குட்பை மிஷ்கின்!

சைக்கோ making பிடித்திருந்தது. ஆனாலும் போலீஸை அவ்வளவு உபயோகமற்றவர்களாகக் காட்டியதை நம்ப முடியவில்லை. அது படத்தின் நம்பகத்தன்மையைக் கெடுத்தது. ஒரு மோப்ப நாயும் சிசிடிவியும் கொண்டு ஒன்றரை மணி நேரத்தில் பிடித்திருக்கக் கூடிய கொலையாளியை அவன் பல கொலைகள் செய்யும் வரை போலீஸால் பிடிக்கவே முடியவில்லை. படத்தில் நம்பகத்தன்மை இல்லாவிட்டால் படத்தோடு யாரும் ஒன்ற மாட்டார்கள். படம் படு தோல்வி அடைந்ததற்குக் காரணம் அதுதான். ஆனால் இது பற்றியெல்லாம் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.

ஆனால் இன்றுதான் சில நண்பர்கள் சொன்னதால் 1999-இல் எடுக்கப்பட்ட The Bone Collector படத்தைப் பார்த்தேன். உலகப் புகழ்பெற்ற வணிக சினிமா. அந்தப் படத்தைப் பார்த்து விட்டுத்தான் உங்களுக்கு குட்பை சொல்லத் தோன்றியது. இப்படியா ஒரு உலகப் புகழ்பெற்ற படத்தை அப்படியே கள்ளக்காப்பி அடித்து படம் எடுப்பார்கள்? தமிழில் கதையா இல்லை? படத்தின் கதையே போன் கலெக்டர்தானே? கொலையாளி ஏன் கொலை செய்தான் என்பது மட்டும்தான் இரண்டு படத்துக்கும் வித்தியாசப்படுகிறது! மற்றபடி காட்சிகள், காட்சி அமைப்புகள், செட், கொலை செய்யும் முறை, விரலை வெட்டுவது எல்லாமே போன் கலெக்டர்.

அடப் பாவிகளா! இதற்கு மிஷ்கின் எதற்கு ஐயா? இத்தனைக்கும் நீங்கள் உலக இலக்கியம் வாசிப்பவர். தீவிர வாசகர். உலக சினிமாவும் கை விரல்களில். அதனால்தான் விரலை வெட்டும் டெக்னிக்கை எடுத்துக் கொண்டீர்களா? இப்படியெல்லாம் திருடுவதற்கு ஒருவர் வெட்கப்பட வேண்டாமா? நீங்கள் வாசகர்தானே? நான் கார்ஸியா மார்க்கேஸின் நாவலைத் திருடி தமிழில் எழுதி என் பெயரைப் போட்டுக் கொள்ள முடியுமா? அது ஏன் ஐயா படித்தவர்கள் மட்டுமே இப்படி இருக்கிறீர்கள்? வாழ்க்கையில் ஒரு புத்தகம் கூடப் படிக்காத சினிமா இயக்குனர்களெல்லாம் சிவனே என்று ஏதோ காமா சோமா என்று படம் பண்ணிக் கொண்டிருக்கும் போது படித்தவர்கள் மட்டுமே ஏன் இப்படிப்பட்ட திருட்டு வேலையில் இறங்குகிறீர்கள்?

தமிழில் கதையா இல்லை? இத்தனைக்கும் தமிழ் எழுத்தாளர்கள் அத்தனை பேருடனும் மிக நெருங்கிய நட்பு வைத்திருக்கும் இயக்குனர் நீங்கள். அவர்களிடமிருந்து கதை கேட்க என்ன பிரச்சினை? எம்.டி. வாசுதேவன் நாயரின் இருபது கதைகளுக்கு மேல் சினிமாவாக ஆக்கப்பட்டிருக்கிறதே? நீங்கள் திருடியுள்ள The Bone Collector படமே ஒரு ஆங்கில த்ரில்லர் நாவலைத்தானே வைத்துப் படமாக்கப்பட்டிருக்கிறது? இல்லாவிட்டால் டைட்டிலில் இது The Bone Collector படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என்று போட்டு விடலாமே? ஓ, அப்படி ஏதேனும் போட்டு நான் தான் கவனிக்கவில்லையா? அப்படியானால் சைக்கோ இன்னும் இரண்டு படங்களிலிருந்தும் திருடப்பட்டது என்று நண்பர்கள் சொல்கிறார்கள். The Blind Detective மற்றும் The Memories of Murder என்பவை அப்படங்கள். ப்ளைட் டிடெக்டிவை ஒரு ஐந்து நிமிடம் பார்த்தேன். முழுசாகப் பார்க்க நேரமில்லை. பார்த்திருந்தால் கடிதம் இன்னும் கடுமையாக இருந்திருக்கும். ஐந்து நிமிடத்திலேயே சைக்கோவின் ஹீரோ கண் பார்வையில்லாதவராக உருவாக்கப்பட்டிருப்பதன் பின்னணி புரிந்து விட்டது.

நல்ல திறமையும் சிறப்பான வாசிப்பு அனுபவமும் கொண்ட மிஷ்கின் இப்படி சீர்குலைந்து விட்டது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. மோசமான படம் எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. அறம் பிறழக் கூடாது. இன்னொருத்தரின் intellectual propertyயின் மீது கை வைப்பது குழந்தையிடமிருந்து திருடுவதைப் போன்றது. அதனால்தான் இவ்வளவு கோபம் வருகிறது எனக்கு.

குட்பை…