நான் படித்த மறக்க முடியாத சிறுகதைகளில் இதுவும் ஒன்று. இதெல்லாம் அச்சு ஊடகத்தில் வர முடியாத நிலை இங்கே நிலவுகிறது. அதனால் அமல்ராஜ் ஃப்ரான்சிஸ் எழுதிய இந்தக் கதையை உங்களுக்கு வாசிக்க அளிக்கிறேன்.
***
பழி
முதலாவது அடியே சாமுவேலின் முகத்தில்தான் விழுந்தது. வீறிட்டுக் கத்திக்கொண்டு எழுந்த போது பின்னால் நின்றவன் தன் பங்கிற்கு கையிலிருந்த கத்தியை எடுத்து சாமுவேலின் மேல் இடுப்பில் சொருகினான். கூரிய கத்தி முள்ளந்தண்டை விலத்திக்கொண்டு சதக்கென்று விலாக்கூட்டிற்குள் இறங்கிற்று. சாமுவேல் சுதாரித்துக்கொண்டு முன்னால் நின்றவனின் சட்டையைப் பிடிக்க, கொட்டாந்தடியோடு பின்னால் நின்றவன் சாமுவேலின் நடு மண்டையில் இன்னொரு போடு போட்டான். மண்டை ஓடு க்ரக் என வெடித்தது. ரத்தம் தாரைதாரையாகக் கொட்டியது. உடல் நான்காக மடிந்து, சுவரில் சாய்ந்து, மண்தரையில் சரேல் எனச் சரிந்தது.
அந்த இரண்டாம் சாமத்தில் சாமுவேல் வைத்த கூப்பாட்டில் ஒட்டு மொத்த ஊரே விழித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டம், அப்படி எதுவுமே நடக்கவில்லை. அவன் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து, சுருட்டி சாமுவேலின் வாய்க்குள் திணித்து வைத்து விட்டுத்தான் உதைத்துக் கொண்டிருக்கிறார்கள் கொலைகாரர்கள். மீண்டும் மீண்டும் வீறிட்டுக் கதறியும் சாமுவேலின் ஈனக்குரல் தொண்டையை விட்டுப் புறப்படவேயில்லை.
வாழ்க்கையின் கடைசிப் போராட்டத்தைக்கூட முடிந்தவரை நடத்தி முடிக்க வக்கற்றுப் போன ஓர் இரவு எத்துணை அவமானத்திற்குரியது. முகத்தைக் கரும் துணியால் மறைத்திருந்த ஐவரும் சாமுவேலை வளையம் வந்தார்கள். பிஜினில் ஏதேதோவெல்லாம் சொல்லி கர்ச்சித்தார்கள்சாமுவேல் மரணத்திற்கு மூன்று சென்டிமீட்டர் இடைவெளியில் நின்றபடி தன் கடைசி இரைஞ்சலை ஒப்புவித்துக்கொண்டிருந்தான். இனி, இறுதி வெட்டு எப்போது வேண்டுமானாலும் விழலாம். கடைசி ஓலம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.
சாமுவேலின்மேல் முதல் வெட்டு விழுந்தபோதே அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் வீட்டிற்குள்ளிருந்து தப்பித்துவிட்டார்கள். பப்புவா நியூகினி என்கின்ற ஒரு தேசத்தில் இரண்டு சாதிகளுக்கிடையில் நடக்கும் யுத்தத்தில் பெண்களும் குழந்தைகளும் மாட்டிக்கொண்டு விட்டால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் அறியாதவர்களில்லை. இனக்குழு சமூகங்களுக்கு இடையிலான இவ்வகைச் சண்டைகளில் அதிகமாக இலக்கு வைக்கப்படுபவர்கள் பெண்களும் சிறுவர்களுமாகத்தான் இருக்கிறார்கள். ஒரு இனத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்றால், யார் மேல் கைவைக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பவர்கள் பப்புவாக்காரர்கள். இனக்குழுவினர்களுக்கு இடையே நடக்கும் சச்சரவுகளில் பெண்கள் வன்புணரப்படுவதும், சிறுவர்கள் கொலை செய்யப்படுவதும் இங்கு ஆச்சரியமாகப் பேசப்படுவதில்லை.
அந்த அர்த்தராத்திரியில் சாமுவேலின் மனைவி தன் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு எங்கே போயிருப்பாள்? வெளியில் எங்கெல்லாம் எதிரிகள் மறைந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. வீட்டைச் சுற்றியிருக்கும் டானியேல் முதலாளியின் எஸ்டேட்டில் கிடக்கும் கோப்பிப் பற்றைகளுக்குள் சிறிது நேரம் ஒளிந்துகொண்டு புறச்சூழலை கவனமாகப் புரிந்துகொள்வது நல்லது. நிலைமை பாதுகாப்பானதுதான் என்றால், இரண்டு கஜ தூரத்திலிருக்கும் சாமுவேலின் தம்பி எடியின் வீட்டுக்குப் போகலாம். எப்படியோ எடியின் கரங்களுக்குள் போய்ச் சேர்ந்துவிட்டால் உயிர்ப்பயம் அடங்கிக்கொண்டு விடும். அதன் பின்னால் வரும் அத்தனையையும் எடி பார்த்துக்கொள்வான். அவனிடம், அவனே தலைமை தாங்கும் நூறு பேர் கொண்ட ‘வெள்ளை ஆமி’ படையொன்று உண்டு. தவிர வீட்டில் நான்கு ஏகே 47 ரக துப்பாக்கிகளும், இரண்டு மோட்டர்களும் இருக்கின்றன. அவனிடமிருக்கும் கைக்குண்டுகளுக்கு அளவேயில்லை.
மரணத்திற்குத் தன்னை முழுவதும் ஒப்புக் கொடுத்துவிட்டு, தன்னுடைய கடைசி மூச்சிற்காய் காத்துக்கொண்டிருந்த சாமுவேலின் மேல் கடைசி வாள் வெட்டு விழுந்தது. ரத்தம் பீச்சியடித்து தரையெல்லாம் புரண்டோடியது. பின்னர் உடல் இரண்டு தடவைகள் உதறி மூர்ச்சையாகியது.
சாமுவேலின் கதை முடிந்துவிட்டது. தங்கள் அடுத்த திட்டங்களைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்கொலைகாரர்கள். ‘மனுசியும் பிள்ளைகளும் தப்பிடிச்சுதுகள், வேசைகள்…’ என்று ஒருவன் கத்தினான். “இண்டைக்குத் தப்பட்டும், இந்த வம்சத்த சீக்கிரமே கூட்டோட அழிச்சிடணும், ஆஸ்ஹோல்ஸ்!’ என்றான் இன்னொருவன். வீட்டிற்குள்ளிருந்து கடைசியாக வெளியில் வந்தவன் தன் கையிலிருந்த நெருப்புக் கங்கிலை ஒரு வளையம் சுழற்றி வீட்டின் முகட்டின் மேல் எறிந்தான். காய்ந்து, முறுகிக் கிடந்த புல் முகடு கபக் எனப் பற்றிக்கொண்டு எரிந்தது.
…
சாமுவேலை நான் முதன்முதல் சந்தித்த சம்பவம் இப்பொழுதும் எக்குள் பசுமையாக நினைவிருக்கிறது. அதைப் பசுமையென்றும் சொல்ல முடியாது. மனிதர்களை சாவு வீட்டில் வைத்து சந்தித்துக் கொள்வதையெல்லாம் பசுமையான ஞாபகமென்று சொல்ல முடியுமா என்ன? ஆனால் அதை இதுகாறும் பசுமையென்றே அழைத்துக்கொண்டிருப்பதற்கு என்னிடம் தக்கதொரு காரணம் உண்டு.
அது சாமுவேலின் கடைசி மகள். பெயர் செஞ்சூப். மிக வழக்கமான பப்புவா நியூகினி பெயர். கருப்பின் பேரழகை இப்பேரண்டம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே சிருஷ்டிக்கப்பட்ட ஒரு குழந்தை. பிரகாசம் மிளிரும் கண்கள். இளமஞ்சளில் தோய்ந்த சுருண்ட கேசம். வாளிப்பான தேகம். பளபளக்கும் தோல். இல்லையென்றாலும் என்னுடைய கால்களின் உயரம்தான் இருப்பாள் செஞ்சூப். வயது ஆறு இருக்கும். தன் தாய் மொழியாகிய பிஜினின் ஐந்தாறு வார்த்தைகளைக் கோர்த்து ட்ரிகரில் தட்டுவது போல் பேசிக்கொண்டு நடந்தாள். கூடவே இடைவெளிவிட்டு பவித்திரமாகச் சிரித்தாள். அன்று, தன்னுடைய தந்தை வழிப் பாட்டனார் நடுவீட்டில் மூச்சற்றுக் கிடக்கிறார் என்ற பிரக்ஞையே இல்லாமல் அவளுடைய கண்கள், காண்பவை அனைத்தையும் கொண்டாடித் தீர்த்துக்கொண்டிருந்தன.
வீட்டிற்கு நூற்றுக் கணக்கில் விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் என்பது அவளுடைய மழலை உற்சாகத்தை மேலும் பன்மடங்கு அதிகரித்திருந்தது. அங்குமிங்கும் துள்ளித் துள்ளி ஓடினாள். நிலத்தில் கிடக்கும் கற்களைப் பொறுக்கி சுவர் மீது எறிந்தாள். ஒவ்வொரு மனிதராகப் போய் தன் சொந்த பாஷையில் கேள்விகள் கேட்டாள். அவர்கள் மௌனமாக பதில் சொல்வதற்குள் இன்னொரு மனிதரைத் தெரிவு செய்துகொண்டு ஓடினாள். இப்படித்தான் ஒரு கட்டத்தில் நானும் எழுந்தமானமாகத் தெரிவு செய்யப்பட்டேன்.
வெளிநாட்டுக்காரர்களைப் பார்த்தால் பப்புவா நியூகினிக் குழந்தைகள் அவ்வளவு பரவசமடைந்து விடுகிறார்கள். உருவ அமைப்பில் தங்களைப் போல் இல்லாத எந்த மனிதரைப் பார்த்தாலும் வியந்து, களிப்புற்று ஆர்ப்பரிக்கிறார்கள். தாங்கள் இதுவரை பார்த்திராத, தங்களை ஒத்த ஒரு விசித்திர விலங்கைப் பார்ப்பதுபோல் ஆச்சரியப்படுகிறார்கள். நாங்கள் வீதியில் இறங்கிவிட்டால், போகும் இடமெல்லாம் சிறுவர்களின் பிரசன்னமும், பிரிய உபசாரங்களும் அளவின்றிக் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. வேண்டாம் என்றாலும் நம்மைப் பின் தொடர்ந்துகொண்டேயிருக்கிறார்கள் குழந்தைகள். நமக்கு அது ஆரம்பத்தில் குதூகலமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவர்கள் நம்மைத் துரத்திக்கொண்டு வருவது நமக்குள் ஒருவகை பயத்தை முளைக்கப்பண்ணி விடுகிறது.
வெள்ளைக்காரனாக இருந்தால் ‘ஹலோ வைட் மேன், வைட் மேன்…” என சத்தம் வைத்துக்கொண்டு வருவார்கள். வெளிநாட்டுக்காரனுக்கு பிஜின் மொழியில் ‘வைட் மேன்’ என்ற சொல்தான் உண்டு. ஆனால் வெளிநாட்டுக்காரன் என்னைப் போன்ற ‘சொக்கலேட்’ நிற தெற்காசிய மனிதனாக இருந்துவிட்டால் என்ன செய்வது? தங்களைத் தவிர இவ்வுலகில் சிருஷ்டிக்கப்பட்ட அத்தனை மனிதர்களும் வெள்ளைத் தோலுடையவர்கள் என்றே தீர்மானமாக நம்பியிருக்கிறது இந்தச் சமூகம்.
சரி, அப்படியெனில் என்னை பப்புவா நியூகினியில் எப்படித்தான்அழைக்கிறார்கள்? ‘வன் டோக் (one tok)’. வன் டோக் என்றால் தங்களில் ஒருவன், தங்களைப் போன்ற ஒருவன் என்று பொருள். அதாவது one tok (talk) – ஒரே மொழியைப் பேசுபவன்.
உலகில் இருக்கும் மொழிகளில் மிகவும் குதூகலமானதும், சுவாரசியமிக்கதுமான மொழி பிஜின்தான் என்பது என் அபிப்பிராயம். இம்மொழியைக் கற்றுக் கொள்வது அப்படியொன்றும் கடினமானதல்ல. பிஜின் பேசப்படுவதைக் கேட்டால் ஆங்கிலத்தை இலக்கண சுத்தமற்று உளறிக்கொட்டுவது போலிருக்கும். அதன் அடிப்படை உருவாக்கல் விதியே அதுதான். ஆங்கில இலக்கண வரைமுறைகளை உடைத்து அல்லது இலகுவாக்கி உருவாக்கப்பட்ட மொழி அது.
பிஜின் மொழியில் வார்த்தைகள் ஒவ்வொன்றும் படு சுவாரசியமாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. பிரதான மூலம் ஆங்கிலம் என்றாலும், அவ்வார்த்தைகளைப் பயன்படுத்தும் விதம் வினோதமாக இருக்கிறது.
உதாரணத்திற்கு இதைக் கவனியுங்கள். ‘நிர்வாணம் அல்லது அம்மணம்’ என்பதை பிஜின் மொழியில் ‘ass nothing’ என்பார்கள். விஷயம் புரிகிறதா? ஆண் முதலாளி என்றால் ‘பொஸ் மேன்’. பெண் முதலாளி என்றால் ‘பொஸ் வுமன்’ அல்ல, ‘பொஸ் மேரி’. அதாவது ஆண் என்றால் மேன், பெண் என்றால் மேரி. ஐ லவ் யூ என்றால் ‘mi laikim yu thru’.
இப்படி பிஜின் முழுவதும் ஆங்கிலத்தைப் பிய்த்துப் பிய்த்துப்
போட்டிருப்பார்கள் பப்புவாக்காரர்கள்.
அப்போது அருகில் வந்த செஞ்சூப் என் கண்களையே வெறித்துக் கொண்டு நின்றாள். கண்ணிமைகளைஅசைக்காமல், கருமணிகளை உருட்டாமல், நேர்க்கோட்டில் வழுக்காமல் நின்றது அவளுடைய ஆறு வயதுப் பார்வை.
எதையோ கேட்கத் தயாராகிக்கொண்டிருப்பது போல் புருவங்கள நெளிந்தன.
எங்களைச் சுற்றி சுமார் மூன்னூறு பேர் கூடியிருந்தார்கள். அவற்றில் நானும் இன்னும் இரண்டு பேரும்தான் வெளிநாட்டுக்காரர்கள். மற்ற அத்தனை பேரும் ஊர்க்காரர்கள். அவற்றில் ஒப்பாரி வைக்க வந்தவர்களே ஐம்பது பேரைத் தாண்டும். எனக்கருகில் நின்றுகொண்டிருந்த செஞ்சூப்பின் சிரத்தில் கையை வைத்து, சுரத்தைப் பதித்து “ஹலோ…” என்றேன். குழந்தைக்கோ என்னைப் பார்த்துப் புன்னகைக்க வேண்டுமென்று தோன்றவில்லை. முகத்தில் மெலிதாய் சிறு சிலம்பன்கூட இல்லை. மீண்டும் “ஹலோ” என்று அழைத்து அவளை கைகளுக்குள் இட்டுப் பூட்டிக் கொண்டேன். அப்பொழுதுதான் அவளிடமிருந்து முதல் புன்னகை வளையம் வளையமாகக் கழன்று விழுந்தது.
எத்தனை வசீகரமான புன்னகை! புன்னகைக்குக் கூடவா வண்ணமுண்டு? முகம் முழுவதும் வெடித்துச்சிதறிய ஈர்ப்பின் இதழ்களை பெரும் பரபரப்போடு அள்ளிக்கொண்டேன். கைக்குள் கிறங்கிக்கொண்டிருந்த செஞ்சூப்பின் கன்னங்களில் மொத்து மொத்தென்று முத்தம் வைத்தேன். என்னுடைய அணைப்பு சௌகரியமாய் இருந்ததோ என்னவோ, அவளும் கைகளுக்குள் அப்படியே அமிழ்ந்து போனாள். என் கைகளைத் தொட்டுப் பார்த்தாள். என் கன்னத்தைத் தடவிப் பார்த்தாள். தலைமுடியை சிறுசிறு கற்றைகளாகக் கோதி கையில் வைத்து ஸ்பரிசித்து ரசித்தாள். அத்தனையும் அவளுக்குப் புதுமையாக இருந்தது. அப்போதுதான் அருகில் வந்த எடி “இவள்தான் இத்தனை துன்பங்களுக்கும் காரணம் அமல்! இப்போது அப்பா. இன்னும் எத்தனை உயிர்களை எடுக்கப் போகிறாளோ தெரியவில்லை…” என்றான்.
எனக்குப் பகீரென்றிருந்தது. தேவதையை ஒத்த, எதுவுமறியாத இந்த ஆறு வயது செஞ்சூப்பா இம்மரணத்திற்குக் காரணம்? என்ன சொல்கிறான் இவன்? எடியை உக்கிரமாகப் பார்த்தேன். கலங்கிய கண்களோடு முன்னாலிருந்த பெட்டிக்குள் வளர்த்தப்பட்டிருந்த தன் தந்தையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். எடி, சாமுவேலின் தம்பி. அன்று இறந்த பெரியவரின் குடும்பத்தில் கடைசியாகப் பிறந்த பிறவி. எங்கள் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்க்கிறான்.
செஞ்சூப் பற்றி எடி சொன்னதைக் கேட்டதும் என்னுடைய நெஞ்சுக்குள் காட்டுத் தீ விளாசியது. வார்த்தைகள் அடித்தொண்டையில் தீப்பற்றிப் புகைந்தன. அவன் எப்படி ஒரு குழந்தைக்குப் போய் கொலைகாரிப் பட்டம் கொடுக்க முடியும்? இப்படி என் கரங்களுக்குள், உலகின் எவ்வித ஈனப் பராக்கிரமங்களையும் புரிந்துகொள்ளத் தெரியாதவளாய், தனக்கென்ற ஒரு தூய அண்டத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் இக்குழந்தை மேல் அப்படியொரு பெரும் பழியைப் போடுவதற்கு எவ்வளவு பெரிய குரூர மனம் வேண்டும்? குழந்தைகள் மேல் பழிபோடும் ஒரு சமூகம் உருப்படவா போகிறது?
“எடி, கேக்கிறன் எண்டு குறை நினைக்க வேண்டாம்… நீங்கள் சொன்னது எனக்குப் புரியவில்லை.”
“ஆறு மாதங்களுக்கு முன்னர் செஞ்சூப்பை எங்களுக்கு அடுத்த கிராமத்திலுள்ள சில பையன்கள் கற்பழித்துப்போட்டான்கள், அமல்.”
எனக்கு பக்கென்றிருந்தது. மூச்சு அடைத்தது. தொண்டைக் குழியில் அமிலம் கொட்டியதுபோல் புகைந்தது. தலை சுற்றிக்கொண்டு வர, எடியின் கைகளைப் பற்றிக்கொண்டு அவனுடைய கண்களை இறும்பூதுபோல் பார்த்தேன்.
“செஞ்சூப்பையா கற்பழித்தார்கள்? அவளுக்கு ஆறு வயதுதானே ஆகிறது? என்ன நரகல் பிடித்த ஊர் ஐயா இது?”
“ஓமோம்…” எடி விசித்து விசித்து அழுதான்.
மனிதர்கள் எத்தனை குரூரம் பிடித்த ஈனப் பிறவிகளாகப் பிறந்து தொலைத்திருக்கிறார்கள். இப்பிரபஞ்சத்தில் வாழ்வதற்குத் தகுதியற்ற ஒரே விலங்கு மனிதனாகத்தான் இருக்க முடியும்.
“எடி, என்ன சொல்றீர்?”
“ஓம் அமல். செஞ்சூப்பை இரண்டு நாளா காணல. கடைசில குற்றுயிரா அந்தப் பக்கம் இருக்கிற ஒரு பத்தைக்குள்ள இருந்து கண்டு பிடிச்சம். பிறகு மவுன்ட் ஹெகன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் ஒரு மாதிரி பிள்ளைய காப்பாத்திட்டம். அதுக்கு பிறகுதான் அந்த ஊருக்கும் எங்கட ஊருக்கும் இடையில இந்தப் பெரும் பகை உருவாகினது…”
“பகையா…?”
“ஓமோம். இந்த சம்பவத்துக்கு புறகு எங்கட ஊர்க்காரனுங்க அந்த ஊருக்குள்ள புகுந்து ரெண்டு பேர வெட்டினானுங்க. அதுக்குப் பழிவாங்கலா இப்ப எங்க அப்பாவ போட்டிருக்கிறானுங்க அந்த தாயோழிங்க. நேத்து அவங்க ஊருக்குப் பக்கத்தில இருக்கிற ஆத்துக்குக் குளிக்கப் போன மனுசன வழில மறிச்சு வெட்டியிருக்கிறாங்கள். வெட்டினது மட்டுமா… கால, கைய தனித்தனியா தறிச்சு ஒரு பெரிய பையில போட்டு, கட்டி, பொடிக்கு பக்கத்தில வச்சிருந்தாங்க. அப்பாட இறுதிச் சடங்கு முதல் முடியட்டும்! ஊரோட கொழுத்துறம்…”
பப்புவா நியூகினி, பழங்குடி இனக்குழுக்களுக்கிடையிலான மோதல்களுக்கு பெயர் போன நாடு. அதுவும் பப்புவாவின் மத்திய மலைப்பிரதேச மாகாணமாகிய ‘சதேர்ன் ஹைலாண்ட்’ இதற்கு மிகவும் பிரபல்யம். ஒவ்வொரு நாளும் சாதாரணமாக இரண்டிலிருந்து மூன்று ஊர்களில் சண்டை நடக்கிறது. வீடுகள் பற்றியெரிகின்றன. மனிதர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பெண்கள் வன்புணரப்படுகிறார்கள். பன்றிகளும் ஏனைய ஜீவனோபாயச் சொத்துக்களும் களவாடப்படுகின்றன. மக்கள் உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு அருகிலிருக்கும் கிராமங்களை நோக்கி இடம் பெயர்ந்து ஓடுகிறார்கள். ஒரு வருடத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் தாக்கப்பட்டு, இடம்பெயர்ந்த ஒரு கிராமத்தையும் எனக்குத் தெரியும். இப்படி வன்முறையும், கொலைகளும் மலிந்து, சதா குருதியில் பசபசத்துக்கொண்டு கிடக்கிறது பப்புவாவின் ஹைலாண்ட் மாகாணம்.
இங்கு நடக்கும் அத்தனை பழங்குடியினச் சண்டைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்னவென்று தேடிப்பார்த்தால் சுவாரசியமான பதில் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் பதியப்படும் தொண்ணூற்றைந்து வீதத்திற்கும் அதிகமான மோதல்களுக்கும் நிலம், பெண், பன்றி ஆகிய மூன்று சொத்துக்கள் மீதான பிணக்குகள்தான் காரணம் என்கிறது தேசியப் புள்ளி விபரம். ஆக, பப்புவாவில் அதிகமான மனிதர்கள் தங்களுடைய இம்மூன்று சொத்துக்களையும் தங்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகவே சதா உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
பழங்குடிகள் என்றாலும் அவர்களுடைய போராட்ட மரபுமுறை இப்போது பெரும் வரலாற்று மாற்றத்தைக் கண்டிருக்கிறது. காட்டுக் கத்தி, வில்-அம்பு, ஈட்டி, கூரிய கற்கள் எனப் போரிட்ட மக்கள் இப்பொழுது ஏகே 47, இயந்திரத் துப்பாக்கிகள், மோட்டார்களோடு போராடுமளவிற்கு முன்னேறியிருக்கிறார;கள். இந்தோனேசிய – மேற்கு பப்புவா எல்லை வழியாக இந்த ஆயுதக் கடத்தல்கள் சுபமாக நடந்தேறுகின்றன. வெறும் முன்னூறு டொலர்களுக்கு ஒரு ஏகே 47 கிடைக்கிறது. நானூறு என்றால் மோட்டார். ஐம்பது டொலருக்கு ஒரு கைக்குண்டை வாங்கலாம். நிலைமை இப்படியிருக்கும்போது இனியெதற்கு அம்பும் ஈட்டியும்?
எடி சொல்லி முடித்ததும் என் கைகளுக்குள் சுருண்டுவிட்ட செஞ்சூப்பைத் தூக்கியெடுத்து மீண்டுமொருமுறை முத்தம் வைத்தேன். மறுபடியும் முகம் விகசித்துச் சிரித்தாள். அவளை அப்படியே வீட்டிற்கு அள்ளிக்கொண்டு வந்துவிட வேண்டும் போல் இருந்தது எனக்கு.
அன்று மாலை நான்கு மணிக்கு எடி-சாமுவேல் சகோதரர்களுடைய தகப்பனாரின் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊரின் ‘வெள்ளை ஆமி’ பாதுகாப்பு வழங்கியது. எனக்கு முன்னால் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு ‘போராளி’ இடுப்பில் இரண்டு கைக்குண்டுகளோடு நடந்துகொண்டிருந்தார். நான் சிரித்தும் அவர் சிரிக்கவில்லை. முகத்தை அம்மிக்கல் போல உர்ரென்று வைத்திருப்பதில் அவருடைய ஒட்டு மொத்தப் பிரயத்தனமும் இருந்தது.
நாங்களும் இடுகாடுவரை போய் எங்கள் இறுதி அஞ்சலியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தோம்.
அன்று முழுவதும் மனம் கொதித்துக்கொண்டிருக்கும் ஜலம் போல இரைந்துகொண்டே கிடந்தது. மனித உயிருக்கும், வாழ்க்கைக்கும் துளிக்கூட மதிப்பில்லாத ஒரு தேசத்தில் உயிரைக் கொண்டுவந்து போட்டிருப்பது பற்றி மனம் அரற்றியது. அன்றைய இரவு முழுவதும் செஞ்சூப் கண்களுக்குள்ளேயே தூங்காமல் கேள்விகள் கேட்டுக்கொண்டு திரிந்தாள். அவளுடைய ஒவ்வொரு அசைவும், நெளிவும் எனக்குள் ஆழமாய்ப் பதிந்துவிட்டதை உணர்ந்தேன். அவளுக்கு நடந்த அக்கொடூர சம்பவம் பற்றிய யோசனையும், கற்பனையும் அடிக்கடி மேலெழுந்து வரும்போது அடிவயிற்றில் அமிலம் கொட்டுவது போலிருந்தது.
இது நிகழ்ந்து சரியாக ஒரு கிழமை தீர்ந்துவிட்ட ஒரு நாளில், காலைத் தேனீரோடு தோட்டத்தில் இருக்கும் சீமென்டுக் கட்டில் அமர்ந்துகொண்டிருந்தேன். பகல் கொஞ்சம் கொஞ்சமாக இரவிடம் விடைபெற்று முடித்திருந்தது. குளிர் தோல்களில் விழுந்து நரம்புகளில் கசிய, தேநீரை உறிஞ்சினேன். கிழக்கு மலையைப் போர்த்தியிருந்த பனிப்புகையை ஊடறுத்து சூரிய ஒளி பூமியின் மேல் இறங்கியது. தேகத்திலும் இதமாய் விழுந்தது. தோட்டத்தின் கீழ்ப்பக்கமுள்ள சிறிய பள்ளத்தாக்கில் கேட்கும் நீரோடையின் சலசலப்பு அன்று கொஞ்சம் அதிகமாகக் கேட்டது. சலசலப்பைப் பிடித்து, அதன் தெய்வீக சுரத்தில் மனம் முயங்க ஆரம்பித்தபோதுதான் எடியின் தொலைபேசி அழைப்பு வந்தது.
இரண்டு வாரங்களாக விடுமுறையில் இருக்கும் எடி இன்று வேலைக்குத் திரும்ப வேண்டும். முடியாது என்று சொல்லப் போகிறானே என்கின்ற முன்தீர்மானத்துடனேயே தொலைபேசியை எடுத்தேன். அப்போதுதான் தன்னுடைய அண்ணன் சாமுவேல் பக்கத்து ஊர் எதிரிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தியைச் சொன்னான்.
மாட்டுக்கொம்பு விலாவில் பாய்ந்தது போலிருந்தது. கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. எடி பேசிக்கொண்டே போனான். எனக்கு வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை. மொழி இரைச்சலாகக் கேட்கத் தொடங்கிற்று. தொலைபேசியை முன்னறிவிப்பின்றி நிறுத்திவிட்டு முன்னாலுள்ள பள்ளத்தாக்கில் என் சினம்பிடித்த கவனத்தைக் கொட்டினேன். மனம் பெரும் பளுவாய் மாறி அழுத்தியதில் தேகம் வலித்தது. துயரமும் பயமும் மாறி மாறி தலைக்குள் மோதித் தீப்பிளம்பாய் வெடித்தன.
எடி வீட்டில் ஒரே வாரத்திற்குள் இரண்டு மரணங்கள். முதலில் தந்தை, இப்பொழுது தமயன். இரண்டும் வன்மத்தோடு, குரூரமாக செய்யப்பட்ட கொலைகள். இரண்டு பேரையும் கொன்றது ஒரே கும்பல். காரணம், அடுத்தடுத்து செய்யப்பட்ட கொலைகள். அவர்கள் செய்த கொலைக்கு இவர்கள் பழி தீர்த்தார;கள். இவர்கள் தீர்த்த பழிக்கு மீண்டும் அவர்கள் பழி தீர்த்திருக்கிறார்கள். பழி பழி பழி…
குரோதம் என்பது அத்தனை இலகுவாக சமரசம் செய்துகொள்ளக்கூடிய விடயமல்ல. பழிதீர்த்தல் என்பது ஒரு சம்பவத்தோடு முடிந்துவிடும் ஒற்றைப் பிரதிபலனுமல்ல. அது பல சம்பவங்களின் தொடர் சங்கிலியாக நீண்டுகொண்டே போகக்கூடியது. ஆரம்பித்துவிட்டால் முடிவை எவராலும் அனுமானிக்க முடியாது. அது ஒருபோதும் சுபமான முடிவை நோக்கி நகராது. இன்னும் இன்னும் புதுப் புதுக் காயங்களையும் வன்மத்தையும் உண்டு பண்ணிக்கொண்டேயிருக்கும். உயிர்கள் செத்து செத்து சவக்குழிகள் நிறையும். பழிதீர்த்தலின் ஏக இச்சை தன்னை ஒருபோதும் திருப்திப்படுத்திக்கொள்வதில்லை. குரோதமும், பழிக்குப் பழி வாங்கும் மனநிலையும் மனித குலத்தின் மிகக் கொடிய நோய்கள். ஒருமுறை தொற்றிக்கொண்டுவிட்டால் அதை அக்குலத்தின் கடைசி மனிதனால்கூட சொஸ்தப்படுத்த முடியாது.
ஓஹ் எடி, உன் வம்சத்தை எண்ணி நான் கண்ணீர் வடிக்கிறேன்.
இதே மாவட்டத்தில், இப்படி சுமார் 30 வருட குரோதத்தோடும், பழிவாங்க வேண்டும் என்கின்ற இச்சையோடும், உயிர் வேட்டைக்காக அலைந்துகொண்டிருக்கும் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மனிதர்களை எனக்குத் தெரியும். அவற்றில் ஒரு ஊருக்கு சென்ற மாதம் போயிருந்தேன். தங்கள் எதிரிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கின்ற வைராக்கியத்தோடு இருக்கும் இளைஞர்களில் ஒருவனைப் பிடித்து ”எதற்காக அந்த ஊர்க்காரனோடு சண்டை போடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அவனிடமிருந்து கிடைத்த பதில் வெற்றுத் தலையில் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது.
“அது எங்கட அப்பப்பா காலத்துப் பகை. எங்க அப்பாட சந்ததியும் சண்ட போட்டிச்சு. நாங்களும் போடுறம். இந்தப் பகைக்கான சரியான தொடக்க காரணம் என்ன எண்டு தெரியல. ஆனா இந்த வருசம் மட்டும் பத்துக்கு அதிகமான எங்கட சொந்தக்காரங்கள வெட்டிக் கொண்டிருக்கிறாங்கள்… இருபது பொம்பிளைகள கற்பழிச்சிருக்கிறாங்கள். எங்களால முடியாம போனாலும் எங்கட பிள்ளைகள் அந்த ஊர்க்காரங்களுக்கு நல்ல பாடத்த புகட்டுவாங்க. அப்பதான் எங்க குலத்தின்ட பெரும் சித்தம் நிறைவேறும்…”
அன்று மீண்டும் நானும் நண்பர்களும் கையில் மலர் வளையத்தோடு எடியின் வீட்டுக்குப் போனோம். சாமுவேலின் உடலை வெள்ளைத் துணியால் சுற்றி, மரப்பெட்டியில் வைத்திருந்தார்கள். எடியிடம் ஏன் முகத்தைக்கூட பார்க்க முடியவில்லை என்றபோதுதான் சாமுவேலின் முகம் இடித்து சிதைக்கப்பட்டிருக்கின்ற பரிதாபத்தைச் சொன்னான். எடி அதைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவன் கண்களில் ரத்தம் கட்டியது. அப்படியொரு நிலைக்கு அவனை ஆளாக்கியிருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.
சாமுவேலின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு எங்களுக்காக வெளியில் போடப்பட்டிருந்த கதிரைகளில் வந்து அமர்ந்தோம். சுற்றுமுற்றும் அளந்து செஞ்சூப்பைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்பப்பாவின் பிரிவைத் தாங்கிக்கொண்ட அவளால் தகப்பனாரின் பிரிவை நிச்சயம் தாங்கிக்கொண்டிருக்க முடியாது. இப்பேரிடரை எப்படிச் சமாளித்துக்கொள்ளப் போகிறாள் என்று யோசித்தபோது பயங்கரமாக இருந்தது. கடவுளே, இந்த வயதில், இவளுக்கு இத்தனை துயரங்கள் அதிகமில்லையா?
தூரத்தில் செஞ்சூப்பைக் கண்டுபிடித்தேன். பார்ப்பதற்கு இம்முறை இறப்பு பற்றிய ஸ்மரணை அவளுக்கு வந்து விட்டது போலிருந்தது. அழுது புரளும் தன் தாயின் இடுப்புத் துணியைப் பிடித்தபடி கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தாள். அவளைக் கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் என்னைக் கவனிக்கவில்லை. முதல் சொட்டு கைகளில் விழுந்து குளிர்ந்தபோதுதான் கண்களை ஒற்றிக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது எனக்கு.
வாழ்க்கையில் ஒரு தடவையாவது சாவு வீட்டில் அழுது வடித்திருக்கிறேன் என்று இப்பொழுது என்னால் சொல்ல முடியும்.
எடியை அவனுடைய தோளில் அழுத்தி, மெதுவாக இழுத்து, என் நெஞ்சில் சாய்த்தேன். மறுபடியும் வெடித்து அழுதான். துயரத்தைவிட தன்னிடமிருந்த இயலாமையின் பரிதவிப்பு அவனைப் பிழிந்து வாட்டியது. “ஒட்டுமொத்த ஊரையும் கொழுத்துறன் பாருங்கள் அமல்…” என குரலெடுத்து அழுதபோது ஒட்டு மொத்த இளைஞர் கூட்டமும் எழுந்து நின்று ஏதோ சொல்லிக் கூவியது. அப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றே எனக்குத் தோன்றவில்லை. தவிர தலைக்குள் பயத்தின் ஆயிரம் கால்கள் ஊர ஆரம்பித்தன. எடியின் கர்ஜிப்பு இப்பொழுதே அடுத்த கட்ட யுத்தத்தை ஆரம்பித்துவிடும் போலிருந்தது.
மனிதர்களுக்குள் பழிவாங்கல் என்ற மனநிலை எவ்வளவு பெரிய போதையாக மாறிக்கொண்டு விடுகிறது! தங்களுடைய வழியும், மார்க்கமும், போக்கும் மட்டும்தான் அறம் மிக்கது என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம்தான் பழிவாங்கல் என்ற அபத்தத்தை எவ்விதக் குற்றவுணர்ச்சியும், எதிர்காலம் பற்றிய அக்கறையுமின்றி தேவையான நேரமெல்லாம் கையில் எடுத்துக்கொள்கிறது. வாளெடுத்தவனால் தன் வாளை ஒருபோதும் கிடப்பில் போட முடியாது என்பது அண்டம் அனுபவித்துக் கற்றுக்கொண்டுவிட்ட நீதி. அதை ஒரு முறை கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டால், பின்னர் அது கைகளிலேயே ஒட்டிக்கொண்டு விடுகிறது. பப்புவா நியூகினி என்கின்ற ஒரு அழகிய தேசம் அல்லல்பட்டுக்கொண்டிருப்பதற்கான முக்கியக் காரணம் இதுதான்.
அன்றிலிருந்து எடியை நான் காணவேயில்லை. அவனும் அலுவலகத்திற்கு வருவதில்லை. இன்னுமொரு தரப்போடு போர் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் எடியை வேலையிலிருந்து நீக்கியிருந்தது எங்களுடைய நிறுவனம். எடியின் குடும்பத்தில் ஒவ்வொன்றாக நிகழ்ந்துகொண்டிருக்கும் மரணம், எப்போது வேண்டுமானாலும் எடியின் குரல்வளையிலும் கோடரியைச் சொருகலாம். இதைப் புரிந்து வைத்திருந்த எடி மகிழ்ச்சியாக தன் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போனதாக அலுவலகத்தில் சொன்னார்கள். நான் அவனைக் காணவில்லை. காணாததும் தேவலை என்றே தோன்றிற்று.
எடியை நினைக்கும் போதெல்லாம் உடல் சட்டென்று குளிர்ந்துவிடும். அப்பாவையும் அண்ணனையும் பல்லுக்குப் பல்லென கொலைக்களத்தில் தொலைத்துவிட்ட அவனுடைய வாழ்க்கையின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது? இன்னும் எத்தனை பேரை இழப்பதற்கு எடி தயாராக இருக்கிறான்? இனி அவனிடம் எஞ்சியிருப்பதுதான் என்ன? அவன் மட்டும்தான். கூடவே அவனை ஒட்டிக்கொண்டிருக்கின்ற பெண்களும் குழந்தைகளும்.
“இனி வரப்போற என்ட அத்தனை சந்ததியும் ஆயுதம் ஏந்தித்தான் ஆகவேண்டும் அமல். தலைமுறை தலைமுறையாக என்ட குடும்பம் பக்கத்து ஊரோடு யுத்தம் புரியத்தான் வேணும். இது இனி ஒருகாலும் முடியப்போறதில்ல. இது காலங்களைத் தாண்டித் தொடரப் போகுது. என்ட அப்பாவ, அண்ணன, என்ட குடும்பத்த அழிச்சவன்ட சமூகத்த என்ட சந்ததி கூட்டோட அழிக்கும். அது சத்தியம்!”
அன்று சாவு வீட்டிலிருந்து புறப்படும்போது எடி கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் அவை. கேட்கும்போதே உள்ளுக்குள் ஏதேதோ செய்தது. என்னிடம் பதிலுக்குச் சொல்வதற்கு அதிகம் இருக்கவில்லை. “பத்திரமா இரு… செஞ்சூப்ப கவனமா பாத்துக்க…” என்று சொல்லிவிட்டு வந்தேன்.
…
மூன்று வாரங்கள் கழித்து நேற்றுக் காலை என்னுடைய வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்தபடி தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். அருகிலிருந்த தொலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தேன். எனக்கு முள்ளந்தண்டில் குளிர்நீர் கொட்டியதுபோல் உடல் ஜில்லென்று நடுங்கிற்று. எதற்காக மீண்டும் எடி அழைக்கிறான்?
தொலைபேசியைப் பிரித்து, அதனுள்ளிருந்த சிம் கார்டை உருவி, பள்ளத்தாக்கில் வீசிவிட்டு அறைக்குள் போனேன். தலை பிரடிப்பக்கமாக வலித்தது.
இதற்கு முதல் ஒரு தடவைகூட நான் இப்படி அதிகாலையிலேயே ‘பேர்னோ’ அருந்தியதில்லை.
***