சீனத்துக் குதிரைகள்

இப்போதைய பாராளுமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக இருக்கப் போவது எது என்று அர்னாப் கோஸ்வாமி தலைமையில் விவாதம்.  கமல்ஹாசன் மற்றும் ஸ்மிருதி இரானி. இதற்கு முந்தைய தேர்தலில் மையப் பொருளாக இருந்தது எது என்பதைப் பார்த்தால் இப்போதைய தேர்தலின் விவாதப் பொருளைப் புரிந்து கொள்ளலாம்.  கடந்த தேர்தலில் ஊழலும் விலைவாசி உயர்வுமே பிரச்சினையாக இருந்தது. ஊழலுக்கு எதிராகவே மக்கள் அலையாகத் திரண்டு மோடிக்கு வாக்களித்தனர். மக்கள் எதிர்பார்த்தது போலவே இந்த ஆட்சியில் காங்கிரஸ் அளவுக்கு (2 ஜி) ஊழல் இல்லை.  ஆனால் இந்திரா காந்தியைப் போன்ற சர்வாதிகாரத் தன்மையுடன் ஆட்சி புரிவதாக மோடியின் மீது குற்றச்சாட்டு. பொருளாதார நிபுணர்களைக் கலந்து ஆலோசிக்காமல் பண மதிப்பு நீக்கம் கொண்டு வந்தது; ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட பத்திரிகையாளர்களை சந்திக்காதது; மக்களின் பிரச்னையைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்டது; அடிப்படைப் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் மாட்டு அரசியல் செய்தது; வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான செயல்திட்டங்களைப் போடாமல் தீவிர இந்துத்துவா சக்திகளை ஊக்குவித்தது – இது எல்லாம்தான் மோடியின் மீதான குற்றச்சாட்டு.  இதெல்லாம் கமலுக்குத் தெரியாதா? ஆனால் இந்தியாவே கவனித்த அந்தத் தொலைக்காட்சி விவாதத்தில் முதல் குத்திலேயே நாக் அவுட் ஆனார் கமல்ஹாசன்.

அர்னாப் கேட்கிறார், கமல் நீங்கள் பேசுகிறீர்களா?  கமலின் பதில்: இல்லை; ஸ்மிருதியே பேசட்டும். ஸ்மிருதி என்ன பேசினார் தெரியுமா?   

”பல மொழிகள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நம் நாட்டின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றுவதுதான் நம் முன் உள்ள சவால்.  இதுதான் வரும் தேர்தலின் விவாதம்.” இதைச் சொல்வது யார்? இதையெல்லாம் தூக்கிப் போட்டு அடித்து, ஒரே மொழி-ஒரே மதம்- ஒரே கலாச்சாரம் – ஒரே உணவு என்று சொல்லும் பாஜகவின் பிரதிநிதி ஸ்ம்ருதி இரானி.  அப்போது கமல் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரே பாய்ச்சலில் ”இதை நாங்கள்தான் சொல்ல வேண்டும்; மாட்டைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லி மாடு மேய்ப்பவனைத் தாக்கும் நீங்கள் சொல்லக் கூடாது” என்று இரானியை நாக் அவுட் செய்திருக்க வேண்டாமா?  செய்யவில்லை. பதிலாக ”ஹிஹி இரானி சொல்வது சரிதான்… ஹி ஹி…” என்று தன் அழகிய பல்வரிசையைக் காண்பித்தார் கமல். இது வெறும் ஆரம்பம்தான். விவாதம் முடியும் வரை இதே ரீதியில்தான் போனது. பேசுவதற்குக் கமலிடம் எதுவுமே இருக்கவில்லை.

நாம் உலக இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து விட்டோம்; உலக சினிமாவையும் பார்த்து முடித்து விட்டோம்.  இனிமேல் கற்பதற்கு ஒன்றுமில்லை என்பதால் 40 ஆண்டுகளாக நாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். இது எதுவுமே தெரியாத ஒரு கூட்டம் நாம் பேசுவதைத் தலையாட்டி ரசித்துக் கொண்டிருக்கிறது.  இதுதான் கமல்ஹாசனின் வரலாறு. இப்படிப்பட்டவர் முதல்முதலாக ஒரு பொதுவெளியில் போய் விவாதிக்கப் போகும் போது சாயம் வெளுத்து விடுகிறது. அர்னாப் கோஸ்வாமி கமலைப் பார்த்து “பேசுங்கள் பேசுங்கள்” என்கிறார்.  கமலுக்குப் பேச எதுவுமே இல்லை. ஸ்மிருதி இரானியோ சிக்ஸராகப் போட்டு வெளுத்து வாங்குகிறார்.

மங்கோலியாவைச் சேர்ந்த செங்கிஸ்கான் உலகத்தையே வென்றான்.  யாராலும் வெல்ல முடியாத ரஷ்யாவையும் வென்றான். அவனிடம் இருந்ததோ வெறும் 50000 குதிரைகள்.  எதிரி நாடான சீனாவிடம் இருந்தது ஐந்து லட்சம் குதிரைகள். வென்றது எப்படி என்பதற்கு அவன் சொன்ன காரணம்:  ”சீனத்துக் குதிரைகள் முறையாகப் பயிற்சி பெற்று, வேளைக்குச் சாப்பிட்டு, சரியாக உறங்கி, சீராக வளர்க்கப்பட்டவை.  ஆனால் மங்கோலியக் குதிரைகள் குட்டியாகப் பிறந்ததுமே ஓநாயிடமிருந்து தப்புவதைத் தங்கள் வாழ்க்கையாகப் பயின்றவை. எங்கள் குதிரைகள் உறங்கியதே இல்லை.  உறக்கத்தில் கூட விழித்திருப்பவை. வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருப்பவை. அதனால் எங்களின் ஒரு குதிரை உங்களுடைய நூறு குதிரைகளுக்குச் சமம்.” இன்னும் புரியும்படியான உதாரணம் சொல்ல வேண்டுமானால் வீட்டில் போஷாக்காக வளர்க்கப்படும் உயர்ஜாதி நாய்களுக்கும் தெருநாய்களுக்குமான வித்தியாசம்தான்.  தான் சாப்பிடும் உணவை விட்டு வேறு எந்த உணவைச் சாப்பிட்டாலும் வீட்டு நாய் இறந்து விடும்.

நம்முடைய பெரும்பாலான அரசியல்வாதிகள் சீனத்துக் குதிரைகள்.  மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர்கள். இந்தக் காரணத்தினால்தான் காந்தி தன்னிடம் பயிற்சி பெறுவதற்காக வந்த ஒரு பணக்கார மாணவனைத் தன் ஆசிரமத்தில் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யச் சொன்னார்.   பல நாட்கள் சுத்தம் செய்து விட்டு மாணவன் காந்தியிடம் சென்று ”நான் வெளிநாட்டில் படித்த படிப்பை இன்னும் சிறந்த முறையில் மக்களுக்குப் பயன்படுத்த விரும்புகிறேன்” என்றான். அப்போது காந்தி சொன்னார்: “கீழ்த்தட்டு மக்களின் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல் உன்னால் தலைமை ஏற்க முடியாது.  சேவை செய்யவும் முடியாது.”

மக்களின் இன்றைய தேவை இதுதான்.  அவர்களுடைய பிரச்னையைப் புரிந்து கொண்ட தலைவர்களை அவர்கள் தேடுகிறார்கள்.  ஆனால் கமல்ஹாசன் போன்ற புத்திஜீவிகளோ எதார்த்தமே புரியாமல் எங்கோ தந்த கோபுரத்தில் அமர்ந்து கொண்டு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  அவருடைய தேர்தல் அறிக்கையே அதற்கு ஒரு உதாரணம். ”எல்லோருக்கும் குடிநீர் இலவசம்; எல்லோருக்கும் வேலை வாய்ப்பு” என்று வாய்ப்பந்தல் போட்டால் இதற்கெல்லாம் எங்கே இருக்கிறது பணமும் திட்டமும்?  இது என்ன சினிமாவா? மோடி கூடத்தான் நான் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணத்தையெல்லாம் இந்தியாவுக்குக் கொண்டு வந்து விடுவேன் என்றார். கடைசியில் 2 ஜி வழக்கே சுனாமியில் அடித்துக் கொண்டு போனது.  அந்த வழக்கின் நீதிபதி சொன்னது ஊழல் ஒழிப்புக்குக் கிடைத்த பெரும் அடி. அப்படி மனம் வருந்திச் சொன்னார் நீதிபதி.

அடுத்த வாரம் பார்ப்போம்…         

நன்றி: தினமலர், 8.4.19

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai

***