மதிப்பிற்குரிய சாரு,
துருவங்கள் பதினாறு திரைப்படத்தை பற்றி எல்லா பெரிய இயக்குனர்களும் பாராட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். படத்திற்காக பாராட்டுகிறார்களா இல்லை இயக்குனர் பெரிய இடத்தில் இருப்பவர் என்பதற்காக பாராட்டுகிறார்களா என்று தெரியவில்லை. Suspense thriller என்று சொல்கிறார்கள். அனால் அது ஒரு சோம்பேறித்தனமான மொக்கை படம் என்பது என்னுடைய கருத்து. நீங்கள் அதை பற்றி எதுவும் எழுதவில்லையா?
பிரதீப்
அன்புள்ள பிரதீப்
தமிழ் சினிமாவுக்கு விமர்சனம்/மதிப்புரை எழுதுவது பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்ததை நீங்கள் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன். இனிமேல் எந்தத் தமிழ்ப் படத்துக்கும் மதிப்புரை எழுதுவதில்லை என்று நான் முடிவெடுத்து பல காலம் ஆகிறது. செய்ய வேண்டிய வேலைகள் எக்கச்சக்கமாகக் கிடக்கின்றன. படிக்க வேண்டிய நூல்கள் குவிந்து கிடக்கின்றன. அதேபோல் பார்க்க வேண்டிய உலக சினிமாக்களும். தினமலரில் வாராவாரம் உலக சினிமா பற்றிய தொடர் எழுதி வருகிறேன். மின்னம்பலத்தில் நாடோடியின் நாட்குறிப்புகள் என்று ஒரு தொடர். குமுதத்தில் ஒரு தொடர். இதற்கிடையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நாவல். ஹிண்டுவில் பரத்வாஜ் ரங்கன் சினிமா விமர்சனம் எழுதுகிறார் என்றால் மாதம் அவருக்கான ஊதியம் மூணு லட்சம் ரூபாய் இருக்கும். இங்கே நான் புத்தக விழா போக வேண்டும் என்றால் காலையில் எழுந்ததும் இன்று யாரைக் கேட்கலாம் என்ற பிச்சைக்கார நிலை. சென்ற வாரம் குமரேசனை அழைத்து ஓலா மணியில் கொஞ்சம் காசை ரொப்புங்கள் என்றேன். 800 ரூ போட்டார். இன்னொரு நண்பர் ஏற்கனவே 500 ரூபாய் போட்டிருந்தார். புத்தக விழா நடக்கும் அமிஞ்சிக்கரை போக இங்கே மைலாப்பூரிலிருந்து 200 ரூபாய் ஆகிறது. 1300 ரூபாயும் நேற்றோடு காலி. இன்றைக்கு யாரைக் கேட்கலாம் என்று காலையிலிருந்து யோசனையில் கழிகிறது. இல்லாவிட்டால் போகாமல் இருந்து விடலாமா என்றும் யோசனை.
இந்த நிலையில் என்ன ——————– நான் சினிமா விமர்சனம் எழுத வேண்டும்? பார்த்திபன் என் நண்பர். அவருடைய கோடிட்ட இடங்களை நிரப்புக படம் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்து விடுவேன். நன்றாக இருந்தால் எழுதுவேன். இல்லாவிட்டால் அவரிடம் என் கருத்துக்களை, விமர்சனங்களை சொல்லுவேன். அது நட்புக்காக. அவர் என்னுடைய நீண்ட நாள் நண்பர். எதிர்மறையாகச் சொன்னாலும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார். நேற்றே படம் பார்க்க அழைத்தார். ஜி.குப்புசாமியின் புத்தக வெளியீடு இருந்ததால் போக முடியவில்லை. நேற்றைய புத்தக விழா போக்குவரத்து செலவு 430 ரூபாய். 200 ப்ளஸ் 200 அண்ட் ஒரு காஃபி 30 ரூபாய்.
இப்போது ஒரு பத்திரிகையில் ஒரு சினிமா கட்டுரை கேட்டிருக்கிறார்கள். பொதுவாக 1000 ரூபாய் கொடுப்பார்கள். 5000 ரூ கொடுத்தால் எழுதுகிறேன்; இல்லாவிட்டால் ஆளை விடுங்கள் என்று இதோ போன் போட்டு சொல்ல வேண்டும்.
எழுத்தாளன் என்ன கள்ள நோட்டா அச்சடிக்கிறான்? அன்றாட செலவுக்கெல்லாம் என்ன செய்வது? யார் கொடுப்பார்? இனிமேல் நான் எழுதும் பத்திரிகைகளில்தான் காசு கேட்கலாம் என்று இருக்கிறேன்.
யாராவது 5000 ரூபாய் கொடுத்தால் நீங்கள் குறிப்பிட்டுள்ள படத்தைப் பார்க்கலாம். மற்றபடி எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை.
மிகுந்த பிரியத்துடன்
சாரு