ஜெ வட துருவம். நான் தென் துருவம். உங்களுக்குத் தெரியும். ஜெ இளையராஜாவுக்கு வேண்டியவர். நான்? நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். ஆனால் நான் ஒரு தனிமை விரும்பி. அப்படிப்பட்ட நான் ரஹ்மானை சந்திக்க நேர்ந்தது ஓர் அதிசயம். நம்ப முடியாத அதிசயமாக அது நேர்நதது. ரஹ்மான் மிகவும் private person என்பதால் அந்தச் சந்திப்பு பற்றி மூன்று மாதம் வாயே திறக்கவில்லை நான். பிறகும் கூட ஒருசில வார்த்தைகளே எழுதினேன். அடுத்தவரின் அந்தரங்கம் நம்முடையது அல்ல.
இமையமலை பாங்கோங் ஏரியில் மூங்கில் தோட்டம் பாடலை 50 முறை கேட்டேன் என்றேன் அவரிடம் அந்தச் சந்திப்பில். இன்று இரவு இங்கே சீலேயில் தனியாக இருந்த போது அதே போல் திரும்பத் திரும்ப மூங்கில் தோட்டம் கேட்டேன். கூடவே தில்லி 6. அவருக்கு மெஸேஜ் அனுப்பினேன். அடுத்த அரை மணி நேரத்தில் பதில் வந்தது.
ரஹ்மானிடம் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் இத்தனை உயரத்தில் இருந்து கொண்டு இத்தனை எளிமையாக இருப்பது. ஒரு கல்லூரி மாணவனைப் போல் தான் படு ஜாலியாக படு உற்சாகமாக எந்த பந்தாவும் இல்லாமல் பழகுகிறார். ஆச்சரியம். அவரை சந்திக்க நேர்ந்ததன் அதிசயம் பற்றி பிறகு எழுதுகிறேன்.