வரமும் சாபமும்…

இந்தியத் தொன்மங்களில் வரம் – சாபம் பற்றின கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  விமோசனம் இல்லாத சாபமே இந்தியத் தொன்மத்தில் இல்லை. அதனால் எனக்குக் கிடைக்கும் சாபங்களை வரமாகவே எடுத்துக் கொள்ளும் இயல்பு பெற்றேன். பாருங்கள்.  இந்த 2020-ஆம் ஆண்டை நான் பயணங்களுக்காகவே ஒதுக்கி இருந்தேன்.  ஃபெப்ருவரி மத்தியில் கிளம்பி பெர்லின் போய், அங்கே வசிக்கும் நஃபீஸுடன் சேர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காரிலேயே சுற்றலாம் என்பது திட்டமாக இருந்தது.  மார்ச் முதல் வாரம் முடிய.  மூன்று வாரங்கள்.  எதேஷ்டம்.  செக்கில் ப்ராக், பிறகு ஸ்லொவேனியா, ஹங்கெரி (புடாபெஸ்ட்), க்ரோஷியா, போஸ்னியா/ஹெர்ஸகோவினா – பிறகு அங்கிருந்து விமானத்தில் போலந்து – பிறகு பெர்லின்.  நஃபீஸ் ஜெர்மன் குடிமகன், ஏற்கனவே பல நண்பர்களையும் உறவினர்களையும் அங்கே வரவழைத்திருக்கிறார் என்பதாலும், நானும் போக வர விமான டிக்கட் எடுத்து வைத்திருந்ததாலும், என் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இருந்ததாலும் – இப்படி எந்தக் காரணத்தினாலும் வீசா கொடுக்க மறுக்க முடியாத வலுவான நிலையில் விண்ணபித்தேன்.  வீசா மறுக்கப்பட்டது.  இப்போதுதான் தெரிகிறது, போயிருந்தால் அங்கே மாட்டியிருப்பேன்.  இல்லாவிட்டால், இங்கே தனிமைப்படுத்தப்பட்டிருப்பேன். 

அமெரிக்கா கதைதான் இதை விட காமெடி.  ஒருத்தருக்கு 50 வயதில்தான் கல்யாணமே நடக்கிறது.  அந்த நேரம் பார்த்து கல்யாணத்துக்குத் தடை என்றால் அவரது ஜாதகத்தை என்னவென்று சொல்வது?  நானே இருந்து இருந்து என்னுடைய அறுபத்தாறாவது வயதில் – இரண்டு முறை ஏற்கனவே அமெரிக்க வீசா மறுக்கப்பட்ட நிலையில் – இந்த முறை க்ரூப் டூராவது அடித்து விடுவோம் என்று எண்ணி, ஜூன் மாதம் கிளம்புவதற்கு மார்ச்சில் வீசாவுக்கு விண்ணப்பிப்போம் என்று நினைத்திருந்தேன்.  இப்போது பார்த்தால் உலகமே அழியப் போகிறது என்கிறார்கள்.  இனிமேல் நான் எப்போது அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்க?  அடுத்த வருஷம்தானா?  அதுவரை உலகம் அழியாமல் இருக்குமா? 

இந்த நிலையில் இன்னொரு வரம்.  ஒரு புகழ்பெற்ற நடிகரின் நண்பர் என் நண்பர்.  அவர் சொன்ன விஷயம் எனக்கு நினைக்குந்தோறும் ஆச்சரியமாக இருக்கும். அவர் எப்போதுமே தன் வீட்டில் சாப்பிடும்போது தனியாகத்தான் சாப்பிடுவாராம். ஏன் அப்படி என்று கேட்டேன்.  நண்பருக்குத் தெரியவில்லை.  வெளியே வேறு விஷயம்.  யோசித்துப் பார்த்தால் நானும் அப்படித்தான் என்று தெரிந்தது.  திட்டமிட்டுச் செய்ததல்ல.  வீட்டில் நண்பர்களோடு சாப்பிடுகிறாற் போன்ற ஒரு அமைப்பு இல்லை.  திருமணமான புதிதில் முதல் ஐந்து ஆண்டுகள் அப்படி இருந்தது.  வீட்டுக்கு நண்பர்கள் வருவார்கள். குடிப்போம்.  சாப்பிடுவோம்.  எல்லாம் இலக்கிய நண்பர்கள்.  அந்த நண்பர்களுக்கு நான் ஒரு நண்பன்.  அவ்வளவுதான்.  அவர்களுடைய இலக்கியப் பார்வையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல.  அதனால் ஒரு சந்திப்பின்போது வந்த நண்பர்கள் அடுத்த சந்திப்பில் இருப்பதில்லை. இரவெல்லாம் பேசிக் கொண்டிருப்போம். தின்பதற்கு ஏதாவது செய்து கொடுத்துக்கொண்டே இருப்பாள் அவந்திகா.  சப்பாத்தி, கோழிக்கறிக் குழம்பு.  எல்லாம்.  அந்த இரவில் எப்படி கோழி கிடைக்கும்?  யாராவது ஒருத்தன் ஜாம்பஜார் மார்க்கெட் போய் வாங்கிக் கொண்டு வந்து விடுவான்.  இப்படியே போய்க் கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் நானே இதெல்லாம் வேண்டாம் என்று நிறுத்தி விட்டேன்.  காரணம், எந்தச் சந்திப்பாக இருந்தாலும் நாலு எழுத்தாளர் கூடினால் சரக்கைப் போட்டு விட்டு சப்ஜெக்ட் இளையராஜா பாடல்களுக்குப் போய் விடும்.  நான் பார்த்தவரை எல்லா எழுத்தாளர்களுமே எல்லா தமிழர்களையும் போல் இளையராஜா பாடல்களுக்கு அடிமை என்பதால் அந்த கோஷ்டியில் நல்ல குரல் வளம் கொண்ட ஒருவர் பாட ஆரம்பிப்பார்.  முடிந்தது கதை.  காலை விடியும் வரை பாடல்களிலேயே போய் விடும்.  எனக்கோ தலைவேதனையாக இருக்கும்.  ஏழெட்டு பேர் கொண்ட அந்தக் கூட்டத்தில் ரொம்பத் தனியனாக உணர்வேன்.  அக்ரஹாரத்தில் மாட்டிக் கொண்ட சேரி மனிதனைப் போல என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ,.  கசாப்புக் கடைகளின் நடுவே மாட்டிக் கொண்ட பிராமணனைப் போல.  உங்கள் கற்பனைத் திறனுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ப உங்கள் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.  மொத்தத்தில் ஒரு அந்நியன். 

கம்பம் தெரியும்தானே? அந்த ஊரைச் சேர்ந்தவன் நஃபீஸ்.  என்னுடைய அத்யந்த நண்பன்.  அவனோடு மட்டுமே நான் அந்நியனாக உணராமல் பழக முடிந்தது.  ஆனால் பழகுவதற்கு இனியன் என்பதால் அவனுக்கு இலக்கிய வட்டத்தில் பல நண்பர்கள் உண்டு.  இதில் பெரும்பாலும் என்னை அந்நியனாக உணர வைக்கும் நண்பர்களே அதிகம்.  ஏன், எல்லோருமே என்று சொல்லலாம்.  அவனுக்குக் கம்பத்தில் திருமணம்.  எங்கள் எல்லோரையும் அழைத்திருந்தான்.  காலை ஆறிலிருந்து ஏழரைக்குள் திருமணம்.  நாங்கள் முதல் நாள் காலை போய்ச் சேர்ந்தோம். ஸ்நானப் பரிகாரமெல்லாம் செய்து விட்டு சரக்கு அடிக்க அமர்ந்தோம்.  நாங்கள் தங்கியிருந்த அறையிலேயேதான்.  சரக்கெல்லாம் நஃபீஸே ஏற்பாடு பண்ணியிருந்தான்.  இரவு பதினோரு மணிக்கெல்லாம் உறங்கி காலையில் எழுந்து ஓடி விடலாம் என்று ஏற்பாடு.  அடித்துப் பிடித்துக் கொண்டு வர வேண்டாம், எட்டு ஒன்பது மணிக்கு வந்தால் போதும் என்று சொல்லியிருந்தான் நஃபீஸ்.  ஆனால் பதினோரு மணிக்குத்தான் விவாதம் ரொம்ப சூடாக ஆரம்பித்திருந்தது.  சம்பவம் நடந்து முப்பது ஆண்டுகள் ஆகி விட்டபடியால் அப்படி அப்படியே ஞாபகம் இல்லை.  ஆனால் ஃபூக்கோ என்ற பெயரைக் கேட்டதும் கோஷ்டியில் இருந்த எஸ். குமார் சூடாகி விட்டார் என்பதை மட்டும் மறக்கவே இயலாது.  அவர் ஒரு விமர்சகர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், சிறுபத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர். ஆகா, இந்த அடைமொழிகள் எல்லாம் எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் என்பதால் இதை நீங்கள் பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை.  இப்போது என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்.  நானும் ஒரு விமர்சகன், கவிஞன், சிறுகதை ஆசிரியன், சிறுபத்திரிகை ஆசிரியன், பதிப்பாளன்.  என்ன, நாவலும் எழுதியிருக்கிறேன்.  அது ஒன்றுதான் கூடுதல் விபரம்.  இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் கூட ஃபூக்கோ ஏன் எஸ். குமாருக்கு அத்தனை பெரிய சீற்றத்தைக் கொடுத்தார் என்று புரியவே இல்லை.  ஃபூக்கோ என்ற பெயரை நான் உச்சரித்ததுமே தேவ்டியாப் பசங்களா என்று ஆரம்பித்து விட்டார்.  அதாவது, எதையுமே படிக்காமல் ஃபூக்கோ, தெரிதா என்று பெயர்களை உதிர்த்துக் கொண்டு உலவிக் கொண்டிருக்கிறோமாம்.  அதுதான் எஸ். குமாரின் அத்தனை கோபத்துக்கும் காரணம்.  ”எதையுமே படிக்காமல்” என்றால் என்ன அர்த்தம் என்பது என் கேள்வி.  ஃபூக்கோவைப் படிப்பது என்றால் சாதாரணமா?  அப்போதெல்லாம் ஃபூக்கோவின் புத்தகங்களை வாங்குவது கூட அரிது.  Archaelogy of Knowledge புத்தகமெல்லாம் அப்போதே 500 ரூபாய் இருக்கும்.  என் சம்பளமே அப்போது அறுநூறு ரூபாயோ என்னமோ.  எங்கள் ஃபூக்கோ கோஷ்டியில் – ஓ, உங்களுக்குப் புரியாது.  இங்கே சூழலில் ரெண்டு கோஷ்டி இருந்தது, ஒன்று, சுந்தர ராமசாமி கோஷ்டி.  எஸ். குமார் அந்த கோஷ்டியைச் சேர்ந்தவர்.  இன்னொன்று, ஃபூக்கோ கோஷ்டி.  இந்த ஃபூக்கோ கோஷ்டிக்குத் தலைவர் என்றெல்லாம் யாரும் இல்லை.  நியாயம்தானே?  ஃபூக்கோவே தலைமைக்கு எதிரானவர் இல்லையா?  இந்த ஃபூக்கோ கோஷ்டியிலேயே பல பிரிவுகள், உட்பிரிவுகள் எல்லாம் இருந்தன.  பெங்களூர் க்ரூப், நிறப்பிரிகை க்ரூப், வித்தியாசம் க்ரூப்.  பெங்களூர் க்ரூப் படிகள் என்ற பத்திரிகையை நடத்திய க்ரூப்.  நிறப்பிரிகை க்ரூப்புக்குத் தலைவர் அ. மார்க்ஸ்.  வித்தியாசம் க்ரூப்புக்குத் தலைமை ரமேஷ்.  ஹெட்குவார்ட்டர்ஸ் மைலாப்பூர்.  ஆமாம், மைலாப்பூர் என்பது குறியீடும்தான்.  இந்த வித்தியாசம் க்ரூப் பயங்கரமான பெரியார் எதிர்ப்பு க்ரூப்பாக மாறியதால் நான் அதிலிருந்து விலகி விட்டேன்.  இப்படியெல்லாம் நான் தான் சொல்கிறேனே தவிர, அவர்கள் சொல்ல மாட்டார்கள்.  ”என்னது, சாரு விலகி விட்டாரா?  அவர் எப்போது எங்களோடு இருந்தார்?” என்றுதான் ரமேஷ் கேட்பார்.  இந்த மூன்று க்ரூப்பிலேயே ’எலீட்’ க்ரூப் – நீங்களே யூகித்திருப்பீர்கள், ரமேஷ், மைலாப்பூர் என்று ரெண்டு ‘க்ளூ’ கொடுத்திருக்கிறேன்.

தேவ்டியாப் பசங்களா என்று ஆரம்பித்ததும் விவாதம் ரசாபாசம் ஆகி எல்லோரும் படுப்பதற்கு எத்தனை மணி ஆனது என்றே தெரியவில்லை. தூங்கி எழும் போது மணி ஐந்து.  ஆகா, அதிசயமாக இருக்கிறதே, திருமணத்துக்குப் போய் விடலாம், நேரம் இருக்கிறது என்று உற்சாகம் அடைந்தேன்.  கடைசியில் பார்த்தால் மாலை ஐந்து மணி.  அடித்துப் பிடித்துக்கொண்டு ஏழு மணி வரவேற்பு நிகழ்ச்சிக்குப் போய்ச் சேர்ந்தோம்.  மணமக்கள் எப்படித்தான் எங்களைப் பொறுத்துக் கொண்டார்களோ, கொலை நாற்றம் அடித்திருக்கும்.

இன்னொரு சம்பவமும் ஃபூக்கோவை வைத்தே நடந்தது.  கம்பத்துக்கு முன்பா, பின்பா என்று ஞாபகம் இல்லை.  ஆனால் எஸ். குமாரின் சலாம் வரிசைதான் அன்றைக்கும்.  அப்போது நான் மந்தவெளியில் வி.எஸ். கார்டன் தெருவில் ஒரு பொந்து வீட்டில் இருந்தேன்.  நீங்கள் மைலாப்பூர் பகுதியில் உள்ள தனி வீடுகளைப் பார்த்தால் கவனிக்கலாம்.  இதுவரை இல்லையேல் சீக்கிரம் பார்த்து விடுங்கள்.  தனி வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாற்றம் அடைந்தால் பிறகு அதைப் பார்க்க முடியாது.  பொதுவாக ஒரு வீட்டுக்குப் பக்கத்தில் – அந்த வீட்டின் சுவரை ஒட்டியபடிதானே அடுத்த வீடு இருக்கும்? அதாவது, இரண்டு வீட்டையும் பிரிப்பது ஒரே சுவர்.  ஆனால் மைலாப்பூர் பகுதி வீடுகளில் ஒரு வீடு என்றால், அதை ஒட்டி ஒரு ஆள் போய் வருகிறாற்போல் ஒரு பொந்துச் சந்து இருக்கும். கற்பனை செய்ய முடிகிறதா?  ஒரு வீடு.  ஒரு சந்து.  அதற்கு அடுத்து ஒரு வீடு.  சந்து.  அடுத்து ஒரு வீடு.  சந்து.  இந்தச் சந்தெல்லாம் எதற்கு என்றால், வீட்டின் பின்னால் எடுப்புக் கக்கூஸ் இருக்கும் அல்லவா, அதில் உள்ள கழிவுகளை கூடையில் எடுத்துக் கொண்டு போகும் தோட்டிச்சிகள் இந்த பிராமண வீடுகளின் உள்ளே போக முடியாது அல்லவா?  அந்தத் தோட்டிச்சிகள் இந்த சந்து வழியாகத்தான் போய் கக்கூஸ் கழிவுகளை எடுத்து வருவார்கள்.  பிராமண வீடுகள் என்று எழுதியிருப்பதால் கோவித்துக் கொள்ளாதீர்கள்.  ஒரு பேச்சுக்கு எழுதியிருக்கிறேன்.  இங்கே மைலாப்பூரில் பிராமணர்களை விட முதலிகள்தான் அதிகம் இருந்திருக்கிறார்கள்.  நாட்டு முத்துக்குமரப்ப முதலி தெரு, அப்பு முதலி தெரு என்று எல்லாம் முதலியார் பெயர்கள்தான்.  இப்போது சாதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் சாதிப் பெயர்களை தெருக்களிலிருந்து அகற்றியிருப்பதால், முத்துக்குமரப்ப தெரு, அப்பு தெரு என்று எல்லாம் வால் அறுந்த விலங்கு போல் நிற்கின்றன. சாதியை ஒழிக்க வேண்டியதுதான்.  தப்பே இல்லை.  ஆனாலும்  ரங்காச்சாரி தெரு ரங்கா தெருவாக மாறும் போது லயம் இடிக்கிறது.  போய்யா, உன் லயமும் மண்ணாங்கட்டியும் என்கிறீர்களா?  ஒரு மாபெரும் சமுதாய மாற்றம் நிகழும்போது இந்த லயம் கியம் எல்லாம் குப்பைக்குப் போக வேண்டியதுதான்.  ஆனால் ஜி.டி. நாயுடு தெருவை என்ன செய்வார்கள்?  ஜி.டி. தெருவா?  தெரியவில்லை.  பெரியவர் தேவரிடமும் இந்த சமுதாயச் சீர்திருத்தவாதிகளின் பாச்சா பலிக்கவில்லை.  பசும்பொன் முத்துராமலிங்கம் (தேவர்) தெரு என்று பிராக்கட்டில் போட்டு விட்டார்கள்.  தேவரைப் பெயரோடு சேர்த்தால் “ம்” வராது.  ஆனாலும் இலக்கணம் போனால் பரவாயில்லை.  ஒரு மாபெரும் சமூக மாற்றத்தின்போது இலக்கணமா முக்கியம்? 

அப்படி ஒரு பொந்துச் சந்துதான் நான் குடியிருந்த வீடு இருந்த இடம்.  ஒரு ஆள் போனால் எதிரே இன்னொரு ஆள் மட்டுமே வரலாம்.  அந்த ஆள் வரும் இடம்தான் எடுப்புக் கக்கூஸ் கழிவுகள் போட்ட கூடைக்கான இடம்.  இரண்டு ஆளுக்கான இடம் விட்டதற்குக் காரணம் அதுதான். வி.எஸ். கார்டன் தெருவின் ஒவ்வொரு வீட்டை ஒட்டியும் அப்படி ஒரு பொந்துச் சந்து உண்டு.  அப்படி ஒரு சந்தின் உள்ளே நுழைந்து போனால் கடைசியில் ஒரு படிக்கட்டு வரும்.  அதில் ஏறி இரண்டு மாடிகளைக் கடந்து போனால் மூன்றாவது மாடி அறையில்தான் என் வாசம். 1992-ஆம் ஆண்டு.  ஒன்றரை வருடம் இருந்தேன்.  ஆயிரம் ரூபாய் வாடகை.  பனிரண்டாயிரம் முன்பணம். ஆறு மாதங்கள் வாடகை கொடுத்தேன்.  பிறகு அங்கே நான் இருக்க மாட்டேன் என்று தோன்றி விடவே வாடகை கொடுப்பதை நிறுத்தி விட்டு முன்பணத்தை பனிரண்டு மாத வாடகையாகக் கழித்து விட்டுக் கிளம்பி விட்டேன். அந்தக் காலகட்டத்தில் அநேகமாக தினந்தோறும் அந்த வீட்டுக்கு நண்பர்கள் வருவார்கள்.  நான் வீட்டில் இல்லாவிட்டாலும் நண்பர்கள் இருப்பார்கள்.  சாவியை அங்கேயே கதவுக்கு அருகில்தான் வைத்திருப்பேன்.  வீட்டுக்குள் சில சமையல் சாதனங்களையும் புத்தகங்களையும் தவிர வேறு எதுவும் இல்லை.  அப்படியாகப்பட்ட காலகட்டத்தில்தான் எஸ். குமாரோடு அந்த வரலாற்றுச் சம்பவம் நடந்தது. ஆனால் பாவம் எஸ். குமார் அன்று கோட்பாட்டு ரீதியாகத் தனியாக இருந்தார்.  மற்ற ஐவர் ஃபூக்கோ ஆர்வலர்கள்.  ரவீந்திரன், குமாரசாமி நஃபீஸ், முத்துக்குமார், அடியேன்.  எஸ். ராமகிருஷ்ணனும் ரங்காவும் வாசுவும் நடுநிலை.  நன்றாகப் போய்க் கொண்டிருந்த விவாதத்தில் ஃபூக்கோவின் பெயர் வந்ததும் எஸ். குமார் ரௌத்திரகாரனாகி விட்டார். நல்ல தண்ணி வேறு.  எல்லோருக்குமே கிறுகிறுவென்று ஏறியிருந்தது.  தேவ்டியாப் பசங்களா.  தேவ்டியாப் பசங்களா.  தேவ்டியாப் பசங்களா.  அன்றைய இரவு காற்றிலேயே தேவ்டியாப் பசங்களா என்ற வார்த்தைதான் நீக்கமற நிறைந்திருந்தது.  அடிதடி வெட்டுக்குத்து ஆகவில்லையே தவிர கட்டிப் புரளும் நிலையைத் தொட்டு விட்டுத் தொட்டு விட்டு வந்தோம்.  ஒரு பேச்சுக்குத்தான் ‘தோம்’ என்று முடித்தேனே தவிர, விவாதத்தில் தீவிரமாக இருந்தது ரவீந்திரனும், குமாரசாமியும், முத்துக்குமாரும்தான்.  மற்றபடி நாங்களெல்லாம் பார்வையாளர் பாத்திரத்தையே வகித்தோம்.  எஸ். ராமகிருஷ்ணனுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு.  அவர் எழுதியிருந்தால் இன்னம் விவரமாக எழுதியிருப்பார்.  ஆனால் சம்பவத்தில் ஒரு சின்ன ட்விஸ்டும் இருந்தது.  எதற்காகவோ கீழே போன வாசுவை எதிர்வீட்டு ஆள் ஒருத்தன் ஏய் யார் நீ என்று அதட்டலாகக் கேட்டிருக்கிறான்.  அந்த நேரத்தில் ஏன் வாசு வெளியே போய் இருக்க வேண்டும்?  ம்… சரக்கு தீர்ந்து போனதால் மந்தவெளி ஒயின்ஸில் ஓல்ட் மாங்க் இன்னும் கொஞ்சம் வாங்கி வருவதற்காகப் போயிருக்கலாம்.  மந்தவெளி ஒயின்ஸ் இரவு பதினோரு மணிக்கு மூடி விட்டாலும் காசு கொடுத்தால் அங்கே வேலை பார்க்கும் பொடியன்கள் பின்பக்கமாக பாட்டில் சப்ளை செய்வான்கள்.  அதை வாங்கிக் கொண்டு வரும்போதுதான் வாசுவை அதட்டியிருக்கிறான் எதிர்வீட்டுக்காரன்.  அவன் ஒரு அ-பிராமணன் போல.  இல்லாவிட்டால் அந்த அளவுக்கு அமட்டியிருக்க மாட்டான்.  மைலாப்பூர், மந்தவெளி பிராமணர்களெல்லாம் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள்.  அல்லது, வீண் வம்புக்குப் போகாதவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  அதன் காரணமாகவே இந்தப் பகுதிவாழ் காய்கறிக்காரர்கள், ஆட்டோக்காரர்கள், மற்ற தொழிலாளர் வர்க்கத்தினர் எல்லாம் எல்லோரிடமும் சற்று எகத்தாளமாகவும் சவடாலாகவும் பேசுவதை கவனித்திருக்கிறேன்.  வாசு பிராமணனாக இருந்தாலும் இளைஞன், முரடன்.  இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது என்று பின்னாளில் எனக்கு நண்பரான சீனிவாசன் சொல்லியிருக்கிறார்.  பிராமணர்களில் அய்யர்கள்தான் அப்படி பணிந்து போவார்களாம்; அய்யங்கார்கள் அ-பிராமணரைப் போலவே அடாவடிதான் என்பார் சீனி.  அவரும் அய்யங்கார்தான் என்பதாலும், பின்னாளில் நானுமே நிறைய அய்யங்கார்களைப் பார்த்து விட்டதாலும் அது உண்மைதான் என்று நம்ப ஆரம்பித்தேன்.  இந்த விவகாரமெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. வாசு ஆறரை அடி உயரத்தோடு வாட்டசாட்டமாக இருப்பான்.  இவன் பதிலுக்கு நீ யார்ரா என்று கேட்க அதற்கு மேல் கேட்கவா வேண்டும்.  ரோட்டிலேயே ரகளை.  ஆனால் சென்னை இந்த விஷயத்தில் ஒரு அற்புதமான நகரம்.  இதே பேச்சு மதுரையில் நடந்திருந்தால் ஒரு கொலை அல்லது இரண்டு கொலை விழுந்திருக்கும். வாசு அவனைக் கொன்றிருந்தால் ஒரு கொலையோடு போயிருக்கும்.  வாசுவை அவன் முடித்திருந்தால் அவனை எங்களில் ஒரு ஆள் போட்டிருப்போம்.  நாங்கள் அனைவருமே ஒரு பூரானைப் பார்த்தாலும் அதை பேப்பரில் பிடித்துக் கொண்டு போய் வெளியே போடுகிற ஆட்கள்தாம்.  ஆனால் போதை யாரை சும்மா இருக்க விடும்?  ஆனால் சென்னை நகரம் இதையெல்லாம் மீறியது.  சென்னை நகரக் காற்றுக்கும் நீருக்கும் ஒரு ராசி உண்டு.  கொலை விழப் போகிறது என்று ஆசையாகப் பார்த்துக் கொண்டிருப்போம்.  சண்டையிடும் ரெண்டு பேரில் நாம் ஒரு சைடு கூட எடுத்திருப்போம்.  ஆனால் கொலை விழும் என்ற அளவுக்கு வார்த்தைகள் தடிக்கும், நாம் எதிர்பார்த்தது நடக்காது.  அட, கொலை கூட வேண்டாம்.  இந்தப் பேச்சுப் பேசினதுக்கு ஒரு அடிதடி கூடவா நடக்காது? போடாத் தேவ்டியாப் பயலே என்பான் ஒருத்தன்.  கேட்டுக் கொண்டிருப்பவன் சொன்னவனை உதைக்க வேண்டுமா இல்லையா, நீங்களே சொல்லுங்கள்.  கேட்டுக் கொண்டிருக்கும் நமக்கே கோபம் வரும். ஆனால் அந்த வசையை வாங்கியவனோ பதிலுக்கு வார்த்தைகளில் உதார் விட்டுக் கொண்டிருப்பானே தவிர சொன்னவனைத் தட்ட மாட்டான். எல்லாமே வாய்ப்பேச்சுதான்.  மதுரை அப்படி அல்ல.  எடுத்த எடுப்பில் தட்டு.  அப்புறம்தான் பேச்சே. 

ஆனால் அன்றைய இரவு வாசுவிடம் வசை வாங்கியவன் அந்த ஏரியா ரவுடி போல் இருக்கிறது. வாசுவின் மீது கை வைக்க, வாசுவும் அவனைப் போட்டுப் புரட்டி விட்டான்.  இந்தக் கலவர சப்தம் கேட்டு நாங்கள் அனைவரும் கீழே போய் அந்த ரவுடியை அண்ணே கிண்ணே எல்லாம் போட்டு மேலே அழைத்து வந்தோம்.  அப்போதும் அவனைக் கொல்லாமல் விட மாட்டேன் என்றுதான் கத்திக் கொண்டிருந்தான் வாசு.  அவனைப் பிடித்து ஒரு அமுக்கு அமுக்கினான் ரவீந்திரன்.  அப்புறம் அந்த ரவுடிக்கும் ரெண்டு ரவுண்டு ஓல்ட் மாங்க் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம்.  ஃபூக்கோ பற்றிய பேச்சு ரவுடி பேச்சாக மாறியது.  ரவுடி போன பிறகு எஸ். குமார் இன்னும் அதிகமாகக் கத்த ஆரம்பித்தார். டேய் தேவ்டியாப் பசங்களா, விளிம்பு நிலை மக்கள் என்று நீங்கள் பசப்புவதெல்லாம் வெறும் நடிப்பு. தேவ்டியாப் பசங்களா. இப்போது உண்மையான விளிம்பு நிலை மனிதன் வந்த போது அவனைக் கொல்லப் பார்த்தீர்கள். தேவ்டியாப் பசங்களா. உங்கள் ஃபூக்கோ இப்படியா சொன்னான்? தேவ்டியாப் பசங்களா. ரவுடி சம்பவத்துக்குப் பிறகு நாங்கள் ரொம்பவே களைத்து விட்டோம். ஆளாளுக்கு பெட்ஷீட்டை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனார்கள். கூடவே எஸ். குமாரின் தேவ்டியாப் பசங்களா மட்டும் காதில் விழத் தவறவில்லை.  இத்தனை களேபரத்துக்கும் கீழ் வீட்டிலிருந்தும் மத்தியில் இருந்த வீட்டிலிருந்தும் ஒரு முனகல் சப்தம் கூட இல்லை.  காலையிலும் ஒரு சம்பவம் நடந்தது. என் மேல் வெய்யில் சுள்ளென்று அடிக்கவே எழுந்து பார்த்தேன்.  ஒன்றுமே புரியவில்லை.  எப்போதுமே நான் மொட்டை மாடியில் படுத்ததில்லை.  என் அறையில்தான் படுப்பேன்.  ஆனால் அன்றைய தினம் மொட்டை மாடியில் படுத்திருந்தேன்.  பக்கத்தில் பார்த்தால் பெண்கள்.  என்னடா இது, கனவா நனவா?  சுதாரித்துக் கொண்டு பார்த்தேன்.  பெண்களேதான்.  எங்கள் வீட்டை ஒட்டி இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடி.  இந்த மொட்டை மாடி முதல் தளத்தின் மேலே இருந்தது.  என் வீட்டு மொட்டை மாடி இரண்டாம் தளத்தைத் தாண்டி இருக்கும். இந்த இடத்துக்கு வர வேண்டுமானால் என் வீட்டிலிருந்து இங்கே குதித்திருக்க வேண்டும்.  அது சாத்தியமில்லை.  சரி, இப்போது யோசிக்கவும் நேரம் இல்லை.  பெண்கள் எழுந்தால் பெரிய ரசாபாசம் ஆகி விடும்.  அப்படியே கப்பென்று எழுந்து சத்தமே போடாமல் மூச்சைப் பிடித்துக் கொண்டு மாடிச் சுவரில் என் வீட்டில் வந்து குதித்தேன்.  பிறகுதான் யோசித்த போது, கீழே போய் விட்டு மேலே ஏறிய போது என் வீட்டுக்குப் போகும் படியில் ஏறமால் பக்கத்து வீட்டுப் படியில் ஏறி அப்படியே அவர்கள் வீட்டு மொட்டை மாடிக்குப் போய் விட்டேன் போல. நல்லவேளை, பெண்கள் அசந்து தூங்கியிருக்கிறார்கள்.  அந்நிய ஆள் அந்த நேரத்தில் அத்துமீறியது தெரிய வந்திருந்தால் – அதுவும் எதிர்வீட்டு ரவுடி வேறு அடி வாங்கியிருக்கிறான் – பெரிய கேஸாகி இருக்கும். இப்படியாகப்பட்ட சூழலில்தான் அவந்திகாவைத் திருமணம் செய்து கொண்டது.  முதல் ஐந்து ஆண்டுகள் மேலே சொன்னபடியான இலக்கியச் சந்திப்புகள் என் வீட்டிலேயே நடந்தன.  ஒரு பெண் – அதுவும் என் மனைவி – கூட இருக்கிறாள் என்பதால் மேலே குறிப்பிட்ட அளவுக்கு ரசாபாசமாகவெல்லாம் போகாது.  அதிகம் போட்டு விட்டு வாந்தி எடுப்பதோடு சரி.  இப்படியாகப்பட்ட சூழலில்தான் ஒரு சம்பவம் நடந்தது. என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஒரு நண்பனை வெளியூரிலிருந்து அழைத்திருந்தேன். வந்தான்.  காலையிலேயே வந்து விட்டதால் மதியம் வீட்டுக்கு அழைத்திருந்தேன்.  விரால் மீன் குழம்பு.  மாலையில் விழாவில் பேசும்போது இந்தக் கதைகள் எல்லாம் குப்பை என்று பேசினான் நண்பன்.  அவந்திகா கடுப்பாகி விட்டாள்.  அன்றோடு முடிந்தது வீட்டில் நண்பர்களோடு சாப்பிடுவது.  இனிமேல் உன் நண்பர்களை வெளியிலேயே வைத்துக் கொள் என்று சொல்லி விட்டாள்.  அவள் சொல்வதும் சரியாகவே இருந்ததால் நானும் யாரையும் வீட்டுக்குள் விடுவதில்லை.  இது நடந்து பத்து ஆண்டுகள் சென்று ஒரு நண்பன் வீட்டுக்கு வந்தான்.  அவன் எழுதிய புத்தகத்தைக் கொடுக்க வந்தான்.  அந்த நேரத்தில் அவந்திகா அவள் அம்மா வீட்டுக்கு சின்மயா நகர் சென்றிருந்தாள்.  நண்பன் வந்த நேரம் மதிய உணவு நேரம்.  சாப்பிடச் சொன்னேன்.  சாப்பிட்டான்.  அப்போது பார்த்ததுதான்.  அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவே நேரவில்லை.  இப்போது பத்து ஆண்டுகள் இருக்கும்.  சண்டையெல்லாம் எதுவும் இல்லை.  என்னவோ சந்திப்பே நடக்கவில்லை.  இப்போது இந்த வாசக நண்பரோடு என் வீட்டில் சாப்பிட்டேன். அவ்வளவுதான்.  இனிமேல் அந்த நண்பரைச் சந்திக்க வாய்ப்பு இருக்காது என்றே நினைக்கிறேன்…  

*** 

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai