லத்தீன் அமெரிக்க சினிமா பற்றி 1982வாக்கில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அதே பெயரில் 1985-இல் வெளிவந்தது. அதிலிருந்து சில கட்டுரைகள்:
ப்ரஸீல்
The Guns (1964)
இயக்குநர்: Ruy Guerra
தகிக்கும் சூரியனோடு படம் ஆரம்பமாகிறது. பின்னணியில் சமயச் சடங்குகள் சார்ந்த (Ritualistic) இசை. வறண்டு வெடித்த நிலம். அடுத்து, காமிரா ஒரு எருதைக் காண்பிக்கிறது. தெய்வமாக்கப்பட்ட ஒரு எருது அது.
தொடர்ந்த வறட்சி காரணமாக பசி பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும் ஒரு கிராமம். ஒரு ஊரின் நிலப் பிரபுவும், மளிகை வியாபாரியுமான ஒருவன் உணவு தானியங்களை பதுக்கி வைத்துக்கொண்டு அவற்றின் பாதுகாப்புக்காக போலீஸ் உதவியை நாடுகிறான்.
போலீஸ் வருகிறது. போலீஸின் பூட்ஸ்களையும், துப்பாக்கிகளையும் காமிரா நெருக்கத்தில காட்டுகிறது. காப்டனின் முகமும், பட்டினியால் வாடி வதங்கிய கிராம மக்களின் முகமும் மாறி மாறி காட்டப்படுகிறது (Juxtaposed) – பின்னணியில் புனித எருதுவுக்குச் செய்யப்படும் சடங்குகள் சார்ந்த இசை – இது எல்லாமாகச் சேர்ந்து ஒரு இறுக்கத்தை (Tension) உருவாக்குகிறது. இந்த இறுக்கம் படம் முழுதும் சீராக இருந்துகொண்டே இருக்கிறது. படம் ஒரு முடிவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தப்படுவதைப் போல் காமிராவும், இசையும் செயல் புரிகிறது.
கிட்டத்தட்ட படம் முழுதும் புனித எருதுவுக்கு நடத்தப்படும் பிரார்த்தனை ஒலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. “கடவுள் வந்தார்… அவரை நான் பார்த்தேன்… கால்களே இல்லாமல் இருந்தார் அவர்… நிச்சயம் மீண்டும் வருவார்… மழை பொழிவிப்பார்… நம்மையெல்லாம் காப்பார்… என்கிறான் ஒருவன். அவனை தேவ தூதனாக நினைக்கிறார்கள் மக்கள். அவர்களின் நம்பிக்கை வலுவடைகிறது. கூடவே பசியும், பட்டினியும், சாவும்.
மக்கள் தொல்லை தருபவர்களாகத் தெரியவில்லை. ஆனாலும் திருடுவதற்கு உந்தப்பட்டு விடுவார்களோ என்று பயப்படுகிறான் மளிகை வியாபாரி “திருடினால் சுட்டுத் தள்ளி விடுவோம், பயப்படாதே” என்று தைரியமளிக்கிறான் காப்டன்.
போலீசாரைப் பார்த்து கிராமம் நடுங்குகிறது. ஏனென்றால் மற்றோரிடத்தில் ஏற்பட்ட பட்டினிக் கலவரத்தை போலீஸ் தான் அடக்கி ஒடுக்கியது. ”அங்கே ஆயிரத்து இருநூறு பேரும், ஆயிரத்து ஐந்நூறு போலீஸ்காரர்களும் இருந்தார்கள். இறுதியில் ஜனங்களில் மிஞ்சியது இருபது பேர் தான்” என்கிறார் வயதில் மூத்த ஒரு கிராமத்து மனிதர்.
இந்த போலீஸ்காரர்களுக்கிடையிலும் மனித உணர்வுகள் கொண்ட ஒருவன் இருக்கிறான். மாரியோ என்ற அவன் ராணுவத்திலும் பணிபுரிந்திருக்கிறான். ராணுவத்தில் அவனுடன் பணிபுரிந்த நண்பன் ஒருவன் ‘டிரக்’ டிரைவராக அந்தக் கிராமத்துக்கு வந்து சேருகிறான்.
போலீஸ்காரர்களுக்கு கிராமத்தில் எந்த வேலையும் இருப்பதில்லை. குடிக்கிறார்கள். சீட்டாடுகிறார்கள். அப்படியும் பொழுது நகர்வதாயில்லை. அவர்களுள் ஒருத்தன் துப்பாக்கியால் வெற்றிடத்தை சுட்டுக் கொண்டிருக்கிறான். “என் குறி தப்பவே தப்பாது” என்று அவன் தன் நண்பனிடம் பெருமையடித்துக் கொள்கிறான். பந்தயம் நடக்கிறது. சுடும்பொழுது குறி தப்பி அந்தக் கிராமத்து மனிதன் ஒருவனைத் தீர்த்துவிடுகிறது. பிணத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. கிராமத்து மக்களிடம் எப்படிச் சொல்வது? ‘இது என்ன, அநியாயமான விளையாட்டு? நான் அவர்களிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேன்’ என்கிறான் மாரியோ. ‘உண்மையைச் சொன்னால் பெரிய சிக்கலாகி விடும். எனவே அவர்களிடம் இப்படிச் சொல்லி விடலாம்… நாங்கள் பார்த்துக் கொண்டே இருந்தோம். ஒருத்தன் எங்கிருந்தோ வந்தான். அவனுக்கும் இவனுக்கும் சண்டை நடந்தது. திடீரென்று இவனைக் குத்திவிட்டு ஓடிவிட்டான் அவன் – எப்படி?’ என்கிறான் ஒருத்தன். காப்டன் இதற்கு ஒப்புக்கொள்ள, துப்பாக்கிக் காயத்தில் கத்தியால் குத்துகிறான் அவன். “இறந்தவனுக்கு, ஒரு செத்த உடம்புக்குச் செய்யும் மரியாதையா இது?” என்று மாரியோ சொல்வதை யாரும் கண்டு கொள்வதாயில்லை.
“நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம்… அவனுக்கும் இவனுக்கும் சண்டை நடந்தது… அவன் இந்தக் கிராமத்து ஆள் மாதிரியும் இல்லை… அவன் கத்தி வைத்திருந்தான்… சுடுவதற்கு நினைத்தோம்… அதுவும் முடியவில்லை… குறி தவறி இவன் மேல் பட்டு விடுமோ என்று பயந்தோம்… திடீரென்று அது நடந்து முடிந்து விட்டது… எங்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை…”
கிராமத்தாரிடம் நன்றாக ஜோடித்து சொல்லிவிடுகிறார்கள். ஆனால் லாரி டிரைவருக்கு மட்டும் விஷயம் எப்படியோ தெரிந்து விடுகிறது. ஆனாலும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
முன்பே கூறியதுபோல், படம் இறுதி முடிவை நோக்கி மெல்ல நகர்கிறது. பட்டினியால் பலர் சாகிறார்கள். எருதுவுக்கு பிரார்த்தனை தீவிரமடைந்து கொண்டே போகிறது. கடவுளின் தூதன் தான் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு அனைவருக்கும் போதனைகள் செய்து கொண்டிருக்கிறான்.
ஒரு மருந்துக் கடையில் லாரி டிரைவர் நின்று கொண்டிருக்கிறான். அப்போது அங்கு ஒருவன் வந்து ஒரு சிறிய மரப்பெட்டியை யாசகம் கேட்கிறான். டிரைவர் ஆச்சரியத்துடன் அது எதற்கு என்று கேட்கும்பொழுது “குழந்தை செத்துப் போய்விட்டது, அதைப் புதைப்பதற்காக” என்கிறான் வந்தவன். அதிர்ச்சியுடனும், ஓரளவு புரிந்தும் டிரைவர் கேட்கிறான். “எப்படிச் செத்தது?”
“நாங்களெல்லாம் ஒரு வாரமாக ஒன்றுமே சாப்பிடவில்லை… குழந்தைக்குக் கூட கொடுக்க ஒன்றும் கிடைக்கவில்லை”
அப்போது தான் இரண்டு லாரிகள் நிறைய தானியம் அந்த ஊர் வியாபாரியின் கிடங்கிலிருந்து கிளம்புகிறது. “உங்களுக்குப் பட்டினியால் செத்துப் போக வெட்கமாக இல்லையா?” என்று கேட்கிறான். அவன் எதிரில் லாரிகளில் தானியங்கள் நிரப்பப்படுகிறது.
“உங்களுக்கு எதிரிலேயே தானியத்தை நிரப்புகிறார்களே, உங்களுக்கு ஒன்றுமே செய்யத் தோன்றவில்லையா?”
அவர்கள் எதுவும் செய்வதாயில்லை.
திடீரென்று டிரைவர் ஒரு போலீஸ்காரனைத் தாக்கி அவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கிளம்பிக் கொண்டிருக்கும் லாரியை நோக்கி ஓடுகிறான். சுடுகிறான். சில போலீஸ்காரர்கள் துரத்துகிறார்கள். கடைசியில் அங்கே வந்த மாரியோ இவனைச் சுடும் போலீஸ்காரர்களைத் தாக்க அவர்கள் இவனை பதிலுக்கு அடித்துப்போட்டு விடுகிறார்கள். இறுதியில் மக்கள் அந்த எருதைக் கொன்று, அதன் மாமிசத்தைப் பங்கிட்டுக் கொள்வதோடு படம் முடிகிறது.
Bye Bye Brazil (1979)
இயக்குநர்: Carlos Diegues.
தானே இந்த உலகின் மந்திரவாதிகளுக்கெல்லாம் தலைவன் என்று சொல்லிக் கொள்கிற Lord Cigano; இவனைச் சார்ந்த ‘இந்த உலகத்திலேயே சிறந்த அழகி’யான சலோமி; உலகத்திலேயே மிகவும் வலிமையானவனான அன்டோரினா – இவன் ஒரு செவிட்டு ஊமை – இவர்கள் மூவரும் ‘Caravana Rolidie’ என்ற பெயர் தாங்கிய, அலங்காரமான ஒரு லாரியில் பிரேசில் பூராவும் சுற்றி வித்தைகள் காட்டிப் பிழைக்கிறார்கள். வாஸ்தவத்தில் Lord Cigano ஒரு சாதாரண நாடோடி வித்தைக்காரன். அவ்வளவுதான். அன்டோரினாவும் ஒரு சாதாரண நீக்ரோ.
இவர்கள் சென்ற ஒரு கிராமத்தில் இவர்கள் மீது கவர்ச்சி கொண்டு, அக்கார்டியன் வாசிக்கும் Cico என்பவனும், அவன் மனைவியும் இவர்களோடு சேர்கிறார்கள்.
சமூக மாறுதல்கள், அமெரிக்கர்களின் வருகை எல்லாம் இவர்களின் பிழைப்பில் மண்ணைப் போடுகிறது. போகும் ஊர்களில் எல்லாம் வறட்சி. மழை இல்லை. பஞ்சம், பட்டினி – மக்களுக்கு ‘மாஜிக் ஷோ’ பார்ப்பதிலெல்லாம் ஈடுபாடு இருப்பதில்லை. மழைக்காக விவசாயிகள் பிரார்த்தனை செய்கிறார்கள். மலைவாசிகள் தாங்கள் இருந்த காடுகளில் இருந்து வெளியே வந்து கடற்கரை சார்ந்த நகரங்களுக்கு வேலை தேடிச் செல்கிறார்கள்.
பாரம்பரிய கிராமீயக் கலாச்சாரம் மிக வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது.
கிராமங்களில் ஊர் நடுவே டெலிவிஷன் வைக்கப் படுகிறது. மக்கள் இந்த வினோதத்தை விட்டுவிட்டு ‘மாஜிக் ஷோ’ பார்க்கத் தயாராயிருப்பதில்லை. Lord Ciganoவினால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. போகும் கிராமங்களில் எல்லாம், தூரத்தில் வரும்போதே இந்த ‘மீன்முள்’ சாதனம் கண்ணில் பட்டுவிடுகிறது. இந்த ‘மீன்முள்’ சாதனத்தை அவன் வெறுக்கிறான். ஒரு கிராமத்தில் இவனுடைய பொறுமை எல்லை மீறிப்போய், அவர்கல் அந்த சாதனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் இடத்துக்கே போய் அவர்களை அழைக்கிறான். ‘உலகப் பேரழகி’ சலோமியைக் காட்டுகிறான். அவர்கள் யாரும் அசைவதாயில்லை. “சரி, இதோ ஒரு மாஜிக் செய்கிறேன் பாருங்கள்” என்று சொல்லி கைகளை டெலிவிஷன் முன்னால் அசைக்கிறான். டெலிவிஷன் எரிந்து போகிறது. (Cico, சலோமி இருவருடைய கைவேலை)
அந்த ‘மீன்முள்’ சாதனத்தின் தொல்லை இல்லாத ஊர்களிலோ மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஊரில் இரண்டு வருடமாக மழை இல்லை. மக்கள் மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாஜிக் பார்ப்பதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இல்லை. இரவிலும் கூட அவர்கள் தேவாலயங்களிலேயே இருந்தார்கள். சலோமியின் ஆடை அவிப்பு நடனத்தை ஒரு நாலு பேர் தான் கொட்டாவி விட்டுக்கொண்டே பார்க்கிறார்கள்.
அமேஸானைத் தாண்டிய நெடுஞ்சாலை திறந்து விடப்பட்டிருக்கிறது என்று Ciganoவுக்கு ஒருத்தன் சொல்கிறான். அப்படியானால் அங்கு நிச்சயம் தொழில் நடக்கும் என்ற நம்பிக்கையில் Caravano Rolidie பயணப்படுகிறது.
பிரேசிலின் பச்சைக் காடுகளையே (அமேஸான் காடுகள்), அதன் இயற்கை அழகையே ஒரு பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
போகும் வழியில் ஒரு கிராமத்துத் தலைவனான இந்தியனையும், அவன் குடும்பத்தாரையும் சந்திக்கிறார்கள். சோகம் கப்பிய முகங்களுடன் அவர்கள் ஏதாவதொரு நகரத்திற்குச் சென்று வேலை தேடலாம் என்று போய்க் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தின் கிழவியின் தோளில் டிரான்சிஸ்டர் தொங்கிக் கொண்டிருக்கிறது. (அவர்களின் நிலம் போய் டிரான்ஸிஸ்டர் வந்திருக்கிறது. இப்படி படத்தின் நெடுகிலும் Consumer Cultureஇன் அவலம் சுட்டப்படுகிறது) அவர்களையும் Caravana Rolidie ஏற்றிக் கொள்கிறது.
கடைசியில் ஒரு நகரத்தை வந்தடைகிறது Caravana Rolidie. அது இந்திய நகரங்களை ஒத்த ஒரு நகரமாயிருக்கிறது. தொழிற்சாலைகள் வளமையின் அறிகுறியாக இல்லை. மதுக் கடைகளும், இரவு விடுதிகளும், விபச்சாரிகளும், ஏமாற்றுப் பேர்வழிகளுமாக நகரம் இவர்களுக்கு மலைப்பைத் தருகிறது.
எங்கோ ஒரு இடத்தில் அமெரிக்கர்களால் நிறுவப்பட்ட காகிதத் தொழிற்சாலைக்கு ஒருவன் ஆள் எடுத்துக்கொண்டிருக்கிறான். அவன் ஒரு இடைத்தரகன். ஊதியம், வேலை விபரம் எதுவும் சொல்லப்படுவதில்லை. பார்த்த மாத்திரத்தில் ஆள் எடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. இந்த இந்தியக் குடும்பமும் அவனிடம் வேலைக்குச் சேர்ந்து விடுகிறது.
புதிய நகரத்தில் நம் நாடோடிக் குழுவினருக்கு என்ன செய்வதென்றே புரிவதில்லை.
ஒரு விடுதியில் நடந்த பலப்பரீட்சையில் தோற்றுப்போய் மனமுடைந்து ஓடி விடுகிறான் அன்டோரினா.
சலோமி விபச்சாரத்தில் ஈடுபட்டு பணம் கொண்டு வந்து தருகிறாள்.
ஆனால் அந்தப் பணமும் போதுமானதாயில்லை. Cicoவின் மனைவியையும் சலோமியுடன் அனுப்பினால் தான் வயிற்றைக் கழுவ முடியும் என்கிற நிலை.
இந்தப் புதிய வாழ்க்கை முறை பிடிக்காமலும், ஆனால் சலோமியின் மீது கொண்டுள்ள காதலாலும் Cico வேறொன்றும் சொல்லாமல் சம்மதித்து விடுகிறான்.
துவக்கத்திலிருந்தே Cico சலோமியின் மீது காதல் கொண்டவனாயிருக்கிறான். “நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் உன் மனைவியுடன் இப்போதே நீ உன் பெற்றோரிடம் திரும்பிப் போய்விடு” என்று சலோமி பலமுறை எச்சரித்தும் அவன் செவி சாய்த்ததில்லை.
தன் மனைவியை விபச்சாரத் தொழிலுக்கு அனுமதித்தும், ஒருவன் தன் கண்ணெதிரே அவளைத் தொடும்பொழுது அதைச் சகிக்கமாட்டாமல் ரகளை செய்து விடுகிறான் Cico. எல்லோருக்கும் அவமானத்தைக் கொண்டு வருகிறான். Cigano, Cico-வை அடித்து வலுக்கட்டாயமாக அவனையும், அவன் மனைவியையும் அவர்கல் ஊருக்கு அனுப்பி வைத்து விடுகிறான்.
கடைசியில், வேறு வழியின்றி Cigano சில அமெரிக்கர்களுடன் கடத்தல் தொழிலில் சேர சம்மதம் தெரிவித்து விடுகிறான். அந்த தொழில் தான் அவன் இத்தனை நாட்களாக மறுத்து வந்தது. ஆனாலும் அவனுக்கு வேறு வழியில்லை.
பிரமாதமான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட Caravana Rolidie மீண்டும் Cicoவின் ஊருக்கே வந்து சேரும்போது அது அனைவருக்கும் பெரியதொரு பிரமிப்பைத் தருகிறது. Ciganoவும் மாறியிருக்கிறான். Caravanaவில் மிகக் குறைந்த ஆடைகள் அணிந்த நாலைந்து பெண்கள் இருக்கிறார்கள். Cicoவை தன்னுடன் வருமாறு அழைக்க, Cico மறுத்துவிடுகிறான்.
ஹவானா திரைப்பட விழாவில் பரிசு பெற்ற இந்தப் படம் மிகவும் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய ஒன்று. மாறும் மதிப்பீடுகளைப் பற்றி கார்லோஸ் டீகஸ் மிகவும் ஆழமாகவே கவனம் செலுத்தியிருக்கிறார். காலனியச் சுரண்டல் – அதற்குச் சலாம் போடும் உள்ளூர் அதிகார வர்க்கம் – Consumerism- அதன் அவலம் – கிராமிய, ஆதிவாசி கலாச்சாரத்தின் அழிவு: இதற்கிடையில் ஒரு மூன்றாம் உலக நாட்டு மனிதனின் மாபெரும் பிரச்சினையான உயிர் வாழ்தல் இவ்வளவும் இப்படத்தில் உண்டு.
Dona Flor and Her Two Husbands (1976)
இயக்குநர்: Bruno Barreto.
Jorge Amado-வின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் மிகவும் ஆடம்பரமான, அலங்காரமான கார்னிவல் ஒன்றுடன் துவங்குகிறது. பல பெண்களுக்கு நடுவில் நடனம் ஆடிக் கொண்டிருந்த ஒருவன் திடீரென்று துவண்டு கீழே விழுந்து விடுகிறான். அவன் இறந்து விட்டது தெரிந்து ஆட்டம் நிறுத்தப் பட்டு அமைதி நிலவுகிறது. அவன் உடலை நண்பர்கள் வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள். அவனுடைய மனைவி டோனா ஃப்ளார் அழுது அரற்றுகிறாள். அவனோடு தான் வாழ்ந்த இன்ப வாழ்வை எண்ணிப் பார்க்கிறாள்.
பெரும் செல்வந்தனும், இளைஞனுமான அவள் கணவன் ஒரு சூதாடி; குடிகாரன்; பெண் பித்தன். ஆனால் இவ்வளவுக்கும் மேல் டோனாவை மிகவும் நேசிக்கும் ஒருவன். தன் கணவனைப் பற்றி ஊர் முழுதும் கேலி பேசினாலும், அவன் தன் மீது கொண்டுள்ள அதீதமான காதலினாலும், அன்பினாலும் அவள் அவற்றை சகித்துக் கொள்கிறாள். ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் ஏற்படும் சமாதானங்களை நினைத்துப் பார்க்கிறாள்.
அவர்களது திருமண தினத்தன்றாவது அவன் வீட்டில் இருக்கவேண்டும் என்று கேட்கிறாள். வழக்கமாக சீட்டாடவும், பெண்களுடன் சல்லாபிக்கவும் போய் விடுவது மாதிரி அவன் போய்விடக்கூடாது; அன்று மட்டுமாவது தன்னுடனேயே இருக்க வேண்டுமென்று விரும்புகிறாள். அவன் இன்று போவதில்லை என்று உறுதி சொல்லியிருந்தும் எப்படியோ அவளை ஏமாற்றி விட்டுப் போய் விடுகிறான். குடி போதையுடன் நடுநிசியில் வீடு திரும்பிய அவனை டோனா அடிக்க, ஆனால் அவனோ அவளுடன் காதல் செய்ய ஆரம்பித்து விடுகிறான்.
ஒரு சமயம், நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டிருக்கையில் கையிலிருந்தவற்றையெல்லாம் தோற்றுப் போய், பணயம் வைக்க ஏதுமில்லாமல் தன் உடைகளை வைத்து ஆடுகிறான். அவற்றையும் தோற்றுக் கொடுத்து விட்டு, நிர்வாணமாக வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமாகும் போது பரிதாபப்பட்டு ஒரு ஓவர் கோட்டைத் தருகிறான் ஒருவன். அதை அணிந்துகொண்டு நிதானமாகவும், சற்றே பெருமையுடனும் அவன் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது தெருவில் நாலைந்து கன்னிகா ஸ்தீரிகள் நடந்து வருகிறார்கள். இவனுடைய தோற்றத்தைப் பார்த்துவிட்டு கிசுகிசுக்கிறார்கள். திரும்பித் திரும்பிப் பார்த்து கைகளையும் காட்டி கிசுகிசுக்கிறார்கள். இவன் திடீரென்று அவன்களைக் கூப்பிடுகிறான். அவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் இவனைப் பார்க்க, இவன் தன் பின்புறத்தை வழித்துக் காண்பிக்கிறான். அவர்கள் அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டு ஓடுகிறார்கள். இந்த கலாட்டாவை சிலர் டோனா ஃப்ளாரிடம் ஓடிப் போய் சொல்ல அவள் அவமானம் தாங்காமல், அவன்மேல் மிகுந்த கோபத்துடன், அவனை எதிர்கொள்ள தெருவில் வந்து நின்று கொள்கிறாள். அவமானத்தால் அவள் முகம் சிவக்கிறது. ஆனால் அவனோ அவள் கோபமேகொள்ள இயலாதபடி எதிர்பாராத விதமாக அப்படியே அவளைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி, கதவு திறந்திருக்கும் போதே முற்றத்தில் கிடத்தி அவளுடன் உடலுறவு கொள்கிறான்.
டோனா ஃப்ளாருக்கு தனியாக வாழ்வது மிகவும் சிரமமாகிக் கொண்டே வருகிறது. தனிமையும், உடல் உபாதையும் தாங்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இவள் மீது பயபக்தியுடன் கூடிய காதல் வைத்திருக்கும் ஒரு நடுத்தர வயது மருத்துவரை அவள் திருமணம் செய்து கொள்வது நல்லது என்று பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். கடைசியில் அவளும் சம்மதிக்கிறாள்.
முதலிரவு. இவள் மீது காதல் இருந்தும், பக்தியினால் மருத்துவர் இவளை அன்போடு பேசி தூங்க வைக்க முயல்கிறார். அப்போது அவள் தன் இறந்துபோன கணவன் தன்மீது எத்துணை அன்புடன், காதலுடன் இருந்தார் என்பதை நினைத்து ஏங்குகிறாள். வாழ்க்கை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. மருத்துவரோ அவளைத் தொடுவதற்கே அவளுடைய அனுமதியைக் கேட்பவராயிருக்கிறார்.
நாளுக்கு நாள் அவளுக்கு முதல் கணவனின் நினைவு வந்து துன்புறுத்துகிறது. மனம் நைந்து, முடிவில் அவனுக்காகவே உருகி, அவனை நினைத்து ஏங்கித் தவம் கிடக்க ஆரம்பித்து விடுகிறாள். தனிமையில் அவள் இருக்கும் நேரம் முழுதும் இப்படியே நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த நாட்களில் திடீரென்று ஒருநாள் அவனே வந்து அவள் பக்கத்தில் நிற்கிறான், நிர்வாணமாக. அவளைக் கொஞ்சுகிறான். காதல் செய்கிறான்.
மருத்துவர் இல்லாத நேரங்களில் எல்லாம் வருகிறான். எப்போதும் நிர்வாணமாகவே வருகிறான். இவளைத் தவிர வேறு யாரும் அவனைப் பார்க்க முடிவதில்லை.
ஒருநாள் டோனா ஃப்ளார் மருத்துவருடன் படுக்கையறையில் இருக்கும் போது – அந்த மருத்துவர் தங்கள் இருவர் உடம்பையும் முழுக்க முழுக்க மறைத்துக்கொண்டு காதல் செய்யும்பொழுது திடீரென்று ஒரு விசில் சத்தம் (இவளுக்கு மட்டும்) கேட்கிறது. என்னவென்று பார்க்கிறாள். பீரோவின் மீது அந்த ராஸ்கல் நிர்வாணமாக உட்கார்ந்து கொண்டு மருத்துவரைப் பார்த்து சேஷ்டைகள் செய்து நக்கலாக சீட்டி அடித்துக் கொண்டிருக்கிறான்.
இப்படி அவன் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து அவளுக்கு அது ஒரு தொல்லையாகப் போக, கடைசியில் அவள் ஒரு மந்திரவாதியிடம் போய் தன் கஷ்டத்தைச் சொல்கிறாள். அவனும் பூஜை செய்து விரட்டி விடலாம் என்று சொல்லி ஒரு நாளில் பூஜைக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால் பூஜையின் போது அவன் அவளைவிட்டு விலகிப் போவது அவள் கண்களுக்குத் தெரியும் என்றும், அவள் அவனைக் கூப்பிடவே கூடாதென்றும், அப்படிக் கூப்பிட்டு விட்டால் பின்னால் வாழ்நாள் பூராவும் அவளைப் பிரியவே மட்டான் என்றும் சொல்கிறான். பூஜை நடக்கிறது. பூஜையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவன் விலக ஆரம்பிக்கிறான். அவன் பார்வை இவளைப் பார்த்து கெஞ்சுகிறது. கடைசிக் கட்டத்தில் அவன் விலகி மறையும் தருணத்தில் அவன் பிரிவை ஆற்ற மாட்டாமல் – கண் முன்னால் சம்பவிக்கப் போகும் அவனுடைய இரண்டாவது மரணத்தைத் தடுக்கும் வேகத்துடன் டோனா அவனைக் கூப்பிட்டு விடுகிறாள்.
இதற்கடுத்து படத்தின் இறுதிக் காட்சி. தன் வலப்பகத்தில் மருத்துவரும், இடப் பக்கத்தில் நிர்வாணமாக முதல் கணவனுமாக டோனா ஃப்ளார் தேவாலயத்துக்குப் போவதை காமிரா அசைவின்றி அவர்கள் நம் பார்வையிலிருந்து மறையும் வரை காட்டுகிறது.
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
என் மின்னஞ்சல் முகவரி: charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai