அறம் தொலைத்த சமூகம் (2)

ரகு என் புத்தகங்களில் ஒன்றை மொழிபெயர்த்தவர்.  100 பக்க புத்தகம்.  இதற்கு சன்மானமாக ஒரு தொகை கொடுக்க வேண்டுமானால் 5000 ரூ. கொடுக்கலாம்.  ஒரு பக்கத்துக்கு 50 ரூ.  உண்மையில் ஒரு வார்த்தைக்கு 50 ரூ. கொடுப்பதுதான் நியாயம்.  ஆனால் 20 பிரதிகள் விற்கும் ஒரு சமூகத்தில் பக்கத்துக்கு அம்பது கொடுப்பதுதான் சாத்தியம்.  நண்பரிடம் பணம் வேண்டுமா என்று கேட்டபோது வேண்டாம் என்று சொல்லி விட்டார்.  கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி புத்தகம் போடும் பதிப்பக நண்பருக்கு இந்த அஞ்சாயிரம் ரூபாயா பெரிய பணம்?  ரகு பணம் வேண்டாம் என்று சொன்னபடியால் அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விட்டேன்.  இப்போது ரகு நான் அவருக்குக் கடன் பட்டிருப்பதாகக் கூறுகிறார்.  மேற்கண்ட இரண்டு கடிதங்களையும் என் நண்பருக்கு அனுப்பினேன்.  அவர் அதற்கு இப்படி ஒரு பதில் அனுப்பியிருக்கிறார்:

Saw mails.  They expect you to give them blowjob for the little deeds they do as a favour.  இதற்கு மேல் தமிழில் ரெண்டு வார்த்தை எழுதியிருக்கிறார்.  வசை வார்த்தை அல்ல;  இருந்தாலும் அதை நான் தணிக்கை செய்து விட்டேன்.  இதே எதிர்வினையைத்தான் ரகுவின் இரண்டு கடிதங்களையும் படித்து நானும் நினைத்தேன்.  நீக்கி விட்ட அந்த ரெண்டு வார்த்தைகளையும் சேர்த்தே நினைத்தேன்.  ஏன்?

ஒரு ஆள் மணி ரத்னம் படத்தில் ஹீரோவாக நடிக்கிறான்.  பிறகு மணிக்கு ஃபோன் பண்ணுகிறான்.  மணி எடுக்கவில்லை.  உடனே மேற்படி மிரட்டல் கடிதத்தை எழுதத் துணிவானா?  அட மக்குப் பயலே… மணி ரத்னத்தின் படத்தில் நடிப்பதே அவர் உனக்குச் செய்திருக்கும் உதவிடா…  நீயும் உழைத்தாய்தான்.  உழைப்பு மட்டுமல்ல; உன் நேரத்தையும் கொடுத்தாய்.  ஆனால் இயக்குனர் உனக்குக் கடன்பட்டிருக்கிறார் என்று நினைத்தால் நீ எப்பேர்ப்பட்ட புத்திசாலி?  அதுவும் நம்முடைய மொழிபெயர்ப்பு விஷயத்தில் ரகு கொடுத்த மொழிபெயர்ப்பை வேறு ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் வேறு சரி செய்தார்.

இப்போது ரகுவின் கடிதத்துக்கு வருவோம்.  அந்தக் கடிதம் வந்தபோது நான் அதைப் படித்துப் பார்க்கும் நிலையில் கூட இல்லை.  பத்துப் பனிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவந்திகாவுக்கு உடல் சுகமில்லாமல் போனது.  (இப்போது அவள் நலம்.  முழுமையாக சீராகி விட்டாள்.)  அவந்திகாவுக்கு உடல் சுகமில்லாமல் போவது என் கை கால்களைக் கட்டி நடுக்கடலில் போடுவதற்கு சமம்.  ஏனென்றால், அவந்திகாவின் உடல்வாகு எந்த மருத்துவத்தையும் ஏற்காது.  உதாரணமாக, ஜுரம் என்றால் பாராசிட்டமால் போட முடியாது.  குடல் வெந்து விடும்.  ரத்தக் கண்ணீர் ராதா மாதிரி துடிப்பாள்.  அவள் அலோபதி மருந்து சாப்பிட்டே 15 ஆண்டுகள் இருக்கும்.  ஆயுர்வேதமும் ஒத்துக் கொள்ளாது.  ஆக, வந்த நோய் தானாகச் சரியானால்தான் உண்டு.  அப்படி இருந்தபோது டெம்பரேச்சர் ஏறிக் கொண்டே போய் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது.  ஜன்னி.  மருந்தே சாப்பிடாமல் ஆனால் என்ன ஆகும்?  அவள் வழக்கம்போல் எடுத்துக் கொள்ளும் கஷாயங்களும் வேலை செய்யவில்லை.  கச்சேரி ரோட்டில் இருக்கும் டாக்டர் மணிகண்டனைச் சந்தித்தோம்.  அலோபதி மருத்துவர் என்றாலும் நல்லவர்.  வாழ்க்கையில் இரண்டாவது நல்ல டாக்டரைச் சந்திக்கிறேன்.  ஏனென்றால், “நான் அலோபதி மருந்தே சாப்பிடுவதில்லை; ஒத்துக் கொள்வதில்லை” என்று சொன்னால் ஏதோ அவரது கடவுளை சபித்து விட்டது போல் அவர் ஆர்ப்பரிக்கவில்லை.  ஆமாம், சிலருக்கு ஒத்துக் கொள்ளாதுதான்; வயிற்றில் வாய்வு உண்டாகி விடும்; நான் உங்களுக்குக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் மருந்து கொடுக்கிறேன் என்றார்.   அதேபோல் கொடுத்தார்.  ஜூரம் போனது.  ஆனால் வயிறு புண்ணாகி விட்டது.  பத்து நாட்கள் ரத்தக் கண்ணீர் ராதா மாதிரி துடித்தாள்.  சிசுருக்ஷை செய்தபடியேதான் என் வளர்ப்புகளாக அரை டஜன் பூனைகளுக்கும் பப்புவுக்கும் உணவு கொடுக்க வேண்டும்.  வாக்கிங் அழைத்துச் செல்ல வேண்டும்.  சமைக்க வேண்டும்.  எல்லாம்.  எல்லாம்.  அதோடு சேர்த்து ஏகப்பட்ட மன உளைச்சல் வேறு.   மன உளைச்சல் ஏன் என்றால் உடம்புக்கு நோய் என்றால் மருந்தும் உட்கொள்ள முடியாது என்ற நிலைதான்.  உங்களுக்குப் பிரியமானவர்களின் துயரத்தைப் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருப்பது?  இந்தக் காலத்தில் நெஞ்சையே பிளந்து சர்ஜரி செய்கிறார்கள்.  ஆனால் மருந்தே நோய் என்று ஆகும் ஒருத்தரை எப்படி குணப்படுத்துவது?

அந்தக் காலகட்டத்தில்தான் மேற்படி கடிதம்.  பதில் எழுதாமல் போனதும் ஜட்ஜ்மெண்ட்.  இதெல்லாம் போக, எனக்கு எந்த வேலையும் இல்லாமல் இருந்தாலே எனக்கு வரும் மின்னஞ்சலுக்கு நான் பதினைந்து இருபது நாட்கள் கழித்துத்தான் பதில் போடுவேன்.  இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களில் சுமார் 80 கோடிப் பேருக்குத் தெரிந்த – அமெரிக்காவிலும் ஓரளவு பெயர் தெரிந்திருக்கும் ஒரு நண்பர் அவர்.  அவர் எழுதிய கடிதத்துக்கு இன்னும் பதில் எழுதவில்லை.  ஒரு மாதம் ஆகிறது.  அவர் என்னைத் தவறாக நினைக்க மாட்டார்.  தேவைப்பட்டால் ஃபோனில் அழைப்பார்.  என்னுடைய ஒரு பழக்கம் வாட்ஸப் மெஸேஜுக்கு ஐந்து நிமிடத்தில் பதில் அனுப்பி விடுவேன்.  மின்னஞ்சல் என்றால் பதில் எழுத ஒரு மாதம் கூட ஆகும்.  என்னுடைய இன்னொரு நண்பர் இருக்கிறார்.  ஆங்கில எழுத்தாளர் ஆலன் ஸீலி.   மெயில் போட்டால் இரண்டு மணி நேரத்தில் பதில் வரும்.  வாட்ஸப் பண்ணினால் பதிலே வராது.  ஆம்.  பதிலே வராது.  மெஸேஜ் செய்தாலும் பதில் வராது.  போன் செய்தாலும் எடுக்க மாட்டார்.  ஏனென்றால், அவர் எப்போதாவதுதான் போனை எடுப்பார்.  சமீபத்தில் மொபைல் போனே இல்லாமல் இரண்டு மாத காலம் சீனப் பயணம் சென்று வந்திருக்கிறார்.

சரி.  அவந்திகா நலமாக இருந்தாள்.  அவள் உடம்புக்கு ஒன்றும் இல்லை.  நானும் எந்த வேலையும் இல்லாமல் கால் ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.  அப்படி ஒரு நிலையிலும் ரகுவின் மின்னஞ்சலுக்கு நான் பதில் எழுதத் தயங்கித்தான் இருப்பேன்.  ஏனென்றால், ரகுவின் ஆங்கிலம் பிழையற்றது.  தங்குதடை இல்லாதது.  ஆற்றொழுக்கானது.  அருவி போல் கொட்டுவது.  ஆனாலும் அவரால் ஒரு புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இயலாது என்று நான் நினைத்தேன்.  அவரால் என்னுடைய தமிழ் nuancesஐப் புரிந்து கொள்ள இயலாது.  ஆங்கில அறிவு வேறு.  மொழிபெயர்ப்பு வேறு.  இதை நான் ஆதாரங்களோடு நூறு முறையாவது எழுதியிருக்கிறேன்.  படிக்காமல் படிக்காமல் என்னோடு வந்து மோதினால் எழுதிக் கொண்டேதான் இருப்பேன்.  சுந்தர ராமசாமி யார்?  நவீனத் தமிழ் இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவர்.  அவருடைய முக்கியமான நாவல் ஒரு புளியமரத்தின் கதை.  அதை ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  அவர் மெட்றாஸ் க்றிஸ்டியன் காலேஜின் ஆங்கிலத் துறையின் தலைவர்.  மூத்த பேராசிரியர்.  அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று சொன்னால் சொன்னவனைப் பிடித்து மெண்டல் ஆஸ்பத்திரியில் போட்டு விடுவார்கள்.  ஆனால் என்ன நடந்ததென்று பாருங்கள்:

ஒரு புளியமரத்தின் கதை நாவலின் முதல் வாக்கியம் இது:

”முச்சந்தியில் நின்று கொண்டிருந்தது புளிய மரம்.  முன்னால் சிமிண்டு ரஸ்தா.  இந்த ரஸ்தா தென் திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித்துறையில் நீராட இறங்கி விடுகிறது.”

கவித்துவமும், வாசிப்பவரை முறுவலிக்க வைக்கும் மெல்லிய கிண்டலும் சுந்தர ராமசாமி உரைநடையின் விசேஷம்.  இதே வாக்கியம் ஆங்கிலத்தில் எப்படி வந்துள்ளது பாருங்கள்:

The tamarind tree stood at a crossroads.  The cement road in front of it went due south to land’s end where three seas meet.

கவித்துவம் காணாமல் போய் மொழி தட்டையாகி விட்டது பாருங்கள்.   இந்த நிலையில் நான் எப்படி காமரூப கதைகள் நாவலை ரகுவிடம் கொடுப்பேன்?  அதைச் சொல்ல நான் தயங்கினேன்.  எப்படி அவர் மனம் கோணாமல் சொல்வது என்றே யோசித்துக் கொண்டிருந்தேன்.  எனக்குத் தெரிந்து இரண்டு அருமையான மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்.  அவர்களிடமே என்னுடைய எல்லா நூல்களையும் கொடுப்பது என்றே நான் முடிவு செய்திருக்கிறேன். 

மேலும், ரகுவின் இரண்டாவது கடிதத்தை விடுங்கள்; முதல் கடிதத்தின் தொனியே எனக்கு அருவருப்பாக இருந்தது.  ”But this time I am going to ask for something in return.”  அதாவது, சென்ற முறை நான் இலவசமாகச் செய்தேன்.  இந்த முறை பதிலுக்கு ஒன்று கேட்பேன்.  அடப் பிசுநாறிங்களா என்று நினைத்துக் கொண்டேன்.  ஏனென்றால், பணம் எனக்கு வெறும் காகிதம்.  லௌகீக வாழ்வுக்கு அந்தக் காகிதம் தேவைப்படுகிறது.  அவ்வளவுதான்.  மற்றபடி நீங்கள் எனக்கு உதவி செய்தால் அதை நான் மனதில் நன்றியுடன் வைத்திருப்பேன்.  அதற்குப் பதிலாக நான் செய்யக் கூடிய ஒரே விஷயம் – ஒரே காரியம் – தொடர்ந்து எழுதுவதுதான்.  உங்களுக்கு ப்ளோஜாப் செய்வதல்ல.  மன்னியுங்கள்.  மேற்படி கடிதம் என்னை ஒரு மனநோய் நிலைக்குக் கொண்டு செல்கிறது.  நான் ஒரு பறவை பறப்பது போலே எழுதிக் கொண்டிருக்கிறேன்.  பறவையினால்தான் கானகம் உண்டாகிறது.  கானகத்தினாலேதான் நம் வாழ்க்கை இந்த பூமியில் சாத்தியப்பட்டிருக்கிறது.

தம்பீ… ரகு… நான் வியாச முனியின் பேரன்.  கதை சொல்பவன்.  புத்தனிடம் ஒரு உழவன் சொன்னான்.  நீர் என்ன நிலத்தை உழுதாயா? நடவு நட்டாயா?  அறுவடை செய்தாயா?  உனக்கு நான் பிச்சை இட வேண்டும்?

புத்தன் சொன்னான்.  நான் தவத்தை உழுது ஞானத்தை அறுவடை செய்கிறேன்.

அந்தப் பரம்பரையிலே வந்தவனாகிய என்னிடம் வந்து நீர் எனக்குக் கடன்பட்டிருக்கிறீர் என்றால் என்ன அர்த்தம் தம்பி?  உமக்குக் காசு வேண்டுமானால் பதிப்பக நண்பரிடம் சொல்கிறேன்; பத்தாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போ.  உனக்கு நான் கடன்பட்டிருப்பதாகச் சொல்லாதே.  வியாசன் யாருக்கும் கடன்பட்டவன் அல்ல.  பாரத தேசமே வியாசனுக்கும் வியாசனின் பேரர்களுக்கும் கடன்பட்டிருக்கிறது.

நான் ஒடிஸாவின் கிராமம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது வெற்றிலை போட ஒரு கடையில் நின்றேன்.  என்னோடு ஒரு இந்தி எழுத்தாளர்.  15 வயதுச் சிறுவன் தான் கடையில் இருந்தான்.  இந்தப் பொட்டல்காட்டில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டான்.  நாங்கள் கதைசொல்லிகள்.  கதை தேடி அலைந்து கொண்டிருக்கிறோம் என்றேன் இந்தியில்.  கதைசொல்லி என்ற வார்த்தைக்கு நான் பயன்படுத்திய சுத்த இந்தி பையனுக்குப் புரியவில்லை.  என் இந்தி நண்பரும் விளக்கினார்.  பையனுக்குப் புரியவில்லை.  பிறகு நான் கஹானி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதும் பையன் துள்ளிக் குதித்தான்.  பாரதம்.  மஹா பாரதம் சொன்ன வியாசர் வியாசர் என்று குதித்தபடி வெற்றிலைப் பாக்குக்கு காசே வாங்கிக் கொள்ளவில்லை.

ரகு எனக்கு அமெரிக்கா பற்றியும் ஐரோப்பா பற்றியும் பாடம் எடுக்கிறார்.  எத்தனை ரகுக்களை நான் பார்த்திருப்பேன்.  போர்ஹேஸ் இந்தியா வந்ததில்லை.  ஆனால் திருச்சினாப்பள்ளி பாலக்கரையில் ஒரு முஸல்மான் சிறுநீர் போவதற்காகத் தன் கைலியை உயர்த்தியபடி சிறிய செங்கல் துண்டைத் தேடினான் என்று எழுதுகிறார்.  முதலில் இதன் அர்த்தம் உங்களில் பலருக்கே புரியாது.  போர்ஹேஸ் எழுதினார்.  இண்டர்நெட் வருவதற்கு முன்பே இந்த உலகம் என் உள்ளங்கையில் இருந்தது ரகு.  நீங்கள் அமெரிக்காவில் வசித்தவர்.  ஆனால் போர்ஹேஸின் இந்தியா போன்றது என்னுடைய அமெரிக்கா.  அமெரிக்கா பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னிடம் வாருங்கள்.  பாடம் எடுக்கிறேன்.  அமெரிக்காவும் ஐரோப்பாவும் எழுத்தாளர்களை எப்படி நடத்துகிறது என்ற அரிச்சுவடிப் பாடம் கூட இந்த ரகுவுக்குத் தெரியாது.  நான் எக்ரிவாங் என்று தெரிந்ததும் பாரிஸில் ஒரு பாரில் நானும் நண்பரும் குடித்ததற்குக் காசு வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார் அதன் உரிமையாளர்.  அது மட்டும் அல்ல; ஒரு போத்தல் அனிஸும் கொடுத்து அனுப்பினார் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று.  அமெரிக்காவில் மட்டுமே ஒரு சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி சாத்தியம்.  ப்யூகோவ்ஸ்கி அமெரிக்காவில் ஒரு செலிப்ரிட்டி.  சராசரி அமெரிக்கனுக்கு ப்யூகோவ்ஸ்கி தெரியாது.  ஆனால் அமெரிக்க இண்டெலிஜென்ஷியா அவரை ஒரு பாப் பாடகனைப் போல் கொண்டாடியது.  போலந்தில் ஒரு பிச்சைக்காரனாக இருந்த ஜெர்ஸி கோஸின்ஸ்கி அமெரிக்காவில் கோடீஸ்வரன்.  எல்லாம் பிஸினஸ் பண்ணி அல்ல; எழுத்தால் நடந்தது.  ஜோஸஃப் ப்ராட்ஸ்கியை ரஷ்யா ஓட ஓட விரட்டியது.  அமெரிக்காவில் ப்ராட்ஸ்கி ஒரு செலிப்ரிட்டி.

சூரியன் ஒளியை வழங்குகிறது;

நிலவு குளிர்மையை வழங்குகிறது;

மேகம் மழையையும் வெளி காற்றையும் விருட்சம் பிராணவாயுவையும்

பூமி தண்ணீரையும் உணவையும் வழங்குகிறது.

பதிலுக்கு சில நன்றியுடையவர்கள் இவற்றையெல்லாம் வணங்குகிறோம்.  சிலர் நம்மை மூடர் என்கிறார்கள்.

அவர்களுக்காகவும் இவற்றை வணங்குகிறோம்.

நாம் வணங்கினால் அவை சந்தோஷப்படுவதில்லை.

வணங்குவதன் மூலமாக நாம் சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம்.

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai