந்தது.  சுமார் ஐம்பது பேராவது சொல்லியிருப்பார்கள், பா. வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’ வெளியீட்டு விழாவில் நான் பேசியதைக் கேட்டுத்தான் அந்த நாவலை வாங்கியதாக.   பாகீரதியின் மதியம் வெளியீட்டு விழாவுக்கு முன்பு வரை நான் என் பாக்கெட்டிலிருந்துதான் ஷ்ருதி டிவிக்குப் பணம் கொடுத்து என் பேச்சைப் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்தேன்.  யாரோ புத்தகம் எழுத, யாரோ அதைப் பதிப்பிக்க, அந்தப் புத்தகம் பற்றி நான் பேசுவதைப் பதிவேற்றம் செய்ய என் காசை செலவு செய்தேன்.  ஏனென்றால், வெளியூர்களில் வெளிநாடுகளில் வசிக்கும் என் வாசகர்கள் என் பேச்சைக் கேட்க வேண்டும்.  பிறகுதான் பணக் கஷ்டம் தாங்க முடியாமல் போனதும் பா. வெங்கடேசனிடம் நீங்களே ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.

அதற்கும் வந்தது கேடு.  பல அன்பர்கள் ஷ்ருதி டிவி நண்பரை மிரட்ட அவர் பயந்து விட்டார்.  மிரட்டுவது என்றால் கத்தியைக் காட்டி அல்ல.  என்ன, நீர் சாருவுக்கு மட்டும்தான் செய்வீரா?  நீர் என்ன அவர் கைத்தடியா?  இன்னபிற.  இது போதாதா?

பொதுவாக, நீயும் சாருவும் ஹோமோவா என்றுதான் கேட்பார்கள்.  அதுவரை போகவில்லை என்பதற்காக அந்த நண்பர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.

சரி, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.  ஸீரோ டிகிரி Jan Michalski சர்வதேசப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.  Harper Collins பதிப்பகம் தொகுத்த 50 Books 50 Writers தொகுதியில் இந்தியாவின் 50 சிறந்த நூல்களில் ஸீரோ டிகிரியும் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படி பெரிய பட்டியல் இருக்கிறது.

எனக்கு உதவி செய்பவர்களை மிரட்டுவதால் என்னை வாசிக்கும் நண்பர்களுக்குத்தான் நஷ்டம் உண்டாகிறது.  பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ’துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி நான் 70 நிமிடம் பேசினேன்.  மிக முக்கியமான பேச்சு.  ஷ்ருதி டிவி நண்பரை மிரட்டி விரட்டி விட்டதால் யாரும் ஒளிப்பதிவு செய்யவில்லை.  ஒரே ஒரு நண்பர் ஒலிப்பதிவு செய்திருந்தார்.  இந்த நிலையில் நண்பர் மணிவண்ணன் பார்த்தசாரதி தன் அலைபேசியில் ஒளிப்பதிவு செய்து அனுப்பியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. பின்வரும் இணைப்புகளைப் பாருங்கள்.

பகுதி 1:https://www.facebook.com/chennaitamlit/videos/1723235271279105/

பகுதி 2:https://www.facebook.com/chennaitamlit/videos/1723247861277846/

பகுதி 3:https://www.facebook.com/chennaitamlit/videos/1723249501277682/

***

சமீபத்தில் எனக்கு ஒரு பெரிய பார்சல் வந்தது.  தூக்கவே முடியவில்லை.  பிரித்துப் பார்த்தால் ArtReview Asia-வின் நான்கு பிரதிகள்.  நமக்கும் ஓவியத்துக்கும் வெகுதூரமாயிற்றே, அதிலும் லண்டனிலிருந்து அனுப்பியிருக்கிறார்களே என்று ஆர்வத்துடன் பிரித்தால் உள்ளே ஒரு கடிதம்.  கையால் எழுதப்பட்ட கடிதம்.  எழுதியிருப்பவர் ArtReview Asia ஆசிரியர் Mark Rappolt.  என்னை ArtReview Asia-வுக்குத் தொடர்ந்து ஒரு பத்தி எழுத முடியுமா என்று கேட்டிருந்தார்.  ஆர்ட் ரெவ்யூ ஏஷியா ஒரு காலாண்டிதழ்.  முழுக்க முழுக்க ஓவியர்களே பங்கேற்கும் ஒரு சர்வதேசப் பத்திரிகை.  இதில் நானா?  மின்னஞ்சல் அனுப்பினேன்.  அவர் ஸீரோ டிகிரியைப் படித்தார்.  அப்படி ஒரு நாவலைப் படித்ததே இல்லை.  பிறகு ஆங்கிலத்தில் என்னுடைய கட்டுரைகளைத் தொடர்ந்தார்.  ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் எழுதக் கேட்டார்.  எனக்கு ஓவியம் பற்றி ஒன்றுமே தெரியாதே?  ஓவியம் வேண்டாம்.  வேறு ஏதாவது எழுதுங்கள்.  இது முதல் கட்டுரை.

உங்களுக்கு என் நாவல் பற்றி யார் சொன்னது?

ஐயோ, மறந்து விட்டேனே?  டோக்யோவில் ஒரு ஓவியக் கண்காட்சியின் போது யாரோ சொன்னார்கள்.  அங்கிருந்து லண்டன் திரும்பும் போது விமானத்தில் படித்தேன்.

இப்போது என் பிரச்சினை என்னவென்றால், நாளை மெட்ராஸிலிருந்து அல்லது லண்டனிலிருந்தே மார்க்குக்கு மின்னஞ்சல் பறக்கும்.  சாரு ஒரு போலி, சராசரி, இத்யாதி.  போன் போடுபவர் மார்க்கே மதிக்கும் மனிதராக இருப்பார்.  அதுதான் விசனமாக இருக்கிறது.

ஜெகா, நிர்மல், கார்ல் மார்க்ஸ், மற்றும் பிரிட்டன்/அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்கள் ArtReview Asia-வுக்கு சந்தா செலுத்தி வாங்கி என் கட்டுரையைப் படிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  கீழே இணைப்பு:

http://artreview.com/magazine/2016-2006/artreview_asia_vol_4_no_3/

***

நாளை மறுநாள் 3-7-2016 அன்று லக்ஷ்மி சரவணகுமாரின் பாராட்டு விழாவில் (கவிக்கோ அரங்கு, சிஐடி காலனி) ஒரு முக்கியமான விஷயம் பற்றிப் பேச இருக்கிறேன்.  யார் ஒளிப்பதிவு செய்வார்கள் என்று தெரியவில்லை.  எப்படியெல்லாம் எழுத்தாளர்களுக்கு உதவி செய்கிறார்கள் பாருங்கள்…