ஒருவேளை நான் சீலே போகாமலேயே இறந்து போக நேர்ந்தால் ஆவியாக வந்து உன்னை பயமுறுத்துவேன் என்று அவந்திகாவிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு. காரணம், இருபது ஆண்டுகளாக நான் சீலே செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். இருபது ஆண்டுகளாகத் தள்ளிப் போய்க்கொண்டு இருக்கிறது. அதிலும் கடந்த பத்து ஆண்டுகளாக மிகத் தீவிரமாக முயன்றேன். முடியவில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல சீலே பயணத்துக்கு என் உடல்நிலை வேறு தன் தகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது. இப்போது என்னால் மலையேறுவது கடினம். மது அருந்துவதையும் நிறுத்தியாயிற்று. உடனடியாகச் சென்றே ஆக வேண்டும். இதில் அவந்திகாவை ஏன் பயமுறுத்த வேண்டும்? ”நீ ஒரு எழுத்தாளன்; ஏற்கனவே முந்தின திருமண வாழ்வில் போதும் போதும் என்று கஷ்டப்பட்டிருக்கிறாய். நாம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம். உன் நேரமும் சக்தியும் குழந்தை வளர்ப்பிலேயே போய் விடும்” என்று சொன்ன அவந்திகா கடைசியில் என் பேச்சையும் மீறி, என் வேண்டுகோளையும் மீறி பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஸோரோவை என்னிடம் கொடுத்ததன் காரணமாகவே என்னால் சீலே செல்ல முடியாமல் போயிற்று. ஸோரோ மற்ற நாய்களைப் போல் அல்ல. க்ரேட் டேன். அவ்வகை நாய்களை அமிதாப் பச்சன் போன்றவர்கள்தான் வளர்க்க முடியும். அமிதாபிடமும் ஒரு க்ரேட் டேன் இருக்கிறது. நடிகர் விக்ரமிடமும் க்ரேட் டேன் உண்டு. அவர்களைப் போல்தான் ஒரு பிச்சைக்கார எழுத்தாளனான நான் க்ரேட் டேன் வளர்த்தேன். மாதம் இருபதாயிரம் ரூபாய் கூசாமல் செலவாகும். பப்புவுக்கு (லேப்ரடார்) மட்டும் மட்டமான உணவைக் கொடுக்க முடியுமா? ஸோரோவுக்கும் மீன். பப்புவுக்கும் மீன். ஒரு நண்பர்தான் கடந்த பத்து ஆண்டுகளாக மாதம் இருபதாயிரம் கொடுத்தார். அவர் கொடுத்த காரணம், நான் எல்லா தென்னமெரிக்க நாடுகளுக்கும் போய் வர வேண்டும் என்று. ஒரு நாடு விடாமல் சுற்றியிருக்கலாம். 25 லட்சம் ரூபாயும் ஸோரோவின் வளர்ப்புக்கு ஆயிற்று. ஸோரோ எனக்குக் கொடுத்த அன்பு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது. ஆனாலும் பயணம் முடியாமல் ஆனது இல்லையா? இருதய அறுவை சிகிச்சை நிபுணர் நான் அனாதை ஆசிரமம் வைத்துப் பராமரிக்கிறேன் என்று இயங்கக் கூடாது அல்லவா? நான் செய்தேன். செய்யும்படியான கட்டாயம் ஏற்பட்டது.
அதெல்லாம் பழைய கதை. ஆனால் நான் ஏன் சீலே பற்றி இத்தனை யோசிக்கிறேன்? தமிழ்நாட்டில் வசிக்கும் ஒருத்தனுக்கும் உலக உருண்டையின் கடைக் கோடியில் இருக்கும் தக்கிணியூண்டு தேசமான சீலேவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? சீலேவின் ஜனத்தொகை ஒன்னேமுக்கால் கோடி என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நம் தில்லியின் ஜனத்தொகை இரண்டு கோடி. ஆனால் சீலே என்ற தேசம் அதன் மக்கள் தொகையினாலா என்னோடு தொடர்பு கொண்டிருக்கிறது? தமிழ் என்றால் சங்க இலக்கியம், திருவள்ளுவர், கோவில்கள் என்று அடையாளப்படுத்தப்படும் இல்லையா? அதேபோல் சீலே என்றால் ஒரு நூறு பேரும் அவர்கள் உலகத்துக்குச் சொன்ன செய்தியும்தான். என்னைப் பொறுத்தவரை அதுதான் சீலே.
அந்த நூறு பேரில் ஒருவர் டாக்டர் அயெந்தே (1908 – 1973). இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் ஒரு உண்மையான காந்தியவாதிக்கு காந்தி எப்படி அர்த்தமாகி இருப்பாரோ – ஒரு புரட்சியாளனுக்கு சே குவேரா என்ற பெயர் எப்படி அர்த்தமாகுமோ – ஒரு உண்மையான கிறிஸ்தவருக்கு இயேசு கிறிஸ்து என்ற பெயர் எப்படியோ – அதேதான் எனக்கு டாக்டர் அயெந்தேயின் பெயரும். இப்படி ஒருவர் அல்ல; நூறு பேர்.
இன்று காலையில் ஸ்ரீராமுக்கு போன் செய்து சீலே பற்றி நான் எழுதியதையெல்லாம் தொகுக்கலாம் என்று நினைக்கிறேன்; அதைக் கொஞ்சம் தொகுத்து அனுப்ப முடியுமா என்று கேட்டேன். ஐயோ, அது வருமே ரெண்டாயிரம் பக்கம் என்றார். யோசித்துப் பார்த்தால் இருக்கும் என்றுதான் தோன்றியது. விக்தோர் ஹாரா பற்றியே நூறு பக்கங்கள் எழுதியிருப்பேனே? பின்வரும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். ஏப்ரல் 1994-இல் குதிரைவீரன் பயணம் என்ற சிறுபத்திரிகையில் வெளியான கட்டுரை. சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை. காகிதத்தில் எழுதிய கட்டுரைதான். அப்போதெல்லாம் கணினி வசதி இல்லை. இண்டர்நெட் எல்லாம் ஏதோ ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரம் மாதிரி. இந்தக் குறிப்பிட்ட கட்டுரை வரம்பு மீறிய பிரதிகள் என்ற என்னுடைய புத்தகத்தை மறுபிரசுரத்துக்காகப் பிழைதிருத்தம் செய்து கொண்டிருந்தபோது படித்து மிரண்டு போனேன். அதில் உள்ள தகவல்கள் அனைத்தையும் திரட்ட வேண்டுமானால் ஒரு ஆயுள் பூராவும் செலவு செய்திருக்க வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கூடப் புரிந்து கொள்வது சிரமம் என்று நினைக்கிறேன். இண்டர்நெட் இல்லாத காலகட்டத்தில் – இப்போது போல் உடனுக்குடன் நூல்கள் கிடைக்காத காலகட்டத்தில் – கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களெல்லாம் நூலகங்களில் கூட கிடைக்காத சூழ்நிலையில் இதையெல்லாம் எப்படி எழுதினேன்? கூபாவின் ஹபானாவிலிருந்து வந்து கொண்டிருந்த Granma பத்திரிகை – அமெரிக்க நூலகங்களில் வந்து கொண்டிருந்த மாற்றுக் கலாச்சாரப் பத்திரிகைகள் ஆகியவைதான். அத்தகைய மாற்றுக் கலாச்சாரப் பத்திரிகைகளை அமெரிக்க புத்திஜீவிகள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலிருந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். Sulfur என்ற ஒரு பத்திரிகை ஞாபகம் இருக்கிறது. மற்றும் பல புத்தகங்களை நானே நேரடியாகத் தருவித்துக் கொண்டிருந்தேன். கப்பல் மூலம் வந்து சேர மூன்றிலிருந்து ஆறு மாதம் ஆகும். கார்லோஸ் ஃபுவெந்தெஸின் (Carlos Fuentes) Terra Nostra என்ற நாவல் அப்படி கப்பலில் வந்து சேர ஆறு மாதம் ஆனது. இன்னமும் அந்த நூல் என்னிடம் பத்திரமாக உள்ளது.
அலெக்ஸ் ஹெய்லியின் ரூட்ஸ் என்ற நாவலைப் படித்திருக்கிறீர்களா? அலெக்ஸ் ஹெய்லி ஆஃப்ரிக்க தேசம் ஒன்றில் தன் மூதாதையரைத் தேடிப் போகும் கதை அது. நாலைந்து தலைமுறைகளுக்குப் பிறகு தேடிப் போகிறார் ஹெய்லி. அப்படிப்பட்ட ஓர் உறவுதான் எனக்கும் சீலேவுக்கும். ஹெய்லி போல் ரத்த பந்தம் அல்ல. கலாச்சார பந்தம். வேசி மகனே! கிதாரா வாசிக்கிறாய்? இப்போது வாசி பார்ப்போம் என்று கத்திக் கொண்டே ஸ்டேடியத்தின் மேடையில் விக்தோர் ஹாராவின் (Victor Jara) கையை கோடரியால் வெட்டுகிறான் பினோசெத்தின் ராணுவ அதிகாரி. ஹாராவின் கை மணிக்கட்டில் வெட்டப்பட்டுத் துண்டாகி விழுகிறது. அப்போதும் ஹாரா சிரித்தபடி விரல்கள் இல்லாத தன் கையினால் கிதார் நரம்புகளைச் சுண்டியபடி பாடுகிறார். ஸ்டேடியத்தில் 5000 தோழர்கள் குழுமியிருக்கிறார்கள். பேராசிரியர்களையும் மாணவர்களையும் கம்யூனிஸ்டுகள் என்று குற்றம் சாட்டிக் கைது செய்து அங்கே அடைத்திருக்கிறான் பினோசெத். ஹாராவின் அதிசாகசச் செயலால் மூர்க்கமடைந்த ராணவ அதிகாரி வேசி மகனே வேசி மகனே என்று தொண்டை நரம்புகள் புடைக்கக் கத்தியபடி ஹாராவை சுட்டுத் தள்ளுகிறான். (பினோசெத்தின் சர்வாதிகார ஆட்சி முடிந்த பிறகு அந்த அதிகாரி அமெரிக்காவுக்குத் தப்பி ஓடி வேறொரு அடையாளத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனாலும் ஹாராவின் மனைவியின் தொடர்ந்த போராட்டத்தினால் அவனைப் பிடித்து விட்டார்கள்.) விக்தோர் ஹாரா இறந்த போது அவர் வயது 41. நான் ஹாரா பற்றி 1990-இல் எழுதினேன். ஹாரா கொல்லப்பட்ட ஸ்டேடியம் அவர் பெயரிலேயே சந்த்தியாகோவில் இருக்கிறது. ”இப்போது சொல், அவர் வாழ்ந்த வீட்டையும் அவர் கொல்லப்பட்ட ஸ்டேடியத்தையும் நான் பார்க்க வேண்டாமா?” என்று அவந்திகாவிடம் கேட்டேன்.
நான் குறிப்பிட்ட நூறு பேரில் விக்தோர் ஹாராவின் பெயரும் ஒன்று. டாக்டர் அயெந்தேவின் பெயரும் ஒன்று. இன்னும் 98 பெயர்கள் உள்ளன. ஒவ்வொருவரின் கதையும் சுருக்கமாகச் சொன்னால் பத்து இருபது பக்கம் தேறும்.
பல நண்பர்கள் என்னிடம் நீங்கள் சமீப காலமாக எழுதுவது பிடிக்கவில்லை என்று சொல்லும்போது அவர்கள் மீது எனக்கு இரக்கம் ஏற்படுகிறது. ஏனென்றால், சீலே பற்றி எழுதிய கட்டுரைகளைப் போல் நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அதில் ஒரு தொகுதிதான் வரம்பு மீறிய பிரதிகள். இதேபோல் ஐம்பது அறுபது புத்தகங்கள். இதையெல்லாம் படியுங்கள். குறிப்பாக கீழ்க்காணும் கட்டுரை. சர்வாதிகாரமும் எழுத்தும்: சீலே மற்றும் அர்ஹெந்த்தீனிய சூழலில்…
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
என் மின்னஞ்சல் முகவரி: charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai