Oh my ghaad… நிர்மல் கடிதம் மூன்று பகுதிகளாக வாட்ஸப்பில் வந்தது. அதில் முதல் பகுதியைக் கட்டுரையில் இணைக்க மறந்து போனேன். இதோ அது:
”சாரு வெறும் பூச்சி என்ற தலைப்பு நன்றாக இல்லை. குறைந்த பட்சம் ஒரு துணைத் தலைப்பாவது சேருங்கள். சமீபத்திய பூச்சி பற்றிய என் கருத்து:
உயிரினங்களின் மீதான அன்பு என்ற விஷயம் சைவம் X அசைவம் என்ற சர்ச்சைக்குள் போய் முடிந்துவிடும். அதற்குள் போகாமல் சாரு தப்பிப்பார் என எதிர்பார்க்கிறேன்.
ஜீவகாரூண்யம் என்பதை கொல்லாமை/ புலால் உண்ணாமை என்பதற்குள் மட்டும் எப்படி சுருக்கி விட முடியும்? கருணையின்றி கொல்வதை விட அடுத்த சந்ததியை ஏற்படுத்த முடியாமல் அழிந்து (Extinct) போகும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாகுதே?
இந்த அன்பு / கருணையை விட மனிதர்களுக்குத் தேவை உண்மையில் அவனிடம் இந்த உலகை அழிக்கும் திறன் இருக்கிறது என்ற புரிதல்தான். இந்த அழிக்கும் ஆற்றலை ஒரு மாதிரி கட்டுப்படுத்திக் கொள்ள அந்தக் காலத்தில் உருவான உணர்ச்சிபூர்வமான முறை அல்லது கருவிதான் கருணை, ஜீவகாருண்யம் போன்றவை எனத் தோன்றுகிறது.
மனிதன்தான் இந்த உலகில் எது வாழ வேண்டும், அது எந்த அளவு வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறான். அடர்ந்த அமேசான் காட்டில் கூட எந்த மரம் எந்த செடி எந்த மிருகம் வாழ வேண்டும் என்பதை மனிதர்களின் நுகர்கிற விதமே தீர்மானிக்கிறது.
மனிதன்தான் எந்த மலை இருக்க வேண்டும், எந்த ஆற்றில் மணல் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கிறான். இவ்வளவு கூட்டமாக ஒரே மதமாக ஒரே நாடாக முன்பின் தெரியாதவர்களோடு ஒன்று சேர்ந்து இணைந்து பயனிக்கக் கூடிய திறன் உலகில் வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லைதானே?”
நிர்மலின் இந்தக் கருத்துக்களுடன் நூற்றுக்கு நூறு முரண்படுகிறேன். இந்தக் கருத்துக்களெல்லாம் இந்தக் காலத்து கல்லூரி மாணவர்களின் கருத்துக்களை ஒத்திருக்கிறது. அல்லது, அமெரிக்கர்களின் பொருள்வயமான சிந்தனையாகத் தெரிகிறது. அகத்தின் ஒளிக்கீற்று எதுவுமே இந்தக் கருத்தில் இல்லை. இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன்னால் மனிதன் ஒரு அற்பப் பதர். அவனை விடவும் அற்பப் பதரான, கண்ணுக்குத் தெரியாத பூச்சி மனித குலத்தையே அழித்து விடும் போல் தெரிகிறது. மனிதனின் பேராசையும், பணத்தாசையும், அதிகாரப் போட்டியும், திமிரும், அகங்காரமும்தான் கொரோனாவாக உருமாறி அவன் முன்னே வந்து மரணப் பூச்சியாக நிற்கிறது.
நேற்று நடந்த விஷயத்தைக் கேளுங்கள். பிறந்து பத்து தினங்களே ஆன பூனைக்குட்டி ஒன்று தன் தாயைப் பிரிந்து வந்து விட்டது போல. அல்லது, தாயே கொண்டு வந்து போட்டிருக்கலாம். குட்டியை என்னால் பார்க்க முடியவில்லை. அதன் குரலிலிருந்து அது பிறந்து பத்துப் பதினைந்து நாள் இருக்கும் என்று யூகிக்க முடிந்தது. நான் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் வெளிகேட்டுக்கு அருகில் ஒரு பெரிய ட்ரான்ஸ்ஃபார்மர் இருக்கிறது, அதன் அருகில் நின்று பூனைகளுக்கு உணவு கொடுப்பேன். கிட்டத்தட்ட குடியிருப்பின் வெளியே என்று வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே உள்ள பகுதியில் வைத்துக் கொடுத்தால் போலீஸில் புகார் செய்வேன் என்கிறார் பக்கத்து வீட்டுக்காரர். ஏன் மனிதர்களின் மீது காட்டமாக இருக்கிறேன் என்று புரிகிறதா? நான் மட்டும் இல்லை. நீங்கள் கொஞ்சூண்டு அசாதாரணமாக இருந்து விட்டாலே போதும், சமூகத்துக்கு விரோதமான ஆள் என்றுதான் காமன்மேன் நினைக்கிறான். இவன்களைப் போலவே பூனையோ காகமோ பசியால் கதறினால் நாம் பாட்டுக்குக் காதில் வாங்காதது போல் போக வேண்டும். பணத்தை முடிந்து முடிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் இவன்களைப் போலவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் போலீஸில் புகார் செய்வான். சரி, நேற்றைய கதைக்கு வருகிறேன். நான் பூனைகளுக்கு உணவு கொடுக்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் அருகே ஒரு சிறிய, மிகச் சிறிய கார் நின்றது. அந்தக் காரின் சக்கரத்தின் மேலே உள்ள ஏதோ ஒரு இடுக்கிலிருந்து அந்தப் பூனைக்குட்டியின் கதறல் கேட்டது. இது நடந்தது முந்தாநாள் இரவு பத்து மணிக்கு. நான் அதனிடம் பேசிப் பார்த்தேன். கொஞ்சிப் பார்த்தேன். வெளியே வருகிறாற்போல் தெரியவில்லை. என்னிடம் சாப்பிடும் பத்து பூனைகளுக்கு மட்டும் சாப்பாட்டைக் கொடுத்து அவையெல்லாம் சாப்பிட்ட பிறகு கமுக்கமாக வீட்டுக்குள் வந்து விட்டேன். அவந்திகாவிடம் சொன்னால் இன்னும் பத்து ஆண்டுகளுக்கான என் வாழ்க்கையே மாறி விடும். இந்த மாதிரி ஆபத்தில் மாட்டிக் கொண்ட ஒரு நாய்க்குட்டியைக் காப்பாற்றப் போய்தானே 25 ஆண்டுகள் நான் என் எழுத்தைப் புறக்கணித்து விட்டு நாய்க் காப்பாளனாக மாறினேன்? 15 ஆண்டுகள் மாதம் ஒரு நண்பர் 25000 ரூ. கொடுத்தார். பணம் பணம் என்று சிரமப்படாதீர்கள். நிம்மதியாக எழுதுங்கள், சேர்த்து வைத்து வெளிநாடுகளுக்குச் சென்று வாருங்கள் என்று. சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ 15 ஆண்டுகளுக்கு முன்னால் 25000 ரூ. என்பது எவ்வளவு பெரிய தொகை? அந்த 15000 ரூபாயும் ஸோரோ மற்றும் பப்புவின் வளர்ப்புக்கே செலவாயிற்று. இன்னும் என் கைக்காசும் போனது. அதனால்தான் ஒருசிறிதும் மிருகாபிமானம் அற்று கமுக்கமாக வீட்டுக்குள் வந்தேன். இப்போது என் வீட்டில் வளரும் ஐந்து குட்டிகளும் கூட இப்படி ஒரு மழை இரவில் பூனைக்குட்டிகளைக் காப்பாற்றப் போய் வந்த பரிசுதானே?
எழுத்தா? வாழ்நாள் பூராவும் பூனை வளர்ப்பா? சரி, என்ன ஆனாலும் சரி, நாளை அந்தக் குட்டி பிழைத்திருந்தால் பார்ப்போம். இல்லாவிட்டால் என் தலையில் சேரட்டும் பாவம். காலையில் உணவு கொடுக்கப் போனேன். காலையிலிருந்து கதறிக் கொண்டு இருந்தது போல. உள்ளே போன குட்டிக்கு வெளியே வரத் தெரியவில்லை. இனிமேலும் சும்மா இருக்க முடியாது. வாட்ச்மேனிடம் சொல்லி அந்தக் காரின் உரிமையாளரை அழைத்து வரச் செய்தேன். எங்கள் குடியிருப்பைச் சேர்ந்த இளம் வயதுக்காரர். மனைவியுடன் வந்தார். பூனையை விரட்டுவதற்கு முயன்றோம். சுமார் பத்து நிமிடம். அந்தப் பத்து நிமிடத்திலும் ஒரு இருபது முறையாவது ஒயரைக் கடித்து விடுமே, ஆயிரம் ரூபாய் செலவாய்டுமே என்று வாட்ச்மேனிடம் தமிழிலும் என்னிடம் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அழுதே விடுவார் போலிருந்தது. அந்த ஆயிரம் ரூபாயை நானே கொடுத்து விடுகிறேனே என்று கூடச் சொல்லி விடுவேன் போலிருந்தது. அடப் பாவிகளா, நாளை நாம் உயிரோடு இருக்கப் போகிறோமா இல்லையா என்பதே நிச்சயமில்லாத இந்த நிலையில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிணங்கள் குவிந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், தொலைக்காட்சி பூராவும் மரணம் மரணம் என்று மரணத்தைக் கூவிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் அந்த இளைஞருக்குப் பணம்தான் கவலையாக இருக்கிறது. ஒரு பச்சிளம் சிசுவின் உயிரின் அவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
எங்களுக்கு ஃபெப்ருவரியோடு வீட்டுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகையில் 3000 ரூபாய் கூட்ட வேண்டும் என்று ஏற்பாடு. மாதாமாதம் முதல் தேதியே வாடகையை ஜீப்பேயில் அனுப்பி விடுவேன். இந்த மாதம் அனுப்ப முடியவில்லை. போஸ்டல் பென்ஷனில் நவீன வசதிகள் இல்லை. ஏடிஎம்மில் பணத்தை எடுக்கலாம். அதை எடுத்து பணத்தை ஆக்ஸிஸ் வங்கியில் போட்ட பிறகுதான் ஜீப்பே மூலம் அனுப்புவேன். இப்போதுதான் வங்கிக்குப் போக முடியாதே? பணம் கையில் இருக்கிறது. அனுப்ப இயலவில்லை. வீட்டுக்காரரும் வயதானவர். 12 தேதி வாக்கில் போன் செய்து 3000 ரூபாயையும் சேர்த்து அனுப்பச் சொன்னார். அப்புறம் ஒரு நண்பர் மூலமாகக் கொடுத்து அனுப்பினேன். மூவாயிரம் சேர்த்துத்தான்.
நிர்மல் சொல்வது போல் உலகை அழிக்கும் திறன் மனிதனிடம் உண்டு. ஏன், ஒரு ஆண்டுக் காலம் மனிதர்களை சுதந்திரமாக இமயமலையில் திரியவிட்டால் இமயம் இருந்த இடத்தில் கட்டாந்தரைதான் இருக்கும். அந்த அளவுக்குப் பிளாஸ்டிக் கழிவுகளால் இமயமலையையே அழித்து விடுவார்கள். சந்தேகம் இருந்தால் இது பற்றி இணையத்தில் தேடிப் படித்துப் பாருங்கள். இப்படி உலகை அழிக்கும் திறன் மனிதனுக்கு இருக்கலாம். ஆனால் மனித குலத்தையே பூண்டோடு அழிக்கும் திறன் இயற்கைக்கும் உண்டு. சின்னஞ்சிறிய பூச்சிக்கும் உண்டு. உடம்பில் வெடிகுண்ய்டைக் கட்டிக் கொண்டு இரட்டைக் கோபுரத்தை அழித்தார்கள் இல்லையா, அந்த மாதிரி சமாச்சாரம்தான் இது.
”மனிதன்தான் இந்த உலகில் எது வாழ வேண்டும், அது எந்த அளவு வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறான். அடர்ந்த அமேசான் காட்டில் கூட எந்த மரம் எந்த செடி எந்த மிருகம் வாழ வேண்டும் என்பதை மனிதர்களின் நுகர்கிற விதமே தீர்மானிக்கிறது.”
அப்படித் தீர்மானிப்பதால்தான் அவ்வப்போது சில பூச்சிகளும் பேரழிவுகளும் வேறு மாதிரியான தீர்மானத்தோடு வருகின்றன. மேலும், நிர்மல் கூறுகிறாற்போல் ஒரே மதமாக, ஒரே தேசமாக மனிதன் எங்கும் வாழவில்லை. மிகப் பெரும் அளவில் போர்த்தளவாடங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு அடுத்த மனிதனுக்கும் அடுத்த தேசத்துக்கும் அச்சுறுத்தலாகவே வாழ்கிறான். சமீபத்தில் நடந்த உலகப் போர்களும் ஹிட்லர், ஸ்டாலின், மாவோ ஆகிய மூன்று சர்வாதிகாரிகளும் கொன்றொழித்த மனிதக் கூட்டத்தின் எண்ணிக்கை எத்தனை? ஒவ்வொருவரும் 90 லட்சம்.
எனவே நிர்மல், உங்கள் கடிதம் பேசும் பொருள் வேறு; பூச்சியில் வரும் ஆதார சுருதி வேறு. ஒரே வார்த்தையில் சொன்னால், இயற்கையின் முன்னே மனிதன் ஒரு அற்பப் பதர். அப்படிப்பட்ட புரிதல் இருந்ததால்தான் நம் முன்னோர் இயற்கையைத் துதித்தார்கள். இத்தனை அத்தியாயங்கள் எழுதியிருக்கிறேன், இப்போது வந்து டொனால்ட் ட்ரம்ப் என்ற அமெரிக்கக் கௌபாய் பேசுவது போல் பேசுகிறீர்களே நிர்மல்? நான் என்ன செய்ய?
***
இந்தியாவில் இனி வரப் போகும் காலம் – அதாவது, கொரோனாவுக்குப் பிறகு – இப்போது அமெரிக்கா எப்படி இருக்கிறதோ அப்படி இருக்கும் என்று தோன்றுகிறது. மாநிலத்துக்கு ஒரு லட்சம் பேர் பட்டினியால் சாகலாம். தென்னிந்தியா மட்டும் தப்பித்துக் கொள்ளும். இங்கே உள்ள அரசுகளை நாம் எவ்வளவு விமர்சித்தாலும் யாரும் பட்டினியால் சாகும்படியான நிலை இங்கே இல்லை. ரேஷனில் எல்லா அத்தியாவசிய உணவுப் பொருளும் இலவசமாகக் கிடைக்கிறது. ஐந்து ரூபாய்க்கு வயிறு நிறைய சோறும் இட்லியும் அம்மா உணவகத்தில் கிடைக்கிறது. சாகாமல் இருக்க இது போதும். ஆனால் மற்றபடி திருட்டு, கொலை, கொள்ளை எல்லாம் இப்போது இருப்பதை விட இன்னும் பல மடங்கு மோசமாகும். இப்போது இருக்கும் நிலையே மெக்ஸிகோ மாதிரி இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னால் பெருவெள்ளத்தில் சென்னை மிதந்தது அல்லவா? அப்போது என் மகன் கார்த்திக் மிக அத்தியாவசியப் பணியின் நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. மீனம்பாக்கம் விமான நிலையம் போக வேண்டும். நள்ளிரவு இரண்டு மணிக்கு விமானம். வீட்டில் ஏழு மணிக்கே தயாராகி விட்டான். எந்த டாக்ஸியும் கிடைக்கவில்லை. அவனுடைய காரை எடுத்துக் கொண்டு போகவும் வழியில்லை. எங்கே விடுவது? அப்போது அவந்திகா அவளுடைய ஆன்மீக வகுப்புகளுக்கு வரும் ஒரு அன்பருக்கு ஃபோன் செய்தாள். அவர் ஒரு டாக்ஸி டிரைவர். ஆட்டோவும் ஓட்டுவார். அவள் சொன்னவுடன் அவர் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து ஆட்டோவை எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் கிளம்பி வந்தார். ஆட்டோவை எங்கள் வீட்டில் வைத்து விட்டு அவனுடைய காரை எடுத்துக் கொண்டு போய் அவனை விமான நிலையத்தில் விட்டுவிட்டு வந்து ஆட்டோவை எடுத்துக் கொண்டு வீடு சென்றார். 2000 ரூ. கொடுத்தேன்.
இரண்டொரு தினங்கள் முன்பு அவர் எனக்கு ஃபோன் செய்து 5000 ரூ. கேட்டார். சில பேர் ரொம்ப கௌரவம் பார்ப்பார்கள் இல்லையா? கவரிமான் டைப் பேர்வழிகள். அவர் அந்த மாதிரி நபர். அவரே கேட்ட பிறகு இனி வரப் போகும் நாட்களை எண்ணிப் பார்த்தேன். மூன்று மாதத்தில் தருகிறேன் என்றார். கொடுத்தேன். டாக்ஸியும் ஆட்டோவும் ஓடாமல் பிரச்சினை என்றார்.
***
அப்பா,
இங்கே மணி இப்போது அதிகாலை 3:05. பூச்சி தொடரில் வந்த கேள்விக்கு உங்கள் பதிலைக் காண இத்தனை நாள் ஆர்வமாக இருந்தேன். ஒரே பதைபதைப்பாக இருந்தது. பாரதி என் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர் என்பதை உங்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பாரதியின் அந்தக் கவிதையை வாசித்தவுடன் பதற்றம் தணிந்தது. நீங்கள் சொன்னது போல இரண்டுமுறை வாய்விட்டு வாசித்தேன். அற்புதம். அதுவும் இந்த மாதிரியான ஒரு சூழலில் ஆறுதலாக இருந்தது.
உங்களுக்கு இத்தாலியில் வாழ்ந்த அசீசி நகரத்து பிரான்ஸிஸ் பற்றி தெரிந்திருக்கலாம். உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் எழுத்துக்களை பல்வேறு கிறிஸ்துவ ஞானிகளின் எழுத்துக்களோடு ஒப்பிட்டிருக்கிறேன். என் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில். இதைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்னும் மேலிடத்திற்குத் தெரிந்தால் அவ்வளவுதான். இருந்தாலும் என் தரப்பு நியாயம் சரியானது. பூச்சி 29 படித்த பின் பின்வரும் பிரான்ஸிஸ் ஆஃப் அசீசியின் பிராத்தனையைப் படித்தேன்:
Most High, all-powerful, all-good Lord, All
praise is Yours, all glory, all honour and all blessings.
To you alone, Most High, do they belong, and no
mortal lips are worthy to pronounce Your Name.
Praised be You my Lord with all Your creatures,
especially Sir Brother Sun,
Who is the day through whom You give us light.
And he is beautiful and radiant with great
splendour,
Of You Most High, he bears the likeness.
Praised be You, my Lord, through Sister Moon and
the stars,
In the heavens you have made them bright,
precious and fair.
Praised be You, my Lord, through Brothers Wind
and Air,
And fair and stormy, all weather’s moods,
by which You cherish all that You have made.
Praised be You my Lord through Sister Water,
So useful, humble, precious and pure.
Praised be You my Lord through Brother Fire,
through whom You light the night and he is
beautiful and playful and robust and strong.
Praised be You my Lord through our Sister,
Mother Earth
who sustains and governs us,
producing varied fruits with coloured flowers
and herbs.
Praise be You my Lord through those who grant
pardon for love of You and bear sickness and trial.
Blessed are those who endure in peace, By You
Most High, they will be crowned.
Praised be You, my Lord through Sister Death,
from whom no-one living can escape. Woe to those
who die in mortal sin! Blessed are they She finds doing Your Will.
No second death can do them harm. Praise and
bless my Lord and give Him thanks,
And serve Him with great humility.
ஃபிரான்ஸிஸின் பிராத்தனையின் சாரமும் பாரதியின் கவிதையில் உள்ள சாரமும் உங்கள் எழுத்தில் தெரிவதும் ஒன்றாகத்தான் தெரிகிறது.
பாரதியைப் படிப்பது முக்கியமல்ல; ஆனால் பாரதியின் கவிதையில் உள்ள தெய்வீகத்தன்மையைக் கண்டறிவதுதான் சிறப்பு. ஃபிரான்ஸிஸின் வாழ்வில் எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கின்றன. அடிபட்ட ஒரு ஓநாய்க்கும் அவருக்கும் ஒரு நட்பு இருந்தது. பறவைகள் அவருடன் பேசுமாம். ஃபிரான்ஸிஸ் இயற்கையை அந்தளவுக்கு நேசித்த ஒரு புனிதர். Brother Sun, Sister Moon அவர் வாழ்வைச் சித்தரிக்கும் படம். படத்தில் இயற்கையின் மீதான அவர் அன்பு எப்படி வெளிப்பட்டிருக்கிறது என்பதை நான் கவனிக்கவில்லை. உங்களுக்குப் பிடிக்கலாம்.
வளன் அரசு
பூச்சி 29ஐ நான் இணைய தளத்தில் இன்று மதியம் 12 மணிக்குப் பதிவேற்றினேன். அடுத்த அரை மணி நேரத்தில் வந்த கடிதம் மேலே இருப்பது. வளன் அரசு அமெரிக்காவில் இருக்கிறான். என்னுடைய அற்புதமான நண்பர்களில் ஒருவன். என் மீதும் என் எழுத்தின் மீதும் எல்லையில்லாப் பிரியம் கொண்டவன். வளன் சொன்ன அந்தப் படத்தை இதுவரை பார்த்ததில்லை. இப்போது பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொள்கிறேன்.
***
சரி நண்பர்களே, இப்படி நெட்ஃப்ளிக்ஸ் நெட்ஃப்ளிக்ஸ் என்று அடித்துக் கொள்கிறீர்களே, நான் இத்தனைக் காலமாக எத்தனையெத்தனை ஐரோப்பியப் படங்கள் பற்றி எழுதியிருக்கிறேன்? அவற்றில் ஒன்றைக் கூடவா பார்க்கத் தோன்றவில்லை? நீங்களெல்லாம் என் வாசகர்கள்தானா? இப்போதைக்கு ஞாபகம் வருவது ஒரு பத்து படங்கள்.
Fifth Seal – Zoltan Fabri
God Walks Backwards – Miklós Jancsó
Jesus Christ’s Horoscope – Miklós Jancsó
Mephisto -István Szabó
The Hungarians – István Szabó
All films of Werner Herzog
Battle of Chile – ஏழெட்டு மணி நேரப் படம்
Hour of the Furnaces
Hitler: A Film From Germany (ஏழெட்டு மணி நேரப் படம்)
Last Supper – Tomas Alea