அராத்து
16.03.2020
தமிழ் இந்துவில் ராஜன் சாரு நிவேதிதாவைப்பற்றி எழுதியதைத் தொடர்ந்து நான் எழுதியது நேற்று வெளிவந்து இருந்தது. தமிழ் இந்துவுக்கு எழுதி அனுப்பியதற்குப்பின் அந்தக் கட்டுரையில் எனக்குத் தோன்றிய விஷயங்களை இன்னும் சேர்த்துக்கொண்டே போனேன். மொத்தத்தையும் இங்கே ஷேர் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நன்றி : தமிழ் இந்து !
ஒரு சடங்கு போல நானும் முதலிலேயே கூறி விடுகிறேன். தமிழ் இந்துவில் வந்த சாரு நிவேதிதாவைப் பற்றிய ராஜனின் கட்டுரை மிக முக்கியமான ஒன்று.
ஒரு சுரணையுள்ள சமூகம் “காம ரூப கதைகளை “ தடை செய்திருக்கும் என்று சாரு சொல்வதில் நுணுக்கமான ஒரு விஷயம் இருக்கிறது. தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர் எழுதவில்லை. தடை செய்யுங்கள் என்றும் மன்றாடவில்லை. காம ரூப கதைகளை திறந்த மனதோடு படிப்பதற்கு முந்தைய நிலைதான் தடை செய்வது. அதற்கு அடுத்த நிலை என்பது ,அதைப்பற்றி அறிவுத்தளத்தில் ஒரு உரையாடல் நிகழ்ந்து , பிறகு அந்தத் தடையை நீக்கி அந்தப் புத்தகத்தை ஒரு சமூகம் படிக்கும் நிலைக்குக் கொண்டு செல்வது.
இந்த இடைப்பட்ட “தடை” காலத்தில் உலகம் முழுக்க இருக்கும் இண்டெலிஜென்ஷியாவால் கவனிக்கப்பட்டு – ஏம்பா தடை செஞ்சாங்க ? – கொஞ்சம் புகழடைந்து , பெரும் வாசகப் பரப்பை எட்டுவது.
இப்படித் தடை செய்வதின் மூலமாக புகழ் அடைவதே ஒரு குறுக்கு வழிதான். இந்தச் சமூகம் எப்படி இருக்கிறது பாரு என்ற கிண்டல்தான் , என் புத்தகத்தைத் தடை செஞ்சாலாவது பெரிய ஆள் ஆகி இருப்பேன் என்ற சாருவின் நக்கல் ஸ்டேட் மெண்ட்.
“நான் அரசியல்வாதிகளைப் பற்றி எழுதி இருப்பதைப்போல வெளிநாட்டில் யாரேனும் எழுதி இருந்தால் , கைது செய்யப்பட்டு இருப்பார்கள் . இங்கே அப்படி எல்லாம் இல்லை , சுதந்திரமா எழுத முடியிது. ஏன்னா இங்க எந்த அரசியல்வாதியும் இலக்கியத்தைப் படிப்பதே இல்லை” என்ற சாருவின் இதே கிண்டலுடன் இதைப் பொருத்திப் படிக்க வேண்டும்.
இந்தச் சமூகத்துக்கு சுரணை இல்லை என்பது எல்லாம் அடுத்த படி. இந்தச் சமூகம் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கவில்லை என்பதே சாருவின் முதல் குற்றச்சாட்டு. படித்தால்தானே சுரணை இருக்கிறதா இல்லையா என்பதே தெரியும் !
இலக்கியத்திலும் கலாச்சாரத்திலும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் கோலோச்சிக் கொண்டிருந்த நாம் இன்று எந்த நிலையில் இருக்கிறோம் என்று மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இதில் உள்ள அவலம் புரியும். சாரு அடிக்கடி குறிப்பிடும் ஃப்ரான்ஸ் , சீலே போன்ற நாடுகளின் அதிபர்களுக்கும் , அரசியல்வாதிகளுக்கும் , செல்வந்தர்களுக்கும் , பல்கலைக் கழகங்களுக்கும் அங்கிருக்கும் எழுத்தாளர்களைத் தெரியும். அவர்களுடன் ஒரு பார்ட்டியிலாவது சந்திப்பார்கள். அந்த எழுத்தாளர்களின் கருத்துக்கள் அந்த சமூகத்தில் ஒரு சின்ன தாக்கத்தையாவது ஏற்படுத்தும். ஒரு எழுத்தாளரின் எழுத்து அந்த ஆட்சியாளர்களை குறைந்த பட்சம் முகம் சுளிக்கவாவது வைக்கும்.
இங்கே பிரதமர் , முதலமைச்சர் முதல் , அமைச்சர்கள் கவுன்சிலர் வரை யாருக்கேனும் நம் நாட்டு இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் பெயர்களில் ஒன்றாவது தெரியுமா ? மற்ற மாநிலங்களைக் கூட விட்டு விடலாம். கேரளா , மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா இந்த விஷயத்தில் தமிழகத்தை விட சில அடிகளாவது முன்னே இருக்கின்றன. இங்கே தமிழகத்தில் , முதலமைச்சர் முதல் எம் எல் ஏக்கள் வரை எவருக்கேனும் சாரு நிவேதிதா , ஜெயமோகன் என்றால் யார் என்றாவது தெரியுமா ? இங்கே இருக்கும் தொழில் அதிபர்கள் , பல்கலைக் கழகங்கள் எழுத்தாளர்களை எப்போதாவது யோசித்தாவது பார்த்து இருப்பார்களா ?
ஒரு சமூகத்தின் மேல் மட்டமே இந்த லட்சணம் என்றால் ?
ஒரு எழுத்தாளனுக்கு, தமிழகத்தில் பொது மக்கள் இடையே என்ன அடையாளம் ? அவன் ஒரு அனானிமஸ் .
இந்த அடிப்படையில்தான் தடை செய்தாலாவது புகழ் பெற முடியும் என்று சாரு “விரக்தி கிண்டல்” அடிக்கிறார்.
இந்த நகைச்சுவையான சாருவின் ஸ்டேட்மெண்டை சீரியஸாக எடுத்துக்கொண்டு அணுகி இருப்பதுதான் ராஜன் கட்டுரையின் பிரதானப் பிழையாக நான் பார்க்கிறேன்.
ராஜன் , தன் கட்டுரையில் சமூகம் என்று சில இடங்களிலும் , ஜாதி என்று சில இடங்களிலும் குறிப்பிடுகிறார். வழக்கமாக வார இதழ்கள் சாதி என்பதற்கு பதில் சமூகம் என்று குறிப்பிடும். இங்கே தமிழ் நாட்டில் தனியாகச் சமூகம் என்ற ஒன்றே கிடையாது, ஜாதிக்குழுக்களைத்தான் சமூகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
பெருமாள் முருகன் ஒரு ஜாதி சார்ந்து கதை எழுதி அதனால் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறார். சாரு தன்னை அடையாளமற்று பிரதிநிதித்துவப் படுத்திக்கொண்டு படைப்புக்களை எழுதுகிறார்.அதனால் சாருவுக்கு எதிர்ப்பு இல்லை என்பதுதான் ராஜன் கட்டுரையின் உள்ளடக்கம்.
சாருவின் “எக்ஸிடென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் “ என்ற முதல் நாவலில் தெளிவாக அவர் சார்ந்த நாயுடு என்ற ஜாதி தெரியும். பெருமாள் முருகன் மாதிரி பொதுவாக ஒரு ஜாதியைப் பற்றி அவதூறு கிளப்பாமல் ஜாதியைக் குறிப்பிட்டு ,தன் குடும்பத்தை பலிகடா ஆக்கி இருப்பார் சாரு நிவேதிதா. நாவலில் , கதாநாயகனின் தங்கை விபச்சாரியாக ஆகி விடுவாள்.
காப்ரியல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய “முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் “என்ற குறுநாவலை வாசித்து இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் மரண மொக்கையான நாவல் என்பது என் கருத்து. கொலை நடக்கும் அந்த அத்தியாயம் மட்டும் கொஞ்சம் விசித்திரமாக ஒரு அபத்தத் தொனியில் தனித்து இருக்கும். அந்த நாவலுக்காக அவரின் குடும்பம் வழக்கு போட்டது. வழக்கு 17 ஆண்டுகளாக நடந்து வந்தது என்பதை என் நினைவில் இருந்து எழுதுகிறேன்.
தீர்ப்பு வழங்கும் போது நீதிபதி மார்க்கேஸுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குகிறார். “இப்படி எந்தக் கதையை எடுத்தாலும் எதேனும் ஒரு குடும்பம் இது எங்கள் கதை என்று உரிமை கோர முடியும். இது எழுத்தாளரின் உரிமையிலும் சுதந்திரத்திலும் குறிக்கிடுவது ஆகும். ஒரு கதையை எழுத்தாளர் எழுதி முடித்து விட்டார் என்றால் அது அவரின் சொத்து மற்றும் இண்டெலக்சுவல் ப்ராப்பர்டி” இதையும் என் நினைவில் இருந்தே எழுதுகிறேன்.
இதைப்போன்ற ஒரு தீர்ப்பை இந்திய சமூகத்தில் பார்க்க முடியுமா ? இதற்கான சென்ஸிபிலிட்டி இந்திய நீதித்துறையில் உள்ளதா ? அப்படித் தீர்ப்பு வந்தாலும் சமூகம் அதைப் புரிந்து கொள்ளுமா ? இதில் உள்ள அபத்தம் என்னவென்றால் இங்கே எந்தக் குடும்பமும் வழக்குப் போடாது. இப்படி ஒரு நாவல் வந்திருக்கிறது என்றே எந்தக் குடும்பத்துக்கும் தெரியாது.
சாரு நிவேதிதாவின் “எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் “ நாவலை எதிர்த்து சாரு குடும்பம் வழக்கு போட்டிருந்தால் கூட சாரு கொஞ்சம் பிரபலமாகி இருக்க முடியும்.
சாருவின் குடும்பம் குத்து மதிப்பாக யாரோ சொல்லி என்னமோ புரிந்து கொண்டு , நம்ம குடும்பத்தைப் பத்தி என்னமோ தப்பா எழுதி இருக்கான் என்று தனிப்பட்ட முறையில் சாருவுடன் கொஞ்ச நாள் வருத்தப்பட்டு இருந்தது , அவ்வளவுதான்.
மார்க்கேஸின் இந்த மொக்கை குறுநாவல் பிரபலமானதற்கு அவரின் குடும்பம் போட்ட இந்த வழக்கு முக்கியமான காரணம்.
இங்கு குடும்ப அளவிலேயே சுரணை உணர்வு இங்கே இல்லை. எங்கே சாதி அளவில் இருக்கப் போகிறது ? சமூக அளவில் இருக்கப் போகிறது ?
பெருமாள் முருகன் நாவலுக்கு எதிர்ப்பு வந்தற்குக் கூட நான் சாதி அளவில் உள்ள சுரணை உணர்வு என்று எடுத்துக்கொள்ளவில்லை. அவர் அதில் ஒரு “ஷாக் வேல்யூ”வை வைத்து இருந்தார். அது மட்டுமல்லாமல் , அந்த சாதி தமிழ் நாட்டில் ஒரு முக்கியமான சாதி. இந்த சாதிக்காரங்க , புள்ளை இல்லையென்றால் , கோயிலில் போய் யார் கூட வேணா படுத்து புள்ளை பெத்துப்பாங்க என்று எழுதியதால் எதிர்ப்பு வந்தது.
அது ஒரு இலக்கிய ரீதியான எதிர்ப்போ படைப்பு ரீதியான எதிர்ப்போ அல்ல.
இந்த எதிர்ப்பு என்பது , ஒரு அவதூறுக்கான எதிர்ப்பு. ஒரு ஜாதியைப் பற்றி தவறாக பேசிவிட்டால் அந்த ஜாதிக்குள் இருந்து வரும் சாதாரண எதிர்ப்பு. அந்த ஜாதியைச் சேர்ந்த 100 பேர் அவரின் மாதொரு பாகனை முழுதாகப் படித்து இருந்தால் பெரிய விஷயம்.
சல்மான் ருஷ்டிக்கு வந்த எதிர்ப்பையும் இதையும் ஒப்பிடுவதே அபத்தம்.
சாரு சொல்லும் எதிர்ப்பு அல்லது தடை என்பது , ஒரு இலக்கியப் பிரதியை மொத்தமாக அதன் கருத்தியல் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து எதிர்ப்பது. அதற்கு முழுதாக அந்தப் படைப்பை வாசிக்க வேண்டும். அதை எதிர்க்கும் அளவுக்கு திராணி இருக்க வேண்டும். அந்தத் திராணி வழக்கொழிந்து போய் விட்ட பழைய கருத்தியல்கள் கொடுத்தத் தெம்பாகக் கூட இருக்கலாம். ஆனால் இதெல்லாம் தமிழ் நாட்டில் சாத்தியமே இல்லை.
பெரியார் மண் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ் நாட்டில் ஏன் இலக்கியப் படைப்பு ஒரு சாதியைச் சார்ந்தோ ஒரு வட்டாரத்தைச் சார்ந்தோ இருக்கவேண்டும் ? இந்த நேட்டிவிட்டி மண்ணாங்கட்டி எல்லாம் சினிமாவுக்கு மட்டும் போதாதா ? இலக்கியத்திலும் நொட்ட வேண்டுமா ?
சார்வாகனின் “முடிவற்ற பாதை “ , புதுமைப்பித்தனின் “பொன்னகரம்” மற்றும் மௌனியின் சிறுகதைகள் எல்லாம் எந்த சாதியைப் பிரதிபலிக்கிறது ? எந்த வட்டாரத்தை முன்னிருத்துகிறது ?
நாவல் என்று எடுத்துக்கொண்டால் , சம்பத்தின் இடைவெளி , சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் ,க.நா.சு வின் அசுரகணம் எந்த சாதி அல்லது சமூகத்தைச் சுட்டுகிறது ?
இவைகளை எல்லாம் அடையாளமற்ற படைப்புகள் என்று சொல்வோமா ?
தமிழ் நாட்டில் சாதி அல்லாமல் வட்டாரம் அல்லாமல் எழுதப்பட்ட படைப்புகள் எல்லாம் இலக்கியம் இல்லையா ? அதில் யாரும் தன்னைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடியாதா ?இந்தப் படைப்புக்கள் எல்லாம் அடையாளம் அற்ற சிலரால் அல்லது அடையாளத்தைத் தொலைத்த சிலரால் மட்டும் தான் தொடர்புப் படுத்திக்கொண்டு வாசிக்கப்பட்டதா ?
எந்த ஒரு சாதிய மற்றும் சமூக அடையாளம் இல்லாமல் இலக்கியத்தின் உச்சமான மற்றும் தனித்துவமான படைப்புக்களை எழுதிய நகுலன் மற்றும் கோபி கிருஷ்ணனை எதில் சேர்ப்பது ? இவர்களின் படைப்புக்களை உள்வாங்கிக்கொண்டு ரசித்தவர்கள் எல்லாம் அடையாளத்தைத் தொலைத்தவர்களா ? வேற்றுக்கிரக மனநிலையில் வாழ்பவர்களா?
சாதிய அடையாளங்களுடன் , வட்டார வழக்குடன் எழுதப்படும் படைப்புகள் இலக்கியத்தில் ஒரு சிறு பிரிவுதானே அன்றி அவை மட்டுமே இலக்கியம் அல்ல.அவைகளை மட்டுமே தமிழகத்தில் ஒரு மனிதன் தொடர்புப் படுத்திக்கொள்ள முடியும் என்பதில்லை.
இலக்கிய ஷாக் வேல்யூவிற்காக , தமிழகத்தில் பிரபலமான ஒரு ஜாதியை எடுத்துக்கொண்டு , திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையின் அப்பா மணப்பெண்ணை புணர்ந்துப் பார்த்து விட்டுத்தான் மகனிடம் , அவள் நல்ல பெண் என்று அத்தாட்சி கொடுப்பார் என்று எழுதினால், தடை என்ன ? அந்த எழுத்தாளரின் வீடே கொளுத்தப்படும். இந்த குறுக்கு வழியைத்தான் சாரு கிண்டல் செய்கிறார்.
சாரு நிவேதிதாவின் படைப்புகளில் ஒரு சாதி என்று இல்லை , ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தையே கிண்டல் அடிக்கிறார். ஒரு எதிர்வினை இல்லை. இதைத்தான் சுரணை அற்ற சமூகம் என்கிறார்.
தன்னுடைய “ராஸலீலா” நாவலில் இந்திய அஞ்சல் துறையை அக்குவேர் ஆணிவேராக கிழித்து தொங்க விட்டிருப்பார். ஏன் ? சாதி பற்றி எழுதினால்தான் ஒரு குழு வெகுண்டு எழுமா ? இந்திய அஞ்சல் துறை என்பது ஒரு சின்ன ஜாதிக்குழுவைத் தாண்டி அதிக எண்ணிக்கையில் வேலைபார்ப்பவர்களைக் கொண்டது இல்லையா ? அவர்கள் கொதித்து எழ மாட்டார்களா ? என்ன நகைச்சுவை எனில் இந்திய அஞ்சல் துறையில் வேலை பார்ப்பவர்களில் அதிக பட்சம் பத்து பேர் இந்த நாவலைப் படித்து இருந்தால் பெரிய விஷயம்.
இந்த நாவல் திரைப்படமாக வந்தால் , இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் போராடுவார்கள். அந்தத் திரைப்படத்திற்குத் தடை கோருவார்கள். அந்த திரைப்படம் பிரபலமாகும். இதுதான் இங்கே இருக்கும் அபத்தம். அஞ்சல் ஊழியர்கள் என்று இல்லை, மருத்துவர்கள் , வக்கீல்கள் , ஐ ஏ எஸ் என எவரும் திரைப்படத்தில் தங்களைத் தவறாகச் சித்தரித்து விட்டார்கள் என்றுதான் தடை கேட்டு இருக்கிறார்களே ஒழிய , எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் எதிர்த்துத் தடை கோரியதில்லை.
சாருவின் சிறுகதைகள் மற்றும் நாவல்களில் தேவைக்கு ஏற்ப , சாதிகளும் வட்டார வழக்குகளும் ஆங்காங்கே வந்து கொண்டுதான் இருக்கின்றன். அவ்வா சிறுகதையில் “அவ்வா “ என்ற தலைப்பே நாயுடுக்கள் மட்டும் சொல்லக்கூடிய அவ்வா. பிராமணர்கள் , முஸ்லீம்கள் என அவரின் நாவல்களில் தேவைப்படும் இடங்களில் வந்து கொண்டுதான் இருப்பார்கள். முஸ்லீம் அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிராக சரக்கு அடிப்பான். பிராமணன் அவன் சாதி நம்பிக்கைக்கு எதிராக புலால் உண்ணுவது முதற்கொண்டு எல்லாம் செய்வான்.
ஐயப்ப பக்தர்கள் என்பது சாதியைத் தாண்டிய பெரும் கூட்டம் அல்லவா ? புதிய எக்சைல் நாவலில் ஐயப்பனுக்கு எதிராக – அந்த பெரும் விபத்தை முன்வைத்து – விமர்சனம் வைத்து இருப்பார். எந்த ஐயப்ப பக்தர் அதை படித்து இருப்பார் ? படித்து இருந்தால் ஏன் அவரால் கனக்ட் செய்து கொள்ள முடியாது ? ஐயப்ப பக்தர் அடையாளம் அற்றவரா ? தமிழகத்தில் வாழும் யாரும் சாதியைத் தாண்டி தன்னை வேறு எதனுடனும் அடையாளப் படுத்திக்கொள்ள மாட்டார்கள். ஜாதி மட்டுமே இங்கே பிரதானம் , அது மட்டுமே வாழ்க்கை , அதுவே இலக்கியம் என்ற தொனி ராஜன் எழுதிய கட்டுரையில் வருகிறது. இது அவருக்குத் தெரியாமலேயே வந்திருக்கலாம்.
இன்னும் சுலபமாகப் புரிய வேண்டும் என்றால், தமிழ்ப்பெண்களின் கற்பைப் பற்றி குஷ்பு சொன்ன ஒரு கருத்துக்காக – அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை எனினும் – தமிழகம் முழுக்க போராட்டம் மற்றும் தமிழ்நாடு முழுக்க அவர் மீது வழக்கு தொடரப்பட்டு தாலுக்காத் தாலுக்காவாக இழுத்தடிக்கப்பட்டார். அவர் வீட்டின் மீது கல்லெறியப்பட்டது. சில அரசியல் இயக்கங்கள் இதில் முழு மூச்சாக இறங்கின.
இதில் குஷ்பு எந்த சாதியையும் , எந்த வட்டாரத்தையும் குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
குஷ்பு சொன்னதைத் தாண்டி பல பகீர் ரக கருத்துக்களை சாரு நிவேதிதா தன்னுடைய நாவல்களில் , டிவி பேட்டிக்களில் , கட்டுரைகளில் சொல்லி இருக்கிறார். ஆனால் அவை எல்லாம் எந்த ஒரு அலையையும் கிளப்ப வில்லை. பேச்சு மூச்சே கிடையாது.
இந்த அடிப்படையில்தான் சாரு , தன்னுடைய காமரூப கதைகள் தடை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
சாரு எழுதிய உன்னத சங்கீதத்தை , “ஹிப் ஹாப் ஆதி” எழுதி இருந்தால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பார் . தமிழக மக்களுக்குச் சுரணை உணர்வு இல்லாததால் சாரு உயிருடன் நடமாடிக் கொண்டு இருக்கிறார்.