அராத்து புத்தக வெளியீட்டின் போது என் வாரிசு யார் என்ற கேள்விக்கு ஹாட் ஸீட்டில் அராத்து என்று பதில் கூறியது பற்றிப் பலரும் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். ஒரு நொடி கூட யோசிக்காமல் பதில் கூற வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. கொஞ்சம் யோசித்திருந்தால் இப்படி பதில் சொல்லியிருப்பேன்.
என் எழுத்து ஒரு சிந்தனைப் பள்ளியையே உருவாக்கி இருக்கிறது. இதில் ஒருவரை மட்டுமே வாரிசு என்று சொல்லி விட முடியாது. இன்றைய கால கட்டத்தை, இன்றைய இளைஞர் சமூகத்தைப் புனைவில் கொண்டு வருவதில் அராத்து என்று சொல்லலாம். மேலும், பிரபு காளிதாஸ், சரவணன் சந்திரன் என்றெல்லாம் இருக்கிறார்கள். இதில் சரவணன் சந்திரன் மிகவும் காத்திரமானவர். யார் உசத்தி, யார் கீழே என்றெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பிரமாதமாகச் செயல்படுகிறார்கள். இது தவிர சினிமா, பயணம் போன்ற துறைகளில் ராஜேஷ், கணேஷ் அன்பு.
சமூகம், அரசியல் போன்ற விஷயங்களில் கார்ல் மார்க்ஸை யாரும் மிஞ்ச முடியாது. என்ன ஒரு தெளிவு, என்ன ஒரு பகுப்பாய்வு. சமயங்களில் இவருடைய Political correctness-ஐப் பார்த்து எனக்கே பயமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு பற்றி இவர் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் வழி மொழிகிறேன். இதுதான் ஜல்லிக்கட்டு பற்றி என் கருத்தும். விவசாயிகள் இங்கே செத்துக் கொண்டிருக்கிறார்கள். சென்ற மாதத்தில் ஒரே மாவட்டதில் அறுபது விவசாயிகள் செத்தார்கள். ஆனால் அரசியல்வாதிகளும் பாலாஜி சிம்பு போன்ற கோமாளிகளும் ஜல்லிக்கட்டுக்காக ’போராடுகிறார்கள்.’ செல்லாப் பண விவகாரத்தில் இந்தியாவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதற்காக சுண்டு விரலைக் கூட அசைக்காத தமிழ் அரசியல்வாதிகள் ஜல்லிக்கட்டுக்காகப் போராடுவது மக்கள் விரோத அரசியலின் உச்சம்.
கீழே வருவது கார்ல் மார்க்ஸ்:
பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி ஜல்லிக்கட்டு குறித்த விவாதம் மீண்டும் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் செயல்படுகிற முக்கியத் தரப்புகள் உண்டு.
ஒன்று, பண்பாட்டு ரீதியாக இது தமிழகர்களின் கொண்டாட்டம். அதைத் தடை செய்வது என்பது ‘இனக்குழுக்களின் கலாச்சாரத்தில் குறுக்கிடுகிற வன்முறை; இதை அனுமதிக்க முடியாது’ எனும் ஜல்லிக்கட்டு ஆதரவு கிராமிய அடிப்படை சுபாவத்தின் குரல். இரண்டாவது, ஜல்லிக்கட்டைத் தமிழ்ப் பாரம்பரியமாகப் பேசுவதற்கு ஒன்றுமில்லை; ஏனெனில் தமிழ்ப் பாரம்பரியம் என்று சொன்னாலே அது சாதிப் பாரம்பரியம் தான். ஜல்லிக்கட்டிலும் சாதிய ஒடுக்குமுறை உண்டு. இரட்டைக் குவளை முறை, ஆணவக் கொலை, தீண்டாமை என்று எதிலும் நெகிழ்ந்து கொடுக்காத சமூகம், ஜல்லிக்கட்டு என்றவுடன் இது தமிழ்க் கலாச்சாரம் என்றும், பெருமிதம் என்றும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் எதிர்க்குரல்.
மூன்றாவது, இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமான கணக்குகளுடன் செயல்பட்டு, உச்சநீதிமன்றம் சென்று ஜல்லிக்கட்டை ‘விலங்குகளின் மீதான குரூரம்’ என்ற அடிப்படையில் நிறுத்தி வைத்திருக்கும் ‘பீட்டா’ உள்ளிட்ட என்ஜியோக்கள் மற்றும் ‘விலங்குகளின் நலன்கள் ‘குறித்த அரசு அமைப்புகளின் குரல். இதுதான் மிகவும் வலுவான தரப்பு. நான்காவது, மரபு ரீதியான விலங்கினங்களைக் காக்க முற்படுகிற, பீட்டா உள்ளிட்ட அமைப்புகளின் நோக்கங்களை அம்பலப்படுத்துகிற, மக்களுடன் பெரும் உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிற ஜல்லிக்கட்டு ஆதரவு தனிமனித அமைப்புகள்.
ஐந்தாவது, இந்த விவகாரத்தில் மக்களின் உணர்வுகளைச் சுரண்டும் அற்பத்தனத்தை செய்கிற பிஜேபி, காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சில உதிரி அமைப்புகள். சிம்பு, ஆர். ஜே. பாலாஜி உள்ளிட்ட தற்காலிகக் கோமாளிகள்.இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக புரிந்துகொள்ளாமல் இந்த விவகாரத்தை நாம் விவாதிக்க முடியாது.
முதலில் இது தமிழ்க் கலாச்சாரமா என்றால் ஆமாம்; தமிழ்க் கலாச்சாரம்தான். ஜல்லிக்கட்டின் காலம் சில நூற்றாண்டுகளுக்கு உட்பட்டதுதான் என்ற வாதமும் உண்மை. எந்த கலாச்சாரமும் அது கட்டமையும் காலத்தில் தனது முந்தைய காலத்தின் எச்சங்களைச் சுமந்தே வருகிறது. ஜல்லிக்கட்டும் அப்படியானதுதான். அது உருவாகியதையும் நிலைத்ததையும் வருடங்களைக் கொண்டு கணக்கிட முடியாது. நமது வீட்டில் செய்யும் சடங்குகளில் கூட, நமது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றாற்போல நாம் மாற்றங்களைச் செய்துகொள்கிறோம். அதுவொரு பெரும் மக்கள்திரள் தானாகவே தனது வாழ்முறையில் நகரும் செயல்பாடு.
இதில் ஆதிக்கம் செலுத்துகிற பல கூறுகள் உண்டு. அவற்றில் வெறும் பண்பாட்டு அமைப்புகள் மாத்திரம் அல்ல. அரசுகள், நிறுவனங்கள், கருத்துருவாக்குபவர்கள் என எல்லாரது பங்கும் உண்டு. இந்த இடையீடுகள் எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதற்கு குறிப்பிட்ட வரையறைகள் எதுவும் இல்லை. அதில் ஜனநாயகத்தன்மை இருக்கிறதா என்பதே அளவீடு. இந்த ஜல்லிக்கட்டுத் தடையிலும் நாம் பொருத்தவிரும்புவதும் அந்த அளவீட்டையே. ஆனால் இந்தத் தடை மேலிருந்து திணிக்கப்படுகிறது, அதனால் அதுவொரு ஜனநாயக விரோதத்தன்மையைக் கொண்டிருக்கிறது. இதைப் புரிந்துக்கொள்வதிலிருந்துதான் இதன் பின்னுள்ள அரசியலை உணர்ந்துகொள்ளமுடியும்.
ஜல்லிக்கட்டில் சாதி உண்டா என்றால் உண்டு. அதை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் வேண்டியதில்லை. அதே நேரம், அதிலிருந்து முழுக்கவும் தலித்துகள் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்களா என்றால் அதுவும் இல்லைதான். ‘தலித் பூசாரிகள் தீபாராதனை காட்டிய பிறகுதான் மாட்டை அவிழ்த்து விட வேண்டும்’ என்ற சடங்குகள் உள்ள ஊர்களும் உண்டு. தங்களுக்கென பிரத்யேகமான ஜல்லிக்கட்டுகளை நடத்திக்கொள்கிற தலித் கிராமங்களும் உண்டு.
நமது பாரம்பரியத்தில் ஜாதி இல்லாத பண்பாட்டு நிகழ்வே கிடையாது. ‘அதைக் காரணமாக வைத்து, ஜல்லிக்கட்டைத் தடை செய்யவேண்டுமா…? என்றால் ஆமாம்…! என்றுதான் சொல்வேன். ஆனால், அது எப்போது? ஜல்லிக்கட்டு என்பது முழுக்கவும் மக்களிடம், அதாவது ஆதிக்க ஜாதி உழைக்கும் மக்களிடம் இருக்கிற வரையில். அவர்களுடன் நீக்கமற நிறைந்திருக்கிற சாதிய உணர்வை விட்டு வெளியேறாமல் அதே சமயம் அதைப் பெருமிதமாக முன்னெடுக்கிற அவர்களின் மீதான எதிர்வினையாக அந்த கோரிக்கை தலித் தரப்பிலிருந்து வலுப்பெற வேண்டும்.
ஆனால் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது? ஜல்லிக்கட்டை தடை செய்துவைத்திருப்பவர்கள் யார்? இந்தத் தடையை சாத்தியப்படுத்தியவர்களுக்கு இந்த சமூகத்துடன், வாழ்முறையுடன் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் முழுக்கவும் வெளியாட்கள். அவர்களை நிராகரிப்பதன் வழியாகவே இதை நாம் அணுகவேண்டும். ஒரு பண்பாட்டு விழா அரசியல் புரிதலாகக் கனியும் இடம் அது. அதை நாம் கைவிடலாகாது. ஏனெனில் இதன் பின்னுள்ள கணக்குகள் அத்தகையவை.
இந்தத் தடையை நிகழ்த்திக் காட்டியவர்கள் மிகவும் மேம்போக்கான விலங்கு அபிமானம் கொண்டவர்கள். விலங்குகளுடன் புழங்கும் வாழ்க்கை முறையைக் கொண்டவனை ‘மற்றவனாகக்’ காண்கிற மேட்டிமைத் தனம் நிறைந்தவர்கள். தாம் கார்ப்பரேட்டுகளிடம் சோரம் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட அறிந்துகொள்ளாத மவுடீகமும், தெரிந்தாலும் தனது சொகுசுக்காக அதைக் கடந்துபோகிற அற்பத்தனமும் கொண்டவர்கள். இத்தகைய மனநிலையின் மூலம் தாங்கள் வன்முறையின் கூறாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட அறியாத அளவுக்கு மூர்க்கமான அறிவுஜீவிகள். இந்த மொண்ணைத் தனத்தை பீட்டா உள்ளிட்ட மக்கள் விரோத அமைப்புகள் மிகவும் தந்திரமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
பொதுப்பரப்பில் தங்களது நலன்களுக்கு உகந்த கருத்துகளைப் பரப்பி மக்களின் சிந்தனை முறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன அவை. சாதி, அன்பு, பரிவு உள்ளிட்ட எல்லா கருத்தியல்கள் வன்முறைகளையும் லாவகமாகப் பயன்படுத்தி அறிவுச் சுரண்டலைத் தீவிரமாக செய்கின்றன. இத்தகைய நிறுவங்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் அன்புருவின் காம்பைப் பற்றி இழுத்தால், அதன் கொடூர வேர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா என எங்கும் நிறைந்திருப்பதைக் காணமுடிகிறது. விலங்குகளின் மீதான அன்பாக தோற்றம் காட்டி நிற்கும் இத்தகைய அமைப்புகளின் பின்னே மக்களை சுரண்டும் ஏற்பாடுகளே நிறைந்திருக்கின்றன.
அவர்கள் அரசின் எல்லா அலகுகளிலும் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்களால் அரசை மிரட்டவும் முடிகிறது. அதே சமயம் மக்கள் நலனிலிருந்து நீண்ட தூரம் விலகிப்போயிருக்கிற அரசுகள், ஒரு புறம் அவர்களுடன் கைகோர்த்துக்கொண்டே மறுபுறம் ஜல்லிக்கட்டு ஆதரவு என்றும் பல்லிளிக்கிறார்கள்.
இது நீதிமன்றங்களுக்கும் பொருந்தும். ஜல்லிக்கட்டை பாரம்பரியம் என்று ஏற்றுக்கொண்டால், உடன்கட்டை ஏறுவதையும் பாரம்பரியம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று புத்திசாலித்தனமாக கேட்கிறார்கள். இன்னும் என்ன மயிருக்கு நீதிமன்றங்களில் டவாலி…? என்று கேட்டு எத்தனை நீதிபதிகள் தீக்குளித்திருக்கிறார்கள்? நீதிமன்றங்கள், அரசியல் பொறுக்கித் தனத்தின் புகலிடமாக மாறியிருக்கும் சூழலில் இதைப் போன்ற விவகாரங்களில், சமூகத்தின் மேட்டிமைத்தன மனநிலையை சொரிந்து கொடுக்கும் தீர்ப்புகளை வழங்கி தமது செல்லரித்துப்போன மாண்புகளை அவர்கள் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறார்கள். அதைத்தாண்டி இந்த தீர்ப்பு விவகாரத்தில் யோசிக்க ஒன்றும் இல்லை. ஏனெனில் பீட்டா போன்றவை ஊடுருவும் இடங்களில் நீதிமன்றங்கள்தான் முதலிடத்தில் இருக்கும். நாங்களா வேண்டாமென்று சொல்கிறோம்? கோர்ட் தானே சொல்கிறது? கோர்ட்டை மதிப்பது ஒரு குடிமகனின் கடமை இல்லையா என்று கிரண் பேடி போன்றவர்கள் பசப்புவது அதனால் தான். அவர்களுக்குத் தெரியும் இது என்னவென்று.
இந்த விவகாரத்தில் சிம்பு, பாலாஜி போன்றவர்களது போலிச்சீற்றங்கள் பொது வெளிக்கு வருகிறபோது, ஜல்லிக்கட்டு விவகாரம் அரசியல் ரீதியான கோரிக்கையாக மாறுவதையும், அரசியல் கட்சிகள் மீதான அழுத்தமாக செறிவடைவதையும் அது தடுத்துவிடும். மேலும், இத்தைகைய விவகாரங்களில் தீவிரமாக செயல்படுபவர்கள் மீதான இருட்டடிப்பாகவும் அது மாறும்.
இதில் சீரிய பங்களிப்பது, விடாப்பிடியாக இதன் அரசியலைப் பேசிக்கொண்டிருக்கிற சில தனி மனித அமைப்புகளே. இந்த உரையாடலை பண்பாட்டுத் தளத்திலிருந்து பரந்த அரசியல் தளத்திற்கு மாற்றியவர்கள் அவர்கள். இறக்குமதி செய்யப்பட்ட பசுக்கள், நாய்கள், அதன் மருந்து வியாபாரம், காளைகளின் விந்து வியாபாரம், அந்த வியாபாரம் பாரம்பரியக் காளைகளை கொன்றொழிக்க முனையும் வெறித்தனம், பாரம்பரியக் காளைகளைக் காப்பதில் ‘ஜல்லிக்காட்டு’ போன்ற கலாச்சார விழாக்களின் பங்களிப்பு மற்றும் அதற்கு எதிரான கார்ப்பரேட் காய் நகர்த்தல்கள் என இந்த வலைப்பின்னலை அம்பலப்படுத்துபவர்கள் அவர்கள்தான்.
அவர்களது குரலை வலுவாக்குவதும், அவர்களோடு தம்மை ஆழமாகப் பிணைத்துக்கொண்டு பரந்த விவாதங்களை ஊக்குவிப்பதுமே அரசியல் கட்சிகள் இப்போது செய்யவேண்டியது. ஜல்லிக்கட்டை உலகளாவிய தளத்தில் வைத்து இந்த தடை அரசியலைப் புரிந்துகொள்வதும், விவாதிப்பதும் ஒரு சிவில் சமூகமாக நமது பொறுப்பு. ஆமாம். சன்னிலியோனை நமக்குப் பிடிப்பது வேறு. அவரைப் பீட்டா சென்ற ஆண்டின் ‘PETA person of the year’ ஆகத் தேர்ந்தெடுத்து நம்முன் நிறுத்துவது வேறு.