நண்பர்களை என் வீட்டில் சந்திப்பதில்லை; அவர்களோடு என் வீட்டில் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை; ஃபோனிலும் தொடர்பு கொள்வதில்லை என்பது நான் பின்பற்றும் கடும் விதி. இதை நான் மீறினால் என்ன ஆகும் என்று நண்பர் தக்ஷிணாமூர்த்தியோடு என் வீட்டில் கதைத்தது பற்றி நேற்று எழுதியிருந்தேன். உண்மையில் அது பற்றி ஐம்பது அறுபது எழுபது பக்கம் எழுதலாம். அவ்வளவு மெட்டீரியல் கொடுத்திருக்கிறார் மூர்த்தி. ஆனால் எந்தத் தவறும் மூர்த்தியின் மீது இல்லை. எனவே அவர் இங்கே வந்து வருத்தம் தெரிவிக்க அவசியமே இல்லை. இதெல்லாம் ஒரு நிலை. ஒரு சூழல். அவ்வளவுதான். அவந்திகாவுக்கு என் மீது சொல்லொணா அன்பு, பிரியம். ஒரு தாய் தன் சவலைப்பிள்ளையை சீராட்டுவது போல் என்னைப் பாதுகாக்கிறாள்.
மூர்த்தி வந்து விட்டுப் போனதும் ஏ.கே. ஆறுமுகம் என்றால் யாருப்பா என்றாள். அய்யய்யோ, ஏ.கே. ஆறுமுகம் பெயர் உனக்கு எப்படித் தெரியும் என்று படு ஆச்சரியமாகக் கேட்டேன். (இங்கே ஏ.கே. ஆறுமுகம் என்று பெயரை மாற்றி இருக்கிறேன். பெயரைப் போட்டால் ஆபத்து!) முகநூல் ஆக்டிவிஸ்டுகளுக்கு ஏ.கே. ஆறுமுகத்தைத் தெரியும். ஆனால் அவந்திகா முகநூலில் இருக்கிறாளே தவிர ஆக்டிவிஸ்டெல்லாம் கிடையாதே? அவளுக்கு எப்படி ஏ.கே. ஆறுமுகத்தைத் தெரியும் என்று என்னால் யூகிக்கவே முடியவில்லை. மேலும் ஏ.கே. ஆறுமுகம் என்றால் யார் என்று அவள் ஒருநாள் என்னைக் கேட்கக் கூடும் என்று நான் கற்பனை கூட பண்ணினதில்லை. அதனால் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்று உனக்கு எப்படி ஏ.கே. ஆறுமுகத்தின் பெயர் தெரியும் என்றேன்.
மூர்த்தி சொன்னார் என்றாள். அடப் பாவி! ஏ.கே. பெருமாள் பற்றி மூர்த்தி சொல்லும் அளவுக்கு என்ன சம்பந்தம், என்ன காண்டெக்ஸ்ட்மா என்றேன். இன்னமும் எனக்கு ஆச்சரியம் அடங்கவில்லை. அது இருக்கட்டும் சாரு, ஏ.கே. பெருமாள் பற்றிச் சொல்லு, அவர் யார், அவர் வயது என்ன, அவர் எழுத்தாளரா? எல்லாம் கேட்டாள். எல்லாவற்றுக்கும் பதில் சொன்னேன்.
ஆமாம், ஏ.கே. பெருமாள் பற்றி மூர்த்தி பிரஸ்தாபித்ததன் காரணம் என்ன? – இது நான்.
அது ஒன்னுல்லப்பா, ஏ.கே. பெருமாளை மூர்த்தி படிப்பாராம். அவ்ளோதான்.
அவ்வளவுதான் இல்லை. இப்போது ஏ.கே. பெருமாளுக்கு ஒரு ஃபைல் போட்டாயிற்று. அதில் அவர் பயோடேட்டாவும் பதிந்தாயிற்று. இனிமேல் அவர் நல்லவரா கெட்டவரா என்ற விபரங்கள் சேகரிக்கப்படும். எப்படி? நான் வேறு யாருடனாவது பேசும்போது ஏ.கே. பெருமாள் பற்றிய பேச்சு வரலாம். அல்லது, யாரேனும் சொல்லலாம். பெயரை ஃபைலில் பதிந்து விட்டால் விபரத்துக்கா குறைச்சல்? அதுவாக வந்து வந்து விழும்.
இனிமேல் ஏ.கே. பெருமாளை என் வீட்டு வாழ்விலிருந்து தூக்கி விட்டேன். எதுக்கு என்னால் இன்னொருத்தருக்குப் பிரச்சினை?
இது ஒரே ஒரு பக்கம். இன்னும் குறைந்தது 40 பக்கம் உள்ளது. அதை எழுதி விட்டேன். நாவலில் காணலாம்.
எனக்கு இதையெல்லாம் எழுதும்போது என் அத்யந்த நண்பரின் ஞாபகம் வருவதைத் தடுக்கவே முடியவில்லை. என்னுடைய அந்த வட இந்திய நண்பனுக்கு நைனிட்டால் அருகில் ஒரு காட்டின் உள்ளே ஒரு ஹில் ரிஸார்ட் உண்டு. அதன் ஒருநாள் வாடகையே 20,000 ரூ. நீயும் ஒரு நண்பருமாக அங்கே வந்து ஒரு வாரம் வரை தங்கிக் கொள்ளலாம் என்றான் நண்பன். நானும் சீனியும் போகலாம் என்று திட்டம். அப்போது சீனி ஒரு முக்கிய பணியின் நிமித்தமாக வெளிநாட்டில் ஆறு மாதம் தங்கியிருந்தார். என் நண்பரிடம் இது பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன். நண்பர் என் மனசாட்சி மாதிரி. அவருக்குத் தெரியாத ரகசியமே என்னிடம் எதுவும் இல்லை. என் வலது கை. என் மனம். எல்லாம் அவர்தான். சீனியும் வெளிநாட்டில் இருக்கார். இன்னொரு நண்பருக்கு எங்கே போவது என்று சொன்னேன். ஏன், உன் மனசாட்சி நண்பரையே அழைத்துக் கொண்டு போகலாமே என நீங்கள் கேட்கலாம். நண்பர் டீடோட்டலர். மேலும் படு பிஸியானவர். என்னதான் என் வலது கரம் என்றாலும் பழக்க வழக்கங்களில் எனக்கு நேர் விரோதம். அது விஷயம் அல்ல; அவர் என்ன யோசனை சொன்னார் தெரியுமா? ஏன் கவலைப்படுறீங்க சாரு, அவந்திகாவை அழைச்சுட்டுப் போக வேண்டியதுதானே?
அந்தக் கேள்வியை மட்டும் இன்னும் ஏழு ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன். வீட்டில் ரெண்டு நாய்கள் இருந்தன. வெளியிடத்தில் சாப்பிட்டால் அவந்திகாவுக்கு உடனடியாக வயிற்றுவலியும் ஜுரமும் வந்து விடும். குடிப்பது பாவம் என்று நம்புபவள் அவள். கிட்டத்தட்ட அவள் ஒரு சமண முனி. இதுவும் நண்பருக்குத் தெரியும். இருந்தாலும் நண்பரின் யோசனை.
என்னதான் சொல்லுங்கள், கொஞ்சம் இந்துத்துவா எல்லாம் ஒட்டிக் கொண்டிருந்தாலும் பிராமண நண்பர்கள் என்னை இப்படியெல்லாம் துன்புறுத்துவதில்லை. அவர்கள் இந்துத்துவாவாக இருந்தால் எனக்கு என்ன? என்னை அது ஒருவிதத்திலும் பாதிப்பதில்லையே?
எல்லாம் சரியாக இன்னும் ரெண்டு நூற்றாண்டு ஆகும் போல் இருக்கிறது.