தஞ்சை ப்ரகாஷ் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் சுமார் ஐம்பது பக்கங்கள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். அவர் எப்படி மற்ற தமிழ் எழுத்தாளர்கள் தொடாத இடங்களைத் தொட்டார்; எப்படி மற்ற எழுத்தாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்; எப்படி மற்ற எழுத்தாளர்களை விட அவர் மேலே இருக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் நிறுவி இருக்கிறேன். அதை மறுக்க வேண்டுமென்றால் ஒருவர் தஞ்சை ப்ரகாஷின் அத்தனை நாவல்களையும் படித்து என் கட்டுரையை மறுத்தால் அதை நான் நல்ல விவாதம் என்று கருதுவேன். ஆனால் போகிற போக்கில் என் மீது சேற்றை வாறி வீசியிருக்கிறார் என் அன்புக்குரிய கவிஞர் லீனா மணிமேகலை. கீழே பாருங்கள்:
“தஞ்சை பிரகாஷ் இலக்கியம் எழுதியவர் அல்ல. அவரது நாவல்கள் சரோஜாதேவி நாவல்களே. சரோஜாதேவி நாவல்களை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஆன்ம தைரியம் இல்லாதவர்களுக்குரிய பாவனை எழுத்துக்கள் அவருடையவை” என ஜெயமோகனின் நிராகரிப்பு ஒரு பக்கம். “தமிழின் உச்சபட்ச படைப்பாளி. அசோகமித்திரனுக்கும் மேல், பி.சிங்காரத்திற்கும் மேல், தமிழில் எழுதிய எல்லாப் படைப்பாளிகளுக்கும் மேல் தஞ்சை பிரகாஷ்” என்று அவர் இருந்த திசை நோக்கித் தொழும் சாரு நிவேதிதா மற்றொரு பக்கம். உண்மையில் இதுபோன்ற மிகையுணர்ச்சிகளுக்கு எதிரானது பிரகாஷின் எழுத்து. மிக நிதானமான வாசிப்பை, கவனிப்பை கோரி நிற்கிறது பிரகாஷின் படைப்புலகம்.
இப்படித் தொடங்குகிறது லீனாவின் கட்டுரை. தஞ்சை ப்ரகாஷின் மிஷன் தெரு என்ற நாவலுக்கான மதிப்புரையில் இப்படி எழுதியிருக்கிறார். அதாவது தஞ்சை ப்ரகாஷ் ஒரு சரோஜாதேவி எழுத்தாளர் என்று போகிற போக்கில் அடித்து விடுவதும் நான் அவருடைய எல்லா எழுத்துக்களையும் வாசித்து, பரிசீலித்து, மதிப்பீடு செய்து எழுதியதும் ஒன்று!!!
எதையாவது செய்ய வேண்டுமா, எவனையாவது செருப்பால் அடித்து விட்டு ஆரம்பி என்பது புது வழக்கம் போல.
நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் லீனா மணிமேகலைக்கு நன்றி.