கவனம் முழுத்தொகுப்பு -31,881 வார்த்தைகள் A4ல் 230 பக்கங்கள். இருந்தும் விலை ஏன் ₹49 அதிகம் வைத்திருக்கலாமே
கவனம் ஞானக்கூத்தன் நடத்திய இதழ். அதன் உரிமை அவர் மகனிடம் உள்ளது. அவர் தமக்குப் பணம் வேண்டாம். அப்பாவின் எழுத்து பரவலானால் போதும் என்று சொல்லிவிட்டார். அவரே வேண்டாம் என்கிற பணம் எனக்கு மட்டும் எதற்கு. இதுவரை நான் உதவிய ஒருவரிடமும் ஒரு பைசாகூட வாங்கியதில்லை. இதில் மட்டும் எதற்கு. எனவேதான். கிண்டிலின் மினிமம் விலையான ₹49ஐ வைத்தேன். இது மட்டுமின்றி இதை ஒவ்வொரு மாதமும் இலவசமாகவும் தருகிறேன். நின்றுகொண்டு ஒவ்வொரு பக்கமாக போட்டோ எடுத்துப் பார்த்தால்தான் தெரியும் 60 வயதுக்காரனுக்கு முதுகு எப்படி வலிக்கும் என்பது.
கவனத்தைவிட கொல்லுகிற வேலை ழ வுடையது.
அது ஒருபுறம் இருக்க, அதன் ஆசிரியரான ஆத்மாநாம் இப்போது இல்லை. அவருக்குப் பிறகு ஆசிரியராக இருந்த ஞானக்கூத்தனும் இல்லை. இணையாசிரியராக இருந்த ஆர். ராஜகோபாலிடமிருந்துதான் இந்த இதழ்களைப் பெற்றுவந்தேன்.
ழ பத்திரிகையில் என்ன பிரச்சனை என்றால் என்னதான் சந்தா வந்தாலும் ஒவ்வொரு ழ-வுக்கும் 150 ரூபாய் செலவாகும். ஆளுக்கு பத்து பத்து ரூபாய் என அவர்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள். ‘செலவு ஒருத்தரோடதுனு சொல்ல முடியாது’ என்று சொல்லிவிட்டார்.
எனில் ழவின் உரிமை யாருக்கு. இணையாசிரியர் என்கிற விதத்தில் ஆர். ராஜகோபாலுக்கு என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் அக்கவுண்ட்டிலேயே இதை வெளியிடலாம் என்றால், அவரோ எனக்கு வேர்டில் டைப்படிக்கத் தெரியும் மொபைலில் நெட் பார்க்கத்தெரியும் இதைத் தவிர எதுவுமே தெரியாது என்னால் எதுவுமே செய்யமுடியாது என்று கூறிவிட்டார். கூடவே இதுலேந்து வர பணத்தைவிட இது எல்லாருக்கும் போய்ச்சேரணும் அதுதான் முக்கியம் என்றும் சொல்லிவிட்டார்.
மூச்சைப் பிடித்துக்கொண்டு புரொமோட் செய்யவில்லை என்றால் இலக்கியம் எலிப்புளுக்கை அளவுக்குக்கூட பரவலாகப் போய்ச்சேராது என்பதே யதார்த்தம். இயற்கையாகவே கூச்ச சுபாவமுடைய இலக்கியவாதிகளில் ஒருத்தர்கூட தேறமாட்டார்.
இது ஒருபுறம் இருக்க, எழுத்தாளரொருவர் – என்னை ஒப்பிட்டால் அவரே பிரபலமானவர், ஆனால், ‘என் புக்குக்கு நீங்க லிங்க் குடுத்தா நிறைய பேர்கிட்ட போகுதுங்க’ என்றார்.
பேஸ்புக்கில் போடும் என் புத்தக லிங்க் உள்ள என் பதிவுக்கு மிஞ்சிப்போனால் நான்கு ஐந்து லைக் விழும். ஆனாலும் எப்படி இவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்பதற்குப் பின்னால் இருப்பது பத்து ஆண்டுகளின் உழைப்பு. துளியும் சமரசமின்றி எல்லோரும் பார்க்க இருந்துகொண்டு இருப்பது. லேடீஸ் விஷயத்திலோ பண விஷயத்திலோ பெயரை ரிப்பேராக்கிக்கொள்ளாதிருப்பது. ஆதாயத்திற்காக இலக்கிய அபிப்ராயங்களில் அந்தர்பல்டி அடிக்காமல் இருப்பது. எல்லாவற்றையும்விட முக்கியமாக, பேஸ்புக்கில் எவனுக்கும் சொம்பாக இல்லாதிருப்பதும் எவனையும் சொம்பாக உருவாக்காமல் இருப்பதும். இதைக் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பக்கமாகக் கடைப்பிடிப்பது சாமானிய விஷயமில்லை. இயல்பிலேயே இப்படியானவன் என்பதால் இது எனக்கு ஒரு விஷயமாகவே இல்லை.
கவனம் ழ இரண்டைத் தவிர நான் உதவிய எல்லா எழுத்தாளர்களுக்கும் அவரவர்கள் பெயரிலேயே அக்கவுண்ட் தொடங்கி அதிலேயே வெளியிட்டேன். ஒரே ஒருவருக்கு மட்டும் என் மூலமே வெளியிட்டு பிறகு எல்லாவற்றையும் அவர் கணக்கிற்கு மாற்றிவிட்டேன். அதன் பிறகான மாற்றத்தை வைத்து, ‘மாமல்லன் கிண்டில் உங்க ஒருத்தருக்கு தாங்க ஒர்க்கவுட் ஆகுது’ என்று சிம்பிளாக சொல்லிவிட்டார்.
கிண்டில் புத்தக விற்பனையின் முக்கியமான அம்சம் எண்ணிக்கை. இந்தக் கூட்டத்தோடு இருந்தால் அதையும் அடுத்துக் காட்டும்.
வாழ்த்துகள். உங்களது நூறாவது புத்தகம் என்றான் கிண்டில். உன்மையில் இப்போது இருப்பதோ 64தான். தொடர்ந்து சீட்டுக்கட்டு போல புத்தகங்களைக் கலைத்துக் கலைத்து ஆடிக்கொண்டிருப்பது சுவாரசியமாகவே இருக்கிறது. ஆனாலும் பொது வேலைகளை இழுத்துப் போட்டுக்கொள்வது, எழுத்தாளனாக செம கடி. ஆனால் வேறு வழியில்லை, இவையும் செய்யவேண்டிய முக்கியமான காரியங்கள்.
நான் எழுத வேண்டியதும் கிழிக்கவேண்டியதுமே ஏகப்பட்டது. இதில் கவனம் ழ பொன்ற பொது விஷயங்களை செய்ய யாராவது இளைஞர்கள் முன்வருவார்களா என்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒருவரையும் காணவில்லை.