கொரோனா நாட்கள் – 5

இதுவரை யாரும் வீட்டிலேயே இருந்ததில்லை.  இப்போது வீட்டிலேயே இருக்க வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்குப் புதிதாகவும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.  ஏற்கனவே இலக்கியம் படிக்காமல் ஸைக்கோக்களாக உலவி வந்து கொண்டிருந்த கூட்டம் இப்போது வீட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டால் என்ன ஆகும்?  இன்னும் 21 நாள் கழித்து வெளியே வரும் போது இந்தக் கூட்டம் இன்னும் மோசமான ஸைக்கோக்களாகவே வெளியே வரும்.  இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு நண்பர் பிரிட்டானியா பிஸ்கட்டில் எத்தனை ஓட்டை இருக்கிறது என்று எண்ணி முகநூலில் போட்டிருக்கிறார்.  அது ஒரு குறியீடு.  அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.  வெறும் தனிமைச் சிறை அல்ல.  மரண பயத்துடன் கூடியதான தனிமைச் சிறை.  ஒரு நண்பர் காஷ்மீரில் நடைமுறையாக இருந்த ஊரடங்கு உத்தரவு பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  ஆனால் அந்த ஊரடங்கு வேறு; நம்மூரில் நடக்கும் ஊரடங்கு வேறு. காஷ்மீர் ஊரடங்கில் வீட்டை விட்டு வெளியே வந்தால், தலை தெரிந்ததுமே சுட்டு விடுவார்கள். பொதுவாகக் கடும் ஞாபக மறதி கொண்ட எனக்கு அந்த விஷயங்கள் எதுவுமே மறக்கவில்லை.  ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நேரம்.  முப்பது நாளோ நாற்பது நாளோ.  ஒரு இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பதற்காக ஒரு பத்து வயது சிறுவன் தன் குடிசையை விட்டு வெளியே வந்தான்.  சுட்டு விட்டார்கள்.  பையன் இறந்து விட்டான்.  ஆனால் ராணுவம் ஒத்துக் கொள்ளாது.  தீவிரவாதியை சுட்டு விட்டோம் என்று அறிவித்து விடுவார்கள். 

நம்மூர் ஊரடங்கெல்லாம் வெறும் பம்மாத்து.  21 நாளில் இது எத்தினியாவது நாள்?  என் வீட்டு மாடியிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலையைப் பார்த்தால் நிமிடத்துக்குப் பத்து வாகனங்கள் போய் வந்து கொண்டிருக்கின்றன.  கார்கள், ஸ்கூட்டர், பைக் எல்லாம்.  எல்லோருமேவா மருத்துவர்கள்?  மற்ற நாட்களில் ஒரு நிமிடத்தில் நூறு வாகனம் போகுமாயிருக்கும்.  இப்போது பத்து.  வீட்டுக்கு எதிரே தள்ளுவண்டியில் ஒரு அம்மா தக்காளியும் ஆரஞ்சுப் பழமும் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறது.  தினந்தோறும் தள்ளுவண்டியில் காய் கொண்டு வரும் காய்கறிகாரரும் நாள் தவறாமல் வந்து கொண்டிருக்கிறார்.  என் வீட்டுக்கு காலையும் மாலையும் பசும்பால் கொண்டு வரும் கோனாரும் தவறாமல் வருகிறார்.  ஒரே ஒரு விஷயம்தான் நின்று போய் இருக்கிறது.  மீன் இல்லை.  எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி லக்கி மீன் மட்டுமே சாப்பிடும்.  அதற்கு அம்மா இருந்தும் பால் குடித்து வளரவில்லை.  என்னவோ தெரியவில்லை, ஸிஸ்ஸி தான் பெறாத பிள்ளைகளான பெல்லா, ஸ்மோக்கி, கிட்டி ஆகிய குட்டிகளுக்குப் பால் கொடுத்ததே தவிர தான் பெற்ற குட்டியான லக்கிக்குக் கொடுக்கவில்லை.  லக்கியும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மீன் சாப்பிட்டு வளர்ந்தது.  இப்போது மீன் இல்லை என்பதால் அதற்குப் பிடிக்காத விஸ்காஸ் உணவைச் சாப்பிட்டு இளைத்து விட்டது.  நரம்பு மாதிரி இருந்தாலும் ரவுடித்தனத்திலும் அட்டகாசத்திலும் குறைவில்லை.  நான் வெளியில் போனால் மட்டும்தான் சட்டை போடும் வழக்கம்.  வீட்டில் இருக்கும்போது சட்டை போடுவதில்லை.  இந்த வெயிலுக்கு எப்படி சட்டை போடுவது?  ஒருநாள் கணினியில் தட்டிக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ பாய்ந்து ஓடி வந்து என் முதுகுப்பக்கத்தில் ஏறி மேலே பறந்து ஈயைப் பிடித்த போது என் முதுகில் அதன் நகங்கள் பட்டு விட்டன.  லக்கியின் ரவுடித்தனத்தில் இது ஒரு துளி.  பொதுவாக பெண் பூனைகள் பதவிசாக இருக்கும்.  ஆண் குட்டிகள்தான் ரவுடித்தனம்.  ஆனால் லக்கி அதற்கு எதிர்.

ஸ்கூட்டரில் சென்ற மருத்துவரை ஒரு போலீஸ்காரர் அடித்து விட்டார்.  அந்தக் காணொளியை ஒரு கோடி பேர் பார்த்திருப்பார்கள் போல.  சார், நான் டாக்டர் சார் என்கிறார் லத்தியால் அடி வாங்கியவர்.  பதிலுக்கு அந்த முட்டாள் போலீஸ் “முன்னாடியே சொல்லிருந்தா என்னா சார்?” என்கிறார்.  நான் போலீஸாக இருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்.  காட்டுமிராண்டி தேசத்தில் நாமும் காட்டுமிராண்டியாகத்தானே இருக்க வேண்டும்?  நம் நாட்டில் யாருக்கும் எப்போதுமே போலீஸிடம் பயமில்லை.  எப்போதுமே சட்டத்தின் மீது மரியாதை இல்லை.  ஊரடங்கு உத்தரவு போட்டும் ஆள் ஆளுக்குப் ——— தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறான்.  போலீஸ்காரர் என்ன செய்வார்?  ஏற்கனவே கடுமையான மன உளைச்சலில் இருப்பவர்கள் அவர்கள்.  இதற்காகத்தான் நான் ஸ்ரீராமிடம் கழுத்தில் ஸ்டெதெஸ்கோப்பை மாட்டிக் கொண்டு செல்லுங்கள் என்று முந்தின நாளே எச்சரித்திருந்தேன்.  அவரும் அதைச் செய்ததால் பிரச்சினை இல்லை.     

இந்த நிலையில் ஒரு சம்பவம் நடந்தது.  ஒரு தொலைக்காட்சி சேனலிலிருந்து ஒரு ஃபோன்.  அன்றைக்கு முந்தின நாள் மாலையில்தான் தமிழக முதல்வர் ஒரு வார காலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.  இன்னும் மோடி 21 நாள் ஊரடங்கை அறிவித்திருக்கவில்லை.  அன்றைய இரவு எட்டு மணிக்குத்தான் அறிவிக்கிறார்.  அன்று காலையில் ஒரு போன். 

உங்களால் ஒரு பேட்டி தர முடியுமா?

நான் ஒன்றும் புரியாமல் முழிக்கிறேன்.  பதில் சொல்ல முடியவில்லை.  என் மௌனத்தைப் பார்த்து அவரே தொடர்கிறார்.  இப்போது எல்லோரும் வீட்டில் இருப்பதால் அவர்கள் புத்தகங்கள் படிக்கலாம், படிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல முடியுமா? 

இல்லிங்க.  எனக்கு அதுல இஷ்டம் இல்ல. 

நீங்கள் ஸ்டுடியோ வந்து அலைய வேண்டாம்.  உங்கள் வீட்டுக்கே எங்கள் குழு வரும்.

இல்லிங்க, வேணாம்.  எங்க அபார்ட்மெண்ட்ல அதுக்கு விட மாட்டாங்க.

அப்போ நீங்களே பேசி பதிவு பண்ணி அனுப்பி வைக்க முடியுமா?  ஏன்னா, எல்லாரும் வீட்டிலேயே இருக்காங்க.  இப்போ படிச்சா நல்லது. 

இல்லிங்க. எனக்கு அதுல இஷ்டம் இல்ல.  வேண்டாங்க.  என்ன விட்ருங்க.

எப்படி இருக்கிறது பாருங்கள்.  பிள்ளை பிடிப்பவனிடமிருந்து தப்பிப்பது போல் தப்பி வந்தேன்.  இதில் என்ன குழப்பம் என்று உங்களுக்குத் தோன்றலாம்.  ஆனால் எனக்கு இதில் கடுங் கோபம் ஏற்பட்டது.  இந்த philistine கும்பலிடம் போய் நான் ஏன் புத்தகம் படியுங்கள் என்று கெஞ்ச வேண்டும்?  படித்தால் படிக்கட்டும்; படிக்காவிட்டால் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.  எனக்கு என்ன? சரி, அப்படியே நான் படியுங்கள் என்று கெஞ்சினாலும் ஒருத்தராவது படித்து விடப் போகிறார்களா என்ன?  ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டு என்ற வசனத்தைச் சொன்னது போல் அல்லவா என்னைப் பைத்தியக்காரனாகப் பார்ப்பார்கள்? ”என்னது, படிப்பதா?  முதலில் நீ யார் அதைச் சொல்வதற்கு?” என்றுதானே கேட்பார்கள். ஒருவேளை அப்படிக் கேட்காவிட்டாலும், நாங்கள் ஏன் படிக்க வேண்டும் என்று கேட்டால் அவர்களுக்கு நான் என்ன சொல்லட்டும்?  நான் சொல்லும் பதில் அவர்களுக்குப் புரியுமா? 

இன்னொரு விஷயம்.  ஒரு எழுத்தாளனே போய் இந்தத் தனிமைக் காலத்தில் புத்தகம் படியுங்கள் என்று சொல்வது அவமானகரமானது இல்லையா?  ரமண மகரிஷி தெருவோரத்தில் நின்றபடி, நீங்களெல்லாம் ரமணாசிரமம் வர வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கிற மாதிரி அல்லவா இருக்கிறது?  ஜக்கி வாசுதேவ் அப்படிச் செய்கிறாரா என்ன?  ஆயிரக்கணக்காக பணம் கொடுத்து அல்லவா அவர் பேச்சைக் கேட்கிறார்கள் மக்கள்?  இங்கே எழுத்தாளர்கள் இலவசமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதை இலவசமாகப் படிக்கச் சொல்லி எழுத்தாளர்களே செய்தி சேனல்களின் மூலம் கூவ வேண்டுமா?

என் மனதில் இது தொடர்பாக எத்தனையோ எண்ணங்கள் தோன்றுகின்றன.  எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை.  படிப்பு என்றால் என்னவென்றே தெரியாத ஒரு சமூகத்தில் போய் “நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள்.  இப்போது இந்த நேரத்தைப் பயன்படுத்திப் படியுங்கள்” என்று சொன்னால் இந்த எட்டு கோடி பேரில் ஒரே ஒரு ஆள் கூட அதைக் கேட்க மாட்டார்.  இது எனக்கு அத்தனை நிச்சயமாகத் தெரிகிறது.  படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் படிப்பார்கள்.  அவர்களைப் பற்றி நான் பேசவில்லை.  யோகா செய்தால் நூறு வயது வாழலாம்.  நம் எல்லோருக்கும் தெரியும்.  நாம் செய்கிறோமா?  இல்லை.  யோகா செய்து நூறு வயது வாழ்வதை விட டாஸ்மாக்கில் குடித்து அம்பது அறுபது வரை வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் சமூகக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.  சூரிய நமஸ்காரம் என்று ஒரு பயிற்சி உள்ளது.  ஹட யோகம்.  ஆரம்பத்தில் ஒன்றோ ரெண்டோ தான் பண்ண முடியும்.  தொடர்ந்து செய்தால் பழகப் பழக பதினெட்டு வரை செய்யலாம்.  பதினெட்டு செய்ய முப்பத்தாறு நிமிடம் ஆகும்.  இதைச் செய்து வந்தால் நூறு ஆண்டுகள் நோய் நொடியில்லாமல் வாழலாம்.  இதையெல்லாம் விடுங்கள்.  சந்தியாவந்தனம் என்ற ஒரு சடங்கை பிராமணர் செய்யப் பார்த்திருக்கலாம்.  இப்போதெல்லாம் பிராமணர்களில் 95 சதவிகிதத்தினர் இதைச் செய்வதில்லை.  மீதி ஐந்து சதவிகிதத்தினர் ஒளிந்து கொண்டும் பயந்து கொண்டும் வெட்கப்பட்டுக் கொண்டும் செய்கிறார்கள். 

சந்தியாவந்தனத்தை முறையாகச் செய்தால் வேறு எந்த உடல், மனப் பயிற்சியும் இல்லாமல் எந்த மனிதரும் நூறு ஆண்டுகள் நோயில்லாமல் வாழலாம். மேலும் சந்தியாவந்தனத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.  அப்புறம் ஏன் பிராமணர்கள் மட்டும் செய்கிறார்கள்?  சம்ஸ்கிருதமும் வேதமும் அவர்களிடம் இருந்ததால் அதை அவர்கள் செய்ய ஆரம்பித்திருக்கலாம்.  ஆனால் ரிஷிகளில் பெரும்பாலானவர்கள் பிராமணர் அல்லாதவர்தாம்.  சந்தியாவந்தனத்தை பிராமணர் மட்டுமே செய்ய வேண்டும் என்று எந்த நூலிலும் சொல்லப்படவில்லை. பின்னால் வந்த பிராமணர் அல்லாதார் சந்தியாவந்தனம் பற்றித் தெரியாமலேயே அதை ஒதுக்கி விட்டனர்.  அவ்வளவுதான். உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கக்கூடிய செயல்களில் தலையாயது பிராணாயாமம்தான்.  மற்ற எல்லாமே பிராணாயாமத்துக்கு அடுத்தபடியானதுதான்.  ஏனென்றால், பிராணன் (மூச்சு) தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. மூச்சை சரியாக விட்டால் நூறு வயது.  சந்தியாவந்தனத்துக்கு அடிப்படை பிராணாயாமம்.  பிராணாயாமத்தை முறையாகச் செய்ய 20 நிமிடம் ஆகும்.  குளித்து விட்டுத்தான் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.  காலை நேர சந்தியா வந்தனத்தை சூரிய ஒளியில்தான் செய்ய வேண்டும்.  வீட்டுக்குள்ளேயே புகுந்து கொண்டு செய்யக் கூடாது.  அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர் மொட்டைமாடியில் செய்யலாம்.  சனாதன தர்மத்தில் காயத்ரி மந்திரத்தைப் போல் சக்தி வாய்ந்த மந்திரம் வேறு எதுவும் இல்லை.  அதை உச்சாடனம் செய்துதான் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.  ஒரு நாளில் மூன்று முறை செய்ய வேண்டும். காலை, மதியம், சாயுங்காலம். இஸ்லாமில் ஐந்து முறைத் தொழுகையைக் கட்டாயக் கடமையாக்கியது போல் சனாதன தர்மத்தில் இதையெல்லாம் கட்டாயப்படுத்தாமல் போனதாலும் மேற்கத்திய பகுத்தறிவு மடமையினாலும் இதையெல்லாம் இந்துக்கள் இழந்தார்கள்.  இப்போது இந்துத்துவ அரசியல் பேசும் சில மௌடீக பிராமணர் மத்தியில் சந்தியாவந்தனம் வெறும் பெயரளவில் எஞ்சி நிற்கிறது.  பரிதாபத்துக்குரிய இந்த விஷயத்தை ஏன் சொல்ல வந்தேன் என்றால், எல்லோரும் படியுங்கள் என்று சொன்னால்  என்னைத்தான் பைத்தியக்காரன் என்று சொல்லுவான். எல்லோரும் சந்தியாவந்தனம் செய்யுங்கள் என்று சொன்னால் என்னை என்ன சொல்வார்கள், அதே கதைதான். 

மேலும், தொலைக்காட்சி சிம்மங்களே, என்னிடம் வந்து எல்லோரையும் படிக்கச் சொல்லி பேட்டி கொடுங்கள் என்று கேட்கிறீர்களே, இதை ரஜினி கமல் போன்ற பிரபலங்கள் அல்லவா சொல்ல வேண்டும்? அவர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.  ஆனால் சொல்ல வேண்டியவர்கள் அவர்கள் அல்லவா?  வேறு எல்லாவற்றுக்கும் மைக்கைத் தூக்கிக் கொண்டு அவர்களிடம் செல்கிறீர்கள்தானே?  இதற்குப் போய் கேளுங்களேன்?  ஆனால் நீங்கள் புத்திசாலிகள்.  அவர்கள் அப்படிப்பட்ட பேட்டியை உங்களுக்குத் தர மாட்டார்கள்.  தர மாட்டார்கள் என்றும் உங்களுக்குத் தெரியும்.  சார், இந்த குவாரண்டைன் சமயத்தில் உங்களுடைய பழைய படங்களைப் பற்றிய ரசமான சம்பவங்கள் எதையாவது பகிர முடியுமா என்று கேட்டால் கூட காது கொடுத்துக் கேட்பார்கள்.  யோசிப்பார்கள்.  மக்களெல்லாம் புத்தகம் படிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் என்று நீங்கள் அவர்களிடம் சொன்னால் என்னய்யா விளையாட்றியா என்றுதான் கேட்பார்கள்.  சரி, ரஜினி கமல் வேண்டாம்.  நம்முடைய சமூக ஆர்வலர் இருக்கிறாரே, மிஸ்டர் சூர்யா.  அவரிடம் கேட்கலாமே? ம்ஹும்.  அவரும் பேச மாட்டார்.  ஏனென்றால், அவர் இதுவரை புத்தக வாசிப்பு பற்றி இதுவரை எதுவும் வாய் திறந்ததில்லை.  ஆக, இலவசமாகவே எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களே தங்கள் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி பொதுமக்களிடம் கெஞ்ச வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள், இல்லையா? 

நான் அதற்கு ஆள் இல்லை.  படிப்பதோ படிக்காமல் ஸைக்கோவாகவே தொடர்வதோ பொதுஜனத்தின் இஷ்டம்.  இந்த விஷயத்தில் இன்னொரு இக்கட்டும் இருக்கிறது.  படிப்பு என்றால் என்னவென்றே தெரியாத இந்த சமூகம் நான் படிக்கச் சொன்னதும் – வீட்டில் எந்த வேலையும் இல்லாததால், பிறந்ததிலிருந்தே வீட்டில் இருந்து பழகாததால், இப்போது வீட்டிலேயே குத்த வைத்திருப்பது தனிமைச் சிறையைப் போல் வாட்டுவதால் – படிக்கிறோம் என்று முடிவு செய்கிறது என்றே வைத்துக் கொள்வோம், ஒரு பேச்சுக்கு. எதைப் படிப்பார்கள்?  தயவுசெய்து சொல்லுங்கள்.  புத்தக விழாவுக்கு வரும் – இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்டுமந்தைக் கூட்டத்தைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கும்.  அங்கே காணப்படும் நூற்றுக்கணக்கான புத்தக அரங்குகளில் அவர்கள் எதையென்று வாங்குவார்கள்?  கண்ணைக் கட்டி அத்துவானக் காட்டில் கொண்டு போய் விட்டு மீண்டு வா என்று சொல்வதைப் போலத்தான். காலச்சுவடு, உயிர்மை, யாவரும், க்ரியா, ஸீரோ டிகிரி பப்ளிஷிங், தேசாந்திரி, டிஸ்கவரி புக் பேலஸ் என்று ஒரு பத்துப் பதினைந்து அரங்குகளில் இலக்கியப் புத்தகங்கள் கிடைக்கும்.  அவற்றின் பெயர்கள் எனக்குத் தெரியும்.  ஒரு காமன்மேனுக்கு அந்தப் பெயர்கள் எப்படித் தெரியும்?  தெரிய வந்தாலும் அங்கேதான் இலக்கிய நூல்கள் கிடைக்கின்றன என்று யார் கண்டது?  சரி, தொலையட்டும்.  அந்த மேற்குறிப்பிட்ட அரங்குகளுக்கு நம்முடைய கனம் பொருந்திய காமன்மேன் வந்து விட்டான் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.  அவன் அருகே அவன் காரியம் யாவினும் கைகொடுக்கும் பத்தினியும், ஐந்து வயது மகளும் நின்று கொண்டிருக்கிறார்கள்.  இருவருமே அவனை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதுவரை நம் அப்பா இப்படி ஒரு காரியத்தைச் செய்து நாம் பார்த்ததில்லையே?  அப்பாவுக்கு என்ன பரீட்சையா கிரீட்சையா?  அதெல்லாம் நம்மைப் போன்ற சின்னப் பசங்களுக்குத்தானே நடக்கும்?  அப்பா என்ன செய்யப் போகிறார், பார்ப்போம்.  இது மகள்.  இதுவரை நம் கணவன் குடித்துத்தானே பார்த்திருக்கிறோம்?  படித்துப் பார்த்ததில்லையே?  குடியாவது பரவாயில்லை.  சொன்னதையே ஒம்போது தடவை சொல்வார்.  பொறுத்துக் கொள்ளலாம்.  இது அப்படித் தெரியவில்லையே?  இந்த மிருகத்தினால் நமக்கு ஆபத்தா அல்லது வீட்டுப் பிராணி மாதிரி இருக்குமா?  புரியவில்லையே?  – இது மனைவி.  அந்த ஆசாமிக்கும் ஒன்றும் புரியாது.  ஆதவன், கு. அழகிரிசாமி, ந. பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியன், தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்திரன்.  இவுங்கள்ளாம் யாரு?  பேரெல்லாம் ஒரு மாதிரியா இருக்கே?  எழுத்தாளர்னா பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், ம்ம்ம் வேற ஒரு பேரு ஞாபகம் வர மாட்டேங்குதே… ம்ம்ம்… சுஜாதா… அவுங்க புக்கெல்லாம் இங்க இல்லியே?  வெறும் கையோடு திரும்பினால் இந்த இரண்டு பெண்களிடமும் அவமானமாக வேறு போய் விடும்.  ரொம்ப யோசித்து விட்டு, புத்தகங்களின் விலையைப் பார்த்து மிரண்டு வேறு ஒரு கடைக்குப் போய் பாரதி புத்தகம் ஒன்றையோ, கல்கியின் பொன்னியின் செல்வனையோ வாங்கிக் கொண்டு போவான்.

தொலைக்காட்சித் தம்பிகளா, இம்மாதிரி ஆட்களிடமா போய் நான் புத்தகம் படிங்க என்று சொல்வேன்? 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai