தமிழ் இந்து – மனுஷ்ய புத்திரன் – அடியேன்

என் எழுத்து பற்றிய த. ராஜனின் கட்டுரை ஒன்று தமிழ் இந்து நாளிதழில் இன்று வெளியாகி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.  (இணைப்பு: https://www.hindutamil.in/news/literature/539842-charu-vs-perumal-murugan-3.html) அது மிக நல்ல ஒரு கட்டுரை.  தமிழ்ச் சமூகத்திலிருந்து அந்நியமாகி விட்ட ஒருவனை அந்த சமூகம் எப்படி எதிர்க்கும் அல்லது எதிர்கொள்ளும்?  எனவே சாருவின் மீதான இந்தப் புறக்கணிப்பு புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்பது ராஜன் கட்டுரையின் அடிச்சரடு.  அக்கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு.  சொல்லப்போனால், பத்திரிகையாளர்கள் இத்தனை உன்னிப்பாக ஒரு எழுத்தாளனை கவனிக்கிறார்கள் என்பதே எனக்கு இன்பச் செய்தியாக செவிகளில் பாய்கிறது.  பிறகு இது பற்றி மனுஷ்ய புத்திரன் முகநூலில் எழுதிய பதிவை நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார்.  எனக்கு மிக நெருக்கமான நண்பர்களை ஒரு காலத்தில் முகநூலில் ப்ளாக் செய்யும் பழக்கம் கொண்டிருந்தேன்.  (இதை நீங்கள் நிகழ்காலத்திலும் வாசிக்கலாம்; பிரச்சினை இல்லை.)  அப்படி நீங்கியதுதான் மனுஷ்.  அதற்கப்புறம் எத்தனை முயன்றும் அவரை unblock செய்ய முடியவில்லை.  என்ன மாயமோ, மந்திரமோ, கேரள பகவதியே அறிவாள்!  அதனால் நண்பர் அனுப்பியதும் மனுஷின் பதிவைப் படித்தேன்.  இன்புற்றேன்.  ராஜனின் கட்டுரையை மனுஷ் அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.  பெருமாள் முருகனுக்குக் கிடைத்த வெளிச்சம் ஏன் சாருவுக்குக் கிடைக்கவில்லை?  மனுஷ்ய புத்திரன் முகநூலில் எழுதியதை அப்படியே கீழே தருகிறேன்:

”சாரு நிவேதிதாவால் பெருமாள் முருகனாக முடியவில்லை ஏன்?‘’ என்றொரு கட்டுரையை த.ராஜன் தமிழ் இந்துவில் எழுதியிருக்கிறார். பெருமாள் முருகனுக்குக் கிடைத்தது சாருவுக்கு ஏன் கிடைக்கவில்லை என்பதை காய்தல் உவத்தல் இன்றி எழுதியிருக்கிறார். ஒரு எழுத்தாளன் பாலியல் மீறல்களை எழுதும்போது அது சாதிய மத அடையாளம் சார்ந்த குழுக்களின் ஒழுக்கவியல் பாசாங்குகளையோ அல்லது அவர்களது பெருமிதங்களையோ கலைக்கும்போது உடனடியாக கடும் எதிர்வினைகள் கிளம்புகின்றன. இது அடையாள அரசியலின் வழிமுறை. அடையாளங்களற்ற தனிமனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றி ஒரு சமூகம் அலட்டிக்கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஒழுக்கவியல் முகமூடிகளைப் போட்டிருக்கும் சமூகம் தனிமனித மீறல்களை அந்தரங்கமாக ரசிக்கிறது என்றுகூட சொல்லலாம். சாருவின்மீது தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு புறகணிப்பு மனநிலை இருப்பது உண்மைதான். நவீன தமிழ் இலக்கியச் சூழலே அடிப்படையில் சனாதனத்தன்மை கொண்டது என்பதால் அந்தப் புறக்கணிப்பு புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் அதற்கு வெளியே சாருவை விரும்பி வாசிக்கும் ஒரு சிறிய வாசகப்பரப்பு இருக்கவே செய்கிறது. அவர்கள் சாருவின் பாலியல் கலகங்களால் அதிர்ச்சியுறுவதில்லை. மாறாக அவற்றை அந்தரங்கமாத் துய்க்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். 

ஆனால் பெருமாள் முருகன் போன்றவர்களுக்கு ஏற்படும் எதிர்ப்பு சாதிய-மதவாத அடையாள அரசியலில் நீட்சி. சு.ராவின் பிள்ளை கெடுத்தாள் விளை கதைக்கு வந்த எதிர்ப்புகளும் இங்கே நினைவுகொள்ளத் தக்கது. ஆனால் அது அடிப்படைவாத எதிர்ப்பு அல்ல. பிற்படுத்தப்பட்டோர் சாதிய அரசியல் சார்ந்த எதிர்ப்பு. கி.ரா, சுஜாதா போன்றவர்களுக்கும் சாதிய குழுக்களின் எதிர்ப்பு அவர்களின் படைப்புகளுக்காக கிட்டியிருக்கிறது. புதுமைப்பித்தன் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டிருக்கிறார். எனது ‘ஊழியன் நடனம்’ கவிதை எதிர்கொண்ட தாக்குதல் மதவாத அடையாள அரசியலின் ஒரு பகுதியே. 

சாருவின் மனிதர்கள் முகமற்றவர்கள். அந்த பாணியில் எழுதும் பல எழுத்தாளர்கள் இன்று வந்துவிட்டார்கள். சாதிய மத அடையாளஙக்ளற்ற கதாபாத்திரங்களை உருவாக்குவதில், பண்பாட்டு வேர்களற்ற உதிரி மனிதர்களின் பிறழ்வுகளை எழுதுவதில் யாருக்கும் எந்த சிக்கலும் இல்லை. சிலர் ரகசியமாக முகம் சுளிக்கலாம். சிலர் ரகசியமாக ஆர்கஸம் அடையலாம். இன்றைய உலகமய்மாதல் சூழலில் செய்தித்தாள்களில் படிக்கும் உண்மைக்கதைகளும் வெப் சீரிஸ்களும் தனிமனித ஒழுக்கவியல் கலகங்கள் என்ற ஒன்றையே இன்றைக்கு இல்லாமல் ஆக்கிவிட்டன, எல்லாமே சாத்தியம் என்ற இடத்திற்கு வந்துவிட்டோம்.ஆனால் ஒரு சாதிப்பெருமிதததையோ அடையாளத்தையோ தொட்டு எழுதுவது கடும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியது. 

பெருமாள் முருகனுக்குக் கிடைத்த வெளிச்சம், அவர்மீது காட்டப்பட்ட எதிர்ப்பின் மூர்க்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற ஒரு இயக்கம் இதை பொதுவெளிக்குக் கொண்டு சென்றது, ஊடகங்கள் இந்தப் பிரச்சினையில் காட்டிய பெரும் ஆர்வம், அரசு ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டது, காலச்சுவடு என்ற நிறுவனம் இதை எடுத்துச் சென்ற விதம் என பல காரணங்களால் நிகழ்ந்தன. 

ஆனால் இதில் என்னால் புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம் இருக்கிறது. மாதொரு பாகன் நாவலின் இலக்கியதரம் குறித்து சாருவுக்கு மாறுபட்ட அபிப்ராயம் இருக்கலாம். தஸ்லீமா நஸ் ரீனின் படைப்புகள் குறித்தே மாறுபட்ட இலக்கிய அபிப்ராயங்கள் இருக்கின்றன. ஆனால் அடிப்படைவாத சக்திகளால் அவர் தாக்கப்படும்போது அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்கவேண்டும் என்பதுதான் அரசியல் ரீதியான நிலைப்பாடு. ஆனால் சாரு ஏன் பெருமாள் முருகனுக்கு எதிராக திருச்செங்கோடில் நடந்த ஒரு சாதிச் சங்க கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்று தெரியவில்லை. 

ராஜன் அந்தக் கட்டுரையை இப்படி முடிக்கிறார். 

’’தங்களை முற்றிலுமாக ‘தனிநபர்’களாக பாவித்துக் கொள்பவர்களும், சமூகக் குழுமங்களோடு உரையாடுவதற்கு ஏதுமில்லை என்று நினைப்பவர்களுமே சாருவோடு அடையாளப்படுத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு எனலாம். இங்கிருந்து அவருடைய எழுத்தை அணுகினால் அது தமிழ்நாட்டின் எந்த ஒரு சமூகத்தையும் சீண்டிப்பார்க்காத இடத்திலிருந்து உரையாடுகிறது என்ற இடத்துக்கும் நாம் வரலாம், இல்லையா?”

இந்த விவாதம் இலக்கியம் சார்ந்த மதிப்பீடுகள் தொடர்பானதல்ல. ஒரு எழுத்தாளன் எப்படி சர்ச்சைக்குரியவனாக மாறுகிறான் என்பதில் இருக்கும் சமூக இயங்கில் விதிகளோடு தொடர்புடைது. எனவே இந்தக் கட்டுரை ஒரு முக்கியமான் விவாதப்புள்ளியை துவங்கி வைக்கிறது.”

மேற்கண்ட கட்டுரையில் மனுஷ்ய புத்திரன் என்னை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்.  பெருமாள் முருகன் – திருச்செங்கோடு சம்பவம் நடந்த காலகட்டத்தில் மனுஷ்ய புத்திரன் எனக்கு மிக நெருக்கமாகவே இருந்தார் என்பதால் அவர் என்னிடம் நேரடியாகக் கேட்டிருந்தாலே அவருக்கு அந்தக் கேள்விக்கான பதில் கிடைத்திருக்கும் – அந்தப் பதிலில் அவருக்கு உடன்பாடு இருக்காது என்ற போதிலும் வெறும் கேள்வியை மட்டுமே சுமந்து கொண்டிருந்திருக்கத் தேவையில்லை. இதுதான் அந்தக் கேள்வி:

சாரு ஏன் பெருமாள் முருகனுக்கு எதிராக திருச்செங்கோடில் நடந்த ஒரு சாதிச் சங்க கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டார்?

மனுஷ்ய புத்திரனின் இதே கேள்வியை வேறு சிலரும் கூடக் கேட்டிருக்கின்றனர்.  நான் நேரடியாகவும் எழுத்திலும் இதற்குப் பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.  பெருமாள் முருகன் விவகாரம் பற்றி நான் எழுதிய கலையும் போலியும் என்ற நூலிலும் இதற்கான விளக்கமான பதிலை எழுதியிருக்கிறேன்.

சுருக்கமாக ரெண்டு வாக்கியத்தில் சொல்வதானால், ஒரு சாதியின் பெயரைக் குறிப்பிட்டு, அந்தச் சாதியினர் வாழும் ஊர் பெயரையும் அந்த ஊரில் இருக்கும் கோவிலின் பெயரையும் குறிப்பிட்டு, அந்த ஊரில் உள்ள அந்தக் குறிப்பிட்ட சாதிப் பெண்களில் யாருக்குக் குழந்தை இல்லையோ அந்தப் பெண்கள் அந்தக் குறிப்பிட்ட கோவில் திருவிழாவின் போது தனக்கு முன்பின் தெரியாத ஒரு ஆடவனோடு கலவி கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்வார்கள் என்று மாதொரு பாகன் நாவலில் எழுதினார் பெருமாள் முருகன்.  இதை நான் கருத்துச் சுதந்திரம் என்று நினைக்கவில்லை.  ஒரு குறிப்பிட்ட சாதிப் பெண்களையும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளையும் படு கேவலமாக அவமானப்படுத்தும், அசிங்கப்படுத்தும் விஷயம் இது.  இதற்காக அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் அந்த எழுத்தாளனுக்குக் கண்டனம் தெரிவிக்கக் கூட்டம் போடுவதில் எந்தத் தவறும் இல்லை.  அதற்கு மேல் நடந்த அச்சுறுத்தல் போன்ற சம்பவங்களைப் பற்றி இருவேறு கருத்தே இருக்க முடியாது.  இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அவர்கள் எழுத்தாளன் மீது வழக்குதான் போட்டிருக்க வேண்டுமே அன்றி தண்டனை வழங்குவதை அவரவர் கையில் எடுத்துக் கொள்ள முடியாது.  வழக்கும் நடந்தது.  முருகன் வழக்கில் வென்றார்.  நல்ல விஷயம்.  ஆனால் ஆரம்பக் கட்டத்தில் நடந்த சாதிச் சங்க கண்டனக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டதில் எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை.  இதை நான் அந்த சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான எழுத்தாளனின் வன்முறை என்றே நினைத்தேன்.  ஒட்டு மொத்த இனக்குழுவை நோக்கி நீங்களெல்லாம் தகப்பன் பேர் தெரியாதவர்கள் என்று ஒரு எழுத்தாளன் சொன்னால் நான் எழுத்தாளன் பக்கம் நிற்பேனா?  பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பேனா?  இதுதான் அப்போது என் அடிப்படைக் கேள்வியாக இருந்தது.  மேலும், அந்த நாவலில் சொல்லப்பட்ட அந்த வழக்கத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை; வரலாறும் இல்லை.  இருந்திருந்தால் பெரியார் கிழிகிழி என்று கிழித்துத் தோரணம் கட்டியிருப்பார்.  ஆக, அது எல்லாமே கிறித்தவ நிறுவனங்களை குஷிப் படுத்துவதற்காக அவர்கள் தரும் நிதி உதவியில் எழுதப்பட்டது.  புத்தகத்திலேயே நிதி உதவி பெற்றதற்கான விபரங்கள் தரப்பட்டுள்ளன.  அந்த நாவலை உலகமே கொண்டாடியதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவில் தமிழ்நாடு என்ற மாநிலத்தில் – இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு கோவிலில் ஒரு திருவிழாவில் இப்படியாக ஒரு க்ரூப் செக்ஸ் சடங்கு நடக்கிறதாம்.  இதை ஒரு எழுத்தாளரே நாவலாக எழுதியிருக்கிறார்.  அவ்வளவுதான், கேட்க வேண்டுமா?  கொண்டாடித் தீர்த்து விட்டார்கள்.  பெருமாள் முருகனுக்கு புக்கர் பரிசு கிடைக்காமல் ஓய மாட்டார்கள், பாருங்கள்.   இதில் இலக்கியத் தரம் கிரம் எல்லாம் எதுவுமே கிடையாது.  இந்தியாவில் இன்னமும் சாலைகளில் மாடுகள் மேய்கின்றன; பாம்பாட்டி ஒவ்வொரு வீடாக வந்து மகுடி வாசித்து பாம்பு வித்தை காண்பிக்கிறான்;  கிராமங்களில் மரங்களுக்குப் பூஜை செய்கிறார்கள்… இத்தனை தகவல் தொடர்புப் புரட்சிக்குப் பிறகும் இந்தியாவை ஏதோ ஒரு ஆதிவாசி தேசமாகத்தான் பல நாடுகளில் பார்க்கிறார்கள்.  சீலேயில் ஒரு உணவு விடுதியில் ஸ்டீக் (Steak) வேண்டாம் என்று சொல்லி விட்டு பச்சைக் காய்கறி சாப்பிட்டேன்.  அங்கே அதைத் தவிர வேறு எதுவும் இல்லை.  “ஓ, நீங்கள் மாட்டைக் கும்பிடுபவர்கள் அல்லவா?  மறந்து விட்டேன்” என்றார் என் வழிகாட்டி. 

இப்படிப்பட்ட சூழலில் இன்று ஒரு எழுத்தாளன் இந்தியாவைத் திட்டினால் மேற்கில் பெரிய ஆளாகலாம்.  பெரிய பெரிய பரிசெல்லாம் கொடுப்பார்கள்.  இப்படியெல்லாம் எழுதுவதால் என்னை இந்துத்துவ வெறியர்களோடு சேர்க்கப்பார்க்கும் ஆபத்தும் இருக்கிறது.  நான் அவர்களிடமும் சிக்க மாட்டேன்.  இந்திய வெறுப்பாளர்களான மேற்கத்திய அறிவுஜீவிகளோடும் சேர மாட்டேன்.  ஆனால் சல்மான் ருஷ்டி பிரபலம் ஆனது இரண்டு காரணங்களால்.  இஸ்லாமிய எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு.  தஸ்லீமா நஸ் ரீன் பிரபலம் ஆனது இஸ்லாமிய எதிர்ப்பு.  அருந்ததி ராய் பிரபலம் ஆனது இந்து, இந்திய எதிர்ப்பு.  இவருக்கு மிகப் பலமான கிறித்தவ ஸ்தாபனங்களின் பக்க பலமும் ஆதரவும் இருக்கிறது.  சென்னைக்கு வந்தால் கூட இவர் தங்குவது ஒரு கிறித்தவ அமைப்பின் ஆதரவில்தான்.  பெருமாள் முருகனுக்குக் கிடைத்திருக்கும் ஆதரவுக்குக் காரணமும் இந்த இந்து-இந்திய எதிர்ப்புதான்.  அதன் எதிர்விளைவாகக் கிடைப்பது மேற்கத்திய ஸ்தாபனங்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கங்கள், புத்திஜீவிகள், பத்திரிகைகள் போன்றவற்றின் ஆதரவு.  அவர் மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருந்தால் நிச்சயம் நோபல் விருதே கொடுத்திருப்பார்கள்.  இனிமேல் கொடுத்தாலும் அதில் ஆச்சரியம் இல்லை. 

இதில் என்னுடைய எழுத்து எங்கே நிற்கிறது? இதை மனுஷ்ய புத்திரன் மிகச் சரியாக அடையாளப்படுத்துகிறார்.  சாதிய – மதவாத அடையாள அரசியல்.  அந்தத் தன்மை இல்லாவிட்டால் யாரையும் உரசாமல் எழுதிக் கொண்டே இருக்கலாம்;  நாட்குறிப்பு எழுதுவதைப் போல.  அந்த நாட்குறிப்புகளை வாசிக்கவும் ஒரு சிறிய கூட்டம் இருக்கும். 

ஆனால் இதிலும் எனக்கு சில குழப்பங்களும் கேள்விகளும் இருக்கின்றன.  உலகம் முழுவதிலுமே transgressive எழுத்தாளர்கள் இப்படித்தான் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டவர்களாக வாழ்ந்தார்கள்; வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.  சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் நண்பர்கள்தான் அவரது எழுத்துக்களை ப்ளாக் ஸ்பாரோ என்ற பதிப்பகத்தை நிறுவி பதிப்பித்தார்கள்.  கேத்தி ஆக்கர் (Kathy Acker) தன் எழுத்துக்களை தனிப்பட்ட நண்பர்கள் மூலம்தான் பதிப்பித்தார்.  எனக்கு நடந்ததோ அதையெல்லாம் விட அவலம். 

முதலில் ஒரு புத்தகம்:  ஜே.ஜே. சில குறிப்புகள்: ஒரு விமர்சனம்.  வெளியீடு: சாரு பப்ளிகேஷன்ஸ்.  ஓனர்: சாரு நிவேதிதா

அடுத்த புத்தகம்: லத்தீன் அமெரிக்க சினிமா: ஓர் அறிமுகம்.  கிரணம் வெளியீடு.  ஓனர்:  சாரு நிவேதிதா

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்:  (இப்படி ஒரு தலைப்பு இருந்தால் எவன் படிப்பான்?) சூன்யம் வெளியீடு.  ஓனர்: சாரு நிவேதிதா

ஸீரோ டிகிரி: கிரணம் வெளியீடு அல்லது சூன்யம் வெளியீடு அல்லது ஏதோ ஒன்று.  பெயர் ஞாபகம் இல்லை.  ஓனர்: சாரு நிவேதிதா

இப்படியே ஒன்று அல்ல இரண்டு அல்ல; நாகர்கோவிலில் ஒரு பிரபலமான எழுத்தாளரின் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தால்தான் என் எழுத்துக்களை நானே வெளியிட்டு நானே விற்றுத் தீர்த்த அவலத்திலிருந்து மீண்டேன்.  அந்த எழுத்தாளரின் வீட்டிலிருந்து ஒரு மிகப் பிரபலமான இலக்கியப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது.  அதில் ஒரு பிரபலமான கவிஞன் பணி செய்து கொண்டிருந்தான்.  பல ஆண்டுகள் ஒரே குடும்பமாக அங்கே இருந்த கவிஞன் ஒருநாள் நாகர்கோவிலுக்கு டாட்டா காண்பித்து விட்டு சென்னைக்கு ரயில் ஏறினான்.  அவனை ரயில் நிலையத்தில் போய் வரவேற்ற ஒரே ஆள் அடியேனாக இருந்தேன்.  அந்த அளவுக்கு அவன் கவிதைகள் எனக்குப் பிரியம்.  சென்னைக்கு வந்த கிராமத்து ஆட்கள் யாருமே உருப்படாமல் போனதில்லை.  வந்த கையோடு ஒரு பத்திரிகையும் பதிப்பகமும் தொடங்கினான்.  அப்போதும் என் புத்தகங்கள் உடனடியாக அவன் பதிப்பகத்திலிருந்து வந்து விடவில்லை.  இரண்டு ஆண்டுகள் பிடித்தன.  இரண்டு ஆண்டா மூன்று ஆண்டா?  ஞாபகம் இல்லை.  அவன் மட்டும் நாகர்கோவிலிலேயே இருந்திருந்தால், முந்தாநேற்று ஆரம்பித்த ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வரை என் புத்தகங்களை நானே தான் பிரசுரித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  எனக்கெல்லாம் கிசுகிசு வராது என்பார் மனுஷ்.  மேலே சொன்ன விஷயம் புரிகிறதுதானே? 

இப்படியெல்லாம் ஏன் எனக்கு நடந்தது?  ஸீரோ டிகிரி நாவலின் காகித மூட்டையைத் தூக்கிக் கொண்டு திருவல்லிக்கேணி தெருக்களில் நானும் அவந்திகாவும் அச்சகம் அச்சகமாக ஏன் ஏறி இறங்கினோம்?  சுந்தர ராமசாமியின் ஆப்த நண்பர் நக்கலாகக் கேட்டார்.  ஏன், சரோஜாதேவி புத்தகங்கள் அச்சடிக்கும் அச்சகம் கூடவா கிடைக்கவில்லை? 

சரி, இதுவரை தன்னுடைய 50 ஆண்டுக் கால இலக்கிய வாழ்வில் யாரையுமே விமர்சித்து அறியாத வண்ணதாசன் இப்போது ஏன் என்னை அசிங்கமாகத் திட்டுகிறார்?  அவர் திட்டிய முதல் ஆளே நான் தான் ஐயா!  யாரையுமே திட்டி அறியாத, வாழும் மகாத்மாவான, அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத வெளி ரங்கராஜன் ஏன் என்னை போலி என்கிறார்?  இவர்களெல்லாம் தங்கள் வாழ்நாளிலேயே திட்டிய ஒரே ஆள் அடியேனாக இருக்கிறேன்.  அட நம் சுஜாதா?  உலக இலக்கியத்தை உள்ளங்கையில் வைத்திருந்தவர் என் எழுத்தை மலம் என்று சொல்லி விட்டார்.  அவரும் திட்டிய ஒரே ஆள் நான் தான்.  இப்படி ஒரு பத்து பக்கம் எழுதிக் கொண்டு போகலாம்.

நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா?  Transgressive writingsஐ பெரும்பாலான சமூகங்கள் புறக்கணித்தேதான் வருகின்றன.  ஃப்ரான்ஸ் மட்டுமே ட்ரான்ஸ்க்ரஸிவ் எழுத்தை முதன்மையாகக் கொண்டாடுகிறது.  இல்லை; உங்கள் எழுத்து ஜெர்மானியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றார் ஒருமுறை ஒரு செர்பியக் கவிஞர்.  மனுஷ் சொல்வது போல், வெப்சீரீஸ் வந்த பிறகு என்னைத் தமிழர்களுக்கும் பிடிக்க ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது.