சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ் பெண்களை மையப்படுத்திய படம்.  ஆரண்ய காண்டத்தின் ஆரம்பக் காட்சிக்கும் சூப்பர் டீலக்ஸின் ஆரம்பக் காட்சிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. படுக்கையில் பெண்ணிடம் ஆண் தோல்வியுற்று அவளைச் சித்திரவதை செய்வது ஆரண்ய காண்டத்தில்.  சூப்பர் டீலக்ஸில் அதன் நாய (சமந்தா) தன் கணவன் (ஃபஹத் ஃபாஸில்) வெளியே சென்றிருக்கும் இரண்டு மணி நேரத்தில், தான் கல்லூரியில் காதலித்தவனை வீட்டுக்கு வரவழைத்து உறவு கொள்கிறாள்.  அந்த உறவில் அவன் தோல்வியுறுகிறான். என்னடா ஆச்சு என்கிறாள்.  டென்ஷன் என்கிறான்.  நான் வேணா பண்ணவா என்று கேட்டு அவன் மீது ஏறும்போது அவன் மரணமுற்றுக் கிடப்பதைக் காண்கிறாள்.  இரண்டுமே படுக்கையில் பெண்ணிடம் ஆண் தோல்வியுறும் காட்சி.  ஆனால் முன்னதில் வரும் ஆண் மூர்க்கன், ஆணாதிக்கவாதி.  சூப்பர் டீலக்ஸில் பெண் தான் மையம்.  பெண் தான் தேர்ந்தெடுக்கிறாள்.  வெளியே சென்ற கணவன் வீடு திரும்புகிறான்.  மற்ற படங்களாக இருந்தால் இந்தக் காட்சி இப்படியாக மட்டுமே தட்டையாக எடுக்கப்பட்டிருக்கும்.  ஆனால் இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ஏராளமான உபகதைகள் செருகப்பட்டு படத்தை வேறு தளத்துக்கு உயர்த்திச் சென்று விடுகின்றன.  உதாரணமாக, இந்த முதல் காட்சியில் வேம்பு (சமந்தா) முகில் (ஃபஹத் ஃபாஸில்) தம்பதியினரின் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் போர்ஷனில் வசிக்கும் ஒருவர் தன் வீட்டு விசேஷத்துக்கு ஏராளமான பேர் வந்திருப்பதால் கொஞ்ச நேரத்துக்கு என் மனைவியின் குடும்பத்தினர் உங்கள் வீட்டுக்கு வந்து இருந்து கொள்ளலாமா என்று கேட்கிறான்.  முகிலும் சரி என்கிறான்.  வேண்டாம் என்று சொல்வதற்குக் கூட வேம்புவுக்கு அங்கே இடமில்லை என்பது உணர்த்தப்படுகிறது.  இந்த ஒரே ஒரு காட்சியைப் பற்றியே பக்கம் பக்கமாக எழுதலாம்.  இந்திய மத்தியதர வாழ்க்கையின் அபத்தங்கள் அத்தனையும் காட்டப்படுகின்றன இந்தக் காட்சியில்.  கீழ்வீட்டுக்காரனின் மனைவியின் பெற்றோர், கூடவே மற்றொரு பெண்மணி, ஒரு வாண்டுப் பையன்.  அந்தப் பையன் அடிக்கும் லூட்டிகளை நாம் அனைவரும் நம் வீடுகளிலோ உற்றம் சுற்றத்திலோ பார்த்திருக்கலாம்.  ஃப்ரிஜ்ஜில் ஒளித்து வைத்துள்ள உடலை ரகசியமாக வீட்டின் உள்ளே எடுத்துச் சென்று பெரிய கத்தியால் வெட்ட முற்படும்போது – முதலில் முகில்தான் வெட்ட முயல்கிறான்.  ஆனால் நீதானே பண்ணே, நீயே வெட்டு என்று கத்தியை வேம்புவிடம் கொடுக்கிறான் முகில்.  வேம்பு கத்தியை உயரே தூக்கும் போது பொடியன் பார்த்து விடுகிறான்.

மேலே எழுதியிருந்ததைப் படித்து உங்களுக்கு ஒரு பயங்கர உணர்ச்சியும் பீதியும் ஏற்படுகிறது அல்லவா?  ஆனால் படத்தில் அது நகைச்சுவையாக மாறுகிறது. படம் முழுவதுமே ப்ளாக் ஹ்யூமர் ரக நகைச்சுவைதான். படம் முழுவதுமே தியேட்டரில் சிரிப்பு அலைஅலையாக எழும்பிக் கொண்டே இருக்கிறது.  வீட்டுக்கு வந்து ஃப்ரிஜ்ஜில் ஒரு உடம்பைப் பார்த்து அதிர்ச்சியாகி வேம்புவிடம், என்னடி இது என்று கேட்கும் போது வேம்பு நடந்த விஷயத்தை விளக்குகிறாள்.  காலேஜ்ல படிக்கும் போதே லவ்வு.  இன்னிக்குத்தான் மொதல்தடவ வீட்டுக்கு வந்தான்.  எப்டி ஆரம்பிச்சிதுன்னே தெரில.  அப்டியே மேட்டர் பண்ட்டோம். சமந்தா விளக்கும் போது அதற்கு மேல் வசனம் காதில் விழவில்லை. தியேட்டரே வெடிச்சிரிப்பில் ஆழ்கிறது.

இனாரித்துவின் பேபல் பார்த்திருக்கிறீர்களா?  அதேபோல் மூன்று வெவ்வேறு கதைகள் அடுக்கடுக்காக சொல்லப்பட்டு கடைசியில் இணைவதுதான் சூப்பர் டீலக்ஸ்.  அடுத்த கதையில் தன் மனைவியையும் மகனையும் விட்டு விட்டு ஓடிப் போன மாணிக்கம் (விஜய் சேதுபதி) ஏழு ஆண்டுகள் கழித்து வீட்டுக்குத் திரும்புகிறார்.  ஆனால் மாணிக்கம் மாணிக்கமாக இல்லை.  ஷில்பா என்ற திருநங்கையாக மாறி வருகிறார்.

7 ஆண்டுகளுக்கு முன்பாக ஓடிப் போன ஜோதியின் (காயத்ரி) கணவர் மாணிக்கம் (விஜய்சேதுபதி) திரும்பி வருகிறார் என்கிற தகவலால் உற் சாகமடைகிறான் அவர்களுடைய 7 வயது மகன் ராசுக்குட்டி(அஸ் வந்த்). வீடே மாணிக்கத்தின் வரவுக்காகக் காத்திருக்கிறது. மாணிக்கம், ஷில்பா எனும் திருநங்கையாக வந்து சேர்கிறான். கூட்டத்தில் சேராமல் ஒரு குடும்பத்தில் இருக்கும் திருநங்கையின் வாழ்க்கை எப்படி இருக்கும்?  அது இரண்டாவது கதை.  மகன் தன் தந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறான்.  வழியில் சிறுவன் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது ஸிப் மாட்டிக் கொள்கிறது.  அதை எடுத்து விடும் மாணிக்கத்தை, சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்யும் திருநங்கை என்று சந்தேகித்து போலீஸ் அழைத்துக் கொண்டு போய் விடுகிறது. ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் (பகவதி பெருமாள் – பக்ஸ்) ஷில்பாவைத் தனக்கு ப்ளோஜாப் செய்து விடச் சொல்கிறான்.

மூன்றாவது கதை நான்கு சிறுவர்கள் நீலப்படம் பார்க்க முயற்சிப்பது.  படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே சிறுவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.  அதில் நடித்திருப்பது நான்கு சிறுவர்களில் ஒருவனின் தாய் லீலா (ரம்யா கிருஷ்ணன்).  உடனடியாக அவன் தன் தாயைக் கொலை செய்வதற்காக ஓடுகிறான்.  அந்தத் தாய் ஏன் அப்படி ஆனாள் என்பதற்கான கதை தனசேகரனின் (மிஷ்கின்) கதைக்குப் போகிறது. சுனாமியில் தப்பிப் பிழைத்ததால் சுனாமி ஆண்டவரின் பக்தனாகும் தனசேகரன் அற்புதம் என்ற ஆன்மீகவாதியாக மாறுகிறான்.  இன்றைய வாழ்வில் ஆன்மீகம் செய்யும் அபத்தங்கள் அத்தனையும் அற்புதம் மூலம் கலைத்துப் போடப்படுகிறது.  மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகப் பணம் வேண்டி லீலா அவதிப்படும் போது ”என் பையனைக் கொடு; சுனாமி ஆண்டவர் காப்பாற்றுவார்” என்று பிதற்றுகிறான் தனசேகரன்.  அப்போது லீலா பேசும் வசனத்தில் தியேட்டர் ஆர்ப்பரிக்கிறது.

இதற்கு மேல் கதையைச் சொல்ல மாட்டேன்.  மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் எது சிறப்பாக இருக்கிறது, எது கொஞ்சம் கீழே என்றே சொல்ல முடியவில்லை.  ஒரு பக்கம் மிஷ்கினின் பாத்திரப் படைப்பும் அவர் பேசும் பேச்சுக்களும் அவர் நடிப்பும் உலகத் தரம் உலகத் தரம் என்று வியக்க வைக்கிறது.  இன்னொரு பக்கம், நீலப்படம் பார்க்கப் போய் வம்பில் மாட்டிக் கொண்ட மூன்று பையன்களின் (ஒரு பையன் மருத்துவமனையில்) கதை றெக்கை கட்டிப் பறக்கிறது.  இன்னொரு பக்கம், முகில் வேம்பு தம்பதியின் இல்லற வாழ்க்கை, கூடவே பிணம்.  கடைசியில் முகில் வேம்புவிடம் சொல்கிறான். ஒருத்தன் ஒன்னப் போட்டான்.  செத்துட்டான்.  இன்னொருத்தன் போடணும் நெனச்சான்.  செத்துட்டான்.  வேண்டாண்டி நான் உன் கிட்டக்கவே வர மாட்டேன்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சூப்பர் டீலக்ஸ் ஒரு மாஸ்டர்பீஸ்.  ஒரு கிளாஸிக்.  கான் திரைப்பட விழா போன்ற முக்கியமான விழாக்களில் இப்படம் விருதுகள் பெறும் என்று உறுதியாகச் சொல்லலாம்.  மேலும் விருதுப் படங்கள் என்றால் சுவாரசியம் இல்லாமல் இருக்கும் என்பது நடைமுறை.  ஆனால் சூப்பர் டீலக்ஸ் இன்றைய மனிதனின் கதை என்பதால் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு வசனத்துக்கும் பார்வையாளர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள்.  மூன்று மணி நேரம் ஒடும் இப்படத்தை குறைந்த பட்சம் மூன்று முறையாவது பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது.

படத்தின் நான்கு விசேஷங்களைக் குறிப்பிட வேண்டும்.  படத்தில் பங்கேற்கும் அத்தனை பேரின் நடிப்பு.  யாரை யார் விஞ்சுகிறார்கள் என்றே சொல்ல முடியவில்லை.  ஃபஹத் ஃபாஸிலை நான் முதலில் தொண்டிமுதலும் த்ருக்‌ஷாக்‌ஷியும் படத்தில்தான் பார்த்தேன். அற்புதமான நடிப்பு என்று வியந்தேன்.  பிறகு கும்பலாங்கி நைட்ஸ் பார்த்த போது இந்தியாவிலேயே ஃபஹத் ஃபாஸிலைப் போன்ற ஒரு நடிகன் இல்லை என்று தோன்றியது.  நவாஸுத்தீன் ஸித்திக்கையும் மனதில் வைத்தே இதைச் சொல்கிறேன்.  நவாஸுத்தீன் ஈடு இணையற்ற நடிகர்தான் என்றாலும் அவரிடம் versatility இல்லை.  ஃபஹத் ஃபாஸில் எல்லா வேடங்களையும் அனாயாசமாகக் கையாள்கிறார்.  இது பற்றி ராஜேஷிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு விஷயம் சொன்னார்.  இந்தியாவிலேயே நடிப்புக்குப் பயிற்சியாளர் வைத்திருக்கும் ஒரே நடிகர் ஃபஹத் என்பதாக.  ஒரு மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டுதான் ஒரு படத்தில் இறங்குகிறாராம்.  இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத பாத்திரம்.  மனைவி இன்னொருத்தனோடு படுத்து விட்டாள் என்பதை அவள் வாயாலேயே சொல்ல அறிந்து, தன் மன உளைச்சல் தீர்வதற்காக குடித்து விட்டு உளறுவது போல் பேசும் காட்சியில் சொல்கிறார்.  ”ஏய், நாம காலேஜ்ல படிக்கும் போது லேடீஸ் ஹாஸ்டல் பொண்ணுங்க எல்லாம் சேந்து அவங்க வாட்ச்மேனை மேட்டர் பண்ணிக் கொன்னுட்டாங்க இல்ல.  அந்தப் பொண்ணுங்கள்ள என் பொண்டாட்டியும் இருந்திருப்பாடா.”  (ஆண் பெண் உறவு என்பதை வெறும் உடல் பசியைத் தீர்த்துக் கொள்ளும் செயல் என்று நினைக்கும் ஆண் புத்தியைக் கடுமையாகப் பகடி செய்திருக்கிறார் இயக்குனர்.)  அதேபோல் மிஷ்கினின் நடிப்பு.  உலகத் தரம்.  அவர் நடித்த படங்களில் இதுவே அவரது உச்சம்.  மற்றும் இதில் நடிக்கும் சிறுவர்கள்.  மாணிக்கத்தின் மகனாக நடிக்கும் ஏழு வயதுச் சிறுவன்.  விஜய் சேதுபதியிடம் பொதுவாக ஒரே விதமான உடல் மொழி இருக்கும்.  அது இந்தப் படத்தில் சுத்தமாக இல்லை.  அவரது நடிப்பு வாழ்விலும் இதுவே உச்சபட்சமாக இருக்கும்.

Mysskin

அடுத்து வசனம்.  சரியானபடி மொழிபெயர்த்து சப்டைட்டில் அமைத்தால் சர்வதேசப் பார்வையாளர்களும் இதன் சிறப்பை உணர்வார்கள்.  முகிலும் வேம்புவும் லிஃப்ட்டில் செல்கிறார்கள்.  பிணத்தை மெத்தையில் சுருட்டி மாடியிலிருந்து கீழே எறிந்திருக்கிறார்கள். யாரும் பார்ப்பதற்கு முன்னே இருவரும் கீழே இறங்கி அதை எடுத்துக்கொண்டு ஓட வேண்டும்.  லிஃப்ட்டில் இறங்கும் போது மின்வெட்டு வந்து லிஃப்ட் பாதியில் நின்று விடுகிறது.  முகில் குதிகுதியென்று குதிக்கிறான்.  பொறு முகில், கரண்ட் வந்துடும் என்கிறாள் வேம்பு.  ஆமா நீ பெரிய பத்தினி, நீ சொன்னதும் கரண்ட் வந்துடும் என்று நக்கலடிக்கிறான் முகில் ஆனால் வேம்பு சொல்லி முடித்ததும் கரண்ட் வந்து விடுகிறது.  வாழ்வின் absurdity பற்றிய கிண்டல் படம் முழுவதும் உண்டு.

மூன்றாவது, ஒளிப்பதிவு.  ஒளிப்பதிவு என்றால் என்ன என்று தெரியாத பாமரர் கூட ஒவ்வொரு காட்சியின் அமைப்பையும் (design) வண்ணச் சேர்க்கைகளையும் கண்டு அதிசயிக்கிறார்கள். கதாபாத்திரங்களின் உடையலங்காரம் மற்றும் அவற்றின் வண்ணங்களை கவனிக்கவே நாம் ஒருமுறை விசேஷமாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.  மேலும், நாம் அன்றாடம் பார்க்கும் குப்பைத்தொட்டியும், சாக்கடையும், பாழடைந்த வீடுகளும், குட்டிச்சுவர்களும், சிதிலமடைந்த கட்டிடங்களும்தான் படத்தில் வருகின்றன.  ஆனால் இவையெல்லாம் பி.எஸ். வினோத் மற்றும் நீரவ் ஷா இருவரின் கேமராவில் மாபெரும் கலாசிருஷ்டிகளாக மாறியுள்ளன.  ஒவ்வொரு காட்சியையும் நிறுத்தி நிறுத்தி வைத்து ரசிக்கலாம்.  ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு ஓவியம்.

இசை.  யுவன் ஷங்கர் ராஜா.  இசையமைப்பாளரின் திறமை படத்தின் இயக்குனரைப் பொறுத்தே இருக்கிறது என்பதற்கு இந்தப் படம் ஓர் எடுத்துக்காட்டு.  போலீஸ் ஸ்டேஷனும் பகவதி பெருமாளும் வரும் காட்சிகளில் தொடர்ச்சியாக விடாமல் கேட்கும் கனரக இரும்பு மெஷின் உரசும் ஓசையை யாருமே மறக்கவியலாது.

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.  ஆரண்ய காண்டமே ஒரு cult film.  ஆனால் சூப்பர் டீலக்ஸ் உலகின் மிக முக்கியமான நூறு படங்களில் ஒன்றாகக் கொண்டாடத் தக்கது.  மேலும், வெறும் தொழில்நுட்பத் திறமை இருந்தால் மட்டுமே இப்படி ஒரு படத்தை இயக்கி விட முடியாது.  வாழ்க்கை பற்றிய தர்ஸனம் (vision) இருந்தால்தான் இப்படிப்பட்ட படத்தை இயக்க முடியும். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தியாகராஜன் குமாரராஜாவின் தர்ஸனம் தெரிகிறது.  உதாரணமாக, சினிமா என்பது வெறுமனே உணர்ச்சிவசப்பட வைப்பது அல்ல; கண்ணீரை வரவழைப்பது அல்ல. மனித வாழ்வின் முரண்களைப் பற்றிய பார்வையைத் திறக்க வேண்டும்.  இன்ஸ்பெக்டர் ஒரு குரூரன்.  ஈவு இரக்கமே இல்லாதவன்.  ஆனால் ஸ்டேஷனுக்குள் ஒரு பூரான் வந்ததும் அதை ஒரு காகிதத்தில் எடுத்து வெளியே போடச் சொல்கிறான்.  இதுதான் கலைஞனின் பார்வை.  இப்படிப்பட்ட தருணங்கள் படம் முழுவதுமே உண்டு.  படத்தின் அடிநாதமும் அதுதான்.

தமிழ் சினிமாவில் Auteur என்ற பட்டத்திற்கு உரியவர்கள் மணி ரத்னம், மிஷ்கின் என்று ஒன்றிரண்டு பேர்களே உண்டு.  அந்த வரிசையில் சேர்கிறார் தியாகராஜன் குமாரராஜா.

***

super deluxewww.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai