பூச்சி – 11

ஆஹா, மணி எட்டரை ஆகியிருக்கிறது.  இதோ எழுத வந்து விட்டேன்.  இன்னும் ஃபாக்டரி திறக்கவில்லை.  அது வரை தட்டச்சு செய்து கொண்டிருக்கலாம்.  நேற்று இரவும் பதினொன்றரை மணிக்கு அவந்திகா ஏகப்பட்ட பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.  என்னம்மா இது என்று வருத்தத்துடன் கேட்டேன்.  ”ஆமாம்ப்பா, நீ காலையில் பாத்திரம் தேய்ப்பதைப் பார்க்கும் போது எனக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது.  இப்பவே முடிச்சுடறேன்.”

இம்மாதிரி தருணங்களும் உண்டு.  ஆனாலும் ஃபாக்டரி ஃபாக்டரிதான்.  ஸ்விக்கிக்கு வீட்டுக்குள் அனுமதி இருந்தால் இத்தனை கஷ்டம் இல்லை.  ஒன்று விட்டு ஒருநாள் ஸ்விக்கி மூலமே ஆர்டர் கொடுத்து சாப்பிட்டு விடுவேன்.  நாமும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருந்தால்தான் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.  ஆனால் ஸ்விக்கிக்காரன் தொடுகிறான், அந்தப் பாக்கெட்டில் கொரோனா இருக்கும் என்று பயந்தால் நாள் முழுவதும் பாத்திரம் தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 

இதற்கிடையில் என் நண்பர் விஜய் ஒரு மெஸேஜ் அனுப்பியிருந்தார்.  பெயரை மாற்றி விட்டேன்.  பெயரை வேறு போடலாமா கூடாதா என்று குழப்பமாக இருக்கிறது.  ஏன் பெயரைப் போட்டீர்கள் என்று அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடப்பதால் எங்கே பெயரைப் போடுவது எங்கே பெயரைப் போடக் கூடாது என்று தெரிய மாட்டேன் என்கிறது.  ஓடிக் கொண்டிருப்பவனின் குறுக்கே கட்டையைப் போட்டு, தாண்டித் தாண்டி ஓடு என்று சொல்வது போல்தான்.  சரி, விஜய் மெஸேஜ் இதுதான். 

“சாரு,

நேற்று நீங்கள் எழுதியது என் அம்மாவும் கதையும்தான்.  எங்கள் ஊரில் இது அறுவடைக் காலம்.  என் அம்மா எட்டு மணிக்கு அறுவடைக்குப் போகிறார்கள்.  அதற்கு முன்னால் எல்லா பாத்திரங்களையும் தேய்த்து, எங்களுக்கெல்லாம் டீ போட்டுக் கொடுத்து விட்டுத்தான் கிளம்புகிறார்கள்.  பிறகு 11 மணிக்குத் திரும்பி வந்து எங்களுக்கெல்லாம் காலை உணவு.  பாத்திரம் தேய்த்தல்.  மதிய உணவு செய்தல்.  பிறகு மீண்டும் மூன்றரை மணிக்கு வயலுக்குக் கிளம்புவார்கள்.  வயல் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது ஏழு மணி.  மீண்டும் எங்களுக்கு டீ போடுவார்கள்.  கொஞ்சம் ஓய்வெடுப்பார்கள்.  அடுத்து இரவு உணவுக்கான ஏற்பாட்டில் இறங்குவார்கள்.  இப்படியே அவர்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.  அறுவடைக் காலமாக இல்லாதிருக்கும் நாட்களிலும் 50 வயது ஆன ஒரு பெண்மணி மூன்று வளர்ந்த ஆடவருக்கு இப்படி சமைத்துப் போடுவது ஒரு கொடுமையான வேலைதான் இல்லையா?  எனவே நீங்கள் நேற்று எழுதிய பதிவைப் படித்த போது என் அம்மாவைப் பற்றி யோசித்தேன்.  ஒரு விஷயத்தை மறந்து விட்டேன்.  துணி துவைப்பதும் என் அம்மாதான்.  நான் மட்டுமே என் துணிகளை நானே துவைத்துக் கொள்கிறேன்.  சில சமயங்களில் என் தந்தை முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்.  நாளையிலிருந்து என் அம்மாவுக்குப் பாத்திரம் தேய்ப்பதில் உதவி செய்யலாம் என்று இருக்கிறேன்.  இந்த நரகத்திலிருந்து என் அம்மாவை மீட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் சாரு.

விஜய்.

இந்தக் கடிதத்துக்கு பதில் எழுத வேண்டுமானால் எனக்கு நூறு பக்கம் தேவை.  பக்கங்கள் இருக்கின்றன.  நேரம்தான் இல்லை.  சுருக்கமாக எழுதுகிறேன்.  விஜய் சொன்ன விஷயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.   இல்லை, பல பக்கங்கள் இருக்கின்றன.  இப்போது சில உதாரணங்களைச் சொல்கிறேன்.  விஜய்க்கு 26 வயது இருக்கும்.  இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலையில் இருக்கிறார். சீக்கிரம் ஆகி விடும்.  விஜய் போல் பல இளைஞர்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்.  எனவே இதை விஜய் தனக்கானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  நான் கண்டதைச் சொல்கிறேன்.  கண்டது பல என்பதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.  இளைஞர்கள் என் எழுத்தைப் படிக்கிறார்களா, அதனால் அவர்களின் ஆணாதிக்கத் தன்மையைக் களைந்து விடுவார்கள்.  திருமணம் ஆனதும் என் நூல்களைத் தன் புது மனைவியிடம் அறிமுகப்படுத்துவார்கள்.  உடனே அந்தப் பெண் இனிமேல் சாருவுடன் பழகாதே என்று உத்தரவு போட்டு விடுவார்.  மீறிப் பழகினால் சாருவா நானா முடிவு செய்து கொள் என்று பெட்டியைத் தூக்கி விடுவார்கள்.  இப்படி பலரது வாழ்வில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.  இதே இளைஞன் என்னைப் படிக்காமல், எல்லா சராசரிகளையும் போல் ஆணாதிக்கத்தன்மை கொண்டவனாக ரஜினிதான் என் தலைவன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தால் அதே பெண்கள் அவனுக்கு அடங்கி ஒடுங்கி நடந்து கொள்வார்கள்.  அந்த மாதிரி ஜோடிகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஆணும் பெண்ணும் சரி சம் (கொஞ்சம் பொறுங்கள், நேற்று ‘நாய்க்கு நிய்க்க நேரமில்லை; செய்ய வேலையும் இல்லை’ என்று சொன்னேன் அல்லவா?  இதை மிகுந்த கவனத்துடன் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று டம் டம் என்று பெரும் சப்தம் கேட்டது.  பார்த்தால் வாசலில்தான் அவந்திகா ரொம்ப நேரமாக கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறாள் போல் தெரிந்தது.  தட்டும் சத்தம் அல்ல.  டொம் டொம் என்று மிதிக்கும் சப்தம்.  தட்டச்சு செய்வதை அப்படியே நிறுத்தி விட்டு ஓடினேன்.  பார்த்தால் இரண்டு கையிலும் தூக்க முடியாமல் பாரமாக காய்கறிகள்.  சொல்லி விட்டுத்தான் போனாள், தெருவில் நம் காய்கறிக்காரர் வந்திருக்கிறார் என்று.  சரி, பையைக் கீழே வைத்து விட்டுக் கதவைத் திறக்கலாமே?  அது எப்படி, முட்டாள்தனமாகக் கேட்காதீர்கள்.  வெளியே போய் காய்கறியைத் தொட்டு எடுத்திருக்கிறாள்.  கையில் கொரோனா இருக்க வாய்ப்பு இருக்கிறது.  அதே கையால் எப்படி நாதாங்கியைத் தொட்டு கதவைத் திறப்பது?  அதனால்தான் முழங்கையாலேயே கதவைப் போட்டு தொம் தொம் என்று முட்டியிருக்கிறாள்.  நீங்கள் வெளிநாடுகளில் பார்த்திருக்கிலாம், இந்தியாவின் நமஸ்தே தெரியாத பல உலகத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது பழையபடி கை குலுக்காமல் முழங்கையால் முட்டிக் கொள்கிறார்கள்.  அந்த மாதிரிதான் முட்டியிருக்கிறாள்.  இதைத்தான் சொன்னேன், எடுபிடி வேலை என்று…) ஆணும் பெண்ணும் சரி சமமாக வாழவே முடியாது போல.  ஒன்று, ஆண் எஜமானன்;  பெண் அடிமை.  அல்லது, பெண் எஜமானி; ஆண் அடிமை. என்னுடைய எழுத்தைப் படிக்க நேர்கின்ற ஆண்களில் பெரும்பாலானோர் தங்கள் மனைவிக்கு சலாம் போட்டுக் கொண்டு வாழ்வதைப் பார்க்கிறேன்.  இதை அவர்கள் சமத்துவம் என்று வேறு நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.  பெருமையாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள்.  அடப் பாவமே, அடிமைப்பட்ட எலிக்குஞ்சு போல் மனைவிக்கு அடங்கி வாழ்வதையா நான் இதுகாறும் பேசி வந்தேன்?  நான் சொன்னது, சுதந்திரம்.  ஆணும் பெண்ணும் சுதந்திரம் பேணுங்கள் என்றேன்.  எல்லோரும் அப்படி இல்லை.  ஒத்துக் கொள்கிறேன்.  ஒரு பெங்களூர்ப் பெண்ணின் பெயர் ஞாபகம் வருகிறது.  சமமாக, சுதந்திரமாக, கணவனும் மனைவியும் சிநேகிதர் போல் வாழும் சிலரும் இருக்கிறார்கள்.  ஆனால் பல ஆண்கள் தங்கள் மனைவிக்கு அடிமையாக வாழ்வதையே பார்க்கிறேன்.

என் அம்மாவும் விஜய்யின் அம்மா மாதிரிதான்.  என்ன, எங்களுக்கு நிலம் இல்லாததால் வயல் வேலை இல்லை.  ஆனால் பல விவசாயிகளுக்கு இட்லி சுட்டு விற்பார்கள்.  அம்மா பற்றி எழுதினால் நூறு பக்கம் வரும்.  நெல் அவித்துக் காய வைத்து மில்லில் கொண்டு போய் அரைத்து அரிசியாக்கிக் கொண்டு வந்து வைத்திருப்பார்கள்.  வீட்டில் எட்டு உருப்படி.  கடையில் போய் அரிசி வாங்க நிதி நிலை ஒத்துக் கொள்ளாது.  சாணியைச் சேகரித்து ராட்டி தட்டி காய வைத்துக் கொள்வார்கள்.  கள்ளிக்காட்டுக்குப் போய் கள்ளி மரங்களிலிருந்து கள்ளிக் கிளைகளை வெட்டி வந்து காய வைத்து விறகாக வைத்துக் கொள்வார்கள்.  தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்துதான் சமைக்க வேண்டும்.  மேடை என்ற ஒன்று இருக்கிறது என்பதே அம்மாவுக்கோ எங்களுக்கோ தெரியாது.  ஈர விறகாக இருந்தால் புகை வரும்.  ஊதாங்கோலால் ஊதிக் கொண்டே இருக்க வேண்டும்.  அம்மியில்தான் குழம்புக்கான மசாலா அரைக்க வேண்டும்.  தரையில்தான் குடக்கல் இருக்கும்.  தரையில் இடது காலை மடக்கிக் கொண்டு வலது காலை நீட்டியபடி இட்லிக்கான அரிசி, உளுந்து இரண்டையும் அரைக்க வேண்டும்.  எட்டு உருப்படிகளின் துணிகளை அள்ளி எடுத்துக் கொண்டு குளத்துக்குப் போய் துவைத்து அலசிக் கொண்டு வர வேண்டும்.  வீட்டில் தண்ணீர் வராது.  வீட்டிலும் தண்ணீர் வரும் என்பதே எனக்கு 25 வயதுக்கு மேல்தான் தெரியும்.  எல்லோருக்கும் குளிக்க கொள்ள தண்ணீர் தெருமுனைக் குழாயிலிருந்து தூக்கிக் கொண்டு வர வேண்டும்.  இப்படி நூற்றுக் கணக்கான வேலைகள்.  25 வயது வரை இந்த வேலைகளில் நாமும் உதவி செய்யலாம், செய்ய வேண்டும் என்பதே எனக்குத் தெரியாது.  அப்படி யாரும் தெரியப்படுத்தவும் இல்லை.  கொஞ்சமாவது உதவி செய்திருக்கலாம்.  வீட்டில் குளிக்காமல் தினமும் குளத்தில் குளித்திருக்கலாம்.  வேறு எந்த உதவியும் செய்திருக்க வாய்ப்பு இல்லை.  இதையெல்லாம் அன்றைய விளிம்புநிலை சமூக நிலையிலிருந்து இடம் பெயர்ந்து இன்று நடுத்தர வர்க்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு பார்க்கும்போது துயரம் மேலிடலாம்.  எனக்கு அப்படித் தோன்றுவதில்லை.  அம்மா ஒரு ராணி மாதிரி வாழ்ந்தார்கள்.  எந்தப் பயலுக்கும் சலாம் போட்டதில்லை.  யாரையும் அண்டி வாழ்ந்ததில்லை.  உழைப்பே தவம்.  நம் உடம்பு இப்படி உழைப்பதனால் மட்டுமே தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என்பதாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.  அதுதான் மனித உடம்பின் விதி.  என் அம்மா, நைனா இருவரில் நைனாதான் அதிகம் உழைத்தவர்கள்.  காலையில் ஏழு மணிக்குக் கிளம்பினால் இரவு வீடு திரும்ப பத்து பதினொன்று ஆகும்.  அத்தனை நேரமும் டியூஷன் மற்றும் பள்ளிக்கூடம்.  டியூஷன் என்றால், இப்போது போல் எல்லா மாணவர்களையும் சேர்த்து உட்கார்த்தி வைத்து சொல்லிக் கொடுப்பது அல்ல.  ஒவ்வொரு மாணவராக அவரவர் வீட்டுக்கு வாத்தியாரே போக வேண்டும்.  சைக்கிள்தான் எல்லாவற்றுக்கும்.  சுமாராக தினமும் ஐம்பது கிலோமீட்டர் சைக்கிள் விட்டிருக்கிறார்கள்.  அறுபது வயது வரை.  85 வயது வரை வாழ்ந்தார்கள்.  அம்மா சாகும்போது 80 தான்.  95 வரை வாழ்ந்திருக்க வேண்டும்.  ஆனால் குடும்பத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு திடீர் மரணம்.  எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது உங்கள் பெற்றோருக்கு ஷுகர், ப்ரஷர் உண்டா என்று கேட்ட போது திருதிருவென்று விழித்தேன்.  ஏனென்றால், அம்மாவும் நைனாவும் இறுதிநாள் வரை டாக்டரிடம் போனதே இல்லை.  அதனால் அவர்களுக்கு என்ன இருந்தது என்ன இல்லை என்பதே தெரியாது.  ஆறு குழந்தைகளும் சுகப் பிரசவம்.  சிஸேரியன் என்றால் என்னவென்றே தெரியாது.  ஆக, இப்போது சொல்லுங்கள், என் அம்மாவின் வாழ்க்கை பரிதாபத்துக்குரியதா?  இப்போதைய பெண்களால் குனிந்து நிமிர முடியுமா?  குனிந்தால் சைனஸ் வந்து விடுகிறது.  ஒரு குழந்தைதான்.  அதுவும் சிஸேரியன்.  வலியே தாங்க முடியாது.  பெண்களெல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் ஒரே ஒரு எபிசோட் பிக்பாஸ் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

என்ன சொல்ல வந்தேன் என்றால், என் எழுத்தைப் படிக்கும் தம்பிகள் ஆணாதிக்கத்தைத் தூக்கிப் போட்டு விட்டு, “இதோ நான் பாத்திரம் தேய்க்கிறேன் பார், சாருவே தேய்க்கிறார், அப்புறம் என்ன?” என்று ஆரம்பிப்பார்கள்.  உடனே அந்தப் பெண்  உன் அம்மாவுக்கு மாதா மாதம் பணம் அனுப்பாதே என்று சொல்லும்.  பணம் அனுப்புவதாக இருந்தால் நான் கிளம்புகிறேன் என்று பெட்டியைத் தூக்கும்.  சமத்துவம் என்பதே இல்லை.  நான் என்ன செய்யட்டும்?  உடனே சாரு ஆணாதிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறான் என்று என்னிடம் ஓடி வராதீர்கள்.  ஆண் அடி பணியாமல், அடிமையாக மாறாமல், சராசரியாக ரஜினி ரசிகனாக இருந்தால், பெண் செத்தாள்.  சமைத்து சமைத்தே சாக வேண்டும்.  ”ஏன், உன் அம்மா சமைத்தாள் ராணி?  என் மனைவி சமைத்தால் அடிமையா?” என்று நீங்கள் கேட்கலாம்.  எங்கள் வீட்டில் அம்மாவோ நைனாவோ ஒருவருக்கொருவர் அடிமையாக இல்லை.  இருவரும் சுதந்திரமாக இருந்தார்கள்.  இப்போதைய ஆண்கள் (இலக்கியம் படித்தவர்கள்!) ஒன்று அடிமையாக இருக்கிறார்கள்; இல்லாவிட்டால், பெண்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள்.  இப்போது பாருங்கள்.  இந்தியாவில் மட்டும் அல்ல; உலகம் பூராவும் வீட்டு வன்முறை அதிகமாகி விட்டது.  அப்படியென்றால்?  ஆண்கள் திரும்பவும் பெண்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.  நூற்றுக்கு 25 சதவிகித வீடுகளில் பெண்கள் ஆண்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.  வீட்டு வன்முறை அதிகமாகி விட்டது. 

சரி, இதற்குத் தீர்வுதான் என்ன?  உண்மையைச் சொன்னால், தெரியவில்லை.  ஒரு நண்பர்.  படு சுதந்திரமான பேர்வழி.  இந்த உலகத்திலேயே சுதந்திரமான பேர்வழி அவந்திகாதான்.  அந்த நண்பரும் அவ்வாறே.  அவர் மனைவி அந்தக் காலத்து ரிஷி பத்தினி மாதிரி.  இன்னொரு நண்பர், சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாது.  அடிமையிலும் அடிமை. அவர் மனைவியோ பட்டத்து ராணி.  நான் சொன்னேன், பெண்கள் இடம் மாறினாலும் அந்த நண்பர் சுதந்திரமாகத்தான் இருப்பார்.  பட்டத்து ராணி அங்கே போனால் அடிமையாகி விடுவார்.  அங்கே அடிமையாக இருந்த பெண், இங்கே வந்து பட்டத்து ராணியாகி விடுவார்.  ஆண் – பெண் உறவில் அதிகமாக சமத்துவத்தைப் பார்க்க முடியவில்லை.  அது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. 

இப்போது உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால் இந்தியா, ஃப்ரான்ஸ் போன்ற தேசங்களில் வீட்டு வன்முறை அதிகரித்திருப்பதாக செய்திகள் வருகின்றன.  அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.  உலகம் பூராவுமே ஆண்கள் பெண்களை அடக்கி ஆளத்தான் நினைக்கிறார்கள்.  பெண்கள் சமையலுக்கும் செக்ஸுக்கும் மட்டுமே லாயக்கு என்று நினைக்கிறார்கள்.  சரி, சுதந்திரம் அடைந்த பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் சைக்கோவாக மாறி விடுகிறார்கள். 

நான் அரசு அலுவலகத்தில் வேலை பார்த்தபோது இரண்டு பேருக்கும் அஞ்சுவேன்.  நான் மட்டும் அல்ல; எல்லோரும்.  தலித் அதிகாரி மற்றும் பெண் அதிகாரி.  அதிகாரிகளாக தலித்துகள் வரும்போது அவ்வளவு காலம் ஒடுக்கப்பட்டதாலோ என்னவோ அலுவலகத்தில் இருக்கும் தலித்துகளாகப் பார்த்து டார்ச்சர் கொடுப்பார்கள்.  என்னய்யா இது அக்கிரமம்?  பிராமணர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ’பாப்பாண்ட்ட வச்சுக்கிட்டா எப்ப இருந்தாலும் போட்டுத் தள்ளிருவான்’ என்ற அச்சமோ என்னமோ,  தன் சாதிக்காரனையா பார்த்துப் பார்த்து துன்பம் கொடுப்பார்கள். அதேபோல் பெண்கள்.  அவர்கள் விதிவிலக்கே இல்லாமல் எல்லோரையும் டார்ச்சர் கொடுப்பார்கள்.  கவனிக்கவும்.  அதிகாரிகள் மட்டத்தில்தான் இப்படி.  மற்றபடி குமாஸ்தா பெண்களெல்லாம் ஒவ்வொருவருமே துலாபாரம் சாரதா போல் ஒரு மூட்டை துயரக் கதையைச் சுமந்து கொண்டிருப்பார்கள். 

ஆனால் இத்தனை எழுதினாலும் இன்னமும் நடுத்தர வர்க்கப் பெண்களும், மேட்டுக்குடிப் பெண்களும் ஆண்களிடம் படு பயங்கரமாக, நம்பவே முடியாத அளவுக்கு அடியும் உதையும் பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  மேட்டுக்குடிப் பெண்களும் என்பதை அடிக்கோடிட விரும்புகிறேன். 

விஜய்யின் கடிதத்தைப் படித்தபோது இதெல்லாம் எண்ணச் சிதறல்களாக மனதில் ஓடின.  ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்வேன்.  பெண் அடிமையாக இருக்கிறாள்; அல்லது அடிமைப்படுத்துகிறாள்.  இதற்குப் பெண்ணா காரணம்?  தெரியவில்லை.  மிகவும் குழப்பமான விஷயமாகத்தான் இருக்கிறது இது.  

***

பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai