ஹேராம் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. படம் வெளியான போது சாரு நிவேதிதா எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி இது.
1947 பிரிவினையின்போது சாகேத் ராமின் மனைவி ராணி முகர்ஜியை முஸ்லீம்கள் கற்பழித்து, அவள் கழுத்தையும் அறுத்து, கொன்று போட்டுவிடுகிறார்கள். இந்தக் காட்சி மிகவும் விபரமாக, நுணுக்கமாக, ஆவேசமாக, பார்வையாளர்களை வெறி கொள்ளச் செய்யும்படி அணு அணுவாக விவரிக்கப்படுகிறது. கற்பழிக்கும் கும்பலைச் சேர்ந்த அல்தாஃப் என்ற இளைஞன் சாகேத் ராம் குடும்பத்திடம் கூலி வாங்கிப் பிழைத்தவன். ” எங்கள் உப்பை தின்றுவிட்டு எனக்கே துரோகம் செய்தாயே ” என்று கதறுகிறான் சாகேத்.
ஆனால் படத்தின் வேறு ஒரு காட்சியை இக்காட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அங்கே ஒரு கும்பல் தில்லி சாந்தினி செளக் என்ற பகுதியில் உள்ள முஸ்லீம்களைத் தாக்க வருகிறது. அந்தக் கும்பல் ஏதோ ஒரு கொள்ளைக் கூட்டத்தைப் போல் வெறும் கும்பலாக மட்டுமே இருக்கிறது. பெயர்கள் கிடையாது. ( முன்பே குறிப்பிட்ட காட்சியில் அல்தாஃப் என்ற பெயரும் அழுத்தமான பாத்திரம் உருவாக்கமும் உண்டு என்பதை கவனியுங்கள்! ) சாந்தினி செளக் காட்சியில் அக்கும்பல் ஒரு நிழலுருவத்தைப் போல் காட்டப்படுகிறது. அவர்கள் முஸ்லீம்களைத் தாக்க வருவதற்கான காரணமும் நியாயமும் கூட சொல்லப்படுகிறது. சாந்தினி செளக் முஸ்லீம்களிடம் துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் இருக்கின்றன. ஏன், அங்கே ஒரு பெரிய ஆயுதக்கிடங்கே இருக்கிறது !
தங்கள் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற முஸ்லீம் இளைஞர்களின் ஒரு தற்கொலைப் படையே அங்கு இருக்கிறது. இந்தக் காட்சி ஏதோ இரண்டு கொள்ளை கும்பல்களுக்கு இடையே நடக்கும் துப்பாக்கிச் சண்டையைப் போல் – ஒரு மெக்சிகன் கௌபாய் சண்டைக்காட்சியைப் போல் படமாக்கப்பட்டிருக்கிறது – குதிரைதான் மிஸ்ஸிங். ஆனால், சாகேத் ராமின் மனைவி கற்பழிக்கப்படும் காட்சியில், பாவம், ராணி முகர்ஜி ஒரு அப்பாவி. தன்னிடமுள்ள கைத்துப்பாக்கியில் குண்டுகளைக் கூட போட்டு வைத்துக் கொள்ளாமல் இருக்கிறாள். அதை ஏற்கனவே ஒரு காட்சியில் சாகேத் ராம் நையாண்டி வேறு செய்கிறான்.
திரும்பவும் சாந்தினி செளக் காட்சிக்கு வருவோம். அங்கு அவ்வளவு முஸ்லீம் பெண்களையும் குழந்தைகளையும் சாகேத் ராம்தான், தன் உயிரையும் பணயம் வைத்து காப்பாற்றுகிறான். அப்போது கூட பாருங்கள் – அந்தப் பெருமை சாகேத் ராமின் நண்பன் ஷாருக்கானுக்கு கிடைக்கவில்லை. துப்பாக்கிச் சண்டையில் ஷாருக்கான் செத்து விடுகிறான். என்ன செய்வது? இயக்குனரும் தயாரிப்பாளரும் கமல்ஹாசன் ஆயிற்றே !
வேறோர் காட்சி. சாகேத் ராம் வெற்று மார்புடன் பூணூல் துலங்க, கீழே வேஷ்டியைத் தார்ப்பாய்ச்சுக் கட்டி புஜங்கள் முறுக்கேற துப்பாக்கிப் பயிற்சி பெறுகிறான். சுழல் காற்று சூறையாய் வீசி குடுமி அவிழ்ந்து பறக்கிறது. பிராமணன் ஆயுதத்தை எடுத்துவிட்டான், இல்லையா கமல்? உச்சபட்ச இந்துத்துவ – பார்ப்பனிய – ஃபாசிச வெளிப்பாடு இது. இதுவே படத்தின் அடிப்படையான செய்தி எனலாம். ( வேறொரு காட்சியில் ஒரு இந்துத்துவ போராளி ‘ அபிவாதயே ‘ சொல்கிறான் உணர்ச்சி கொப்பளிக்க. எனக்கே மயிர்க்கால்கள் கூச்செறிந்த காட்சி அது ! ) விளம்பரப் படங்களிலும் சாகேத் ராமின் துப்பாக்கிப் பயிற்சி பெறும் இக்காட்சிதான் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்கால இந்துத்துவ ஃபாசிச எழுச்சி – ஆர்.எஸ்.எஸ்.ஸின் செல்வாக்கு – ஊடகங்களில் இதன் பிரதிபலிப்பு என்று எல்லாவற்றையும் இங்கே நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சில உதாரணங்கள் : சமீபத்தில் ‘ஜூனியர் விகட’னில் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேயின் கவர் ஸ்டோரி. ஹே ராம் படத்தைப் பார்க்க வைத்து அவரிடம் பேட்டி. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட ‘ மகாத்மாவை கொன்ற வெறியர்கள் ‘ என்று எழுதிய பத்திரிகைகளில் இன்று அவர்களுக்குப் போராட்ட வீரர்களைப் போன்ற, தியாகிகளைப் போன்ற அடைமொழிகள், பூர்ண கும்ப மரியாதைகள் !
சரோஜாதேவி புத்தகங்களில் நாம் ஒரு பொதுவான விஷயத்தைக் காண முடியும். செய்ய வேண்டியதையெல்லாம் செய்து விட்டு கடைசியில் அந்தப் பெண் சொல்லுவாள் – ‘ அக்காள் புருஷனை இனிமேல் டாவடிக்கக் கூடாது என்ற பாடத்தை கற்றுக்கொண்டேன் ‘ என்று. அதைப்போல் கமல் ஒரு முழு ஆர்.எஸ்.எஸ் கொள்கை விளக்கப் படத்தை எடுத்துவிட்டு கடைசியில் ‘காந்தி வாழ்க!’ ‘அன்பு வாழ்க!’ என்று முடிக்கிறார்.
- இது விமர்சனத்தில் ஒரு பகுதி மட்டுமே. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்பதே இதன் முக்கியத்துவம் ஆகும்.
” சினிமா : அலைந்து திரிபவனின் அழகியல் ” தொகுப்பிலிருந்து…
நண்பர் கணேஷ் அன்பு முகநூலில் பகிர்ந்தது. நன்றி கணேஷ்