அவதூறு

தேவிபாரதி என்பவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. சமீபத்தில் அவர் எழுதியிருந்த ஒரு முகநூல் பதிவு என் கவனத்துக்கு வந்தது. அதில் என்னைப் பற்றி படு கேவலமான அவதூறுகளை எழுதியிருக்கிறார். நான் அவர் வீட்டில் போய் தங்கிக் கொண்டு தினமும் சாராயம் குடித்தேனாம். சிகரட் புகைத்தேனாம். இவர் அம்மா என்னென்னவோ திட்டினாராம். இவர் வீட்டில் ஒரு வாரம் தங்கி சாராயம் குடித்துக் கொண்டிருந்த என்னை இவர் தன் சக ஆசிரியர்களிடம் இருபத்தஞ்சு இருபத்தஞ்சு ரூபாயாகக் கடன் வாங்கி 150 ரூ. கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தாராம்.

என் மீது இப்படிப்பட்ட அவதூறுகளை வேறு சிலரும் அவ்வப்போது அவிழ்த்து விடுவதைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஒருத்தன் நான் அவனுடைய கேமராவைத் திருடிக் கொண்டு வந்து விட்டதாக எழுதியிருந்தான். உடனே ஒரு பத்திரிகையாளர் என்னிடம் இன்னார் இப்படி நீங்கள் அவருடைய கேமராவைத் திருடி விட்டதாக எழுதியிருக்கிறாரே, அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார். நேரில் வா, உன்னை செருப்பால் அடிக்கிறேன் என்றேன். அரண்டு விட்டார் பத்திரிகையாளர். ”பின்னே என்னய்யா, ரஜினியிடம் போய் இப்படிக் கேட்பாயா நீ? எவனோ ஒரு கூறு கெட்டவன் எழுதினால் அவனைப் போய் கேட்காமல் என்னிடம் வந்து கேட்கிறாயே, உனக்கு எத்தனை திமிர் இருக்கும்?” என்று கத்தினேன். கேட்டால் எனக்குக் கேமரா வாங்கிக் கொடுக்க நூறு பேர் இருக்கும்போது நான் ஏன் இன்னொருவர் பொருளைத் திருட வேண்டும்? அதே போன்ற ஒரு கற்பனைக் கதையைத்தான் அவிழ்த்து விட்டிருக்கிறார் தேவிபாரதி. இப்படிப்பட்ட பொய்க்கார பேர்வழிகளுக்கு பாரதி என்று பெயர் வேறு.

நான் அப்போது என் நண்பரோடு அடிக்கடி சேலம் போய்க் கொண்டிருந்தேன். அவருடைய ஜகுவார் காரில்தான் சேலம் போவேன், வருவேன். அப்போது என்னை சேலத்தில் சந்தித்த இந்த ஆள் என் காலில் விழாதா குறையாகக் கெஞ்சிக் கூத்தாடி என்னைத் தன் வீட்டுக்கு அழைத்தார். போனேன். பேசிக் கொண்டிருந்த ஜோரில் இருட்டி விட்டதால் காலையில் போய்க் கொள்ளலாம் என்று கெஞ்சினார் அவர். காலையில் கிளம்பி சேலம் வந்து நண்பரோடு இணைந்து கொண்டு அவரோடேயே சென்னை திரும்பினேன். இந்த ஜென்மத்துக்கு நான் பிறத்தியார் வீட்டுக்கே போக மாட்டேன்; போனாலும் அங்கே காப்பி கூட குடிக்க மாட்டேன் என்பது கூடத் தெரியவில்லை. உதாரணமாக, என்னுடைய 30 ஆண்டு நண்பர் ராகவன். ஆனால் அவர் வீட்டுக்கு நான் இதுவரை ஒருமுறை கூட போனதில்லை. அப்படிப்பட்ட நான் போய் இந்த ஆள் வீட்டில் ஒரு வாரம் உட்கார்ந்து கொண்டு சாராயம் குடித்தேனாம். மேலும், நான் சிகரெட் புகைப்பவனும் இல்லை. நண்பர்களிடமெல்லாம் கடன் வாங்கி எனக்கு சிகரெட் வாங்கிக் கொடுத்தாராம். என் மீது தாங்கொணாத அவதூறுகளை வீசியிருக்கும் இவரை கடவுள் கவனித்துக் கொள்வார்.