நேற்று நான் எழுதியிருந்ததற்கு ஒரு சில வாசக நண்பர்கள் பணம் அனுப்பியிருந்தார்கள். 9000 வந்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஆனால் செலவு இங்கே பிய்த்துக் கொண்டுபோகிறது. நான்கு மணி நேரத்துக்கு நானூறு யுஎஸ் டாலர். மூன்று நாட்களுக்குப் பேசியிருக்கிறேன். கிட்டத்தட்ட 90000 ரூ. மற்ற நேரங்களில் தனியாகச் சுற்ற வேண்டும். இதில் பெரியவேடிக்கை என்னவென்றால் இன்னொரு ஆள் என்னோடு ஒரு பைசா செலவில்லாமல் சுற்றலாம். சாப்பாடு அவர்கள் கொடுப்பதில் நான்கில் ஒரு மடங்குதான் சாப்பிட முடிகிறது. தங்கும் அறையில் இன்னொரு காலிப் படுக்கை. டாக்ஸியில் இன்னும் ரெண்டு ஆள் வரலாம். மேலும் இன்னொரு நண்பர் இருந்தால் என்னால் எல்லா இடங்களுக்கும் மெத்ரோவிலேயே செல்லமுடியும். இப்போது 400 டாலர் என்றால் அது 40 டாலர்தான் ஆகும். மூணு லட்சம் எக்ஸ்றா செலவுக்குப் பேசாமல் ரெண்டு லட்சம் அனுப்பி சீனியை வரவழைக்கலாம் என்று சீரியஸாக யோசித்தேன். ஆனால் வரவே ரெண்டு நாள் ஆகும்.
தோஹாவில் என்னை சந்திக்க நினைக்கும் நண்பர்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். ஆனால் சாருஆன்லைனுக்கு சந்தா கட்டாதவர்களைச் சந்திக்க இயலாது. இதுவரை கட்டாதவர்கள் நேரில் தரலாம். பாதகமில்லை. ஜக்கி உலகம் பூராவும் சுற்றுகிறார். அவர் என்ன தொழிலதிபரா? அவரது சீடர்கள்தானே கொடுக்கிறார்கள்? அது ஏன் ஆன்மீகவாதிகள் கட்டணமாக வாங்கினால் கௌரவமாகவும் எழுத்தாளர்கள் வாங்கினால் அகௌரவமாகவும் நினைக்கிறார்கள்? காரணம் 2000 ஆண்டுகளாக தமிழ் எழுத்தாளன் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறான். முதல் ஆளாக நான் அதை மாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது ஜெயமோகனின் பேச்சுக்கள் கட்டண உரைகள். எனவே பணம் தர முடியாதவர்கள் யாரும் என்னைச் சந்திக்க வேண்டாம்.
சிகாகோ தமிழ்ச் சங்கமும் சிகாகோ பல்கலைக்கழகமும் சேர்ந்து ஒரு உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறது. தமிழ்நாட்டிலிருந்து 20க்கு மேற்பட்ட பிரதிநிதிகள். அதில் அந்த மாநாட்டுக்குத் தகுதியான ஒரே ஆள் சல்மா. மற்றவர்கள் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் ராஜா… ஏன் கஞ்சா கருப்பு மிமிக்ரி தாமுவையெல்லாம் விட்டு விட்டீர்கள்? தயவுசெய்து நம்புங்கள். இந்தக் கும்பலோடு என்னை அழைத்திருந்தால் நான் மறுத்திருப்பேன். எழுத்தாளனையும் தமிழையும் அவமானப்படுத்தும் செயல் இது.
15 ஆண்டுகளுக்கு முன்பு என் தோழி சொன்னது இது: அமெரிக்க நகர் ஒன்றுக்கு அந்த ஊர் தமிழ்ச் சங்கம் கமலை அழைத்திருந்தது. அவரோடு டின்னர் சாப்பிட விருப்பம் உள்ளவர்களுக்குக் கட்டணம் 500 டாலர். 15 ஆண்டுகளுக்கு முன்பு. என் தோழி கேட்டாராம். என்ன அவர் மடியில் உட்கார்ந்து சாப்பிடவா என்று. ஆனாலும் முண்டியடித்துக் கொண்டு போனதாம் கூட்டம். கட்டணம் வசூலித்ததில் தப்பே இல்லை. ஆனால் எழுத்தாளன் என்றால் ஓசி. அவனே செலவு பண்ணிக்கொண்டு நாடு நாடாகச் சுற்றினால் வீட்டுக்கு அழைத்து இட்லி கொடுப்பார்கள்? சாமிகளா, மன்னித்து விடுங்கள். அதற்கு நான் ஆள் இல்லை.
பூனைக்கு மணி கட்டும் முதல் ஆள் நான். விஜய் டிவி நீயா நானாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கு பெற்றால் ஒரு இரவு பூராவும் படப்பிடிப்பு நடக்கும். ஆனால் ஓசி. நான் காசு கேட்டேன். ஒரு நிமிட விளம்பரத்துக்கு எத்தனையோ ஆயிரம் வாங்குகிறோம் ஆனால் உங்களுக்கு – ஒரு எழுத்தாளருக்கு – ஒரு மணி நேரம் இலவச விளம்பரம் தருகிறோமே என்றார்கள். ரொம்பவே சரியான வாதம். ஆனால் 5 லட்சம் பிரதி விற்கும் குமுதத்தில் எழுதிய என் தொடரே 300 பிரதிதானே விற்கிறது? என்ன, என் தெருமுனையில் இருக்கும் மட்டன் கடைக்கார பாய் வணக்கம் விஜய் டிவி சார் என்று வணக்கம் போடுவார். இல்லை என்ன விளம்பரம் கொடுத்தாலும் என் புத்தகம் விற்காது பணம் வேண்டும் என்றேன். 5000 தர இசைந்தார்கள். நிகழ்ச்சி முடிந்து பலதினங்கள் ஆகியும் இதோ அதோ என்று இழுத்தடித்துக்கொண்டே இருந்தார்கள். ஒரு மாதம் ஆனதும் விகடனில் எழுதினேன். அன்றைய தினமே 5000 வந்தது. அதோடு விஜய் டிவியில் என்னைத் தடை செய்து விட்டார்கள். இன்று வரை தடை நீடிக்கிறது. ஏனென்றால் ஓசியில் பேச பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
ஒரு அன்பர் எழுதியிருந்தார். ஓ சாரு விவேகனந்தர் தாகூரையெல்லாம் விட பெரிய ஆளா என்று. இங்கே சாரு என்றால் நான் மட்டும் இல்லை. எழுத்தாளன் என்று பொருள். மேலும் நான் என்னை தாகூரை விட பெரிய ஆளாகவே கருதுகிறேன். என்ன, அவர் நோபல் வாங்கினார். நான் வாங்கவில்லை. அவ்வளவுதான்.
மேலும் ஒரு பண்பாட்டின் ஒரு தேசத்தின் ஒரு மொழியின் ஒரு கலாச்சாரத்தின் அடையாளமே எழுத்தாளன் தான். நான் சொல்லவில்லை. நான் பெரிதாக மதிக்கும் மகாஞானியான மகாப்பெரியவர் சொல்கிறார்.
எனவே நான் சொல்வதை சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
கீழே உள்ளது மஹாப்பெரியவரின் அருள் வாக்கு:
“ஒரு தேசம் என்று இருந்தால் அதில் நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருப்பான். திருடன், பொய்யன், மோசக்காரன் எல்லாரும் இருப்பான். இருந்தாலும் ‘இந்த தேசத்தில் பண்பு இருக்கிறது, இந்த தேசம் பிழைத்துக் கொள்ளும்’ என்று தெரிந்து கொள்வது எப்படி? ஒரு நோயாளிக்குப் பல கோளாறுகள் இருந்தாலும் டாக்டர் இருதயத்தைச் சோதித்து விட்டு, இருதயம் நன்றாக இருக்கிறது; ஆகவே பயமில்லை என்கிறார் அல்லவா? அதேபோல் ஒரு தேசத்தில் கோளாறுகள் இருந்தாலும் அதன் பண்பாட்டை உரைத்துப் பார்க்க ஒரு இருதய ஸ்தானம் இருக்கிறதா? இருக்கிறது. ஒரு தேசத்தின் பண்பு உயர்ந்திருக்கிறது; மனோபாவங்கள் உயர்ந்திருக்கின்றன; ஆங்காங்கே அழுக்குகள் இருந்தாலும் மொத்தத்தில் அது சுத்தமாக இருக்கிறது என்பதை உரைத்துப் பார்ப்பதற்கு அந்த தேசத்து மகாகவிகளின் (இலக்கியக் கர்த்தாக்களின்) வாக்கே ஆதாரமாகும். ஒரு தேசத்தின் பண்புக்கு இதயமாக அல்லது உரைகல்லாக இருப்பது அந்த நாட்டு மகாகவியின் வாக்குதான்.”
பாருங்கள், மகாகவி என்று சொல்லிவிட்டு நமக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்பதற்காக ‘இலக்கியக் கர்த்தா’ என்று வேறு சொல்கிறார் மகாப் பெரியவர். அடுத்து, ஒரு இலக்கியவாதி எப்படி இருப்பான் என்று வர்ணிக்கிறார்.
“தனது என்று எதையும் பிடித்துக் கொள்ளாமல் விஷயத்தை உள்ளபடி பார்த்து objective-ஆக, பேதமில்லாமல் நடுநிலையோடு, சர்வ சுதந்திரமாக, திறந்த மனதோடு உள்ளதை உள்ளபடி சொல்வான். உலகம் முழுவதையும் இப்படியே படம் பிடித்துக் காட்டுவான். அதை உலகம் எடுத்துக் கொண்டாலும் சரி, தள்ளி விட்டாலும் சரி, அதைப் பற்றியும் இலக்கியக் கர்த்தாவுக்குக் கவலை இல்லை. பயனை எதிர்பார்க்காதவன் அவன். ஒரு விஷயம் ஒரு நாட்டின் பண்புக்கு உகந்ததுதான் என்று அறிய வேண்டுமானால் அந்தப் பிரமாண வாக்கு (authority) அந்தத் தேசத்தின்மகாகவியின் வாக்குதான்.”
***
பணம் அனுப்புவதற்கான வங்கிக் கணக்கு விவரம் கீழே.
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
அல்லது Google Pay மூலமும் அனுப்பலாம். கூகிள் பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் தேவை. நீங்கள் எனக்கு எழுதினால் அனுப்புகிறேன்.
UPI ID: charunivedita@axisbank
வங்கி மூலம் அனுப்ப:
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர்.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai