த்ருஷ்டி : திருத்தி எழுதிய பிரதி

ஒரு முன்குறிப்பு:  நேற்று மாலை சுமார் அரை மணி நேரத்தில் த்ருஷ்டியைத் தட்டச்சு செய்து முடித்தேன்.  single sitting.  இடையில் வேறு எதுவும் செய்யவில்லை.  பேய் வேகத்தில் டைப் செய்தேன். கதை பலருக்கும் பிடித்திருந்தது.  பொதுவாக எளிதில் எதையும் பாராட்டி விடாத அராத்து, அய்யனார் விஸ்வநாத், நேசமித்திரன், ராம்ஜி நரசிம்மன் ஆகிய நண்பர்களே பாராட்டினர். குறிப்பாக நான் பூனை அல்ல என்ற பகுதியை அராத்துவும் வித்யா சுபாஷும் சிலாகித்தனர்.  நண்பர்களுக்கு நன்றி.  எப்போதுமே உங்கள் வார்த்தை எனக்கு ஊக்க மருந்துதான்.  பின்னர் கதையில் இன்னும் சில மூட நம்பிக்கைகளை சேர்க்கத் தோன்றியதால் சேர்த்து திருத்தி எழுதினேன்.  கதையைத் திரும்பவும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

***

ஒரு எழுத்தாளன் மூட நம்பிக்கைகளைக் கொண்டிருக்கலாமா?  ”திஷ்டி பட்ருச்சு” என்று யாராவது சொன்னால் “என்ன இது மூடத்தனம்?” என்று திட்ட வேண்டாமா?  காமன்மேனுக்கும் எழுத்தாளனுக்கும் வித்தியாசம் இல்லையா?  என்னவோ என்னுடைய போறாத காலம் இப்போது த்ருஷ்டி பற்றி எழுத வேண்டியதாயிற்று.  எல்லாம் 2017 டிஸம்பர் 18-ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பித்தது.  எப்போதும்போல் நான்கு மணிக்கு எழுந்து மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன்.  பப்புவையும் ஸோரோவையும் தோட்டத்தில் சிறுநீர் கழிக்க கதவுகளைத் திறந்து விட வேண்டும்.  அதுதான் எழுந்ததும் எனக்கு முதல் வேலை.  அப்போது நாங்கள் அப்பு முதலி தெருவில் இருந்தோம்.  தனி வீடு.  கதவைத் திறந்ததும் பார்த்தால் வயிறு ஒட்டிப்போன, பரிதாபகரமான தோற்றம் கொண்டிருந்த ஒரு பூனைக்குட்டி பசியில் கதறிக் கொண்டிருந்தது.  அதைப் பார்த்தாலே தெரிந்து விட்டது, பசியில்தான் கத்துகிறது என்று.  ஒரு மாதக் குட்டி போல் தெரிந்தது.  ஆனால் எல்லா பூனைகளையும் விட நீளமாக இருந்தது.  பூனைகளுக்கான உணவை எடுத்து வந்து வைத்ததும்தான் தாமதம்.  அட அடா, அதை எந்த வார்த்தைகளால் விவரிப்பது?  ம்ம்ம்… அம்மா… அம்மா… ம்ம்ம்… அம்மா… என்று கதறியபடி அந்த உணவிலேயே விழுந்து புரண்டு புரண்டு சாப்பிட்டது பூனைக்குட்டி.  ஓ மை காட்… எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்தக் கணத்தை என்னால் மறக்கவே முடியாது.  பசித்தவனுக்கு உணவு தானய்யா கடவுள்.  உணவுதான் எல்லாமே.  ஆனால் பசிக்க வேண்டும்.  சேச்சே.  பசி என்ற இரண்டு எழுத்து வார்த்தையைப் படித்ததும் உங்களுக்குள் எழும் எண்ணம் அல்ல நான் சொல்லும் பசி.  உணவு எப்போது கிடைக்கும் என்ற அறிகுறியோ நம்பிக்கையோ இல்லாத பசி.  ஒரு விமான விபத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.  நீங்கள் மட்டும் பிழைத்துக் கொண்டீர்கள்.  ஆல்ப்ஸ் மலை அல்லது அமேஸான் காடு அல்லது ஏதோ ஒரு ஆளில்லாத் தீவு.  சக பயணியின் உடம்பையே தின்னக் கூடிய பசி.  அந்த மாதிரி பசியைச் சொல்கிறேன்.

எத்தனை நாள் பட்டினி கிடந்ததோ.  எனக்குக் கண்ணே கலங்கி விட்டது.  அன்றைய தினம் என் பிறந்த நாள்.  கடவுள் எனக்கு எப்பேர்ப்பட்ட பிறந்த நாள் பரிசை வழங்கியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.  வயிறு மொக்க சாப்பிட்டு விட்டு அப்புறம் கொஞ்சம் சாவகாசமாக சாப்பிட ஆரம்பித்தது பூனைக்குட்டி.   நான் அதன் பக்கத்திலேயே தரையில் அமர்ந்திருந்தேன்.  சாப்பிட்ட பின் சுவாதீனமாக என் மடியில் ஏறி படுத்துத் தூங்கி விட்டது பூனை.  நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன்.  இதை விட இந்த வாழ்வில் இன்பமான தருணமும் ஒன்று உண்டோ என்று தோன்றியது.   ஞானிகள் பிறவித் துன்பம் என்று சொல்கிறார்களே.  பசித்தவனுக்கு அன்னம் இடுதல் போல் இன்பம் தருவது ஏது.  பிறகு அந்தப் பூனைக்குட்டியை பப்பு, ஸோரோ கண்களில் படாமல் வெளியே இருந்த ஸ்கூட்டரில் வைத்தேன்.

ஏற்கனவே வீட்டில் ச்சிண்ட்டூ என்ற பூனையும் இருந்தது.  ஸோரோவுக்கு (க்ரேட் டேன்) பூனை என்றால் ஆகாது என்றபடியால் ச்சிண்ட்டூவையும் ஸோரோவையும் தனித்தனியேதான் வைத்திருப்போம்.  மேலும் ச்சிண்ட்டூ ரொம்ப ஜாக்கிரதை.  சத்தம் கொடுத்தபடியேதான் வரும்.  உடனே ஸோரோவை அறையில் போட்டு விட்டால் சாப்பிட்டு விட்டுப் போய் விடும்.  அல்லது சாப்பிட்டு விட்டு மாடியில் போய் கட்டிலில் தூங்கி விடும்.  அந்த அறைக் கதவை அடைத்து விட்டால் ஸோரோவிடமிருந்து பாதுகாப்பு.  அதைப் போலவே இந்தப் பூனைக்குட்டியும் பழகிக் கொண்டது.  இதன் பெயர் கெய்ரோ என்று வைத்தாள் அவந்திகா.  எங்கிருந்துதான் பெயர் வைப்பாளோ.  யோசிப்பதெல்லாம் இல்லை.  மனதில் தோன்றுவதுதான் பெயர்.

எப்படி வளர்த்தோம் என்றெல்லாம் சொல்லி உங்களை சலிப்படைய வைக்க மாட்டேன்.  பயம் வேண்டாம்.  ஒரே வாக்கியத்தில் முடித்து விடுகிறேன்.  இப்படியே ஒரு வருடம் கழிந்தது.  2018 ஜனவரி முப்பதாம் தேதி ஸோரோவின் ஆயுள் முடிவுக்கு வந்தது.  தேதியெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்காது.  ஜனவரி 30 என்பதால் மறக்க முடியவில்லை.  கிரேட் டேனின் வயது ஏழுதான்.  ஆனால் ஸோரோ பத்து ஆண்டுகள் வாழ்ந்தது.

பிரிவுத் துயருக்கு காலம் ஒரு நல்ல ஔஷதம் என்று சொல்வது சரிதான்.  இப்போது ஸோரோ இறந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது.  அந்தத் துயரத்திலிருந்து முழுமையாகவே வெளிவந்து விட்டேன்.  ஆனால் அப்போது பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தேன்.  நினைவுச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஆழ்கடலில் போட்டது போல் இருந்தது.  உடல் வலியைத் தாங்கிக் கொள்ளலாம். மனவலி பீதியைக் கிளப்பியது.  மூளைக்குள் ஆயிரம் தேள் என்றெல்லாம் எத்தனையோ முறை எழுதியிருக்கிறேன்.  ஆனால் அதை அந்த இரண்டு தினங்களில் உணர்ந்தேன்.  எந்த ஃபோன் அழைப்பையும் எடுக்க முடியவில்லை.  ஒன்றிரண்டு அழைப்புகளை எடுத்தால் வெடித்து வெடித்து அழுகிறேன்.  என் அழுகை எனக்கே வினோதமாக இருந்தது.  ஸோரோ போன மறுநாள் காலை ராமசுப்ரமணியன் ஸோரோ பற்றி விசாரித்தார்.  நின்ற நிலையில் வெடித்து அழ ஆரம்பித்து விட்டேன்.  இசை, எழுத்து, ஆன்மீகம், கடவுள் எதுவுமே என் வலியைக் குறைக்க முடியாததாக இருந்தது.  அன்றைய தினம் முன்மதியம் பதினோரு மணி அளவில் என் நண்பர் ராம்ஜி வந்து என்னை அவருடைய ஒரு நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.  மூன்று மணிக்கு அவர் என்னை வீட்டில் விட்டுவிட்டுக் கிளம்பியதும் மீண்டும் நினைவுச் சங்கிலி என்னைக் கடலுக்குள் இழுத்தது.  பைத்தியம் பிடித்து விடுமோ என்று உண்மையிலேயே பயந்து விட்டேன்.  என்ன செய்வது என்றும் புரியவில்லை.  பிறகு பிரபு காளிதாஸ் நெட்ஃப்லிக்ஸ் சீரியல் ஏதாவது பாருங்களேன் என்று ஆலோசனை சொன்னார்.  கேம் ஆஃப் த்ரான்ஸ் என்ற தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன்.  மனதுக்குக் கொஞ்சம் பிராக்குக் காட்டியது போல் இருந்தது.

துக்கம் விசாரிப்பதற்காக எனக்கு போன் செய்த நண்பர்கள் யாருடைய அழைப்பையும் எடுத்துப் பேசவில்லை.   ஸோரோ கொடுத்த அன்பு பேரன்பு.  ஆனால் அந்தப் பேரன்பு மறைந்த போது அது அத்தனை பெரிய வலியைத் தரும் என்றால் அந்தப் பேரன்பே வேண்டாம் என்று தோன்றியது.  ஸோரோவை நான் வளர்த்திருக்கவே கூடாது.  அதன் absence என்னை மனநோயாளியைப் போல் ஆக்கி விட்டது.

நினைவுதான் துக்கம்.  கடந்த காலம்தான் துக்கம்.  நினைவைக் கொல்.  நினைவைக் கொல்வது எப்படி?  குருநாதர்கள் பலவிதமான ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.  ஆறு வயது மகள் சடாரென்று செத்து விட்டாள்.  எப்பேர்ப்பட்ட துக்கம்.  எப்பேர்ப்பட்ட இழப்பு.  பாபாவுக்கு நெருக்கமான சீடர்.  பாபாவிடம் போய் அழுகிறார்.  அழாதே, உன் மகள் உன்னிடம் இருப்பதை விட வேறொரு பிரமாதமான இடத்தில் பிறந்து விட்டாள், இதோ பார் என்று சொல்லி குழந்தை இருக்கும் இடத்தைக் காண்பிக்கிறார் குரு.  எல்லாம் தெரிகிறது.  ஆனாலும் இழப்பைத் தாங்க முடியவில்லை.  ஸோரோவின் உணவுக்காகவும் மற்ற செலவினங்களுக்காகவும் மாதம் 20000 ரூபாய் செலவானது.  அப்படி மாதாமாதம் கொடுக்கும் போது மிகவும் வருத்தப்படுவேன்.  எப்போதுதான் இதிலிருந்து விடுதலை?  எப்போதுதான் தென்னமெரிக்க நாடுகளுக்குப் போவது?  ஒருநாள் படு அவசரமாக எழுதிக் கொண்டிருந்தேன்.  வீட்டில் மீன் இல்லை.  ஸோரோ மீன் இல்லாமல் சாப்பிடாது.  ஏற்கனவே முந்தின நாள் சாப்பிடவில்லை.  எனக்கோ அவசரமான பத்திரிகை வேலை.  பிரபு காளிதாஸ் சைவ உணவுக்காரர்.  அவர் போய் எனக்காக மீன் கடைக்குச் சென்று மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.

எத்தனை நாள் இப்படியே போவது என்று அப்போதெல்லாம் வருத்தப்பட்டிருக்கிறேன்.  ஆனால் அது போன பிறகு இன்னும் கொஞ்ச நாள் என்னோடு இருந்து விட்டுப் போயிருக்கக் கூடாதா ஸோரோ கண்ணே என்று தேம்பிக் கொண்டிருந்தேன்.  தேம்பிக் கொண்டிருந்தேன் என்பதை அப்படியே நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.  திடீர் திடீரென்று கதறி அழுவேன்.  நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே ஸோரோவின் ஞாபகம் வந்து ஓவென்று அழுது விடுவேன்.

இந்த நிலையில் அந்த வீட்டில் இனிமேலும் இருக்க வேண்டாம் என்றாள் அவந்திகா.  தனி வீடு.  நீ அடிக்கடி ஊருக்குப் போய் விட்டால் இங்கே என்னால் தனியாக இருக்க முடியாது.  எந்தப் பாதுகாப்பும் இல்லை.  திருடர்கள் நடமாட்டம் இருக்கும் பகுதி.  ஸோரோ இருக்கும் போது வீட்டுக்குள் ஒரு பல்லி கூட வர முடியாது.  செடி அசைந்தாலே குலைக்கும்.  அதன் சத்தத்தில் தெருவே அதிரும்.

அதனால் வீடு பார்த்தோம்.  வீடு பார்க்கும் அத்தனை பேருக்குமே பிரச்சினைதான்.  இஸ்லாமியருக்கு வீடு கிடைக்காது.  அசைவம் சாப்பிடுவோருக்கு வீடு கிடைக்காது.  நாய் வைத்திருப்போருக்கு வீடு கிடைக்காது.  என்னிடம் அசைவம், நாய் என்று இரண்டு பிரச்சினைகள்.  ஆனால் எல்லாமே ஒரு சதுரங்க ஆட்டக்காரனின் தீர்மானத்தோடுதான் நடப்பது போல் உள்ளது.  ஸோரோ விடை பெற்ற இரண்டே நாளில் வீடு கிடைத்து விட்டது.  அப்பு முதலி வீட்டிலிருந்து வலது பக்கம் நடந்தால் ரெண்டு நிமிடத்தில் சாந்தோம் நெடுஞ்சாலை வரும்.  அந்த சாலையின் மறுபக்கம் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் கிடைத்தது.  அப்பு முதலி  வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை.  அபார்ட்மெண்ட் என்பதால் செக்யூரிட்டி ஆட்கள் உண்டு.

ஆனாலும் அவந்திகாவிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன், இப்போது ஏன் வீடு மாற்ற வேண்டும் என்று.  வீட்டு ஓனரும் இன்னும் ஐந்தாறு ஆண்டுகள் இங்கேயே இருங்கள் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார்.  ஏற்கனவே அந்த வீட்டுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருந்தன.  ஆனால் அவந்திகா தீர்மானமாக இருந்தாள்.  புது வீடுதான்.   ஏன் அப்படிப் பிடிவாதமாக இருந்தாள் என்று புரியவில்லை.  திருட்டு பயம் எல்லா இடத்திலும் உள்ளதுதானே?

ஆனால் அவந்திகா சொன்னது எத்தனை உண்மை என்பது ஸோரோ போய் இரண்டே நாட்களில் எனக்கு விளங்கி விட்டது.  ஸோரோ போன மறுநாள் என் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்த ஒரு பெண் எங்கள் வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பெண்மணியோடு கட்டிப் புரண்டு சண்டையிட்டாள்.  இதற்கெல்லாம் போலீஸுக்குப் போக முடியாது.  ஏனென்றால் எதார்த்தம் மிகவும் சிக்கலானது.  என் வீட்டுப் பணிப்பெண் அந்தத் தெருவில் துப்புரவுப் பணியாளராக இருந்த ராஜேந்திரனின் மனைவி.  (வேலையில் சேர்ந்து மூன்று நாள்தான் ஆகியிருந்தது!) ஏய், குப்பக்காரங் பொண்டாட்டி, ஒனக்கு இவ்ளோ திமிராடி.  இவ்வளவுதான் இங்கே பிரசுரிக்கக் கூடியது.

ஏன் போலீஸுக்குப் போக முடியாது என்றால், ‘குப்பைக்காரனான’ ராஜேந்திரனை ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு போய் அடிப்பார்கள்.  ஏற்கனவே அந்தத் தெருவில் ஒரு வீட்டில் ஐம்பது பவுன் நகை திருடு போனது.  சிசிடிவி கேமராவில் தெருவில் நடமாடிய நபர்களில் ராஜேந்திரனும் ஒருவர்.  பிடி அந்தக் குப்பக்காரனை.  போலீஸ் லாஜிக்.  பிறகு நான் அது பற்றி  ஒரு பத்திரிகையில் எழுதி ராஜேந்திரனை விடுவித்தேன்.  ராஜேந்திரன் ஒரு அப்பாவி.  அவர் பிழைப்பே தெருவில்தானே?  அப்படியிருக்கும்போது சிசிடிவியில் அவர் உருவம் தெரியாமல் என்ன செய்யும்?

இந்த நிலையில் நான் எப்படி போலீஸுக்கு ஃபோன் செய்வது?  ஒரு பெண் ரவுடி என் வீட்டுக்குள் புகுந்து என் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணை இழுத்துச் சண்டை போடுகிறாள்.  கத்தி ரகளை செய்கிறாள்.  நான் போலீஸுக்கு போன் போட முடியாது.  முதல் வேலையாக ராஜேந்திரனைத்தான் விசாரணைக்கு அழைத்து முட்டியைப் பெயர்ப்பார்கள்.  ஏற்கனவே இருக்கும் காண்டு வேறு சேர்ந்து கொள்ளும்.

ஸோரோ இருந்தால் அந்தப் பெண் ரவுடி வீட்டு கேட்டைத் திறந்துகொண்டு தோட்டத்துக்குள் நுழைய முடியுமா?

ஸோரோ போய் ரெண்டாம் நாள் காலை என் அறைக்கு வெளியே இருக்கும் வராந்தாவின் கேட் கம்பிக் கதவைத் திறக்கும் சப்தம்.  வராந்தாவின் கதவைத் திறக்கக் கூடிய ஒரே நபர் அவந்திகாதான்.  அவந்திகாவோ வீட்டின் பின்பக்கம் இருந்தாள்.  எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டுப் போய்ப் பார்த்தால் ஒரு 60 வயதான பிராமணர்.  சட்டை இல்லை.  வாட்டசாட்டமான உருவம்.  முகத்திலோ பார்வையிலோ கொஞ்சம் கூட சாந்தமோ அன்போ இல்லை.  பப்பு ஒரு சத்தம் எழுப்பாமல் படுத்துக் கிடக்கிறது.  அசையக் கூட இல்லை.  ஸோரோவாக இருந்திருந்தால் அந்த ஆளைக் கடித்துக் குதறிக் கொன்றிருக்கும்.

அந்த மனிதரை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை.  தோட்டத்தின் வெளி கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்ததும் அல்லாமல் உள் கதவையும் திறந்து கொண்டு வீட்டுக்குள் வரப் பார்க்கிறான் என்று ரத்தம் கொதித்தது.  அவந்திகாவை அழைத்தேன்.  முதலில் வெளியே போங்கோ என்றாள்.  உங்களுக்கு வார்த்தை வேணுமா வேணாமா என்று அதிகாரமாக அவரிடமிருந்து பதில் வந்தது.

எதுவாக இருந்தாலும் கேட்டுக்கு வெளியே நின்று சொல்லுங்கோ என்றாள் அவந்திகா.

அதிகம் பேசவில்லை.  வெளியே அனுப்பி கேட்டைப் பூட்டினாள்.  தினமும் ஒரு ஐந்து பேராவது வந்து சாமி பேர் சொல்லிப் பிச்சை எடுப்பது அந்தத் தெருவில் வழக்கமாக இருந்தது.  பிச்சை போடும் வரை கேட்டை அடித்துக் கொண்டே இருப்பார்கள்.  செவிச் சவ்வு கிழிவது போல் அடிப்பார்கள்.  உள்ளே வர முடியாது.  ஸோரோ நிறுத்தாமல் குரைத்துக் கொண்டே இருக்கும்.

முன்புபோல் இல்லை; இப்போதெல்லாம் மிரட்டிப் பிச்சை கேட்கிறார்கள்.  கொடுக்காவிட்டால் சாமி பேரைச் சொல்லி சாபம் விடுகிறார்கள்.  வேறு விதமான பிச்சையே இப்போதெல்லாம் பார்க்க முடியவில்லை.  பாபா பேரைச் சொல்லி பிச்சை.  இல்லாவிட்டால் பூணுலும் குடுமியாகப் பிச்சை.  சில சமயங்களில் நாலைந்து பிராமணர்களாக வந்து மிரட்டுகிறார்கள்.  பார்ப்பதற்கு ஒவ்வொருவரும் அடியாள் ரேஞ்சுக்கு இருக்கிறார்கள். கொடுக்க முடியாது என்றால் ஏதேதோ சம்ஸ்கிருதத்தில் சாபம் விடுகிறார்கள்.

அவந்திகா சொன்னது சரிதான்.  ஸோரோ இல்லாமல் ஒரு தனி வீட்டில் ஐந்து நிமிடம் கூட இருக்க முடியாது.

புது வீட்டுக்குக் குடி பெயர்ந்தோம்.  ஆனால் ச்சிண்ட்டூவையும் கெய்ரோவையும் எப்படி இந்தப் புது வீட்டுக்குக் குடி பெயர்ப்பது?  உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  நாய்கள்தான் நாம் போகும் இடமெல்லாம் நம் கூடவே வரும்.  பூனை அப்படி அல்ல.  அவை இடம் பெயராது.  இருந்த இடத்திலேயேதான் இருக்கும்.    இருந்தாலும் நாங்கள் வீடு மாற்றிய போது ச்சிண்ட்டூவையும் கெய்ரோவையும் தனித்தனியே ஒரு கூடையில் போட்டு எடுத்துக் கொண்டு வந்தோம்.  ச்சிண்ட்டூ கூடையிலிருந்து வெளியே விட்டதுமே சிட்டாய்ப் பறந்து விட்டது.  வழி தெரியக் கூடாது என்றுதான் இரவு பத்து மணி போல் எடுத்து வந்தோம்.  ஆனால் போய் விட்டது.  ஆனால் அது எப்படி அந்த பிஸியான நெடுஞ்சாலையைக் கடந்தது என்றுதான் எனக்கு இன்னமும் புரியவில்லை.  தெய்வச் செயல்தான்.  இந்தக் காரணத்தினாலேயே நான் ச்சிண்ட்டூவை எடுத்து வர கடைசி வரை ஒப்பவில்லை.  ஏனென்றால், அது எப்படியாவது பழைய வீட்டுக்குப் போய் விட முயற்சி செய்யும் என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும்.  அதில் எனக்குத் துளியும் சந்தேகம் இருக்கவில்லை.  ஏனென்றால், ச்சிண்ட்டூவுக்கு அந்த வீட்டில் ஸ்னீக்கி என்ற காதலி இருந்தது.  உண்மையில் ஸ்னீக்கி இன்னொரு பெரிய பூனையின் காதலி.  அங்கே போய் விட்டோமா?  அது ஒரு பெரிய காவியமாயிற்றே?  சரி, சுருக்கமாகச் சொல்கிறேன்.  அந்தப் பெரிய பூனை பார்க்கவே ரௌடி போல் இருக்கும்.  பார்க்க என்ன பார்க்க, ரௌடிதான்.  நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  மனிதர்களில் ஞானி, ரௌடி, திருடன், மொள்ளமாரி, பொறுக்கி, மகாத்மா, முடிச்சவிக்கி, நல்லவன், கெட்டவன் என்று பல மாதிரி இருப்பது போல் பூனைகளிலும் உண்டு.  ரௌவுடிப் பூனை.  ஞானிப் பூனை.  திருட்டுப் பூனை.  கொலைகாரப் பூனை. ஏமாந்த சோனகிரிப் பூனை.  இப்படிப் பல ரகம்.  ஸ்னீக்கியின் ஒரிஜினல் காதலனான பெரிய பூனை ரௌடிப் பூனை.  ச்சிண்ட்டூவோ இண்டலெக்சுவல் ரகம்.  (வான்கோவை நினைவு கூர்க).  முதலில் அது ரௌடிப் பூனையோடு எந்தப் பிரச்சினையும் வைத்துக் கொள்ளவில்லை.  ஸ்னீக்கியைத்தான் அணுகியது.  காதலைச் சொன்னது என்று நினைக்கிறேன்.  ஆனால் ஸ்னீக்கி அந்த extra marital உறவை ஏற்க மறுத்து ச்சிண்ட்டூவைக் கடித்துக் கடித்து விரட்டியது.  கழுத்திலேயே பலமாகக் கடித்துக் குதறியது.  காயத்தில் மருந்து போட்டாலும் திரும்பத் திரும்பக் காதலைத் தெரிவித்துத் திரும்பத் திரும்ப கழுத்தில் கடி வாங்கிக் கொண்டு வந்தது.  கழுத்தெல்லாம் ரண களம்.  எவ்வளவுதான் மருந்து போட்டாலும் திரும்பத் திரும்ப அதே இடத்தில் கடி வாங்கியதால் புண்ணிலிருந்து சலம் வர ஆரம்பித்து ஊசியெல்லாம் போட்டுக் காப்பாற்றுவோம்.  ஒரு மாதம் கழித்துத் திரும்பவும் ஒருதலைக் காதல்.  திரும்பவும் கடி.  இப்போது அந்த ரௌடிப் பூனையும் சேர்ந்து கொண்டு கடித்தது.  அங்கேதான் அந்த ரௌடிப் பூனை தன் வாழ்நாளின் மிகப் பெரிய தவறைச் செய்தது.  எப்போது அந்த ரௌடிப் பூனை ச்சிண்ட்டூவின் கழுத்தில் கடித்ததோ அப்போதே ஸ்னீக்கி ச்சிண்ட்டூவின் காதலை ஏற்றுக் கொண்டு விட்டது.  அதன் பிறகு ரௌடிப் பூனை வேண்டாத பூனையாகி விட்டது என்று நினைக்கிறேன்.  நான் பூனை அல்ல என்பதால் அதற்கு மேல் இந்த விஷயத்துக்குள் போக முடியவில்லை.

ஒரு விஷயம் சொல்ல மறந்து போனேன்.  ஸ்னீக்கி நன்றாக இடுப்பை இடுப்பை வளைத்துக் கொண்டு (அந்தக் காலத்து சரோஜாதேவி நடை மாதிரியே இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள்) நம் வீட்டுக்கு சாப்பிட வருமே தவிர அதன் வாழ்விடம் என்னவோ அடுத்த தெருதான்.  அதாவது, நம் தெரு அப்பு முதலி முதல் தெரு என்றால் ஸ்னீக்கி வாழ்ந்த தெரு அப்பு முதலி ரெண்டாவது தெரு.  இப்படியான காலகட்டத்தில் ஒருநாள் ச்சிண்ட்டூவைக் காணோம்.  இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போய் விட்டது.  எங்கெங்கோ தேடினாள் அவந்திகா.  ஆனால் ஸ்னீக்கி மட்டும் வந்து வந்து சாப்பிட்டுப் போனது.  அவந்திகா ஆடிப் போய் விட்டாள்.  எனக்குமே மனம் தளர்ந்து போனது.  கடற்கரைக்குப் போன போது குழந்தை காணாமல் போனால் எப்படி இருக்கும்?  ஒருநாள் ரெண்டு நாள் அல்ல; ஒரு வாரம் போய் விட்டது; ச்சிண்ட்டூவைக் காணோம்.  பெரிய கவலை என்னவென்றால், அது நான்கு மணி நேரத்துக்கு மேல் சாப்பிடாமல் இருக்காது.  அதுவும் காணாங்கெளுத்தி மீன் மட்டுமே சாப்பிடும்.  வேறு எதையும் தொடாது.  எங்கே போய்த் தொலைந்திருக்கும்?  எத்தனை நாள்தான் சாப்பிடாமல் இருக்கும்?  இத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தால் செத்து விடாதா?  முகநூல் நண்பர்களெல்லாம் ச்சிண்ட்டூ கிடைத்து விடுவதற்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.  ஒரு நண்பர் சொன்னார், பூனைகள் mysterious ஆனவை; ரகசியமானவை; எப்போது வரும் எப்போது போகும் எங்கே இருக்கும் என்பதெல்லாம் கண்டு பிடிக்க முடியாது என்று.

அவந்திகாவும் தெருத் தெருவாகத் தேடினாள்.  அப்பு முதலி ரெண்டாவது தெருவில் தேடினாயா?  ஓ, அதைத்தான் முதல் நாளே தேடினேன்.  அப்படியானால் எங்கே போயிற்று.  ஒரு வாரம் கழித்து மீண்டும் அப்பு முதலி ரெண்டாவது தெருவில் போய்த் தேடினாள்.  மியாவ் என்று ஓடி வந்தது ச்சிண்ட்டூ.  என்ன நடந்திருக்கிறது என்றால், ரௌடிப் பூனையிடமிருந்து ஸ்னீக்கியை நிரந்தரமாகப் பிரிப்பதற்காக ச்சிண்ட்டூ அந்த அப்பு முதலி ரெண்டாவது தெருவிலேயே ஸ்னீக்கி கூடவே வாழ ஆரம்பித்து விட்டது, ஒரு நிமிடம் கூடப் பிரியாமல்.  அடப் பாவி.  ஒரு கிங் சைஸ் கட்டிலில் மெத்தை மேல் சொகுசாகப் படுத்திருந்த பூனை தன் காதலிக்காக தெருவில் படுத்துக் கிடந்து பிச்சைக்காரப் பூனையாக மாறி விட்டது.  வெள்ளைத் தோல் கருப்பாகி எலும்பும் தோலுமாக உருக் குலைந்து போயிருந்தது.  தூக்கிக் கொண்டு போனோம்.  ஸ்னீக்கியும் பின்னாலேயே வந்தது.  ரெண்டு மூணு ஸ்பூன் தண்ணீர் குடிக்கும் ச்சிண்ட்டூ அன்றைய தினம் ரெண்டரை டம்ளர் தண்ணீர் குடித்தது.  அடக் கடவுளே, ஒரு வாரமாக அது அன்ன ஆகாரமின்றி தண்ணீர் கூடக் குடிக்காமல் இருந்திருக்கிறது.

அதனால்தான் ச்சிண்ட்டூவை அழைத்து வர வேண்டாம் என்று சொன்னேன்.  அழைத்து வந்து அது ரோட்டைக் கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டுச் சாவதை விட அங்கேயே ஸ்னீக்கியோடு உயிரோடு இருக்கட்டுமே என்று நினைத்தேன்.  ஆனால் அதன் அதிர்ஷ்டம், வாகனத்தில் அடிபடாமல் ஸ்னீக்கியோடு சேர்ந்து விட்டது.  பிறகு அவந்திகா தினமும் காலையும் இரவும் ரோட்டைக் கடந்து போய் ச்சிண்ட்டூவுக்கும் ஸ்னீக்கிக்கும் உணவும் நீரும் கொடுத்து விட்டு வந்தாள்.  ஸ்கூட்டரில்தான் போவாள்.  ஒருநாள் ஸ்கூட்டரில் பைக்காரன் ஒருத்தன் இடித்து இவள் விழுந்து கை விரலில் சின்ன எலும்பு முறிவு.

கெய்ரோ இந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே தங்கிக் கொண்டது.  கெய்ரோ ஒரு மாதிரி ஞானிப் பூனை.  யார் வம்புக்கும் போகாது.  எந்தப் பூனையோடும் சண்டை போடாது.  இப்போது இரண்டு வயதாகி விட்டது.  காதல் இல்லை.  ஆனால் லிபிடோ இருக்கிறது.  பெண் பூனையின் பின்னே போகும்.  ஆனால் பெண் பூனை சத்தம் போட்டால் வம்பு பண்ணாமல் திரும்பி விடும்.  ஆனால் வந்த புதிதில் அதுவும் கொஞ்சம் இங்கே மக்கர் பண்ணியது.  அவந்திகாவின் காலைக் காலைக் கடித்தது.  சில தினங்களில் பாய்ந்து பாய்ந்து குரோதமாகக் கடித்தது.  சரி, இதற்கும் இந்த இடம் பிடிக்கவில்லை போல என்று நினைத்து கூடையில் போட்டு அப்பு முதலி வீட்டுக்கே கொண்டு போய் விட்டாள் அவந்திகா.  ஆனால் தினமும் போய் சாப்பாடு போடத் தவறவில்லை.  பதினைந்து நாள்.  அதோடு அஞ்ஞாத வாசத்தை முடித்துக் கொண்டது கெய்ரோ.  அவந்திகாவைப் பார்த்தவுடனேயே கதறி அழுது அவள் பின்னாலேயே வந்து வந்து ரோட்டைக் கடக்க முயற்சி செய்ததும் இவள் கூடையை எடுத்துப் போய் தூக்கிக் கொண்டு வந்து விட்டாள்.

நினைத்துப் பார்த்தேன்.  அந்தப் பதினைந்து நாட்களையும் கெய்ரோ எப்படிக் கழித்திருக்கும்? கெய்ரோவுக்கு அங்கே தோழர்கள் இல்லை.  அதை எப்போதுமே ச்சிண்ட்டூவும் ஸ்னீக்கியும் சேர்த்துக் கொண்டதில்லை.  வீட்டிலேயே ராயசமாக வாழ்ந்தது.  எப்படித் தெருவில் வாழ்ந்திருக்கும்?  கதறிக் கதறி ஓடி வந்து விட்டது.  அதற்கு மேல் அவந்திகாவைக் கடிக்கவில்லை.  இங்கே குடியிருப்பிலும் எல்லாருடனும் பழகி விட்டது.  எல்லாருக்கும் அதைப் பிடித்தும் விட்டது.  எல்லாருடனும் நட்புடன் பழகும்.  கெய்ரோ என்றால் ம்ம்ம் என்று நீண்ட குரலில் பதில் சொல்லும்.  பேசும்.  அவந்திகாவை ம்மா ம்மா என்று அழைக்கும்.

இப்படி வளர்ந்து கொண்டிருந்த நிலையில் ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்னால் கெய்ரோவைக் காணோம்.  இந்த விஷயத்தை யாரிடம் சொன்னாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  ஏனென்றால், அவர்களுக்குக் கெய்ரோவைத் தெரியாது.  கெய்ரோ மற்ற பூனைகளின் பின்னால் போகக் கூடியது அல்ல.   இந்தக் குடியிருப்பைத் தவிர காம்பவுண்ட் தாண்டி வெளியே எங்கும் போகாது.  போனதில்லை.  ஆனால் எல்லோருமே பூனைகள் அப்படித்தான் திடீரென்று காணாமல் போகும்; பிறகு வந்து விடும் என்றார்கள்.  எனக்கும் அவந்திகாவுக்கும் நிச்சயமாக அப்படி இல்லை என்று தெரிந்தது.

ஆகா, முக்கியமான விஷயத்தை எழுதாமல் போனேனே?  கெய்ரோ காணாமல் போவதற்கு முதல்நாள் எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள இன்னொரு குடியிருப்பில் இருந்த பெண்மணி கெய்ரோவைப் பார்த்து ஆ, எவ்ளோ பெரிய பூனை என்று ’திஷ்டி’ போட்டிருக்கிறாள்.  சில விஷயங்களை நடித்துத்தான் காண்பிக்க முடியும்.  அந்த ஆ இருக்கிறதே அது ஒரு பயங்கரமான ஆ.  ஆ! எவ்ளோ பெரிய பூனை! அப்படி த்ருஷ்டி போட்ட பெண்மணிக்குப் பூனையே பிடிக்காது என்பது இன்னொரு தகவல்.  எங்கள் குடியிருப்பு வாட்ச்மேனிடம் பூனைகளின் அக்கிரமம் பற்றி அடிக்கடி சத்தம் போட்டுக் கொண்டிருப்பாள் அந்தப் பெண்மணி.  என்ன அக்கிரம்?  வீட்டுக்குள் புகுந்து சாப்பாட்டைத் திருடுகிறதா?  அதெல்லாம் இல்லை.  எங்கள் குடியிருப்பின் கீழே மூன்று பூனைகள் உண்டு.  ப்ரௌனி, புஸ்ஸி, ரௌடி.  ப்ரௌனியும் ரௌடியும் ஆண் பூனைகள்.  புஸ்ஸி பெண் பூனை.  எந்த லூசுப் பய புள்ள புஸ்ஸி என்று பெயர் வைத்தானோ தெரியவில்லை.  அதை விடுங்கள்.  அந்த மூன்று பூனைகளுக்கும் வேளை தவறாமல் நான் உணவும் நீரும் கொடுத்து விடுவதால் அவை வேறு எங்குமே உணவு தேடிச் செல்வதில்லை.  பின்னே என்ன அக்கிரமம்?  அவ்வப்போது அந்தப் பெண்மணியின் கண்களில் அவை தென்படுகிறதாம்.  அதுதான் பிடிக்கவில்லை.  சே. எனக்குப் பூனைங்களே பிடிக்காது.

அந்தப் பெண்மணி ஆ, எவ்ளோ பெரிய பூனை என்று த்ருஷ்டி போட்ட உடனேயே அவந்திகா அரற்ற ஆரம்பித்து விட்டாள்.  எங்கள் வீட்டுப் பணிப்பெண்ணிடம் கெய்ரோவுக்கு திஷ்டி சுத்திப் போடுங்க, எதிர்வீட்டுக்காரி கொள்ளிக் கண்ணை வச்சிட்டா என்று சொல்லி அரற்றிக் கொண்டே இருந்தாள்.  பணிப்பெண்ணும் நாளை போடுகிறேன் என்று சொல்லியிருந்தாள்.  அதற்குள் காணாமல் போய் விட்டது கெய்ரோ.  த்ருஷ்டி போட்டு 24 மணி நேரம் முடியவில்லை.  ஆளைக் காணோம்.  கெய்ரோ காணாமல் போனதும் எதிர்வீட்டுப் பெண்மணிக்கு நல்ல வசை கிடைத்தது.  அவளுக்குத் தெரிகிறார் போல் அல்ல; எல்லாம் எனக்கு மட்டுமே கேட்பது மாதிரிதான்.  கொள்ளிக் கண்ணு கொள்ளிக் கண்ணு கொள்ளிக் கண்ணு.

யாராவது பிடித்துக் கொண்டு போய் சமைத்து சாப்பிட்டு விட்டார்களோ என்றெல்லாம் எனக்கு சந்தேகம் தோன்றியது.  இந்த அளவுக்கு நான் என் வாழ்நாளில் வருத்தப்பட்டதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  ஸோரோ இறந்த போது பைத்தியம் பிடித்தது போல் இருந்தது.  அழுது அழுது தீர்த்தேன்.  ஆனாலும் ஸோரோ ஒரு நிறைவாழ்வு வாழ்ந்த உயிர் அல்லவா?  என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை.  ஏழு ஆண்டுகள் வாழ வேண்டியது பத்து ஆண்டுகள் வாழ்ந்ததே.  அதிலும் எந்தக் கஷ்டமும் படாமல் ஒருநாள் ஐந்து நிமிடம் என் மடியில் படுத்து உயிர் விட்டதே.  அவ்வளவுதான்.  ஆனால் கெய்ரோ எங்கே போனது என்றே தெரியவில்லையே.  அது மற்ற பூனைகள் மாதிரி இல்லை மடையர்களா என்று மனசுக்குள் கத்திக் கொண்டே இருந்தேன்.  அவந்திகாவுக்குப் பைத்தியம் பிடித்தது போல் ஆயிற்று.  தூங்கவில்லை.  சாப்பிடவில்லை.  சிறுநீர் போக நான் எழுந்து கொள்ளும் போதெல்லாம் கெய்ரோ கெய்ரோ என்று பால்கனியில் நின்று உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பாள்.  குரல் கொடுத்துப் பயன் இல்லை அம்மா, உன் குரலைக் கேட்கும் தூரத்தில் இருந்தால் வந்து விடுமே.  கெய்ரோ நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிடும் பழக்கம் உள்ளது.  என்னோடு ஓடிப் பிடித்தெல்லாம் விளையாடும்.  எங்காவது ஒளிந்து கொண்டு என்னைப் பிடிக்கச் சொல்லும்.  நான் தேடும் போது ம்மா என்று குரல் கொடுக்கும்.    ம்மா தான்.  மியாவே இல்லை.  மியாவ் சொல்லி நாங்கள் கேட்டதே இல்லை.

ஐயோ என்ன கொடுமை இது.  எங்கே போயிற்று என் செல்லம்?  மரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.  ஆனால் காணாமல் போவது?  எங்கோ அது ஒரு ஆபத்தில் மாட்டிக் கொண்டு நம் உதவியைத் தேடிக் கொண்டிருந்தால்?  எக்மோரில் உள்ள பிரசவ மருத்துவமனைக்குப் போயிருக்கிறீர்களா?  ஒவ்வொரு சுவரிலும் எழுதியிருக்கும்.

பிறந்த குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  குழந்தைத் திருடர்கள் நடமாடுகிறார்கள். 

பிரசவ மருத்துவமனைகளில் குழந்தைகளைத் திருடுவது சுலபம்.  குழந்தை பெற்ற பெண்மணி அயர்ச்சியுடன் தூங்கிக் கொண்டிருப்பாள்.  அவளை கவனித்துக் கொள்ள வரும் உறவுக்காரப் பெண் எங்காவது டீ வாங்கப் போயிருப்பாள்.  குழந்தையும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்.  அப்படியே அழுதாலும் வாயைப் பொத்தினால் ஆயிற்று.  குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் விற்று விடுவார்கள்.  எதற்கு?  கையைக் காலை முடமாக்கி பிச்சை எடுக்க வைப்பதற்காக.  நல்ல பணம்.  இந்தியாவில் பிச்சைத் தொழில் மூலதனம் இல்லாத பெரும் தொழில்.  விவரம் தேவையென்றால் Slumdog Millionaire பாருங்கள்.  இந்திய நகரங்களின் ஒவ்வொரு ட்ராபிக் சிக்னலிலும் இடுப்பில் தொங்கும் பச்சிளம் குழந்தையுடன் ஒரு தாய் பிச்சை எடுப்பதை நீங்கள் பார்க்கலாம்.   அந்தக் குழந்தை எல்லாம் இப்படித் திருடப்பட்ட குழந்தைகள்தான்.  அப்படி ஒரு குழந்தையைப் பறி கொடுத்த நிலையில் இருந்தேன் நான்.

ஆமாம், த்ருஷ்டி என்பதெல்லாம் உண்மையா?  ஒரு எழுத்தாளனாகிய நான் இதையெல்லாம் நம்பலாமா? சில விஷயங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.  ஒரு சமயம் திமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாமல் போயிற்று அல்லவா?  கடலூர் மாதிரி ஊர்களில் ஒரு நாளில் 18 மணி நேரம் மின்வெட்டு.  பல ஊர்களில் பல கிராமங்களில் 20 மணி நேர மின்வெட்டாம் இருந்தது.  சென்னை தலைநகர் என்பதால் இங்கே ஆறு மணி நேர மின்வெட்டு.  மந்திரிகள் இருக்கும் பகுதிகள் விதிவிலக்கு.  இந்த நிலையில் எங்கள் தெருவில் ஒரு முன்னாள் மந்திரி இருந்தார்.  அவர் அதிமுக.  ஆட்சியில் இருந்ததோ திமுக.  இருந்தாலும் மந்திரி மந்திரிதானே.  எங்கள் தெருவில் மட்டும் மின்வெட்டே இல்லை.  ஒரு நிமிடம் கூட இல்லை.  இதை எழுதி கிழுதி வைக்காதே, உடனே மின்வெட்டு வந்து விடும் என்று சொல்லி என்னைக் கடுமையாக எச்சரித்திருந்தாள் அவந்திகா.  நானும் மின்வெட்டுக்குப் பயந்து அது பற்றி வாயே திறக்காதிருந்தேன்.  நான்கரை ஆண்டுகள் கடந்த நிலையில் ஒருநாள் ராகவனிடம் இது பற்றிப் பிரஸ்தாபித்தேன்.  அவர் ஆகா நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றார்.  இங்கே ராகவனைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.  அவர் யாரையும் பார்த்து த்ருஷ்டி போடுகிறவர் அல்ல.  கொள்ளிக் கண் அல்லவே அல்ல.  நல்ல உள்ளம் படைத்த நல்லவர்.  அவரும் ஒரு ஆசீர்வாதத்தைப் போல்தான் என்னிடம் சொன்னார் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று.  மறுநாளே ஃபுல் ப்ளாக் அவ்ட்.  காலை ஆறு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை மின்சாரம் இல்லை.  மறுநாளிலிருந்து தினமும் ஆறு மணி நேர மின்வெட்டு.  இது பற்றி நான் ராகவனிடம் சொல்லவில்லை, வருத்தப்படுவாரே என்று.

இன்னொரு சம்பவம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் நடந்தது.  அப்போது எனக்கு மாரியப்பன் என்று ஒரு நண்பர்.  அவர் வீட்டில் ஒரு ஞாயிறு அன்று என்னை சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்.  அப்போது அவருடைய இரண்டு வயதுக் குழந்தை அம்மணமாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தான்.  நன்கு புஷ்டியாக ஒரு சூமோ வீரனை குட்டியாகப் பார்ப்பது போல் இருந்தான்.  பிருஷ்டங்களில் புதுவெள்ளத்தின் சுழல்கள் போல் சுழிகள் இருந்தன.  அதை மாரியப்பனிடம் சொன்னேன்.  சிரித்துக் கொண்டார்.  அடுத்த வாரம் அவரைச் சந்தித்த போது சொன்னார்.  நான் போனதும் அடுப்பிலிருந்து குக்கரை எடுத்துத் தரையில் வைத்திருக்கிறார் அவர் மனைவி.  அதன் மேல் போய் சப்பக்கா என்று அமர்ந்திருக்கிறான்.  சதை பிய்ந்து விட்டது.  மாரியப்பன் தீவிர பெரியாரிஸ்ட்.  அதனால் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.  நானும் அதிலிருந்து யாரையும் எதையும் பாராட்டுவதில்லை.

த்ருஷ்டி என்று மட்டும் அல்ல.  சொல்லில் இருக்கிறது சூட்சுமம்.  முதல் முறையாக சென்னைக்கு வந்த போது ஒரு நண்பரைப் பார்க்க சின்மயா நகர் போனேன்.  மழைக்காலம்.  செம்மண்.  சேறும் சகதியுமாக ஒரு ஆஃப்கன் கிராமத்தைப் போல் இருந்தது.  நான் சென்னையில் இருக்கும் வரை இந்த சின்மயா நகரில் வசிக்க மாட்டேன், சத்தியம் என்றேன்.  அப்போது நான் அவந்திகாவை சந்தித்திருக்கவில்லை.  பிறகு சந்தித்தேன்.  அவந்திகா சின்மயா நகரில் வசித்தாள்.  அதனால் பனிரண்டு ஆண்டுக் காலம் சின்மயா நகரிலேயே நான் வசிக்கும்படி நேர்ந்தது.

இதை விட சுவாரசியமான ஒரு சம்பவம் பூரான் பற்றியது.  ஒருநாள் காயத்ரி வீட்டுக்குப் போயிருந்தேன்.  அப்போது காயத்ரி சொன்ன சம்பவம் இது: காயத்ரிக்கு பிரதீப் என்று ஒரு நண்பன்.  அவன் வீட்டுக்கு பூரான் வந்தது பற்றி ஆச்சரியத்துடனும் கவலையுடனும் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறான்.  ஏனென்றால், அவனுக்கு ஒரு கைக்குழந்தை இருந்தது.  அப்போது காயத்ரி சொன்னாள், என்னவோ தெரியவில்லை, நாங்கள் இங்கே குடி வந்து பனிரண்டு வருஷங்கள் ஆயிற்று.  இந்த அபார்ட்மெண்ட் வீட்டில் இதுவரை ஒரு பூரான் வந்ததில்லை.

சரியா?  காயத்ரி பிரதீப்பிடம் இதைச் சொல்லிய மறுநாள்.  காயத்ரி காலையில் கண் விழித்து எழுந்து வருகிறாள்.  டைனிங் டேபிளின் கீழே ஒரு பூரான் ஓடுகிறது.

மூன்றாவது நாள்.  கெய்ரோ காணாமல் போய் மூன்றாவது நாள்.  காலையில் பத்து மணிக்கு தியானத்தில் அமர்ந்தாள் அவந்திகா. கெய்ரோ கிடைத்தால்தான் இங்கிருந்து எழுந்து கொள்வேன் என்று சொல்லி விட்டு அமர்ந்தாள்.  மதியம் சாப்பிடவும் இல்லை.  மூன்று மணிக்கு எழுந்து மாடிக்குப் போனாள்.  கீழே வந்து எங்கள் குடியிருப்புக்குப் பக்கவாட்டில் ஒரு ஆள் இல்லாத வீடு இருக்கிறது – அங்கே போனாள்.  அந்த வீட்டுக்குள்தான் கெய்ரோ மாட்டிக் கொண்டிருக்கிறது என்றாள்.  தெருக்காரர்கள் சிரித்தார்கள்.  கேலி செய்தார்கள்.  அது எப்படி, இந்த வீட்டில்தான் இருக்கிறது என்கிறீர்கள். உங்களுக்கு எப்படித் தெரியும்.

வீடு பூட்டியிருந்ததால் மொட்டை மாடிக்கு ஏற வேண்டும்.  மின்சார வேலைக்காக சாலையைத் தோண்டிக் கொண்டிருந்த மின்சார ஊழியர்களிடம் கேட்டாள் அவந்திகா.  உங்களால் ஏற முடியுமா. முடியாவிட்டால் நான் ஏறப் போகிறேன்.

ஒருத்தர் ஏணி போட்டு ஏறினார்.  மேலேயிருந்து குரல் கொடுத்தார்.  இல்லீங்க மேடம்.  இங்கே எந்தப் பூனையும் இல்லை.

கெய்ரோன்னு கொரல் குடுங்க.

கெய்ரோ கெய்ரோ என்று அழைத்தார்.

ஆமாம் மேடம்.  வூட்டுக்குப் பின்னால கெணறு மாரி ஒரு குழி இருக்கு.  அங்கேர்ந்து கத்துது.  அதால ஏற முடில.

பிறகு அங்கேயும் ஏணி வைத்து இறங்கி கெய்ரோவைக் கொண்டு வந்தார்.  அதுவும் பிறாண்டாமல் கொள்ளாமல் பதவிசாக வந்தது.  தாண்டும் போது விழுந்து விட்டது போல.

அவந்திகா மட்டும் முயற்சி எடுக்காமல் அதுவாகப் போனது அதுவாக வரும் என்று விட்டிருந்தால்… நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.  பட்டினியில் மடிந்து நாற்றம் எடுத்திருக்கும்.  அது எவ்வளவு கத்தினாலும் தெருவின் இந்தப் பக்கம் குரல் கேட்கிறாற்போல் இல்லை.

அன்றைய தினம் அவந்திகாவும் நானும் கடல்கரைக்குப் போனோம்.  இங்கிருந்து நடந்தால் கடல் ஐந்து நிமிட தூரத்தில் உள்ளது.  அப்பு முதலி தெருவிலிருந்து ஏழு நிமிடம்.  ஆனாலும் இந்தப் பனிரண்டு ஆண்டுகளில் போனதில்லை.  இன்று ஏன் அழைத்தாய் என்றேன்.

தியானத்திலிருந்து எழுந்து மாடிக்குப் போனேனா.  போய் கடல் மாதாவிடம் கேட்டேன்.  இந்த உலகத்துக்கெல்லாம் மாதாவாக இருக்கிறாயே, என் குழந்தைக்கு என்ன ஆனது என்று சொல் தாயே என்று மன்றாடினேன்.  அடுத்த நொடி அந்த வீடு என் கண்ணில் பட்டது என்றாள்.

சரி விடு, த்ருஷ்டியால் போனது ஞான த்ருஷ்டியால் வந்து விட்டது என்றேன்.

22.3.2019.

திருத்தி எழுதப்பட்டது 23.3.2019.

இனி சாருஆன்லைன் இணையதளத்தில் தொடர்ந்து எழுதுவேன்.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai