காஷ்மீர் (4)

காஷ்மீர் பற்றிய உங்களது கருத்துக்களிடம் இருந்து நான் முற்றிலும் முரண்படுகிறேன்.காஷ்மீர் வாக்குறுதி கொடுக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பகுதி. இன்று அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் மறுக்கப்பட்டு, அவர்களின் முதுகில் இந்திய அரசாங்கம் குத்தி இருக்கிறது.
துருக்கியில் குர்தீஸ் மக்களின் போராட்டத்தையும் அவர்களின் வேதனையையும் எழுதும் உங்களால்,காஷ்மீர் மக்களின் வேதனையையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது வினோதமாக இருக்கிறது.

முதலில் மோடியை ஆதரித்தீர்கள் பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்தீர்கள். இப்பொழுது காஷ்மீர் பிரச்சனையில் மோடியின் நிலையை ஆதரிக்கிறீர்கள் ,கண்டிப்பாக இதற்கு ஒரு நாள் வருத்தப்படுவீர்கள்.
ஓநாய்களிடம் நீதியை எதிர்ப்பார்க்கும் ஆட்டுகுட்டிகளின் நிலை பரிதாபமே.

அன்பு வாசகர் முகம்மது ஸுல்ஃபிகரின் கடிதம் மேலே உள்ளது. மோடி ஓநாய்தான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஃபாஸிஸ்ட் ஓநாய். ஆனால் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது, Give the devil its due என்று. நான் மோடியை ஆதரிக்கவில்லை. மோடியின் காஷ்மீர் முடிவை ஆதரிக்கிறேன். அதுவும் இந்த என் கருத்து பத்து இருபது ஆண்டுகளாக – நான் காஷ்மீரை நேரில் பார்த்து விட்டு வந்த பிறகு – எழுதி வருவதுதான். காஷ்மீரின் விசேஷ அந்தஸ்தை நீக்க வேண்டும்; அந்த மாநிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும். இதெல்லாம் நான் நீண்ட காலமாக எழுதி வரும் கருத்து. இப்போதும் சொல்கிறேன். மத ரீதியான எந்தச் சலுகையும் எந்த மதத்துக்கும் கொடுக்கப்படலாகாது. அது பெரும்பான்மை மதமான இந்து மதமாக இருந்தாலும் சரி.

இன்று காலை ஆறரை மணி அளவில் கச்சேரி ரோட்டில் ஒரு காரை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு ஒருவர் மசூதிக்குள் போய் விட்டார். ஒரு மணி நேரமாக கச்சேரி ரோட்டில் ஒரு ஸ்கூட்டர் கூடப் போக முடியவில்லை. போலீஸ் பட்டாளம் முழுவதும் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தது. ஏன் மைக்கில் தெரிவித்து அந்தக் காரை அப்புறப்படுத்த முடியவில்லை? அது இருக்கட்டும், சட்டம் எல்லோருக்கும் சமம்தானே? அந்தக் காரை அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துக் கொண்டு போயிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? இத்தனைக்கும் மசூதிக்குப் பக்கத்தில்தான் போலீஸ் ஸ்டேஷன். ஏனென்றால், மசூதி, கோவில், சர்ச் என்றால் போலீஸ் செயலிழந்து போகிறது. எந்த வழிபாட்டுத் தலம் என்றாலும் போலீஸ் கடமையைச் செய்ய அஞ்சுகிறது.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், மேற்கத்திய நாடுகளைப் போல் மத ரீதியான எந்தச் சலுகையும் யாருக்கும் எந்த மதத்துக்கும் அளிக்கக் கூடாது என்றுதான். இப்போது காஷ்மீரிகள் நீண்ட நாள் காயத்தோடு இருக்கிறார்கள். அந்தக் காயத்துக்கு மருந்து போட்டாக வேண்டும். அவர்களிடம் இப்போது ப்ளெபிஸிட் வைத்தால் தனிநாடு தான் கோருவார்கள். காஷ்மீர் தனிநாடு ஆனால் அந்நாடு மதத் தீவிரவாதிகளின் கையில் போய் விடும். பிறகு கல்லூரிக்குப் போகும் பெண்ணின் தலையை நடுத்தெருவில் வைத்துத் துண்டிப்பார்கள். பாகிஸ்தான் தான் தீவிரவாதிகளின் உற்பத்திக் களன். இந்தியா – பாகிஸ்தான் எல்லை என்பது பல இடங்களில் வெறும் வெற்றுத் திடல். அங்கே ஆடு மேய்ப்பவர்களைப் போல் வரும் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரைச் சுட்டுக் கொல்கிறார்கள். ”எங்களிடமும் துப்பாக்கி இருக்கிறது. திருப்பிச் சுடலாம். ஆனால் நாங்கள் துப்பாக்கியை எடுக்க தில்லிப் பாராளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்க வேண்டும்” என்று என்னிடம் சொன்னார் ஒரு சிப்பாய். நானே காதால் கேட்டது இது.

மேலும், லடாக்கைப் பிரித்தது நூற்றுக்கு நூறு சரி. லடாக்கை காஷ்மீரத்தோடு சேர்த்திருந்தது ஒரு மாபெரும் வரலாற்றுக் குற்றம். மேலும், இப்போது காஷ்மீரில் உள்ள தலித்துகளும் மற்ற இந்தியர்களைப் போல் இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். இதுவரை அது முடியாமல் இருந்தது. அதனால்தான் மாயாவதி மோடியின் இந்தக் காஷ்மீர் முடிவை ஆதரிக்கிறார்.