தமிழ்நாட்டின் எதிர்காலம் : கருந்தேள் ராஜேஷ்

சசிகலா கைது என்ற தீர்ப்புக்குப் பின்னர் நேற்று என்னவெல்லாமோ நடந்துவிட்டன. சிறைக்குச் செல்வதற்கு முன்னர் அவசர அவசரமாக சசிகலா என்னவெல்லாமோ செய்தார். உச்சபட்சமாக, டி.டி.வி. தினகரனை, துணைப்பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கிக் கட்சியில் இணைத்துவிட்டார். இன்று, பெங்களூரு கிளம்புவதற்குமுன்னர் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று, சமாதியையே ஓங்கி ஓங்கி மும்முறை அறைந்துகொண்டிருந்தார். சபதம் எடுக்கிறாராம். என்ன சபதம்? கட்சியையும் மக்களையும் நல்வழிப்படுத்தலாம் என்றா?

ஜெயலலிதா இறந்தபின்னர், கட்சியிலும் ஆட்சியிலும் நம்பர் டூ என்ற இடமே இல்லாததால், எளிதில் நம்மிடம் வந்துசேர்ந்திருக்கவேண்டிய முதல்வர் பதவி இப்படி அநியாயமாகக் கைமீறிப்போகிறதே? இன்னும் மூன்றரை ஆண்டுகள் சிறையில் கழிக்கவேண்டுமே? அடுத்த பத்தாண்டுகள் தேர்தலில் பங்கேற்க இயலாதே? கோடிக்கணக்கான சொத்துகளும் பணமும் இருந்தும் எதுவும் பலிக்கவில்லையே?

இந்த எண்ணங்களால் எழுந்த கையாலாகாத்தனம், அத்துடன் இணைந்த கோபம், அந்தக் கோபத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாத பதைபதைப்பு – இவையெல்லாம்தான் ஜெயலலிதா சமாதியில் சசிகலாவை இப்படிப்பட்ட கோணங்கி சேட்டைகள் செய்ய வைத்திருக்கிறது. இதெல்லாம் யரையும் இம்ப்ரஸ் செய்யாது என்பதை, பங்களாவுக்குள்ளேயே வாழ்ந்துவந்த அவர் அறியமாட்டார்.

நினைவு தெரிந்த நாள் முதல் பங்களா வாசம், எதைச் சொன்னாலும் செய்ய ஆட்கள், கைகட்டி வாய்புதைத்து நிற்கும் அமைச்சர்கள், வண்டியின் டயரைக் கூடத் தொட்டுத்தொட்டுக் கும்பிடும் தன்னை விட வயதில் பெரிய நபர்கள் என்று ஈகோவின் உச்சத்தில் வாழ்ந்த ஜெயலலிதாவை அப்படியே அடியொற்றி வாழ்ந்தவர் சசிகலா. எனவே கைது என்ற சொல்லே அவரது காதில் நாராசமாக விழுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கொள்கைகளே இல்லாத ஒரு கட்சி, தனது அந்திமக்காலத்தில் இருக்கிறது என்று நன்றாகப் புரிகிறது. அ.தி.மு.க என்ன மக்களுக்குச் சேவை செய்ய உருவாக்கப்பட்ட கட்சியா? தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு, தனது சுய அடையாளத்தை நிலைநிறுத்தத் தேவைப்பட்ட ஒரு இடம்தான் அ.தி.மு.க. திரைப்பட நடிகராக அவர் சம்பாதித்து வைத்திருந்த பிரபல்யத்தைக் கொஞ்சம் கூடச் சிதற விடாமல் தேக்கி நிறுத்தி, மக்களின் மேல் பாய்ச்சுவதற்கு அவர் அக்கட்சியை உபயோகப்படுத்திக்கொண்டார். அதையேதான் ஜெயலலிதாவும் செய்தார். இந்த இருவருக்கும் திரைப்படப் பிரபல்யம் இருந்தது. தமிழ்நாட்டு மக்களாகிய நாமுமே, ஏதோ ஒரு பிரபலத்தின் பின்னரேயே எப்போது பார்த்தாலும் பயணித்துக்கொண்டிருப்பதால் (நமக்குத் தேவை இரு பாதங்கள் மட்டுமே. தலையும் உடலும் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது ஒரு பிரபல quote), நாமுமே கேள்விகளே இல்லாமல் எம்.ஜி.ஆரை ஏற்றுக்கொண்டோம். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை மாற்றிமாற்றித் தேர்ந்தெடுத்துக்கொண்டும் வந்தோம்.

சுயலாபத்துக்காகத் துவங்கப்பட்ட எதுவுமே இப்படித்தான் முடியும். எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி – இரண்டாம் மட்டத் தலைவர்களே இல்லாமல் கட்சி நடத்தியவர்கள். எம்.ஜி.ஆராவது அப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் என்ற பிம்பத்தை நிலைநாட்டினார். ஜெயலலிதா, அந்தப் பிம்பத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, சர்வமும் நானே என்று வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தினார். அதையே இப்போது சசிகலாவும் செய்ய முற்படுகிறார். அதுதான் தினகரனைக் கட்சிக்குள் சேர்க்கும் முடிவாக வந்து விடிந்திருக்கிறது. பின்னே? கட்சியின் ஸ்தாபகரும் இப்போது இல்லை. கட்சியை நடத்திய பிரபலமும் இல்லை. பின்னர் கட்சியின் கோடிக்கணக்கான சொத்துக்கள் என்னாவது? ஆனால் சசிகலாவை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர் என்ன செய்தாலும் எதிர்ப்பே பதிலாகக் கிடைத்துக்கொண்டிருக்கிறது. அவர் செய்துகொண்டிருக்கும் இத்தகைய அநியாயங்களை அந்தக் கட்சியில் இருக்கும் நபர்களேகூடக் கேள்விகள் கேட்டு எதிர்ப்பதில்லை. அவர்களால் கட்டாயம் அது இயலாது. அப்படிப்பட்ட வார்ப்புருக்களைத்தானே ஜெயலலிதா உருவாக்கிவைத்திருந்தார்?

பதவி ஆசை, பணத்தாசை, அதிகார ஆசை ஆகியவை ஒரு மனிதனை எதுவுமே இல்லாத நேரத்திலும் எப்படியெல்லாம் நடந்துகொள்ளவைக்கும் என்பதற்குச் சசிகலா desperateஆகச் செய்த பல வேலைகள் உதாரணம். எப்படியாவது சர்வாதிகாரியாக ஜெயலலிதாவின் mantleஐத் தானும் கைப்பற்றி அப்படியே ஆகவேண்டும் என்று முயற்சித்தார். நடக்கவில்லை. அதற்கு அட்லீஸ்ட் சிலவருட அரசியல் வாழ்க்கையாவது (போலியாகக்கூட) தேவை என்பதை அவர் அறியவில்லை. திடீர் என்று இன்ஸ்டண்ட்டாக ‘சின்னம்மா’ஆவது தமிழகத்தில் கூட சாத்தியமில்லை என்று இப்போது புரிந்துகொண்டிருப்பார். அரைகுறையான பிம்பங்கள் இங்கே வெற்றி அடைந்ததில்லை.

அ.தி.மு.க அவசியம் சுக்கல்சுக்கலாக உடையும் என்பது என் கணிப்பு. உடைந்துபோன அ.தி.மு.கவில், கிடைத்ததெல்லாம் லாபம் என்றுதான் பலரும் செயல்படப்போகிறார்கள். அந்தக் கட்சி இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். இனிக் கொஞ்ச காலத்தில் மறுபடியும் கல்வி வள்ளல்கள் உருவாகக்கூடும். திடீரென்று ஆங்காங்கே தொழிலதிபர்கள் மேலெழக்கூடும். டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது சுற்றத்தார்கள் இதில் கட்டாயம் லாபம் அடைவார்கள்.

தி.மு.கவுக்கு இது பொற்காலமாக விடிந்திருக்கிறது. இதை ஸ்டாலின் கச்சிதமாக உபயோகித்துக்கொள்வார் என்றே கருதுகிறேன். தி.மு.க, அ.தி.மு.க அகிய இரண்டும் வேண்டாம் என்று நினைக்கும் ஒரு சாரார் உண்டு. நானும் அதில் அடக்கம். எனது கனவெல்லாம், மக்களுக்குச் சேவை செய்யும் வெளிப்படையான, ஊழலற்ற (அல்லது ஊழல் குறைவான), அதிகார நோக்கில்லாத, முதல்வரே சாதாரணமாக மக்களைச் சந்திக்கக்கூடிய ஒரு ஆட்சிதான். அதற்கு இங்கே துளிக்கூட வாய்ப்பில்லை என்று தெரியும். இருந்தாலும் அதை நினைத்து ஏங்காமல் இருக்க இயலவில்லை. இந்த ரீதியில், அ.தி.மு.கவுக்கு தி.மு.க பரவாயில்லை என்றே நினைக்கிறேன்.