சூஃபி கவிகள் எல்லோருமே ஒரு பித்தநிலையின் உச்சத்தில் நின்றே பாடினார்கள். அந்நிலை பற்றி நான் ஏராளமாக எழுதியிருப்பதால் அவற்றையே திரும்ப எழுதத் தேவையில்லை. பிஸ்மில்லா கான் பதின்பருவத்தில் இருந்த போது காசி விஸ்வநாதர் தன் இசையை ஸ்தூல உருவில் கேட்டிருக்கிறார் என்று சொல்கிறார். மனவெளித் தோற்றம் அல்ல; நிஜமாகவே ஸ்தூல உருவில் என் பக்கத்தில் நின்று கேட்டார் என்கிறார். பிஸ்மில்லா கானுக்கு வேர்த்து விறுவிறுத்துப் போகிறது. ஷெனாயை வைத்து விட்டுத் தேடுகிறார். ஆளைக் காணோம். என்ன இது, மந்திர வித்தை என்று யோசித்துக் கொண்டே போய் தன் மாமனிடம் சொல்கிறார். ”நானும் அவரைப் பார்த்திருக்கிறேன், என்னிடம் சொன்னது போல்வெளியே சொல்லாதே, உன்னைப் பைத்தியம் என்பார்கள்” என்று எச்சரிக்கிறார். தியாகய்யரின் ராம நாமமும் அப்படிப்பட்டதே. ஈரானின் மகத்தான சூஃபி கவியான ஹஃபீஸ் உணர்ந்த ontological angst தான் அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வேதங்களில் வெளிப்பட்டிருக்கிறது.
பிரபஞ்சத் தனிமையின் காரணமாக ஏற்பட்ட துக்கம் என்னை பிரபஞ்சத்தோடே ஒன்றிவிடத் தூண்டுகிறது. இது ஒரு முரண்நிலை (Paradox). துக்கமும் (angst) ஒன்றுதலும் (oneness). ஆதிசங்கரர் இந்த ஒன்றுதலைத்தான் தன் கவிதைகளிலும் தத்துவத்திலும் வெளிப்படுத்தினார். தியாகய்யரும் அதேதான். மோகமுள் நாவலில் யமுனா ஒரு அற்புதமான இசையைக் கேட்கும் போது நான் செத்து விடுவேன் போலிருக்கிறதே என்று அழுது அழுது அரற்றுவதும் இதேதான். துக்கமும் ஒன்றுதலும். இந்த முரணைத்தான் எல்லா இசைவாணர்களும் கவிஞர்களும் பாடிப் பாடித் தீர்க்க முனைகிறார்கள்.
அப்படிப்பட்ட மகா தருணத்தை, தர்ஸனத்தை, தீரவே தீராத ஜனன மரண சுழற்சியின் துளியை, இறைவியின் பிரஸன்னத்தை எனக்கு வழங்கின இந்தக் கவிதை வரிகள். இம்மாதிரி ஒரு அற்புதத்தை என் வார்த்தைகளில் சிருஷ்டிக்க முடிந்தால் அந்தக் கணமே நான் இறந்து விடுவேன். ஏன் இந்த அளவுக்குச் சொல்கிறேன் என்றால், என் வாழ்வின் இரண்டே தருணங்களில்தான் நான் இந்த உணர்வை அடைந்திருக்கிறேன். ஒன்று, பிஸ்மில்லா கானின் இசை. இரண்டு, உச்சபட்ச பித்தநிலையில் சிருஷ்டிக்கப்பட்ட வேதங்களின் கவிதை நிலை. (ராஸ லீலாவில் தாராளமாக அக்கவிதைகளை மேற்கோள் காட்டியிருக்கிறேன்). ஒரு பக்தனுக்கு கடவுளையே பார்த்த பிறகு வேறு என்ன இருக்கிறது? நானே கடவுளாக மாறிய பிறகு வாழ்வு என்ன, மரணம் என்ன? அப்பேர்ப்பட்ட மகா அற்புதத்தைத் தன் கவிதைகளில் சிருஷ்டித்த அய்யனார் விஸ்வநாத் என்ற பித்தனோடு ஒரு இரவு முழுக்கவும் குடித்துக் கொண்டாட விரும்புகிறேன்.
இனி அய்யனார் விஸ்வநாத்:
என் ப்ரியத்திற்குரிய ப்ரியமே, உன் வடிவம் யாது? உன் பருண்மை என்ன? உன்னொளி என் இருண்மைகளை விரட்டுமா? நீ இப்பிரபஞ்சத்தில்தான் உலவுகிறாயா? உடல் முழுக்க காயங்களைக் கொண்டிருக்கிறேன். எப்போதுமே எதைக் கொண்டும் நிரப்பிடாத இடைவெளியை நானாகவே தருவித்துக் கொண்டிருக்கிறேன். நீ என் மீட்பராய் இருப்பாய். என்னை இரட்சிப்பாய். திசையறியா ஆட்டுக் குட்டிகளின் தாய்மை நீயாமே? என்னைக் காத்தருள். என்னை மீட்டெடு. என் பாவங்களை நீக்கு. தூய வெண்ணிறப் போர்வை கொண்டு என்னை மூடு. உன் சுகந்தத்தில் கண் மூடி நெடு நாள் உறங்க வேண்டும். என்னருகே உறங்கும் என் மகனின் பாதுகாப்புணர்வு எனக்கும் கிட்டட்டும். என் அறிவுக் கிடங்கென்று நானாய் நம்பிக் கொண்டிருக்கும் குப்பைகளை நீக்கு. என் போலித்தனங்களைக் களை. என்னை நிர்மூலமாக்கு. என்னை அழி. என்னை ஒரு பள்ளத்தாக்கிலிருந்து தலைக் குப்புறத் தள்ளிவிடு. என்னை இல்லாமலாக்கு. என் இறையே. என் காதலே. என் மதுவே.
தூயச் செந்நிற மது நானாவேன். தூய வெண்ணிற மதுவும் நானாவேன். அதிதூய போதையாய் இரு. இருள் கிழிக்கும் ஒளி நானாவேன். ஒளி மூடும் இருள் போர்வையும் நானாவேன். நீ என் ஆதவனாய் சந்திர பிம்பமாய் எப்போதுமிரு. விருட்சம் நான். கிளை நான். இலை நான். சருகு நான். நீ என் வேராய் இரு. நீ என் நீராய் இரு. நீ என் விழுதாய் இரு. என் இறையே, என் காதலே, என் மதுவே, எனக்கான எல்லாமாய் நீ இரு.
மேகக் கூட்டங்களின் வெண்மை நீயாமே. வானின் நீலமும் நீயாகவே இருக்க முடியும். கடலும் வானும் சங்கமிக்கும் நீலப் பின் புற ஒளியும் நீதானே? இந்தப் பனிக்கட்டிக் கரையும் செந்நிறத் திரவம் தரும் கரைசலும், வானில் கடலில் கரைந்த நீலமும் ஒன்றா? அப்படியெனில் நான் வானைக் குடிக்கிறேன். அப்படி அப்படியெனில் நான் கடலைக் குடிக்கிறேன். நீரில் ஒளிரும் கத்தி மீனாய் பாய்கிறேன். ஆழம் பயம் தருகின்றது. நீல ஆழம் போகப்போக இருளின் ஆழம். நீ ஆழமாய் இரு. ஆனால் நீலமாய் இரு. கரும் இருளின் ஆழம் அச்சமூட்டுகின்றது. ஆழம் இருள்தான் எனினும் நீ நீலமாயிரு. எனக்கே எனக்காய் நீல ஆழ இருளாயிரு. என் ப்ரிய ப்ரிய ஆழமே, இருளே, நீலமே.
அறியாதவனாய் கேட்கிறேன் எங்கிருக்கிறாய் நீ? சாவின் வடிவத்திலா இயங்குகிறாய்? மரணம்தான் எப்போதைக்குமான ஆசுவாசமா? எல்லாவற்றையும் குடித்துத் தின்றுச் செரித்துக் கொண்டாடும் வாழ்வல்லவா உனது. உன்னிடம் வந்தவர்களை என்ன செய்வாய்? எப்போதைக்குமான அன்பை அறியத் தருவாயா? ஏய் சாவே, நீ என்னை என்ன செய்வாய்? ஒருவேளை நீ தான் என் இறையா? என் மதுவா? என் காதலா? நீதான் சகலமுமா? என்னை அணைத்துக் கொள்ளேன். உன்னில் பொதிந்து கொள்ளேன். என்னை மூழ்கடியேன், என்னில் திளையேன் அல்லது உன்னில் திளைக்கவிடேன். என் இறையே மதுவே காதலே சாவே.