மீண்டும் ஒரு கடிதம், ஒரு பதில்…

அன்புள்ள சாரு..
இன்றைய இலக்கிய இதழ்களின் போதாமை குறித்தும் ஓர் இதழ் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் மூத்த எழுத்தாளர்களை எப்படி இன்றைய தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது குறித்தும் அக்கறையுடன் ஆக்கப்பூர்வமாக தர்க்கரீதியாக நீங்கள் முன்வைத்த கருத்தை ஒரு இலக்கியவாதி தனக்கே உரிய அறியாமையுடன் துவேஷத்துடன் எள்ளி நகையாடியிருக்கிறார்
கடந்த சில ஆண்டுகளில் வாசிப்பு பன்மடங்கு அதிகமாகியிருக்கிறது..  தமிழைப்பொருத்தவரை இதற்கு நீங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதை நீண்டகால இணையவாசிகள் அறிவார்கள்..இணையம் வெகுஜன பயன்பாட்டுக்கு வந்த புதிதில் அதை எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் ஒரு தேக்கம் இருந்தது.. தகவல் பரிமாற்றம், செய்தி அறிதல் , சுய மைதுனம் என பயன்பட்ட அந்த நேரத்தில் அதற்கு ஒரு இலக்கிய அந்தஸ்தை தந்தது உங்கள் வருகைதான். அன்று எழுதிய வலைவாசிகள் பலரும் உங்களை திட்டுவார்கள். அல்லது பாராட்டுவார்கள். அப்படி ஒரு மையமாக இருந்தீர்கள். அதன்பின் முகநூல் பிரபலமானபோதுஅதிலும் ஒரு டிரண்ட் செட்டராக இருந்தீர்கள்.  
அதன்பின் அந்த காலகட்டமும் முடிந்து வீடியோ காலம் உருவாகி வருவதை மிக துல்லியமாக உங்கள் கட்டுரையில் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்.
என்ன கொடுமை என்றால் , கரையான் புற்றில் கருநாகம் புகுந்ததுபோல , இந்த வாசிப்புபுரட்சியை வேறு சிலர் ஹைஜாக் செய்துவிட்டனர்சிற்றிதழ்களில் மட்டுமே பார்க்க முடிந்த உங்களை எல்லாம் எளிதாக பார்க்க முடிந்தபோது இனி மிகப்பெரிய மாற்றம் நிகழும் என நினைத்தோம்
வாசிப்பு அதிகரித்தது. ஆனால் அது இலக்கிய வாசிப்பாக மாறவில்லை. அரசியல் வம்புகள் , வம்பு பேச்சுகள் , pulp எழுத்துகள் என இணையம் மாறியது….
கட்சி ஊடகங்களில் வாய்ப்பு பெற self styled கவிஞர்களுக்கு இணைய எழுத்து பயன்பட்டது.  அந்த கவிஞர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் வாயப்பு பெற இணையவாசிகளுக்கும் பயன்பட்டது. இப்படியாக இணைய எழுத்தியக்கம் நாசமாய் போனது.
இன்றைய தலைமுறைக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அவர்களாக எழுதி அவர்களாக பாராட்டிக் கொள்கிறார்கள். அவர்களை நம்பும் பத்திரிக்கைகளை அழிக்கிறார்கள்..கலைஞரையே ஏமாற்றி விட்டார்களே..   நீங்களாக இருந்திருந்தால் கலைஞரை பார்த்துப்பேசி அதை பதிவு செய்து அரிய ஆவணமாக்கியிருப்பீர்கள். ஆனால் இவர்களோ கிழட்டு மன நிலையுடன் செயல்பட்டு அவ்வாய்ப்பை வீணாக்கி விட்டனர்
எப்படி அந்தந்த காலத்து இளைஞர்களை சிற்றிதழ் வலைப்பூ முகநூல் என ஈர்த்தீர்களோ அதேபோல இன்றும்நீங்கள்தான் செய்ய முடியும்..  இன்று பலர் தமிழை படிப்பதே இல்லை.. இலக்கியம் அறவே இல்லை..  எப்படி முன்னோடி எழுத்தாளர்களை பழுப்புநிற பக்கங்கள் மூலம் இளைஞர்களிடம் கொண்டுசேர்த்தீரககளோ அதேமாதிரி சமகால ஆளுமைகளை சில பழம்பெருச்சாளிகளிடம் இருந்து காப்பாற்றி புதிய தலைமுறையினர்க்கு அறிமுகம் செய்வது உங்களால் மட்டுமே முடியும்
அன்புடன்;

பிச்சை

அன்புள்ள பிச்சை,

அந்த நண்பரின் எதிர்வினை படிக்கக் கிடைத்தது. நான் நினைத்த அளவுக்கு இல்லை. நான் சொன்னது நாணயத்தின் ஒரு பக்கம் என்றால், அவர் சொல்வது இன்னொரு பக்கம். அவர் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஏற்கிறேன். அதெல்லாமும் ஒரு இலக்கியப் பத்திரிகையில் இருக்க வேண்டும். தடம் இதழில் அதெல்லாம் இல்லை. விகடனில் இருக்கிறது. தடத்தில் இல்லை. கிழட்டுத்தனம் வேறு, மூப்பு வேறு. நான் சொன்னது கிழட்டுத்தனத்தை. மௌனியும் நகுலனும் என்றும் இளமையானவர்களே. திருவள்ளுவரும்தான்.

தமிழ் இலக்கியம் 2000 வருடம் அல்ல; நாலாயிரம் அஞ்சாயிரம் வருட மூப்பு கொண்டது. தொல்காப்பியத்தில் அவர் என் முன்னோர் சொன்னதைத் தொகுக்கிறேன் என்றே சொன்னார். இன்றைய கிழட்டு எழுத்தாளர்களுக்கு இன்றைய சமூக நிலவரமே தெரியவில்லை; அவர்களை ஒற்றியே தடம் குழுவினரும் கிழட்டுத்தனமாக பத்திரிகை நடத்தினால் யார் வாங்குவார் என்பதே என் புகார். மற்றபடி ’பப்’தான் சமூக எதார்த்தம் என்று சொல்லும் அளவுக்கு நான் விஷயம் அறியாதவனா? பப் ஒரு பாசாங்கு உலகம். நான் சொன்ன உதாரணம் கூட அன்பரின் கோபத்தில் புரியவில்லை. சுவாரசியம் வேண்டும் என்றே நான் சொன்னேன். இன்றைய சமூக நிகழ்வுகள், மாற்றங்கள் அத்தனையும் ஒரு இலக்கியப் பத்திரிகையில் பதிவாக வேண்டும்.

அன்பர் சு.ரா. பள்ளியிலிருந்து பிரிந்தவர். அதிமுக, திமுகவிலிருந்து பிரிந்த மாதிரியான பிரிவுதானே தவிர தத்துவ அளவில் இவர்தான் கண்ணனை விட சு.ரா.வின் தீவிர மாணவர். இவர்களுக்கெல்லாம் பிக் பாஸ், வெப் சீரீஸ் எல்லாம் தீண்டத்தகாதவை. பைத்தியக்கார விடுதியிலிருந்து தப்பி வந்தவர்களைப் போல் நடந்து கொள்ளும் பிக் பாஸ் ஆட்கள் தங்கள் குடும்பம் என்று வந்தால் ஏன் ஐயா தேம்பித் தேம்பி அழுகிறார்கள்? அந்த சாண்டியோ பாண்டியோ எல்லாரையும் கலாய்க்கிறார். ஆனால் அம்பது நாள் தன் குழந்தையைப் பார்க்கவில்லையாம், ஏதோ வெடிகுண்டுகளுக்குப் பயந்து பதுங்கு குழியில் பதுங்கிக் கிடப்பது போல் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார். என்ன அழுகை என்ன அழுகை. பொங்கிப் பொங்கி அழுகிறார். இதையேதான் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் செய்கிறது. அடுத்தவன் குழந்தை எப்படியோ போகட்டும் என்கிறான்; ஆனால் தன் குழந்தைக்காக உயிரையே கொடுக்கிறான். ஒரு தமிழ்த் தாய் தன் 31 வயது மகனுக்கு சோறு ஊட்டி விடுகிறாள். இடம் நியூ ஜெர்ஸி. அவன் மனைவிக்கு எப்படி இருக்கும்? இதுதான் தமிழ்ச் சமூகம். இதை நான் பிக் பாஸிலிருந்து புரிந்து கொள்கிறேன். இது போன்ற வெகுஜன கலாச்சார நிகழ்வுகளெல்லாம் நரகல் என்கிறது சு.ரா. பள்ளி. வெங்கட் சாமிநாதன் இப்பள்ளியின் தாதா. ஆனால் இதையெல்லாம் ஆய்வு செய் என்கிறது பின்நவீனத்துவம்.

மற்றபடி அந்த நண்பரின் எல்லா கருத்தும் எனக்கும் உடன்பாடுதான். சொல்லப் போனால் இன்னும் தீவிரமான கருத்துக்களைக் கொண்டவன் நான். நண்பர் சொல்கிறார், 90 சதவிகித எழுத்தாளர்கள் சிறு பத்திரிகைகளால் உருவானவர்கள் என்று. இல்லை, 100 சதவிகிதமே சிறுபத்திரிகைகளால் உருவானவர்கள்தான். ஒரே ஒரு விதிவிலக்கு லா.ச.ரா. பெரும்பத்திரிகைகள் இதுவரை ஒரு இலக்கியவாதியைக் கூட உருவாக்கியதில்லை.

வெப்சீரீஸ் பற்றித் தெரியாதவர்களையும் நான் கிழட்டு லிஸ்டில்தான் சேர்ப்பேன். சினிமா என்ற format இப்போது மாறி விட்டது. அதற்காக சினிமா செத்து விட்டது என்று சொல்லவில்லை. ஆனால் சினிமாவின் அசுரக் குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கிறது வெப்சீரீஸ். நண்பர் GOT பார்க்கட்டும் முதலில். இளைஞர்கள் யாராவது அவரிடம் ஜிஓடி என்றால் என்ன என்று சொல்லுங்கள்.

சாரு