மேற்கண்ட தலைப்பில் ஜெயமோகன் அவரது தளத்தில் எழுதிய நீண்ட கட்டுரையை டாக்டர் ஸ்ரீராம் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார். முழுதும் படித்தேன். இது குறித்து ஏற்கனவே நான் இந்தத் தளத்தில் ஒருமுறை அல்ல; பலமுறை எழுதியிருக்கிறேன். அழுதிருக்கிறேன். கதறியிருக்கிறேன். அது பற்றி யாருமே கவலைப்பட்டதில்லை. சரி, ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று விட்டு விட்டேன். இப்போது ஜெயமோகன் எழுதியதும் அதற்கு அரவிந்தன் விளக்கம் எழுதியிருக்கிறார். இரண்டையும் படியுங்கள்.
http://www.jeyamohan.in/94596#.WIStVc9EnIU
இது அரவிந்தன் பதில்:
http://www.jeyamohan.in/94776#.WISuU89EnIU
இது குறித்து என் குறிப்பு என்னவெனில். அரவிந்தன் சொல்வது சமத்காரமான பதில் மட்டுமே. அதில் உண்மை எள்ளளவும் இல்லை. நான் இதுவரை இந்துவில் எழுதியதெல்லாம் என்னுடைய சொந்த முயற்சியினால் மட்டுமே. ஏதாவது ஒரு வெகுஜனப் பிரச்சினை பற்றி வெகுஜன இதழில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற போது சமஸைத் தொடர்பு கொண்டு ஒரு கட்டுரை அனுப்பி வைப்பேன். அதுவும் வெளிவரும். அப்படி ஒன்றிரண்டு கட்டுரைகள் ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று வந்துள்ளது. சமயங்களில் கட்டுரையே சுருக்கப்பட்டு கடிதமாக வரும். அது போன்ற அவமானம் வேறு எதுவும் இல்லை. ஒரே ஒரு முறை அரவிந்தன் இந்து மலருக்காக சினிமா கட்டுரை கேட்டார். கொடுத்தேன்.
ஆனால் பிரச்சினை இது அல்லவே அல்ல. பிரச்சினையை விட்டு விட்டு அரவிந்தன் வேறு எதற்கோ பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். தி இந்து காலச்சுவடுவின் சென்னை அலுவலகம் போல் இயங்கி வருகிறது. காலச்சுவடுவில் 50 பக்க புத்தகம் வந்தால் வந்த அடுத்த நாளே இந்துவில் முழுப்பக்க மதிப்புரை வருகிறது. 50 பக்க புத்தகத்துக்கு மறுநாளே மதிப்புரை. அதுவும் முழுப்பக்க அளவில். மற்ற புத்தகங்கள் எதற்கும் இத்தனை மதிப்பு அளிக்கப்படுவதில்லை.
எஸ்.ரா. ஒரு தொடர் ஒரு ஆண்டு எழுதினார். அடுத்து ஜெயமோகன் எழுதுவார் என எதிர்பார்த்தேன். இரண்டு மாத இடைவெளி விட்டு எஸ்.ரா.வே மீண்டும் ஒரு தொடர் எழுதுகிறார். அதுவாவது பரவாயில்லை. எஸ்.ரா.வையே கேட்டு அவர் குடும்பம், அவர் நண்பர்கள், அவரது சூழல் என்று பர்ஸனலாக அவர் வாழ்வு பற்றி ஒரு தொடர் போட்டார்கள். அதாவது, ஒரே நேரத்தில் ஒரே வாரத்தில் இரண்டு தொடரையும் எஸ்.ரா.வே எழுதினார். இதையெல்லாம் எஸ்.ரா. என் மீது தவறாக எண்ணக் கூடாது. எஸ்.ரா.வின் மீது தவறு இல்லை. என்னிடமும் ஒரு பத்திரிகை வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு தொடர் எழுதுங்கள் என்று கேட்டால் மகிழ்ச்சியுடன் தான் எழுதிக் கொடுப்பேன். ஜெயமோகனிடம் கேளுங்களேன் என்று சத்தியமாகச் சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு பத்திரிகை தர்மம் இதுதானா? ஜெயமோகன் தி இந்துவிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார் என்பது உண்மை. அதற்கு அரவிந்தன் மட்டுமே காரணம். சாரு நிவேதிதா இந்துவிலிருந்து தடை செய்யப்படவில்லை. அவர் பெயரே தி இந்துவுக்குத் தெரியாது. தெரிந்தால் அல்லவா தடை செய்வது?
என் வாழ்நாளில் இத்தனை வெளிப்படையாக nepotism செய்த ஒருவர் என்றால் அது அரவிந்தன் தான்- அதுவும் நான் திரும்பத் திரும்ப சாரு ஆன்லைனில் எழுதியும் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நண்பர் அரவிந்தன் தன் போக்கை துளிக்கூட மாற்றிக் கொள்ளாமல் nepotism செய்தார். ஒரு பத்திரிகையை இப்படித் தன்னுடைய சுயலாப நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாமா? இது தர்மமா? மீண்டும் சொல்கிறேன். இதை நான் இப்போது ஜெயமோகன் எழுதிய பிறகு எழுதவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளாக எழுதி அலுத்துப் போய் இனிமேல் இந்துவில் எழுதவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். பல மாதங்களாக நான் இந்துவில் எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஞானக்கூத்தன் இரங்கல் கட்டுரையைக் கூட ஆங்கிலத்தில்தான் வெளியிட்டேன். இந்துவுக்கு அனுப்பவில்லை. அனுப்பினால் அதைச் சுருக்கி கடிதமாக வெளியிடுவார் அரவிந்தன். 64 வயதில் எனக்கு அந்த அவமானம் வேண்டாம்.
ஆனால் அரவிந்தன் என்னை இப்படி நடத்துவதுதான் சரி. அவருடைய ஆசான் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகளை நான் சராசரி நாவல் என்று எழுதினேன் அல்லவா? அதற்காக அவர் என்னைப் பழி வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் இப்படிப்பட்ட விருப்பு வெறுப்பையெல்லாம் இதெல்லாம் எதுவும் தெரியாத ஒரு வாசகரின் தலையில் கட்டலாமா?