பூச்சி – 31

 

 

சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் என் பிரதான மாணவியை அழைத்து, “இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா?  ஒரு முக்கியமான பொறுப்பில் இருக்கும் நீ இப்படிப் பொறுப்பில்லாமல் (ம்ஹும், நினைவில் வந்த ‘பொறுப்பில்லாமல்’ என்ற வார்த்தையை அப்படியே ரத்து செய்து விட்டு வேறொரு வார்த்தையைப் போட்டு ரொப்பினேன்) இப்படி விளையாட்டுத்தனமாக நடந்து கொள்ளலாமா?  இது சம்பந்தமாக திரு. கிருஷ்ணனும் இதே மாதிரிதான் நினைக்கிறார்.  நேற்று இது பற்றி இருவரும் ஒரு மணி நேரம் புலம்பிக் கொண்டிருந்தோம்” என்று சாந்தமான தொனியில் சொன்னேன். 

மாணவி புத்திசாலி.  என்ன என்று நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டு விட்டாள்.   “ஒங்க ரெண்டு பேருக்கும் என் தலையை உருட்டுறதுதான் பெரிய வேலையாப் போச்சு.”

 

“நீ பண்றது அப்டி இருக்கும்மா, நாங்க என்ன பண்றது? இவ்வளவு பெரிய பொறுப்புல இருந்துக்கிட்டு…”

 

குறுக்கிட்டாள்.  “ம்ச்ச… விடுங்கப்பா… அன்னிக்கு நான் ரொம்ப மூட் அவ்ட்.  அதுனாலதான் ஃபேஸ்புக்லயே கிடந்தேன்.”

“ஏன், எதாவது தமிழில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கதை கிதை படிச்சியா?”

 

“சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை.  எல்லாம் இந்த தோசையால வந்தது.”

 

“ஐயோ.  எனக்கு இப்போல்லாம் தோசைன்னாலே தோசை மாவு ஞாபகமும் அதைத் தொடர்ந்து நாகர்கோவில் ஞாபகமும் வந்துடும்மா.  பயம்மாதான் இருக்கு…”

 

“சீ.  கிண்டல் பண்ணாதீங்க.  நேத்து சாய்ங்காலம் ஒரு நாலு மணி இருக்கும்.  செம எதிர் வெய்யில்.  அப்போ போய் கிச்சனுக்குள்ள போக வேண்டியதாயிச்சு.  பன்னண்டு தோசை போட்டேன், பெரிய குட்டிக்கு.  சின்னதுக்கு மூணு.  பதினஞ்சு தோசை போட்டுட்டு வெளிய வந்து என்னத்தப் படிக்கிறது.  ஃபேஸ்புக்தான்.  இன்னிக்குல்லாம் பண்ண மாட்டேன்.” 

 

அம்மணிக்கு அன்றைய தினம் நாலு மணிக்கு மேல் நாளெல்லாம் லைக் போட்டு உற்சாகம் ஊட்டிய 250 ஆம்பிளை அசடுகளையும் நினைத்துப் பரிதாபப்படுகிறேன்.  பாவம். 

 

என்னையெல்லாம் என் அம்மா எப்படி சமாளித்தார்கள் என்றே புரிய மாட்டேன் என்கிறது.  இட்லி என்றால் ஒரு பதினஞ்சு.  அதுவும் இப்போதைய மெட்ராஸ் இட்லி மாதிரி மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்.  தோசை என்றால் பத்து பனிரண்டு இப்படி.  இப்படி ஆறு உருப்படி அம்மாவுக்கு.  இது போக நைனாவுக்கு, தனக்கு. 

 

இப்படி வளர்த்து சமுதாக் கூடத்தில் விட்டால் பிள்ளை என்ன ஆகும்?  தெருநாய் கதைதான்.  40 வயதிலிருந்து நானே தோசை போட்டுக் கொள்கிறேன்.  அது என்ன 40 வயது?  தில்லியில் இருந்த வரை ஐ.பி. காலேஜுக்கு (இந்த்ரப் பிரஸ்தா காலேஜ்: தில்லியில் சிவில் லைன்ஸ் என்ற இடத்தில் உள்ளது.  உலகிலேயே அழகான பெண்கள் இங்கேதான் படிக்கின்றனர்.  இதற்கு நேர் எதிரே நான் வேலை பார்த்த சிவில் சப்ளைஸ் ஆஃபீஸ் இருந்தது-இப்போது அது அங்கே இல்லை; இடம் மாறி ஐ.டி.ஓ.வுக்குப் போய் விட்டது) அருகில் உள்ள சந்தன் சிங் டீக்கடையில்தான் தினமும் காலை உணவு.  சமீபத்தில் கூட அங்கே போய்ப் பார்த்தேன்.  அந்தக் கடை அப்படியே இருந்தது.  டோஸ்ட் செய்த ப்ரெட்டில் வெண்ணெய் தடவி, தொட்டுக் கொள்ள கருப்புக் கொண்டைக் கடலைக் கறி.  அட்டகாசமாக இருக்கும்.  ஆறு ஸ்லைஸ் சாப்பிடுவேன்.  அதனால் தோசை இட்லி பக்கம் வரவில்லை.  40 வயதில் அவந்திகா.  இரண்டு பேருமே வேலைக்குப் போனதால் அவளிடம் எதிர்பார்க்க முடியவில்லை.   போட்டுக் கொடு என்றால் மறுக்க aமாட்டாள்தான்.  ஆனால் நான்தான் அவளே முன்வந்தாலும் பயந்து போய் வேண்டாம் என்று மறுத்து விடுவேன்.  நான் உள்ளங்கை சைஸில் தோசை போடுவேன்.  அதுவும் மெலிதாக.  அந்த மாதிரி ஆறு தோசை.  ஆஃப்கன் ஆட்கள் ரொட்டி போடுவார்கள் பார்த்திருக்கிறீர்களா?  விக்ரமாதித்தன் வேதாளத்தைத் தோளில் போட்டுக் கொண்டு போவதைப் போல் ரொட்டியைத் தோளிலேயே போட்டுக் கொண்டு போவார்கள்.  அவந்திகா அந்த சைஸில் தோசை போடுவாள்.  தோசைக் கல் முழுவதையும் அடைத்துக் கொண்டிருக்கும் தோசை.  இன்று என் கையல தோசை போட்டுக் கொண்டிருந்த போது பக்கத்தில் வந்தாள்.  காண்பித்தேன்.  தோசை என்றால் இப்படி இருக்க வேண்டும்.  அப்போதுதான் அவள் அத்தனை பெரிய தோசை போடுவதன் மர்மம் புரிந்தது?  எவனால இவ்ளோ நேரம் ஒண்ணு ஒண்ணா போட்டுக்கிட்டு இருக்கிறது? 

 

***

 

பாத்திரம் தேய்ப்பது பற்றி எழுதி உங்களை அடுத்த சானல் மாற்ற வைக்கக் கூடாது என்றுதான் பார்க்கிறேன்.  ஆனாலும் விதி விட்டபாடு இல்லை.  அவர் என் நண்பர்.  அவர் பையன் அமெரிக்காவில் வசிக்கிறான்.  இரண்டு குழந்தைகள்.  மனைவியும் நல்ல வேலையில் இருக்கிறாள்.  சமீபத்தில் தமிழ் வருடப் பிறப்பு வந்து போனதே தெரியாமல் வந்து போனதல்லவா?  அதற்கு மறுநாள் அவனுக்கு ஃபோன் செய்த என் நண்பரின் மனைவி வருடப் பிறப்புக்கு என்னென்ன பதார்த்தமெல்லாம் பண்ணினாய் என்று கேட்டிருக்கிறார்.  அவன் அதற்கு ஒரு பாட்டம் அழுது தீர்த்திருக்கிறான்.

 

“ஏம்மா, நீ பாட்டுக்கு மெட்றாஸ்ல உக்காந்துக்கிட்டு அது பண்ணினியா, இது பண்ணினியான்னு கேட்டு டார்ச்சர் பண்றே.  25 வயசு வரைக்கும் அடுக்களை எங்கே இருக்கிறதுன்னு கூட எனக்குத் தெரியாது.  இப்போ ஆஃபீஸ் நேரம் போக மத்த நேரமெல்லாம் அடுக்களையே கதின்னு கிடக்கேன்.  அவளையும் குத்தம் சொல்ல முடியாது.  ரெண்டும் சின்னப் பசங்க.  அதுங்களைப் பராமரிக்கிறதுக்குள்ளயே தாவு தீர்ந்து போயிட்றது.  களைச்சுப் போய் தூங்கிடறா.  இங்கே பாயசமும் பாலன்னமும் பண்ணிப்பிட்டு அந்தப் பாத்திரங்களையெல்லாம் எவன் தேய்க்கிறது?  வேலக்காரியா?  கிழிஞ்சது.  அங்கே நம்ம ஊர்ல அய்யாயிரம் ரூபாய்க்கு ராஜாத்தி மாதிரி வேலக்காரி கெடைப்பா.  இங்கே என் சம்பளத்தில பாதிய அவளுக்குக் கொட்டி அழணும்.  இப்போல்லாம் என் பொண்டாட்டி என்னைக் கூப்பிட்டாலே எனக்குக் கை காலெல்லாம் நடுங்கறது.  ஏன்னா அவள் கூப்பிட்டாலே எதாவது வேலைதான்.  வேலை இல்லாமல் கூப்பிட்றதே இல்லை.  எழுந்து ஒக்காண்டு எழுந்து ஒக்காண்டு பைடெக்ஸ் பண்றா மாதிரி இருக்கு.  நேத்து ஒண்ணும் பண்ணலை.  ப்ரெட் பட்டர் ஜாமும் நூடுல்ஸும்தான் முழுநாளும் சாப்பாடு.”

என் நண்பர் இதை நேற்று சொன்னபோது உலகம் பூராவும் எனக்குத் தோழர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். 

 

***      

 

நேற்று பூனைகளுக்கான மீன் தீர்ந்து விட்டது.  பூனை என்றதும் மிரண்டு ஓடாதீர்கள்.  இது பூனை பற்றின பதிவு இல்லை.  கொரோனா பற்றினது.  கொரோனா இல்லாத காலங்களில் வாரம் ஒருமுறை காலை நேரங்களில் நொச்சிக்குப்பம் மீன் சந்தைக்குப் போய் வலையிலிருந்து எடுத்த புதிய மீன்கள் வாங்கி வருவாள்.  ஐஸில் வைக்காத புதிய மீன்.  ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால் ஒரு வாரம் வரும்.  இப்போது யாரும் படகு எடுப்பதில்லை.  அதனால் எங்கள் பகுதியில் உள்ள அரசு மீன் வளத்துறையின் கடையில்தான் வாரம் ஒருமுறை  வாங்கிக் கொள்கிறோம்.  ஏற்கனவே சொன்னபடி கலெக்டர் வீட்டுத் தம்பிதான் வாங்கிக் கொடுக்கிறார்.  முந்தாநாளோடு மீன் தீர்ந்து விட்டது.  மற்ற பூனைகள் Cat food சாப்பிடும்.  லக்கியும் சிஸ்ஸியும் மட்டும் மீன் மட்டுமே சாப்பிடும்.  சிஸ்ஸி ஒருநாள் பட்டினி.  அதிலும் குறிப்பாக சூறை மட்டுமே சாப்பிடும்.  மற்ற மீன்களை முகர்ந்து பார்த்து விட்டு வைத்து விடும்.  என்ன ஆனாலும் சாப்பிடாது.  நேற்று சூறை வந்திருந்தது என்று போன் செய்து தெரிந்து கொண்டோம்.  ஆனால் கலெக்டர் வீட்டுத் தம்பி நேற்று பிஸி.  அவனால் வர முடியவில்லை.  இருந்தாலும் மீன் வாங்க சுலபமான வழி உள்ளது.  அரசாங்கக் கடை என்பதால் டோர் டெலிவரி உண்டு.  மேலும், அந்தக் கடை என் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது.  என்னால் போக இயலாது.  நடப்பது ரொம்ப சுலபம்.  ஆனால் கனத்தைத் தூக்கிக் கொண்டு நாலடி கூட நடக்க இயலாது.  அதனால் டோர் டெலிவரிக்குச் சொல்லலாம்.  அவந்திகாவிடம் சொன்னேன்.  ஒரே ஒரு விஷயத்தில் அவந்திகாவுக்கும் ராகவனுக்கும் ஒற்றுமை உண்டு.  எதையுமே நம்ப மாட்டார்கள்.  ஒருநாள் நாகேஸ்வர ராவ் பூங்காவிலிருந்து நானும் ராகவனும் வெளியே வந்து கொண்டிருந்த போது வெளி வாசலில் அருகல்புல் சாறு விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர்.  குடிக்கலாமே என்றேன்.  ராகவனோ கடும் பதற்றத்துடன் ”ஐயோ, எந்தத் தண்ணீல கலந்துருக்கானோ, வேண்டாம்” என்று சொல்லித் தடுத்து விட்டார்.  வெளியூருக்குக் ரயிலில் கிளம்பினால் இருக்கையில் அமர்ந்ததும் தன் கையிலிருக்கும் இரண்டு பைகளில் ஒன்றை என்னிடம் கொடுப்பார்.  அதில் என் ஷூக்களை வைத்து எந்த சூட்கேஸிலாவது வைத்துக் கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் எவனாவது ஷூக்களைத் திருடிக் கொண்டு விடுவான்.  “இந்த மாதிரி செகண்ட் ஏசிலேல்லாம் ஷூவை யாரும் திருட மாட்டான் ராகவன்.”  “ம்ஹும்.  எதுக்கு ரிஸ்க்?”

 

டோர் டெலிவரியில் கொடுக்கப்படும் மீன்கள் எந்தத் தரத்தில் இருக்கிறதோ என்றாள்.  அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டேன்.  என்ன மீன் வருகிறதோ அதைத்தான் நேரிலும் கொடுப்பார்கள்; வீட்டுக்கும் கொடுத்து அனுப்புவார்கள்.  இப்போது யார் போய் வாங்கி வருவது?  ஸ்கூட்டர் இருந்தால் அவந்திகாவே போய் வந்து விடுவாள்.  பல காலமாக ஸ்கூட்டர் சும்மாவே வெய்யிலில் நிற்கிறதே என்று அதை விற்று விட்டாள்.  நானோ ஆட்டோவில்தான் போக்குவரத்து.  ஆட்டோ மீண்டு வர இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?  யாரை அனுப்புவது என்றும் புரியவில்லை.  அவந்திகா கேட்பதை நடத்திக் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.  நாங்கள் இருவருமே கடந்த 25 ஆண்டுகளாகப் பட்டுக் கொண்டிருக்கும் சிரமங்களுக்கும் என்னுடைய இந்தக் கொள்கையே காரணம் என்பதும் தெரியும்.  இருந்தாலும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ள முடியவில்லை.  அவள் எதிர்பார்ப்பது நடக்க வேண்டும் என்றே நினைத்துப் பழக்கப்பட்டு விட்டேன்.  இல்லை என்று மாறுபாடாக முரட்டுத்தனமாக இருந்து பழக்கமில்லை.  எல்லா எழுத்தாளர்களுமே இப்படித்தான்.  நாய் வளர்க்க வேண்டும் என்றாள்.  வாழ்க்கையே பாழாகி விடும் என்றேன்.  கேட்கவில்லை. விட்டு விட்டேன்.  முரட்டுத்தனமாக நான் பிடித்த பிடியிலேயே இருந்திருந்தால் 25 ஆண்டுகள் இத்தனை கஷ்டங்கள் அனுபவித்திருக்க வேண்டாம்.  இப்போது பூனை.  நான் சொன்னதுதான் நடக்க வேண்டும் என்று ஆதிக்கம் செய்திருந்தால் இப்போதைய கஷ்டம் இல்லை.  20 ஆண்டுகள் அரசாங்க உத்தியோகத்தில் அடிமையாக இருந்தது ஒரு காரணம்.  குமாஸ்தாக்கள் பரவாயில்லை.  நான் ஸ்டெனோவாக இருந்தவன்.  அதிலும் தபால் துறை.  அங்கே ஸ்டெனோ என்றால் கொத்தடிமை.  முன்பெல்லாம் பீயெம்ஜியின் அறைக்கு வெளியே நிறைய செருப்புகள் கிடக்கும்.  எல்லாம் உள்ளே போனவர்களின் செருப்பு.  உள்ளே இருப்பவர் கடவுள்.  கடவுளின் அறையில் செருப்பு கூடாது.  அப்படிப்பட்ட அடிமைகள் கூடம் அது.  அங்கே 20 ஆண்டுகள் குப்பை கொட்டி விட்டு எப்படி எதிர்த்துப் பேசுவது?  இருந்தாலும் சொல்லிப் பார்த்தேன்.  டோர் டெலிவரியில் வரவழைக்கலாம் என்று.  கேட்கவில்லை.  சிஸ்ஸி நேற்று நாள் பூராவும் சாப்பிடவில்லை; இன்று என்ன செய்யும் என்று சொல்லி அவந்திகா பதற்றமடைவதைப் பார்த்த போது என் மூளை வேலை செய்வதை நிறுத்தி விட்டது.  ஸ்தம்பித்து விட்டேன்.  நானே போவதைத் தவிர வேறு வழியே இல்லை.   

 

பிரபுவுக்கு ஃபோன் செய்தேன்.  காரை எடுத்துக் கொண்டு வந்தார்.  போனேன்.  பார்த்தால் ஐந்து பேர் ஒருத்தரை ஒருத்தர் உரசியபடி நின்று கொண்டிருந்தார்கள்.  இரண்டு பேர் முகமூடி அணிந்திருக்கவில்லை.  நான் போய் ஆறாவது ஆளாக நின்றேன்.  நான் மட்டும் கொஞ்சம் ஒரு அடி இடைவெளி விட்டு நின்றேன்.  எனக்கு முன்னே நின்றவர் ஒரு கிலோ பாறை, இரண்டு கிலோ கவலை, இரண்டு கிலோ வவ்வால், ஒரு கிலோ வஞ்சிரம், மூணு கிலோ கொடுவா என்று வாங்கிக் கொண்டே இருந்தார்.  மொத்தம் 4500 ரூபாய் வந்தது.  கார்ட் கொடுத்தார்.  கார்ட் மெஷின் வேலை செய்யவில்லை. அதை சரி செய்ய கால் மணி நேரம் ஆயிற்று.  நாங்கள் வந்து ஒரு மணி நேரம் முடிந்திருந்தது.  பிரபுவை வேறு நிற்க வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது.  மெஷின் சரியாகி பில் போட்ட பிறகு எதிரே நின்றவர் ஒரு கிலோ சங்கராவும் வாங்கினார்.  பிரபு மெதுவாக என்னிடம், “அவர் அவருடைய அபார்ட்மெண்ட்டுக்கே வாங்குகிறார் போலிருக்கிறது” என்று சொன்னார்.  கடைக்காரத் தம்பி நான் சிரமப்படுவதைப் பார்த்து விட்டு, “மேடம் நேத்து நைட்டே பேசினாங்களே சார்.  ஏன் நீங்க கஷ்டப்படறீங்க சார், டோர் டெலிவரிக்குன்னே இங்கே மூணு பசங்க சும்மா நின்னுக்கிட்ருக்கானுங்க (கை காட்டினார்), இங்கே வர்றவங்கள்ளாம் சும்மா வீட்டுல பொழுது போவாம வராங்க சார், நீங்க ஏன் வர்றீங்க?” என்றார். 

 

எனக்குக் கால் கடுத்தது.  எனக்குப் பின்னே பத்து பேர் இடைவெளி விட்டு நின்று கொண்டிருந்தார்கள்.  வெட்ட அரை மணி நேரம் ஆயிற்று.  திரும்பும்போது வீட்டுக்கு எதிரே உள்ள ஒரு வங்கியின் வாசலில் முப்பது அடித்தட்டு மக்கள் பராரிகளாய் நின்று கொண்டிருந்தார்கள்.  ஏதோ சாப்பாடு கொடுக்கிறார்கள் போல என்றார் பிரபு.  யாருமே முகக் கவசம் அணிந்திருக்கவில்லை.  நெருக்கியடித்துத்தான் நின்று கொண்டிருந்தார்கள்.   

 

வீட்டுக்குள் வந்த போது அவந்திகா  ”உன்னை அனுப்பினது தப்பு.  இனிமேல் நானே சொன்னால் கூட நீ போகாதே.  உன்னை நான் மீன் கடைக்கு அனுப்பினது கார்த்திக்குக்குத் தெரிந்தால் என்னைக் கொன்றே போட்டு விடுவான்.  ஐயோ, இப்போது நான் என்ன செய்வேன்” என்று வீரபாண்டிய கட்டபொம்மனில் பத்மினி அழுவது போல் புலம்பினாள்.   நான் வேறு உள்ளே நுழைந்தும் நுழையாததுமாக ”இத்தனை நாள் கடைப்பிடித்து வந்த குவாரண்டைனை நானே உடைத்து விட்டேன்” என்று சொல்லித் தொலைத்து விட்டேன். 

 

அப்புறம் நானே எனக்குள் சொல்லிக் கொண்டேன்.  இவளுடைய பைத்தியக்காரத்தனத்துக்காக நாமே நம்மை பலி கொடுத்து விடக் கூடாது.  பதற்றம் அடையாமல் இவளிடம் விளக்க வேண்டும்.  கேட்காவிட்டால் போகட்டும்.  எக்காரணம் கொண்டும் அவளுடைய பைத்தியக்காரத்தனமான முடிவை ஏற்கக் கூடாது.  எனக்கு ராம்ஜி சொன்ன ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.  வேளாண் நிபுணர் எம்.எஸ். சுவாமிநாதன் வீட்டுக்கு அவரோடு ஒருமுறை சென்றிருக்கிறார் ராம்ஜி.  அப்போது சுவாமிநாதன் எடுத்துக் கொண்ட சாப்பாட்டைப் பார்த்து ராம்ஜி மிரண்டு போயிருக்கிறார்.  கஞ்சி, அவித்த காய்கறி இந்த மாதிரி.  என்ன சார் இது, இப்படி சாப்பிடுகிறீர்கள் என்று ராம்ஜி கேட்டதற்கு சுவாமிநாதன் சொன்ன பதில்: நான் கண்டு பிடித்த நெற்களைப் பயன்படுத்தினால் இந்தியாவில் பட்டினிச் சாவே ஏற்படாது.   மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்த விவசாயி என் நெல்லைப் பயன்படுத்தி மாதம் பத்தாயிரம் ரூபாய் ஈட்டுகிறான்.  நான் நீண்ட நாள் உயிரோடு இருந்து இந்த மனித குலத்துக்குச் சேவை செய்ய வேண்டாமா? இதே நிலைமையில்தான் ஒவ்வொரு எழுத்தாளனும் இருக்கிறான் என நினைக்கிறேன்.

***

பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai

Post navigation

பூச்சி 28