பொதுவாக நான் ஜென்ரல் நாலட்ஜில் வீக். அதில் கமல்ஹாசன் படு எக்ஸ்பெர்ட் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன இருந்தாலும் அய்யங்கார் மூளை. கேட்கவா வேண்டும். சரி, அதை விடுங்கள். ஆனால் இந்த கொரோனா வந்ததும் ஜென்ரல் நாலெட்ஜ் கொஞ்சம் கொஞ்சமாக இம்ப்ரூவ் ஆகி வருகிறது. பாருங்கள். நேற்று தெரிந்து கொண்ட விஷயம் என்னவென்றால், கொரோனா என்றால், மதம் மாதிரியாம். அதாவது, மதத்துக்கு உள்ளே தானே நீங்கள் கிறிஸ்துவரா, முஸ்லீமா, இந்துவா, யூதரா என்றெல்லாம் இருக்கிறது? அதேபோலவாம். கொரோனா என்பது பொது. அதுக்கு உள்ளே பல வைரஸ்கள் உள்ளனவாம். அதில் ஒன்றுதான் கோவிட் நைண்டீனாம். ஓ. கொரோனாவே கொரோனா அல்ல. கோவிட் நைண்டீன் தான் கொரோனா. சரி, புரிந்து விட்டது.
இந்த ஜென்ரல் நாலட்ஜ் விவகாரத்தில் இன்று ஒரு இம்ப்ரூவ்மெண்ட் நடந்தது. அது உச்சரிப்பு பற்றியது. அது எனக்கு ரொம்பப் பிடித்த சப்ஜெக்ட்.
“நான் கரோனா என்று எழுதுவதை பலர் கிண்டல் அடிக்கிறார்கள். டாக்டர்களும் கொரோனா என்றே சொல்கிறார்கள். அதை கொரோனா என்று சொல்லக் கூடாது தங்கங்களே , கரோனா என்றுதான் சொல்ல வேண்டும்.முதலில் கரோனா என்று ஒழுங்காக சொல்லப் பழகவும் :-)” என்று அராத்து முகநூலில் எழுதியுள்ளார். பொதுவாகவே நான் உச்சரிப்பில் அதீத கவனம் செலுத்த நினைப்பேன். என் ஆங்கில உச்சரிப்பு பற்றி ராஜேஷ் எழுதியிருந்தார். பெங்களூர் க்றைஸ்ட் காலேஜில் நிகழ்த்திய ஆங்கில உரை மற்றும் உரையாடல். பத்துப் பனிரண்டு ஆண்டுகளுக்கு முன் அவ்ட்லுக் பத்திரிகையின் விழா ஒன்றில் ஒரு ஆங்கில கலந்துரையாடலில் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடத் தெரியாமல் கொஞ்சம் சொதப்ப வேண்டியதாயிற்று. அருகில் குஷ்பு ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். ஞாநியும் அதற்கு இணையாகவே. ஞாநியின் குரலுக்கு என்ன பேசினாலும் வெளுத்து வாங்குவது போலவே தோன்றும் என்பது வேறு விஷயம். குஷ்பு பேசியதில் சாரம் எதுவும் இல்லை. ஆனால் ஆங்கிலம் பிரமாதம். அதன் பிறகு கொஞ்சம் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டேன். அதற்கு உதவியாக இருந்தது முழுக்க முழுக்க அமெரிக்க வெப் சீரீஸ்தான். Pause போட்டு போட்டுப் பார்த்து ஒவ்வொரு வார்த்தையையும் அமெரிக்கர்கள் எப்படி உச்சரிக்கிறார்கள் என்று பார்ப்பேன். முக்கியமாக Gotham மற்றும் லூசிஃபர். இதில் லூசிஃபரில் லூசிஃபராக நடிக்கும் Tom Ellis பிரிட்டிஷ் நடிகர் என்பதால் அவரை மட்டும் தவிர்த்து விட்டு மற்றவர்களின் உச்சரிப்பில் கவனம் செலுத்தினேன். ஆனால் அதற்கு முன் பார்த்த காத்தம்தான் அமெரிக்க உச்சரிப்பை நன்றாக உள்வாங்கிக் கொள்ள உதவியது. எனக்கு பிரிட்டிஷ் உச்சரிப்பு பிடிக்காது. மட்டுமல்ல; பிரிட்டிஷ் சம்பந்தமான எதுவுமே பிடிக்காது.
ஐரோப்பிய மொழி என்கிறபோது ஆங்கிலத்தை விடவும் ஸ்பானிஷே எனக்கு நெருக்கமானது என்பதால் இத்தனையையும் மீறி ஆங்கில உச்சரிப்பில் ஸ்பானிஷ் உச்சரிப்பு வந்து சேரும். அராத்துவின் கரோனோ உச்சரிப்பைப் பார்த்த போது ஓ, ஸ்பானிஷ் பாதிப்பில்தான் கொரோனா என்கிறோமோ என்று நினைத்துக் கொண்டேன். ஸ்பானிஷ் மொழி உச்சரிப்பில் முழுக்க முழுக்க தமிழ் மாதிரி. ஓ எழுத்து வந்தால் ஓ என்றுதான் உச்சரிக்க வேண்டும். ஆங்கிலம் மாதிரி அ அல்ல. ஆனால் இன்று அராத்து கொடுத்த லிங்கைப் பார்த்த போது தெரிந்து கொண்டது, கொரோனா கொரோனா தான்; கரோனா அல்ல. சந்தேகம் இருந்தால் நல்ல ஒலிவாங்கி மூலம் கேட்டுப் பார்க்கவும். பிரிட்டிஷ் உச்சரிப்பு வேண்டுமானால் கரோனோவாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க உச்சரிப்பு கொரோனா தான். கரோனா இல்லை, பீரியட்.
***