சாரு நிவேதிதாவின் பனுவல்கள் வளர்ச்சியடைந்த நடுத்தரவர்க்க மனநிலையோடு உரையாடல் செய்யும் பனுவல்கள். பெருமாள் முருகனின் பனுவல்கள் நடுத்தரவர்க்க மனநிலையே இன்னதென்றறியாத மனிதர்களின் உளப்பாங்கை நோக்கிப் பேசும் பனுவல்கள். இவ்விரண்டையும் இணையாக வைத்து விவாதிக்கும் புள்ளியைப் பனுவல்களுக்குள் கண்டறிவது இயலாத ஒன்று. அப்படிப் பேசும் ஒரு கட்டுரையை முக்கியமான கட்டுரை என்று சாருநிவேதிதாவே முன்வைத்துப் பேச முன்வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
சாரு நிவேதிதாவின் பனுவல்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் விவாதிக்கப்படாமல் போனதற்கும் அவரது புத்தகங்கள் சந்தைப்படுத்தப்பட்ட முறைகளும், விமர்சனங்களின் மீது அவர் வெளிப்படுத்திய எதிர்வினைகளும் காரணங்களாக இருந்தன. தன்னை எப்போதும் தமிழ்ச் சமூகத்தின் வெளிகளுக்கு அப்பாற்பட்ட புலங்களில் உலவுபவராகக் காட்டிக்கொண்ட அவரது புனைவல்லா எழுத்துகள் அந்நியராகக் காட்டின.
அ. ராமசாமி
அ. ராமசாமி தன் முகநூல் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.
என் புத்தகங்கள் சந்தைப்படுத்தப்பட்ட முறை என்று எழுதியிருக்கிறார் ராமசாமி. அதாவது என் புத்தகங்கள் 15 ஆண்டுகளாகக் கிடைக்கவில்லை. ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். ஆனந்த விகடனில் என் மனம் கொத்திப் பறவை என்ற தொடர் வந்து கொண்டிருந்தது. இப்போது குமுதத்தில் சொல் தீண்டிப் பழகு என்ற தொடரைப் போல் அது. பூங்காவுக்கு நடக்கச் சென்றால் குறைந்த பட்சம் பத்து பேராவது வணக்கம் சொல்கிறார்கள். தினமும் புதியவர்கள். இதேதான் மனம் கொத்திப் பறவை வந்த போதும் நடந்தது. பிரகாஷ் ராஜ் போன்ற பிஸியான நடிகர்களே போன் போட்டுப் பேசுவார்கள். ஆனால் அந்தத் தொடர் ஆறே மாதத்தில் நிறுத்தப்பட்டது. எந்தப் பிரச்சினையும் இல்லாமலேயே நிறுத்தப்பட்டது. ஏன் என்று விசாரித்த போது ஆறு மாதம்தான் ஒரு தொடர் வரும் என்றார் அதன் ஆசிரியராக இருந்த கண்ணன். அது உண்மைதான். இரண்டு மாத இடைவெளி விட்டு மறுபடியும் வேறோர் கோணத்திலிருந்து அதே எழுத்தாளர் வேறொரு தொடரை எழுதத் தொடங்குவார். சுஜாதாவுக்கு அந்த இடைவெளி ஒரு மாதம். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அந்த இடைவெளி இரண்டு மாதம். இப்படி விகடனில் எஸ்.ரா. 15 ஆண்டுக் காலம் தொடர்ந்து இரண்டு மாத இடைவெளி விட்டு விட்டு – கவனியுங்கள் – 15 ஆண்டுக் காலம் எழுதினார். அவரது மிகப் பிரபலமான தேசாந்திரி போன்ற தொடர்கள் விகடனில் வந்தவைதான். ஆனால் விகடனில் எனக்கு என்னுடைய 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு 6 மாதங்கள். ஆறே மாதங்கள்.
ஆனால் ஒப்பிட்டுப் பாருங்கள். குமுதத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக – இடையில் நாலு மாத இடைவெளி – அதுகூட நான் வெளிநாடுகள் சென்று விட்டதால் அந்த இடைவெளி ஏற்பட்டது – எழுதி வருகிறேன்.
சரி, நான் சொல்ல வந்தது அது அல்ல. என் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்ட முறை. ராமசாமியின் வார்த்தைகளில் சொன்னால் என் புத்தகங்கள் சந்தைப்படுத்தப்பட்ட முறை. அது என்ன முறை தெரியுமா? என் புத்தகங்கள் கிடைக்கவே இல்லை. மனம் கொத்திப் பறவையை புத்தகமாக விகடன் வெளியிட்டது. எத்தனை பிரதிகள் விற்றிருக்க வேண்டும்? குறைந்த பட்சம் ஒரு லட்சம் பிரதிகள்? சரி, 50,000 பிரதிகள். ம்ஹும். 3000 பிரதிகள் விற்றன. ஏன் தெரியுமா? மறு பிரசுரமே செய்யவில்லை. புத்தகம் மதுரை புத்தக விழாவில் கிடைக்கவில்லை. திருநெல்வேலி புத்தக விழாவில் கிடைக்கவில்லை. ஈரோடு புத்தக விழாவில் கிடைக்கவில்லை. எங்கேயும் கிடைக்கவில்லை. என்னைப் பார்க்கும் அத்தனை பேரும் மனம் கொத்திப் பறவை புத்தகம் எங்கே கிடைக்கும் என்றே கேட்டார்கள். இங்கெல்லாம் நானே தான் போய் விசாரித்தேன். புத்தகமே இல்லை. மறு பிரசுரமே செய்யவில்லை. அப்புறம் எங்கே விநியோகம்? அப்துல் கலாம் புத்தகம் என்றால், ஒரு லட்சம் பிரதி வரை அடித்துக் கொண்டே இருப்பார்கள். என் புத்தகங்களுக்கு டிமாண்ட் இருந்தும் சப்ளை இல்லை.
இது ஏன் நடந்தது என்று நான் த. ராஜனைக் கேட்க விரும்புகிறேன். மனுஷ்ய புத்திரனைக் கேட்க விரும்புகிறேன். நண்பர் அபிலாஷைக் கேட்க விரும்புகிறேன். என் மாணவி காயத்ரியைக் கேட்க விரும்புகிறேன். உண்மையிலேயே எனக்குப் பதில் தெரியவில்லை. இத்தனைக்கும் என்னைப் போல் பத்திரிகைகளுக்கு ஒத்துழைப்பு நல்கக் கூடிய எழுத்தாளர் யாரும் இருக்க மாட்டார்கள். புதன் கிழமை கட்டுரை அனுப்ப வேண்டும் என்றால், திங்கள் காலையே அவர்களின் மேஜையில் என் கட்டுரை இருக்கும். அதன் உள்ளடக்கத்தால் கட்டுரையை வெளியிட விரும்பவில்லை என்றால் பதில் கட்டுரை ஒரு மணி நேரத்தில் போகும். நீங்கள் மனிதரா பிசாசா என்றெல்லாம் பத்திரிகாசிரியர்கள் கேட்டிருக்கிறார்கள். முன்கூட்டியே எழுதி வைத்திருக்க மாட்டேன். பேய் வேகத்தில் ஒரு மணி நேரத்தில் தட்டச்சு செய்து அனுப்பி வைப்பேன். அப்படி அனுப்பி வைக்கக் கூடிய இன்னும் ஒரே ஆள் ஜெயமோகன் மட்டுமே. இத்தனை சிநேகிதமான ஆளாக இருந்தாலும் ஏன் விகடன் என்னைப் புறக்கணித்தது? என் எழுத்தில் இருந்த ஏதோ ஒரு ட்ரான்ஸ்கிரஸிவ் தன்மைதான் காரணம்.
விமர்சனங்களின் மீது சாரு வெளிப்படுத்திய எதிர்வினைகளும் என் மீதான புறக்கணிப்புக்கான காரணம் என்கிறார் ராமசாமி. அது அவருடைய அவதானம். ஆனால் அப்படி ஒரே ஒரு சந்தர்ப்பத்தைக் கூட அவரால் உதாரணம் காட்ட முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால், என் எழுத்து மீதான விமர்சனமே வந்ததில்லை. சாருவின் எழுத்து கங்கையில் மஞ்சளாக மிதக்கும் திடப் பொருள் – இது சுஜாதா. நான் என்ன எதிர்வினை ஆற்றினேன்? சுஜாதா என் ஆசிரியர்களில் ஒருவர். அவர் கருத்தை நான் மதிக்கிறேன். அவருக்கு என் எழுத்து பிடிக்காவிட்டால் என்ன? எனக்கு அவர் எழுத்து பிடிக்கும்.
அசோகமித்திரனை என் தந்தையைப் போல் என் குருவைப் போல் கொண்டாடியவன் நான். அவர் என் எழுத்தை முற்றாக நிராகரித்தார். புரியவே இல்லீங்க என்பார். நேநோ சிறுகதைத் தொகுதிக்கு அவரிடம்தான் முன்னுரை கேட்டேன். எதுவுமே புரியவில்லை என்றுதான் எழுதிக் கொடுத்தார். நான் என்ன எதிர்வினை செய்தேன்? அசோகமித்திரன்தான் என் ஆசான் என்று சொன்னேன். இப்படியேதான் நடந்தது.
கடுமையான எதிர்வினைகள் புரிய வேண்டிய இடத்தில் கூட நான் அப்படி நடந்ததில்லை. மதுரையில் என்னையும் என் நண்பர்களையும் அடித்த போது கூட அடியுங்கள் என்றே கத்தினேன். நான் யார் மாதிரி தெரியுமா? லா.ச.ரா.வின் எழுத்தை ஒரு பிரபலமான எழுத்தாளர் நிராகரிப்பாக எழுதி விட்டார். முழு நிராகரிப்பு அது. உடனே லா.ச.ரா. கோபித்துக் கொள்ளவில்லை. அது அவருடைய கருத்து என்று விட்டு விட்டார். அதோடு, அந்த எழுத்தாளரின் ஒரு பிரபலமான நாவலைப் படித்தார். பிரமாதமாக இருந்தது. “ஏன் அப்பா, அவர் உன்னைத் திட்டினார். உனக்கு எப்படி அவருடைய நாவல் பிடிக்கிறது?” என்று சப்தரிஷி கேட்ட போது ”என் எழுத்து அவருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர் எழுத்து எனக்கு ஏன் பிடிக்காமல் போக வேண்டும். பிரமாதமாக எழுதியிருக்காரேப்பா” என்றாராம் லா.ச.ரா. இதையேதான் என் வாழ்நாள் பூராவும் நான் கடைப்பிடித்து இருக்கிறேன்.
என்றாலும் என்னை ஆரம்ப காலத்திலிருந்தே அறிந்த அ. ராமசாமி இப்போது ”சாருவைப் பற்றிய விமர்சனங்களுக்கு சாரு ஆற்றிய எதிர்வினைகளும்” சாரு மீதான புறக்கணிப்புக்குக் காரணம் என்று ஏன் கூறுகிறார்? அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. வண்ணதாசன் விவகாரத்தை எடுத்துப் பார்த்தோம் என்றால் பதில் தெரிந்து விடும். நான் வண்ணதாசனை 40 ஆண்டுகளாகக் கொண்டாடி வருபவன். ஸீரோ டிகிரி என்ற ஒரு cult நாவலில் கொண்டாட்டமாக வரும் ஒரே ஒரு தமிழ் எழுத்தாளரின் பெயர் வண்ணதாசன். Modern Asian Classics என்ற வரிசையில் ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம் பெற்ற என் நாவலில் இடம் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் வண்ணதாசன். ஏன் அவருக்கு அந்த இடத்தைக் கொடுத்தேன் என்றால், சமகாலத் தமிழ் இலக்கியத்தில் மென்னுணர்வுகளுக்கான குறியீடு வண்ணதாசன். அந்த வகையில் அவர் ஒரு legend. சில பழைய தமிழ்ப் பாடல்கள் என்பது அவர் எழுதிய ஒரு சிறுகதை. பழைய தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் – எனக்கு ஏ.எம்.ராஜா, பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றவர்களெல்லாம் உயிர் – வண்ணதாசனின் அந்தக் கதையின் ஞாபகம் வருவதைத் தவர்க்கவே இயலாது. ஒருநாள் சந்த்தியாகோ நகரில் தனியாகத் தங்கியிருந்த போது – கையில் ஒரு போத்தல் ஒயின் இருந்த போதும் – அதைக் குடிக்காமல் இரவு முழுவதும் பழைய தமிழ் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த போதும் வண்ணதாசனைத்தான் நினைத்தேன்.
ஆக, சமகாலத் தமிழ் இலக்கியத்தில் ஒரே ஒரு வண்ணதாசன்தான். அவர் மென்னுணர்வுகளின் குறியீடு. இதை நான் பலமுறை எழுதியும் ஏன் இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர் என்னை இடுப்புக்குக் கீழே தாக்குகிறார்? அதிலும் யாரையுமே அதிர்ந்து ஒரு வார்த்தை பேசியிராத, எழுதியிராத வண்ணதாசன்? ஏன் தெரியுமா? அவரது தந்தை தி.க. சிவசங்கரன் பிள்ளைக்கு சாஹித்ய அகாதமி விருது வழங்கப்பட்டதைக் கண்டித்து எழுதினேன் நான். ஏன் கண்டித்தேன் என்றால், சாகித்ய அகாதமி ஒன்றும் முதியோர் நல்வாழ்வுத் திட்டம் அல்ல. தி.க.சி.க்கு வயதாகி விட்டது என்று சாகித்ய அகாதமி விருது கொடுக்க நினைத்தார்கள். அவரோ புத்தகமே எழுதியது இல்லை. எழுதியதெல்லாம் போஸ்ட் கார்டுதான். எல்லோரையும் பாராட்டி எழுதிய போஸ்ட் கார்ட். ஆனால் சாகித்ய அகாதமி கொடுப்பதென்று முடிவாகி விட்டது. எனவே அவசர அவசரமாக அந்தப் போஸ்ட் கார்டையெல்லாம் தொகுத்துப் போட்டு புஸ்தகமாக்கி விருதையும் கொடுத்தார்கள். அப்போது நான் அதைத் திட்டியோ விமர்சித்தோ ஒரு வார்த்தை எழுதவில்லை. ஆனால் சென்ற வருடமோ என்னவோ தி.க.சிவசங்கரன் பிள்ளையின் புதல்வரான வண்ணதாசனுக்கும் அதே சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்ட போது இந்த வரலாற்றையெல்லாம் எழுத வேண்டி வந்தது. அவ்வளவுதான். வள்ளலார் வாளை உருவி விட்டார்? இப்படியே தொடர்ந்து 45 ஆண்டுகளாக எழுதி சகலரையும் பகைத்துக் கொண்டு விட்டேன். இதுதான் நான் செய்த எதிர்வினையே தவிர என் எழுத்து பற்றிய விமர்சனங்களுக்கு எந்தக் காலத்திலும் எதிர்வினையே செய்ததில்லை. செய்வது தவறு என்று நினைக்கிறேன்.
ஏன் என்றால், சுந்தர ராமசாமியின் ஜெ.ஜெ. சில குறிப்புகள் வெளிவந்த போது தமிழ்நாடே அந்த நாவலுக்கு ஆதரவாக ஆரவாரம் செய்தது. நானோ அதை நாவலே இல்லை என்று சாடினேன். நான் அப்படிச் செய்திருக்கிறேன் என்ற காரணத்தினால்தான் சுஜாதா என் எழுத்தை மலம் என்று வர்ணித்த போது எனக்குக் கோபமே வரவில்லை. நாம் அப்படிப் பலரையும் நிராகரித்திருக்கிறோம் இல்லையா? அதனால் நம்மை நிராகரிக்கவும் உரிமை உண்டு என்றுதான் எப்போதும் நினைத்து வந்திருக்கிறேன்.
இன்னொரு உதாரணம் தருகிறேன். பொம்மலாட்டம் என்ற படத்துக்கு சாரு நிவேதிதாவை வசனம் எழுதச் சொல்லலாமா என்று பாரதிராஜா தன் உதவியாளர்களைக் கேட்டிருக்கிறார். மொத்த உதவியாளர்களும் “சாரு வில்லங்கமானவர் சார். வேண்டாம்” என்றார்களாம். பதினஞ்சு பசங்களையும் பகைச்சுக்கிட்டு வேலை செய்ய முடியாதே சாரு என்று சொன்னார் பாரதிராஜா, சமீபத்தில். ”ஆனால் நேரில் பார்த்தால் ஒரு குழந்தையைப் போல் பழகுகிறீர்களே?” ஒருத்தர் பாக்கியில்லாமல் சொன்ன வாக்கியம் அது. இமேஜ் ராமசாமி இமேஜ். என்னுடைய இமேஜ் அது. சாரு வில்லங்கமானவர். தசாவதாரம் படம் வந்தது. உயிர்மையில் பத்து பக்கம் விமர்சனம் எழுதினேன். உடனே நண்பருக்குக் கமல் ஃபோன். ”அரை மணி நேரம் உங்களைத் திட்டினார் சாரு” என்றார் நண்பர். ”திட்டியது ஏதாவது புரிந்ததா?” என்று கேட்டேன். “ம்ஹும். கடைசியில் ஒரே ஒரு வார்த்தைதான் புரிந்தது. அது நீங்கள் கமலைப் பற்றி நேற்று என்னிடம் சொன்னது.” அது வேறொரு கதை. ஒருநாள் ஒரு இயக்குனரின் காரில் சென்று கொண்டிருந்தேன். இயக்குனர் எல்லோரையும் விமர்சிப்பவர். அப்படிப்பட்டவர் ரஜினியைப் புகழ்ந்து கொண்டிருந்தார். பத்து நிமிடம் புகழ்ந்திருப்பார். ஒரு மௌனம் கிடைத்தது. ரஜினி பற்றி இவ்வளவு சொல்கிறீர்கள். கமல்?” என்று கேட்டேன். ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்: கமல் கெட்டவர்.
அதைத்தான் நண்பரிடம் முதல்நாள் சொல்லியிருந்தேன். அதையேதான் கமலும் என்னைப் பற்றிச் சொன்னாராம். ஓஹோ, க்ரேட் மென் திங்க் அலைக்!
நண்பர்களே! இப்போது புரிகிறதா? இதுதான் ராமசாமி சொல்லும் எதிர்வினை. மற்றபடி என் எழுத்தைத் திட்டினால் நான் மகிழ்ச்சி அடையவே செய்வேன். அப்பாடா, கடைசி கடைசியில் ஒருத்தர் வாய் திறந்து திட்டி விட்டாரே என்று. ஆக, நாற்பது ஆண்டுகளாக என்ன நடந்தது என்றால், பூனைக்கு மணி கட்டிக் கொண்டே இருந்தேன். நாற்பது ஆண்டுகளாக உண்மையையே பேசினேன். உண்மையையே எழுதினேன். எதார்த்தவாதி பகுஜன விரோதி. நீயா நானா நிகழ்ச்சியில் என்னைத் தடை செய்திருக்கிறார்கள். தெரியுமா உங்களுக்கு? ஏன் என்றால், அங்கே அழைக்கப்படும் சிறப்பு விருந்தினர்களுக்குப் பணம் தருவதில்லை. (இப்போது எப்படி என்று தெரியாது. நான் சொல்வது பழைய கதை.) எனக்குக் காசு கொடுத்தால்தான் வருவேன் என்றேன். 5000 ரூ. தருகிறோம் என்றார்கள். தராமல் இழுத்தடித்தார்கள். பத்திரிகையில் எழுதுவேன் என்றேன். சுத்தமாகத் தொடர்பை நிறுத்தினார்கள். பத்திரிகையில் எழுதினேன். பணம் கொடுத்தார்கள். என்னையும் ப்ளாக் செய்தார்கள். எனக்கும் அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் என் இமேஜ் இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக நாற்பது ஆண்டுகளில் கெட்டுப் போனது. கமல் என்னைப் பார்த்தால் அந்தப் பக்கம் திருப்பிக் கொள்வார். டி.எம். கிருஷ்ணா கழுத்தே சுளுக்கிக் கொள்வது போல் கழுத்தை மடக்கிக் கொண்டு போவார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
மீண்டும் சொல்கிறேன். என் எழுத்து மீதான விமர்சனங்களுக்கு நான் ஒருபோதும் எதிர்வினை ஆற்றியதில்லை.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai