பல சமயங்களில் என் கருத்துக்கள் திரிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது. அதற்கு நான் ஒரு விளக்கம் கொடுக்கிறேன். ஆனாலும் அந்த விளக்கம் காற்றில் விடப்பட்டு என்னுடைய திரிக்கப்பட்ட கருத்தே நிலைபெற்று விடுகிறது. ஐந்து ஆண்டுகள் கடந்தும் கூட சாரு ஒரு எழுத்தாளனின் படுகொலையை நியாயப்படுத்தினார் என்று சக எழுத்தாளர்கள் தங்கள் நேர்காணல்களில் சொல்ல நேர்கிறது. பிறகு நான் அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்க நேர்கிறது. எப்படி? ஐந்து ஆண்டுகளுக்கு முன் சொன்ன விளக்கத்தையே. இப்படியே என் திரிக்கப்பட்ட கருத்தே வரலாற்றில் பதிவாகிறது. கல்புர்கி கொலையைத்தான் சொல்கிறேன். கல்புர்கி இந்து மதத்தைத் தாக்கி எழுதிக் கொண்டிருந்தார். இந்தியா போன்ற ஒரு காட்டுமிராண்டி தேசத்தில் வாழ்ந்து கொண்டு, தேசமே மதத்துவேஷத்தில் இருந்து கொண்டிருக்கும் போது, அதிலும் அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் இந்து மதத்தைத் தாக்கினார். இதே விஷயத்தை அவர் இஸ்லாம் பற்றிச் செய்திருந்தாலும் அதுதானே நடக்கும்? சல்மான் ருஷ்டி மேற்கத்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அப்படித்தானே ஆனது? இன்றைய நிலையில் மத சகிப்புத்தன்மை என்பது கிறித்தவத்தில் மட்டுமே உள்ளது. இந்து மதத்தில் முன்பு இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது இல்லை. அதற்கும் என்ன காரணம் என்றால், இந்து மதமே அழிந்து விடும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால்தான் பண நீக்க நடவடிக்கை என்ற மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட மோடியை மீண்டும் தேர்தலில் தேர்ந்தெடுத்தார்கள். இந்து மதத்தை மோடி என்ற ஃபாஸிஸ்ட் காப்பாற்றுவார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். ஒரு மதத்தை ஒரு ஃபாஸிஸ்ட் எப்படிக் காப்பாற்ற முடியும் என்பதும், அப்படியெல்லாம் இந்து மதம் அழிந்து விடாது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்தியா போன்ற அறிவிலிகளின் தேசத்தில் மதம் என்பது ஒவ்வொருவரின் உயிரை விட மேலானதாக எல்லோரும் நம்புகிறார்கள். நான் என்ன சொன்னேன் என்றால், இந்த அளவு கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கும் போது நீங்கள் ஏன் இந்து மதத்தைத் தாக்குகிறீர்கள்? கொல்லப்படுவோம் என்று தெரியாதா? கடலில் போய் குதித்து விட்டு கடல் கொன்று விட்டது கடல் கொன்று விட்டது என்று கத்தினால் என்ன அர்த்தம்? இங்கேதான் மதத்தைப் பொறுத்தவரை கருத்துச் சுதந்திரம் இல்லை என்று ஆகி விட்டதே? அப்புறம் என்ன? இஸ்லாம் பற்றி கல்புர்கி இப்படி விமர்சனம் பண்ணியிருக்க முடியுமா? அதற்கும் இதேதானே நடந்திருக்கும்?
மேற்கூறிய காரணங்களால்தான், குடியுரிமைச் சட்டம் பற்றியும் தில்லிக் கலவரம் பற்றியும் நான் எதுவும் எழுதவில்லை. எல்லா சட்டத்துக்கும் தெருவில் இறங்கிப் போராடினால் அப்புறம் எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. அந்தச் சட்டத்தில் பிரச்சினை இருந்தால் அதை நாம் நீதிமன்றத்தில்தான் தீர்த்திருக்க வேண்டும். தெருவில் வந்து போராடி இத்தனை பேரை பலி கொடுக்க வேண்டுமா? கலவரம் தில்லியில் நடந்தது என்பதை விட கிழக்கு தில்லியில் நடந்தது என்பதை கவனியுங்கள். இதே கிழக்கு தில்லியில்தான் திர்லோக்புரி படுகொலைகள் நடந்தன. ஒரே குறிப்பிட்ட பகுதியில் 2000 சீக்கியர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். அதை நான் கண்டேன். கலவரத்தில் ஈடுபவர்களை இந்துக்கள், முஸ்லீம்கள் என்று சொல்வதை விட அவர்களை லும்பன்கள் என்று அழைப்பதே பொருந்தும். கிழக்கு தில்லி பூராவும் லும்பன்கள்தான் அதிகம். காரணம், இந்திய சமூகம் அவ்வாறாகத்தான் விளிம்புநிலை மனிதர்களை உருவாக்கிக் கொண்டே வருகிறது. அவர்கள் வெறிநாய்களைப் போன்றவர்கள். எல்லா விளிம்புநிலை மனிதர்களையும் சொல்லவில்லை. ஆனால் லும்பன்கள் அங்கிருந்துதான் உருவாகிறார்கள். மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவன் கலவரத்தில் ஈடுபடுவதில்லை. ஈடுபடுகின்றவர்கள் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். அவர்களுக்கு மதவெறி என்பது போதை. தங்களின் அர்த்தமற்ற வாழ்வுக்கு இப்படி கலவரத்திலும் கொலைகளிலும் ஈடுபடுவதன் மூலம் அவர்கள் அந்த அர்த்தமற்ற தன்மையைத் தாண்டுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மதவெறி சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதற்காக நாம்தான் வெட்கப்பட வேண்டும். அந்த லும்பன்கள் ஒன்றும் மேட்டுக்குடி பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல என்பதை ஊன்றி கவனியுங்கள். நான் சொல்வது புரியும்.
இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மனிதனும் – நான் இந்துக்களை மட்டும் சொல்லவில்லை; இங்கே மதச் சார்பற்ற தன்மை என்பது இந்துக்களையும் இந்து மதத்தையும் திட்டுவது என்பதாகவே மலினப்பட்டுக் கிடக்கிறது; அந்த வளையத்தில் நான் வர மாட்டேன் – இங்கே வாழும் ஒவ்வொருவரும் தங்கள் மத அடையாளத்தி வீட்டிலேயே வைத்து விட்டு வந்தால்தான் இந்தியாவில் மதக் கலவரம் நடக்காது. இது ஐரோப்பாவில் சாத்தியமாகி இருக்கிறது. கடவுள் வழிபாடு, மத நம்பிக்கை என்பதெல்லாம் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் என்னைப் போன்ற ஒரு பைத்தியக்காரனின் கனவு. இங்கே உள்ள பெரும்பான்மையோர் – நாத்திகவாதிகளைத் தவிர பெரும்பாலானோர் தங்கள் சாதியையும் மதத்தையும் உள்ளூர நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். மத நேயம் என்பது இப்படித்தான் – இந்த நிலைமைக்குத்தான் கொண்டு செல்லும்.