சென்னை புத்தக விழாவில் உள்ள எழுத்தாளர் முற்றத்தில் வருகின்ற 18-ஆம் தேதி சனிக்கிழமை மாலை சரியாக ஏழு மணிக்கு எழுத்தாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெறுகிறது. என் எழுத்தை அறிமுகம் செய்து நண்பர்கள் பேசுகிறார்கள். நானும் என் எழுத்து பற்றி விரிவாகப் பேசுகிறேன். அதில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் உங்கள் விருப்பம், உங்கள் இஷ்டம். ஆனால் கலந்து கொள்ளாதவர்களை என் நட்புப் பட்டியலிலிருந்து விலக்கி விடுவேன். அதாவது, முகநூல் நட்புப் பட்டியல், வாட்ஸப் பட்டியல். அது மட்டும் அல்லாமல் என் தொலைபேசியிலிருந்து உங்கள் எண்ணை ப்ளாக் செய்து விடுவேன்.
ஏன் இவ்வளவு கடுமையாகவும் மூர்க்கமாகவும் சொல்கிறேன் என்றால், எழுத்தாளர் முற்றத்தில் எழுத்தாளரையும் எழுத்தாளரை அறிமுகப்படுத்துபவரையும் தவிர ஒரு ஆளையும் பார்க்க முடியவில்லை. இது ஒரு அவமானம். சென்ற ஆண்டு ஒரு நண்பரின் புத்தக வெளியீட்டு விழா இதே எழுத்தாளர் முற்றத்தில் நடந்தது. அஜயன் பாலா போன்ற சில நண்பர்கள் என்னோடு பேசினர். அப்போதும் ஐந்து பேர்தான் வந்தார்கள். என்னை முதலில் பேசச் சொன்னதால் நான் முதலில் பேசினேன். ஐந்து பேர் கேட்டார்கள். விடியோ கூட எடுக்கவில்லை. நான் பேசி முடித்ததும் அஜயன் பாலா பேசும் போது முப்பது பேர் வந்தார்கள்.
என் பேச்சை ஒருத்தர் கூட கேட்க வேண்டாம். வர வேண்டாம். ஆனால் முகநூலில் ப்ளாக் செய்வேன். வாட்ஸப்பில் ப்ளாக் செய்வேன். தொலைபேசியிலும் ப்ளாக் செய்வேன்.
இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. இதற்காக நான் யாரையும் செங்கல்பட்டிலிருந்தோ மதுரையிலிருந்தோ வரச் சொல்லவில்லை. வினித் என்ற நண்பர் ஊருக்குப் போகிறேன் என்று சொல்லி விட்டார். இப்படி பொங்கலுக்காக ஊருக்குச் சென்றவர்களையும் விட்டு விடுகிறேன். கல்யாணத்துக்குச் செல்ல வேண்டியவர்களையும் விட்டு விடலாம்.
நான் ரொம்ப ரொம்ப மூர்க்கமாக இதை எழுதுவதாகவே எனக்கும் தோன்றுகிறது. ஆனால் ஒரே ஒரு கணம், என் நிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள். சென்ற ஆண்டு நான் பேசுகிறேன். ஐந்து பேர் கேட்கிறார்கள். விடியோ எடுத்தாலாவது பலரையும் சென்றடையும் என்று நினைக்கலாம். அதுவும் இல்லை. என்னை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்த – அந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியின் நாயகரை – அந்தப் புத்தகத்தை எழுதிய என் நெருங்கிய நண்பரை நான் முகநூலிலும், தொலைபேசியிலும், வாட்ஸப்பிலும் ப்ளாக் செய்து ஒரு ஆண்டு ஆகிறது. எத்தனையோ பெரிய இடத்து சிபாரிசுகள் வந்தன. நான் கேட்கவில்லை.
எழுத்தாளன் அவமானப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். என் புத்தகங்கள் 200 பிரதிகள்தான் விற்கின்றன. கவலையே இல்லை. 20 பிரதியே விற்கட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது பதிப்பக நண்பர்கள் கவலைப்பட வேண்டிய விஷயம். ஆனால் என்னை ஒரு கூட்டத்தில் பேச அழைத்து விட்டு, ஆட்கள் வரவில்லை நண்பர்கள் வரவில்லை என்றால், அதை நான் மன்னிக்க மாட்டேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பாரதி புத்தகாலய நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள். புத்தக விழாவின் அர்த்தமே என்னவென்றால், எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்கலாம் என்பதுதான். அதற்குக் கூட வாசகர்கள் தயாராக இல்லையெனில் அது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியது அல்ல.
ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தப் புத்தக விழா என் கண்களைத் திறந்த ஒரு நிகழ்ச்சி. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, ஒரு கடிதம்? சாரு, நான் ஒரு டிரைவர். என் சம்பளம் 10,000 ரூ. நான் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நூறு ரூபாய் சந்தா அனுப்பவா? இப்படிக் கடிதம் எழுதிய வாசக நண்பர் கண்ணன் நேற்று வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அழுது விட்டார். எனக்கும் கண் கலங்கி விட்டது. இதுவே அமெரிக்காவாகவோ ஃப்ரான்ஸாகவோ இருந்தால் கலங்காது. அங்கே division of labourஇன் வீர்யம் இல்லை. இங்கே ஒரு டிரைவர் அதிக பட்சம் தினத்தந்திதான் படிக்கலாம்; படிக்க முடியும். அதுதான் சாத்தியம். ஆனால் கண்ணன் சாரு நிவேதிதாவைப் படிக்கிறார். அதனால்தான் இரண்டு பேருக்குமே கண் கலங்கி விட்டது. இங்கே உள்ள சமூக நிலைமை அப்படி.
அதேபோல் சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு நண்பரும் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருடைய பண்பையும் பணிவையும் வார்த்தைகளில் விளக்க இயலாது. அவர் தன்னுடைய முகவரியைச் சொல்ல முற்பட்ட போது பக்கத்தில் இருந்த ராம்ஜி அவர் முகவரியை மனப்பாடமாகச் சொன்னார். நான் அதிர்ந்து விட்டேன். பிறகு ராம்ஜியே விளக்கம் சொன்னார். மனனம் ஆகும் அளவுக்கு அந்த நண்பர் என் புத்தகங்களை வாங்கியிருக்கிறார். வாரம் ஒருமுறை ஒரு நண்பருக்கு விலாசம் எழுதி புத்தகப் பார்சல் எழுதினால் விலாசம் மனனம் ஆகி விடும்தானே? நீங்கள் யோசிக்கலாம்; ஒரு புத்தகத்தை ஒருமுறைதானே வாங்க முடியும்? ம்ஹும். பழுப்பு நிறப் பக்கங்கள் 15 பிரதி. எப்போதெல்லாம் ஒரு சீரிய மாணாக்கரையோ நண்பரையோ சந்திக்கிறாரோ அவருக்கெல்லாம் ஒரு ஆர்டர்; ஒரு பார்சல். எங்களிடம் அதிக புத்தகங்களை வாங்கியவர் அவர்தான் என்றார் ராம்ஜி.
ஈஸ்வரி வந்தார். ஈஸ்வரி பற்றி ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன். அவந்திகா ஒரு ஆன்மீகப் பயிற்சி வகுப்புக்காக பத்து நாள் வெளியூர் சென்றிருந்தாள். அப்போது பார்த்து எனக்கு டெங்கு ஜுரம் வந்து விட்டது. கூட பப்பு, ஸோரோ நாய்கள் வேறு. அப்போது எனக்கு மூன்று வேளையும் அன்னமிட்டு கவனித்துக் கொண்ட புண்ணியவதி இந்த ஈஸ்வரிதான். ஒரு நாள் ஈஸ்வரி கொடுத்தனுப்பிய உணவுப் பாத்திரத்தை (தூக்கு) என்னால் திறக்க முடியவில்லை. உள்ளே கஞ்சி இருந்தது. என் உடம்பில் பலம் இல்லை. ரொம்பக் கஷ்டப்பட்டு திறந்தேன். அதைச் சொன்ன பிறகு உணவை எடுத்து வரும் டிரைவரே பாத்திரத்தைத் திறந்தும் கொடுத்து விட்டுப் போவார். ஈஸ்வரியின் கணவரும் ஒரு அற்புதமான மனிதர். நேற்று இருவரும் வந்திருந்தார்கள். சென்ற ஆண்டு புத்தக விழாவில் ஈஸ்வரி நான் போவதற்கு முன்னதாகவே வந்து போய் விட்டார். ஆனால் ராம்ஜியிடம் எனக்காக மோர் கொடுத்து விட்டு வந்திருந்தார். இன்று பொங்கல் கொண்டு வந்து தருகிறேன் என்றார். அன்ன லட்சுமி.
இன்னொரு வாசகி. பெயரைக் குறிப்பிடலாமா என்று தெரியவில்லை. நார்த்தங்காயும் ஐந்து whiskas wet cat food sachetயும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். நார்த்தங்காய் தோட்டத்தில் பறித்தது. வாஸ்தவத்தில் நேற்று இரவு பூனைக் குட்டிகளுக்கு wet food கையிருப்பு இல்லை. நான் புத்தக விழாவிலிருந்து திரும்ப இரவு பத்து ஆகி விடும். என்ன செய்யலாம் என்றுதான் இணைய தளத்திலும் முகநூலிலும் எழுதினேன். நிறைய ஆலோசனைகள்தான் கிடைத்தன. தயிர் சாதம் கொடுங்கள் —-யிர் சாதம் கொடுங்கள் என்று. யோவ், எனக்கு அதற்கெல்லாமா நேரம் இருக்கிறது? ரெடிமேடாக இருந்தால் பாக்கெட்டைக் கிழித்துக் கொடுக்கலாம். அதற்கே முக்கால் மணி நேரம் போகிறது. காலையில் முக்கால் மணி நேரம். இரவு முக்கால் மணி நேரம். ஆனால் வளர்ந்த பூனைகளுக்கு dry cat food தான். குட்டிகள் ட்ரை உணவைச் சாப்பிடுவதில்லை. அதனால்தான் இந்த wet cat food. வேலை மெனக்கெட்டு கடைக்குப் போய் wet cat food வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த பூனைக் குட்டிகளின் இரவு உணவை கவனித்துக் கொண்ட அந்த வாசகிக்கு நன்றி.
சரண்யா என்ற வாசகி நீங்கள் handsomeஆக இருக்கிறீர்கள் சாரு என்று சொல்லி என்னோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். 25 ஆண்டுகளுக்கு முன்னால் நான் உண்மையிலேயே ஹேண்ட்ஸம்மாக இருந்தேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் அப்போது தினம்தினம் அதை என் நண்பர் ராகவன் தான் சொல்லிக் கொண்டிருந்தார்.
நண்பர் அதிஷாவை நான் என்றுமே மறக்க மாட்டேன். ஏனென்றால், என் சருமத்தைப் பராமரிக்க நான் செய்து கொண்டிருக்கும் காரியங்களை ஒரே ஒருவர்தான் அறிவார். ஆனால் அதிஷா அதற்கான அங்கீகாரத்தை அளித்தார். இது வேற லெவல் என்று ஆரம்பித்து அவர் சொன்னதையெல்லாம் இங்கே நான் சொன்னால் லஜ்ஜையாக இருக்கும். சிலர் இருக்கிறார்கள், ஏன் சாரு ரொம்ப டல்லா இருக்கீங்க என்றுதான் பேச்சையே ஆரம்பிப்பார்கள். இவர்கள் நிச்சயமாக ஸேடிஸ்டுகள். ஏனென்றால், அதற்கு ஐந்து நிமிடம் முன்னால்தான் சரண்யா போன்ற ஒரு வாசகி “நீங்க செம ஹேண்ட்ஸம் சாரு” என்று சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டு நகர்ந்திருப்பார். அப்புறம் வருவார் இந்த சேடிஸ்ட். ஏன் சாரு ரொம்ப டல்லா இருக்கீங்க?
ரொம்பப் பேர் என்னிடம் வந்து நீங்கள் அராத்துவைத் தூக்கி விடுகிறீர்கள் என்பார்கள். அவர்களெல்லாம் நாஸ்திகர்கள் என்கிறேன் நான். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தூக்கி விட முடியுமா? கல்லிலும் இருக்கும் தேரைக்கு உணவிடுபவன் அல்லவா இறைவன்? அப்புறம் எப்படி நான் அராத்துவைத் தூக்கி விட முடியும்? ஆனால் ஒருநாள் – ஒரே ஒரு நாள் – ஓ, அராத்துவை நாம் தூக்கித்தான் விடுகிறோமோ, இனி அந்த ஆள் பற்றி ஒரு வார்த்தை பேசக் கூடாது, திட்டக் கூட கூடாது. திட்டினால் இன்னும் ஏறி விடும் என்று நினைக்கிறாற் போன்ற ஒரு தருணம் வந்து விட்டது. கவனமாகக் கேளுங்கள். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் நானும் அராத்துவும் பதிப்பாளர்களும் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு ஜோடி. அந்தப் பெண் அந்தக் காலத்து சில்க் ஸ்மிதா போல் இருந்தார். அச்சு அசல். பயங்கரம். போதாக்குறைக்கு முண்டா பனியன். நான் தான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேனே, அதனால் எதிர்ப் பக்கம் இருக்கும் நியூபுக் லேண்ட்ஸில் அமர்ந்திருந்த ஸ்ரீனிவாசனையே பார்த்துக் கொண்டிருந்தேன். ராம்ஜி என்னை சார் என்று அழைத்த போது கூட ஸ்ரீனிவாசனிடமிருந்து கண்களை நகர்த்தால் என்ன ராம்ஜி என்றேன். ஆனால் மனசு பூராவும் பதற்றமாக இருந்தது. காரணம், ஜோடி அராத்துவின் புத்தகங்களில் தங்கியிருந்தது. அந்த “ஸ்மிதா” மட்டும் அப்போது பொண்டாட்டி நாவலை எடுத்து வந்து பில் போட்டிருந்தார்… அவ்வளவுதான் சேதி, அராத்துவை என் வாழ்க்கையிலிருந்தே நீக்கி விட்டிருப்பேன். என் நல்ல காலம், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஸ்மிதாவும் அவர் நண்பரும் ஒரு புத்தகமும் வாங்காமல் போய் விட்டார்கள். அப்பாடா என்று வாய் விட்டுச் சொல்லித் தொலைத்து விட்டேன். ராம்ஜி என்ன சார் அப்பாடா என்றாரா, நானோ உண்மை விளம்பி ஆயிற்றே? உண்மையைச் சொல்லி் விட்டேன்…
இன்றும் நேற்று போலவே மாலை நான்கு மணிக்கு வந்து விடுவேன். 18-ஆம் தேதி ஞாபகம் இருக்கட்டும்.