சோனியாவுக்கு வேலை செய்யும் மோடி!

பொதுவாக இந்திய அரசியலில் இரண்டு தடவை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று ஆட்சியில் இருக்கும் கட்சி மூன்றாவது தடவை வெற்றி பெறுவது அரிதாக உள்ளது.  இப்படி ஆளும் கட்சியாக இருந்து மூன்றாவது தேர்தலில் தோற்றுப் போவதற்குக் காரணமாக இருப்பது ஆளும் கட்சியாகத்தான் இருக்கிறது.  நம் பாராளுமன்ற வழக்கத்தின்படி 2004-2014 காலகட்ட பத்தாண்டு  மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சிக்குப் பின் மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பாஜகவின் நரேந்திர மோடிதான்  இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்.  ஆனால் மேலே சொன்னபடி தான் பதவியில் அமர்ந்த முதல் நாளிலிருந்தே சோனியாவுக்காக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார் மோடி.  இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.  சென்ற தேர்தலில் மோடி அலை வீசியது.  அதில் சந்தேகமே இல்லை.  இந்தியா பூராவும் ஊழலுக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள்.  அந்தக் கோபம் எல்லாம் ஊழலுக்கு அப்பாற்பட்டவராக இருந்த மோடிக்கு வாக்குகளாக மாறின.  சுதந்திரத்துக்குப் பிறகு ஒரு மாபெரும் மாற்றத்துக்குத் தயாரானது இந்தியா.  வாஜ்பேயியின் ஆட்சியைப் போல் இருக்கும்;  வருமான வரிச் சீர்திருத்தங்கள் நடக்கும்; கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை விஷயங்களில் மாற்றங்கள் நிகழும்; குறைந்த பட்சம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்றெல்லாம் மக்கள் எதிர்பார்த்தார்கள்.

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது அம்மாநிலத்தின் பெரும் பிரச்னைகளாக இருந்த குடிதண்ணீர், மின்சாரம் ஆகிய இரண்டையும் முழுமையாகத் தீர்த்து வைத்தார்.  அதனால்தான் கோத்ரா படுகொலைகளுக்குப் பிறகும் முஸ்லீம்களும் கூட மோடிக்கே ஓட்டுப் போட்டார்கள்.  முஸ்லீம்களின் ஆதரவு இல்லாமல் மோடி 14 ஆண்டுகள் தொடர்ந்து குஜராத்தின் முதல்வராக இருந்திருக்க முடியாது.  கோத்ரா படுகொலைகள் நடந்தது 2002இல்.  அதற்குப் பிறகு இரண்டு பொதுத் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று 2014 வரை குஜராத்தின் முதல்வராக இருந்தார்.  ஒட்டு மொத்த மக்களும் ஊழல் இல்லாத அரசையே விரும்பினர்.  2014-இலும் இந்தியா முழுவதும் குஜராத்தின் குரல் எதிரொலித்தது.  பாஜக வகுப்புவாதக் கட்சி என்ற எதிர்க்கட்சிகளின் வாதம் எடுபடவில்லை; பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது.

சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தேசத்தின் எல்லா எழுத்தாளர்களும் மோடியை எதிர்த்த போது நானும் ஜோ டி. க்ரூஸும் மட்டுமே மோடிக்கு ஆதரவாகத் தொடர்ந்து எழுதினோம்.  காங்கிரஸுக்கு 50 சீட்டுகளுக்குக் கீழேதான் கிடைக்கும் என்று எழுதினேன்.  44 கிடைத்தது.  திமுகவுக்கு ஒன்று கூடக் கிடைக்காது என்று எழுதினேன்.  ஒன்று கூடக் கிடைக்கவில்லை.

இப்படி ஒரு மகத்தான வெற்றியைப் பெற்று பதவிக்கு வந்த மோடி தன் ஆட்சியில் என்ன செய்தார்?  எதிர்க்கட்சிகள் அவர் மீது என்ன குற்றம் சாட்டினார்களோ அதையே செய்தார்.  அதைக் கூட ஒளிவுமறைவாகச் செய்யவில்லை.  வெளிப்படையாகச் செய்தார்.  இந்து சாமியார்களாகத் தேடிப் பிடித்து அவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் பட்டங்களைக் கொடுத்தார்.  இந்துத்துவத்தின் தீவிரமான செயல்வீரரைப் பிடித்து உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக்கினார்.  ஏதோ இன்னும் இருபது ஆண்டுகளுக்குத் தேர்தலே இல்லாமல் தானே பிரதம மந்திரியாக இருக்கப் போவது போல் நினைத்துக் கொண்டு இந்தக் காரியங்களில் ஈடுபட்டார் மோடி.   நான் கூட விளையாட்டாக நண்பர்களிடம் சொல்வதுண்டு; ”சுதந்திரம் வாங்கியதிலிருந்தே காங்கிரஸ் நேருவின் குடும்பச் சொத்தாக இருந்து வருகிறது.  இப்போது மோடியும் சேர்ந்து கொண்டு இந்தியாவை சோனியாவின் கையில் கொடுத்து விடுவார் போலிருக்கிறது” என்று.  அதுதான் நடக்கும் போல் தெரிகிறது.  திரும்பவும் நேருவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்தியாவை ஆளப் போகிறார்.  என்ன காரணம்?

மோடி செய்த இரண்டு காரியங்கள் மக்கள் மனதில் ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விட்டன.  தென்னிந்தியாவில் எப்படியோ, ஆனால் வட இந்தியாவில்  நிலைமை அப்படித்தான் இருக்கிறது.  உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களின் கிராமப்புறங்களில் நான் சுற்றி அலைந்திருக்கிறேன்.  பல கிராமங்களில் மின்சாரமே இல்லை; சாலை வசதிகள் அறவே இல்லை.  ஏதோ மத்தியகால கட்டத்துக்கு வந்து சேர்ந்து விட்டதைப் போல் இருந்தது எனக்கு. அந்தந்த ஊர்ப் பண்ணையார்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது.  அவர்களுக்கு எதிராக யாருமே எதுவுமே செய்ய முடியாது.  போலீஸ் கூட அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.  ஜாதி வெறியும் கொடிகட்டிப் பறக்கிறது.  இதிலெல்லாம் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வர எந்த முயற்சியும் செய்யாமல் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தது மோடி செய்த மிகப் பெரிய தவறு.  மக்களே மிருகங்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் மாட்டைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் என்றுதான் அந்த மக்கள் கேட்டார்கள்.  மோடியின் மாட்டு அரசியல் இந்துக்களுக்கே பிடிக்கவில்லை.  உத்தரப் பிரதேசத்தின் கிராமத்து முஸ்லீம்களின் அன்றாட வாழ்வே மாடு மேய்ப்பது, பால் கறந்து விற்பது என     மாட்டைப் பிரதானமாகக் கொண்டதுதான்.  தலித்துகளின் வாழ்க்கை மாட்டு இறைச்சி விற்பது.  இப்போது அவர்கள் எல்லோரும் எருமைகளை வளர்க்கிறார்கள்.  இந்த விஷயத்தில் சம்பந்தம் இல்லாதவர்களான நம்மைப் போன்றவர்களுக்கு எங்கோ உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் முஸ்லீம்களும் தலித்துகளும் மாட்டிலிருந்து எருமைக்கு மாறுவதில் பிரச்னை இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் இதில் அடங்கியிருக்கும் பயம் என்ற விஷயத்தைக் காணத் தவறாதீர்கள்.  உயிர் பயம்.  மாடு மேய்த்த ஓரிருவர் கொல்லப்பட்டதால் மாட்டைக் கண்டாலே அஞ்சினார்கள்.  உ.பி. தலைநகர் லக்னௌவில் பிரபலமான ஒரு ஓட்டலில் மாட்டு இறைச்சி பிரியாணி ரொம்பப் பிரசித்தம்.  இப்போது அங்கே சிக்கன் பிரியாணி போடுகிறார்கள் என்றால் அங்கே நிலவும் அச்ச உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்.  இதுதான் மோடி ஏற்படுத்திய வெறுப்பு அரசியல்.  இதுவே சோனியாவுக்கு ஆயுதமாகப் போயிற்று.  அரசியல்வாதிகள் அரசியல் பேச வேண்டும்.  ஆனால் ராகுல் காந்தியோ புத்தரைப் போல் அன்பு பற்றிப் பேசுகிறார் என்றால் மோடி எந்த அளவுக்கு வெறுப்பு அரசியலை வளர்த்திருக்க வேண்டும்!

மோடியின் இரண்டாவது தவறு, பண மதிப்பு நீக்கம்.  இதனால் ஏழை எளியவர்களும் மத்தியதர வர்க்கமும்தான் துயரம் அடைந்ததே தவிர கோடிக் கணக்கில் பதுக்கி வைத்தவர் யாருமே பாதிக்கப்படவில்லை.

திமுக தலைவர் ஸ்டாலினிடமிருந்து தொடங்கி மோடிக்கு வந்து விட்டதற்குக் காரணம், இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்பதால்தான்.  சோனியாவுக்கு வேலை செய்கிறார் மோடி.  அதிமுகவுக்கு வேலை செய்கிறார் ஸ்டாலின்.  ஜெயலலிதாவின் கடைசி நாட்களை சசிகலா கோஷ்டி கையாண்ட விதமும், அதற்கு அதிமுக தலைவர்கள் – இப்போதைய முதல்வர், துணை முதல்வர் உட்பட – சத்தமே இல்லாமல் உடன்பட்டதும் மக்களிடையே அதிமுகவின் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருந்தது.  அதோடு ஜெ.வின் மரணமும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது.  இந்த இரண்டையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார் ஸ்டாலின்.  தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் இந்துக்களைப் புண்படுத்தியா பேச வேண்டும்?  ஒரு இஸ்லாமியர் வீட்டுத் திருமணத்துக்குப் போனவர் இஸ்லாம் பற்றிப் பாராட்டிப் பேசினால் யார் கேட்கப் போகிறார்கள்?  அங்கே போய் இந்துக்களின் சடங்குகளைத் திட்டுகிறார்.  ”இந்துத் திருமணங்களில் புகையைப் போட்டு மணமக்களை அழ வைக்கிறார்கள்; புரியாத மந்திரங்களைச் சொல்கிறார்கள்.  அந்த மந்திரங்களின் அர்த்தமோ கேவலமாக இருக்கிறது.”  இது ஸ்டாலினின் வார்த்தைகள்.  இதைப் பற்றி அடுத்த வாரம் அலசுவோம்.

18.3.2019 அன்று தினமலரில் வெளியான கட்டுரை.  நன்றி: தினமலர்

***

இனி சாருஆன்லைன் இணையதளத்தில் தொடர்ந்து எழுதுவேன்.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai