பூச்சி – 32

சென்ற அத்தியாயத்தில் ஒரு முக்கிய விபரம் விடுபட்டு விட்டது.  மீன் கடையில் எனக்கு முன்னே நின்றவர்களில் மூன்று பேர் Dunzo ஆட்கள்.  ஆக, மீன் கடையின் டோர் டெலிவரி போக டன்ஸோ மூலமாகவும் மீனை வீட்டுக்குத் தருவித்துக் கொள்ளலாம்.  இரண்டு வாரத்துக்கு முன் எனக்கு வேண்டிய மருந்துகள் தேவைப்பட்ட போது, என் வீட்டை அடுத்து உள்ள அப்பல்லோ ஃபார்மஸியில் சில மருந்துகள் இல்லை எனக் கைவிரித்து விட்ட போது, மீனம்பாக்கத்திலிருந்து ஒரு வாசகி எனக்கான மருந்துகளை டன்ஸோ மூலம்தான் வாங்கி அனுப்பினார்.  அவர் சொல்லி அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தது.  கட்டணம் 200 ரூ.  அவர் டன்ஸோவுக்கு ஃபோன் செய்கிறார்.  டன்ஸோ தோழர் அவர் வீட்டை அடைந்து மருந்துகளை வாங்கிக் கொண்டு என் முகவரியையும் அவரிடமே பெற்றுக் கொண்டு சாந்தோமில் இருக்கும் என் வீட்டுக்கு வந்து கொடுக்கிறார்.  இதைப் போலவேதான் மீனும் வாங்கிக் கொடுக்கிறார்கள் என நினைக்கிறேன்.  இது பற்றியெல்லாம் என்னால் நேற்று யோசிக்கவே இயலவில்லை.  ஐயோ, சிஸ்ஸி இன்னிக்கும் பட்டினி கெடக்கே என்றுஉச்சகட்ட பதற்றத்தில் அவந்திகா துயருற்றுக் கொண்டிருக்கும் வேளையில் எனக்கு ஹார்ட் அட்டாக் வராமல் காப்பாற்றிக் கொள்வதே பெரும் காரியம்; இதில் டன்ஸோ பற்றியெல்லாமா யோசிக்க முடியும்?  இத்தனைக்கும் அவந்திகாவின் ரத்த அழுத்தத்தை சோதித்தால் படு கரெக்டாக 120 – 80 இல் இருக்கும்.  மருத்துவமனையில் மருத்துவர் அவந்திகாவின் ரத்த அழுத்தத்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த போது, பக்கத்திலிருந்த ராம்ஜி “இவங்களுக்குக் கரெக்டா இருக்கும் சார், இவங்களாலதான் மத்தவங்களுக்கு எகிறிடும்” என்று ஜோக் அடித்தார்

***

அன்புள்ள சாரு…

நண்பர் நிர்மல் உங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இப்படி

எழுதியிருந்தார்:

“இவ்வளவு கூட்டமாக ஒரே மதமாக ஒரே நாடாக முன்பின் தெரியாதவர்களோடு ஒன்று சேர்ந்து இணைந்து பயனிக்கக் கூடிய திறன் உலகில் வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லைதானே?”

அவர் சொல்வது நவீனத்துவ சிந்தனை.

ஆனால் இன்றைய அறிவியல், மரங்கள் தமக்குள் உரையாடுவதை, எதிரியிடமிருந்து தப்பிக்க வியூகம் அமைப்பதை உறுதி செய்கிறது. உங்களது எக்ஸைல் நாவல் பேசும் விஷயத்தை அறிவியல் வழி மொழிகிறது.

அன்பு கருணை இரக்கம் போன்றவை பிற உயிர்களுக்கு நாம் போடும் பிச்சை கிடையாது. மைத்ரீ என புத்தர் சொல்லும் பெருங்கருணை இல்லாவிட்டால் மனித இனம் அழிந்துவிடும் என்பதைத்தான் உங்களது பூச்சி தொடர் சொல்கிறது.

மனிதன்தான் உலகில் எது வாழ வேண்டும் என தீர்மானிக்கிறான் என நிர்மல் நினைக்கிறா.

ஆனால் எந்த மனித இனம் வாழ வேண்டும், எந்த தேசம் போரில் வெல்ல வேண்டும், யார் அழிய வேண்டும் என்பவற்றையெல்லாம் தீர்மானித்தவை கிருமிகளும் நோய்களும்தான் என்கிறது வரலாறு. 

எனவே பூச்சி என்ற தலைப்பு மிக மிகப் பொருத்தமானது, மிகமிக வலுவானது என நினைக்கிறேன்.

தினமும் என்ன தின்கிறாய், எங்கே செல்கிறாய், எவ்வளவு நேரம் புணர்கிறாய் என்பவற்றையெல்லாம் தினமும் எங்களுக்கு அறிக்கை தர வேண்டும் என இருபது ஆண்டுகளுக்கு முன் அரசாங்கம் ஆணையிட்டிருந்தால் நாம் சிரித்திருப்போம்.

ஆனால் யார் உத்தரவுமின்றி தினமும் மனித இனம் இதைத் தற்போது செய்கிறது.

யாருடைய பொம்மையாக மனித இனம் இருக்கிறது. தன்னை உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட ஓர் அற்பப் பூச்சிதான் மனிதன் என்ற கோணத்திலும் பூச்சி என்ற பெயர் பளார் என அறைவது போன்ற உணர்வைத் தருகிறது.

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

 

ஆம், பிச்சைக்காரன் சொல்வது உண்மைதான்.  நீங்கள் எவ்வாறு புணர்ச்சி கொள்ள வேண்டும் என்பதைக் கூட அரசு சொல்லியாயிற்று.  கீழ்வரும் அரசு ஆணையைப் பாருங்கள். 

 

Belgium Health Minister puts ban on non-essential sexual activities of persons 3 or greater in indoor areas. 

 

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ”பெல்ஜியம் பியர் குடிப்பதிலும் க்ரூப் செக்ஸிலும் ஐரோப்பாவின் தலைநகர் – ஏன், உலகத்துக்கே தலைநகராக விளங்குகிறது என்று சொல்லலாம்.   இந்த நிலையை நாம் ஒரு தேசமாக எதிர்கொண்டாக வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் பெல்ஜியம் சுகாதார அமைச்சர் மாகி தெ ப்ளாக்.  “Wife swapping, threesomes, and orgies of six, fity, one hundred or more are not permitted until the outbreak settles down.”  இவ்வாறு பெல்ஜியம் பாராளுமன்றத்தில் அவர் பேசியிருக்கிறார்.  ஆனால் ஒருவர் தனியாகவோ (உ-ம்: சுயமைதுனம்), இருவராகவோ பாலியல் உறவில் ஈடுபட – வாய்வழிப் புணர்ச்சி, குதப் புணர்ச்சி மற்றும் beastiality உட்பட எதற்கும் தடையில்லை என்று அவர் பின்னர் பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கினார்.   பத்திரிகையாளர்கள் bestiality பற்றிச் சந்தேகங்கள் எழுப்பியபோது இரண்டு மனிதர்களுக்கிடையிலான bestiality பற்றியே தான் குறிப்பிட்டதாகவும் மிருகத்துக்கும் மனிதருக்கும் இடையிலான பாலியல் உறவைத் தான் குறிப்பிடவில்லை என்றும் தெளிவு படுத்தினார். 

 

2018இல் பெல்ஜியத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயின் போது 78 சதவிகிதத்துக்கு மேற்பட்ட பெல்ஜியன் ஜோடிகள் வெளிப்படையாகவே wife swappingஇல் ஈடுபடுவதாகவும் இந்தக் கலாச்சாரம் இரண்டாம் லியபோல்டின் காலத்திலிருந்தே பழக்கத்தில் இருந்து வருவதாகவும் அறிகிறோம்.

 

மேற்கண்ட செய்தியின் மூலமும் என் தென்னமெரிக்கப் பயணம் குறித்து அவ்வப்போது எழுதி வரும் குறிப்புகள் மூலமும் நீங்கள் பல விஷயங்களைத் தொகுத்துத் தெரிந்து கொள்வதோடு, இந்திய வாழ்க்கை பற்றியும் இதன் சாதக பாதகங்கள் பற்றியும் கூட கூர்மையான முடிவுகளைக் கண்டடைய முடியும்.   

 

இப்படியெல்லாம் சொல்வதால் நான் இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்து விட்டேன் என்பதாகப் பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள்.  இதைத்தான் வேறு வார்த்தைகளில் கனிந்து விட்டேன் கனிந்து விட்டேன் என்றும் குறிப்பிடுகிறார்கள்.  இது சம்பந்தமாக எனக்கு வந்த ஒரு கடிதத்தை இங்கே பார்ப்போம். 

 

சாரு, 

பூச்சி சீரிஸ் பிரமாதமாகப் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக பூச்சி-27 ஒரு revelation.   உங்களைப் பல ஆண்டுகளாக படித்து வளர்ந்த வாசகன் என்ற முறையில் உங்களைப் பற்றிய ஒரு அனுமானத்தை சொல்லத் தோன்றுகிறது. கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

வயது, அனுபவம், படிப்பு, எழுத்தால் முற்றிலும் கனிந்த நீங்கள் வந்து நிற்கும் தளம் என்ன என்று பார்த்தால், வாழ்நாள் முழுதும் நீங்கள் மறுதலித்து வந்த “இந்துத்வா பாசிஸ்ட்” ஜெயமோகனின் தளம். என்ன ஒரு  முரண். சொல்லப்போனால் அகத்தேடல் உள்ள ஒவ்வொருவரும் கடைசியில் வந்தடையும் தளம் இது. ஜெயகாந்தன் கடைசியில் “ஜெய ஜெய சங்கரா” எழுதியதையும் இதனுடன் இணைத்துப் புரிந்து கொள்கிறேன். நான் இதை வசையாகக் கூறவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். சிலர் இந்த தளத்திலிருந்து தொடங்கி விவாதம் மூலம் விரிவுபடுத்துகிறார்கள். இன்னும் சிலர் இந்தத் தளத்தை பழைய சிந்தனைகள் என மறுதலித்து உண்மையைக் கண்டடையும் முயற்சியில் கடைசியில் இந்தத் தளத்தை வந்தடைகிறார்கள்.

ஜெயமோகன் முன்பு எழுதிய ஒரு குறிப்பு நினைவுக்கு வந்தது. 

“இலக்கியத்திலும் சரி, தத்துவத்திலும் சரி, முற்றிலும் புத்தம் புதிய சிந்தனை என ஒன்று உருவாக முடியாது. மனித மனம் இயற்கையை எதிர்கொண்ட ஆரம்ப நாட்களிலேயே சிந்தனையின் அடிப்படைக் கேள்விகள், அடிப்படையான தர்க்கமுறைகள் முழுக்க உருவாகியிருக்கும். அவற்றின் விரிவாக்கமாகவும், அவற்றுக்கு இடையேயான விவாதமாகவும்தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றன.”

அன்புடன்,

உங்கள் வாசகன்.

இந்தக் கடிதத்தைப் படித்து முடித்த போது ஒருக்கணம் சிதம்பரத்தில் அம்பலவாணனைக் கண்டு நெக்குருகிய மாணிக்கவாசகனைப் போல் ஆகி விட்டேன்.  முன்பே சொன்னேன் அல்லவா, என்னிடம் என்ன சொன்னாலும் முதலில் ஒப்புக் கொண்டு விடுவேன்.  நீங்கள் சொல்வதே சரி, நான் சொல்வதெல்லாம் தப்பு எனத் தோன்றும்.  அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்கும் புத்தி.  கடிதம் எழுதிய நண்பர் என்னையும் புரிந்து கொள்ளவில்லை; ஜெயமோகனையும் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.   நம்முடைய இலக்கிய சூழலில் – இப்படி ஆரம்பிப்பதற்கு முன் நம்முடைய இலக்கிய சூழல் எப்படிப்பட்டது என்று சொல்லி விட வேண்டும்.  எந்த எழுத்தாளராவது ஒரு நாவல் அல்லது ஒரு சிறுகதை எழுதினால் அதைப் பற்றிக் கருத்து சொல்ல வேண்டியது யார்?  அந்த மொழியில் செயல்படும் புத்திஜீவிகள், உபாத்தியாயர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், கேளிக்கைத் துறையில் இருக்கும் பிரபலங்கள் ஆகியோர்.  ஆனால் இங்கே நடப்பது என்ன? மேற்கண்ட யாருக்கும் எழுத்தாளர்களைத் தெரியாது.  அவர்களின் வாழ்நாளில் ஒரு புத்தகமும் படித்ததில்லை.  ஆக, வெளிவந்த நாவல் பற்றியோ கதை பற்றியோ சக எழுத்தாளர்கள்தான் விமர்சிக்கிறார்கள்.  அல்லது, அபூர்வமாகப் பாராட்டுகிறார்கள்.  ஒரு ஒட்டுமொத்த கலாச்சார சூழலே philistineஆக இருக்கும்போது இப்படித்தான் நடக்கும்.  அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.   இந்த விஷயத்தில் கேரளம் கொஞ்சம் பரவாயில்லை.  ஜெயமோகனின் நூறு சிம்மாசனங்கள் கதை வந்த சில தினங்களில் நான் கேரளா சென்றிருந்தேன்.  அங்கே என்னை சந்தித்த அத்தனை பேரும் அந்தக் கதையைப் படித்தீர்களா என்று கேட்ட போது ஏற்பட்ட ஆர்வத்தினால் அதைப் படித்தேன்.  அப்போது அந்தக் கதை கேரளத்தில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது.  ஐந்து லட்சம் பேரோ பத்து லட்சம் பேரோ படித்து விட்டார்கள் என்று செய்தி வந்தது.  கிட்டத்தட்ட வாசுதேவன் நாயரின் நாலுகட்டுக்குப் பிறகு அத்தனை தூரம் மலையாளத்தில் பல லட்சம் பேரால் வாசிக்கப்பட்டது நூறு சிம்மாசனங்களாகத்தான் இருக்கும்.  முன்னது நாவல், இது சிறுகதை.  அதுதான் வித்தியாசம். 

அதனால் ஊருக்குத் திரும்பியதும் அதைப் படித்தேன்.  கொதித்தேன்.  ஏனென்றால், ஜெயமோகனின் புனைவுலகம் சிருஷ்டிகரத்தன்மையின் நானாவித கூறுகளையும் உள்ளடக்கியதாகவே இருந்தாலும் அதில் அவர் ஒரு அரசியல் நிலைப்பாட்டைத் தவிர்க்க முடியாமலேயே உள்ளடக்கி விடுகிறார்.  நான் அவருடைய எல்லா முக்கியமான படைப்புகளையும் வாசித்ததில்லை எனினும் நான் வாசித்த ஒரு புனைவில் கூட அந்த அரசியல் இல்லாமல் இருந்ததில்லை.  இதைப் பற்றியெல்லாம் பேசுவது நான் வரித்துக் கொண்ட என் சுயதர்மத்துக்கு எதிரானது.

ஏனென்றால், தொமாஸ் சாலமன்  (Tomaž Šalamun) ஸ்லொவேனியாவின் பிரபலமான கவிஞர்.  சிலமுறை நோபல் பரிசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டவர்.  அவரோடு நான் தில்லியில் 2011இல் மூன்று தினங்கள் தங்கியிருக்க நேர்ந்தது.  அவரிடம் ஒருமுறை செர்பியா தேசத்தைச் சேர்ந்த மிலோராத் பாவிச் பற்றிக் கேட்டேன்.  கொஞ்சம் யோசித்தார்.  மிலோராத் பாவிச்சின் பெயரை இரண்டு முறை வாய்விட்டுச் சொன்னார்.  பிறகு லேசாகத் தலையாட்டியபடியே சந்தேகாஸ்பதமாக கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார்.  ஸ்லொவேனியாவின் தலைநகர் லுப்லியானாவிலிருந்து ஐநூற்று சொச்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது செர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்.  அப்புறம் அவரிடம் சொன்னேன், மிலோராத் பாவிச் தமிழ்நாட்டில் போர்ஹேஸைப் போல் கொண்டாடப்படுபவர் என்று.  அவரோ கேள்வி கூடப் பட்டதில்லை.  அவர் மட்டும் இல்லை.  எந்த சர்வதேச எழுத்தாளரும் சக எழுத்தாளர்களை வாசித்ததில்லை.  வாசிப்பதும் இல்லை.  எல்லோரும் கிரேக்க கிளாசிக்குகளையும் ஷேக்ஸ்பியரையும் கடைசியில் காஃப்கா வரை படித்திருக்கிறார்கள்.  மரியோ பர்கஸ் யோசா என்றால் கூட கல்லூரி நாட்களில் ஆண்ட் ஜூலியா அண்ட் தெ ஸ்க்ரிப்ட் ரைட்டர் மாதிரி ஒன்றிரண்டு புத்தகங்கள்.  அவ்வளவுதான் அவர்களின் நவீன இலக்கியப் பரிச்சயம்.  விக்ரம் சேட்டைப் படித்திருக்கிறீர்களா என்று வட இந்திய ஆங்கில எழுத்தாளர்களைக் கேட்டால் ஒருவர் கூடப் படித்திருப்பார்களா என்று தெரியாது.  ஆனால் இங்கே உள்ள எழுத்தாளர்கள் அனைவருமே சக எழுத்தாளர்கள் அனைவரையுமே படித்திருக்க வேண்டும் என்றும் இல்லையேல் பரீட்சையில் தோல்வியுற்ற மாணவனைப் போலவும் நடத்துகிறார்கள்.  இப்போது இந்தக் கணம் என் முன் உள்ள கேள்வி:  என் மேஜையின் மீது உள்ள ஆல்பர் கம்யு எழுதிய Algerian Chronicles புத்தகத்தையும், பஸோலினி எழுதிய The Long Road of Sand என்ற புத்தகத்தையும் படிக்கவா?  அல்லது, தினந்தோறும் ஜெயமோகன் எழுதி வரும் கதைகளைப் படிக்கவா?  அவர் எழுதிய பத்து லட்சம் காலடிகள் கதையை ஊரே போற்றுகிறது; ஊரே தூற்றுகிறது.  இதை விட ஒரு எழுத்தாளனுக்கு வேறு என்ன வெகுமதி வேண்டும்?  ஒருத்தர் சொல்கிறார், இதை விட உச்சம் வேறு எதுவும் இல்லை.  இன்னொருத்தர் சொல்கிறார், இந்தக் கதையைப் பாராட்டுபவர்கள்  பீயை அள்ளி வாயில் வைத்துக் கொள்ளலாம். 

கடிதம் எழுதிய அன்பர் மீது எனக்குக் கோபம் எதுவும் இல்லை.  அவரது புரிதல் இத்தனை மோசமாக இருக்கிறதே என்ற பரிதாப உணர்வே எழுகிறது.  ஜெயமோகன் ஒரு துருவம்.  நான் ஒரு துருவம்.  இதுபோல் ஒரு மொழியில் சமகாலத்தில் நிகழ்வது வெகு அபூர்வம்.  இது பற்றிப் பலமுறை மிக விரிவாகவே எழுதியிருக்கிறேன்.  இருந்தும் ஏன் இது பலருக்கும் புரிவதில்லை என்று தெரியவில்லை.  இப்போது மீண்டும் ஒருமுறை விளக்குகிறேன்.  நான் வெகுவாக மதிக்கும் என் சக படைப்பாளியின் புனைவு எழுத்தை விமர்சிப்பது என் சுயதர்மத்துக்கு எதிரான செயல்.  இருந்தும் இதைச் செய்வதன் காரணம், நான் ஜெயமோகனின் இடத்துக்கு வந்து சேர்வதோ, ஜெயமோகன் என்னுடைய இடத்துக்கு வந்து சேர்வதோ சாத்தியமே இல்லை என்பதை விளக்குவதற்காகத்தான்.  நூறு சிம்மாசனங்கள் கதை பற்றி கார்ல் மார்க்ஸின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் விரிவாகப் பேசியிருக்கிறேன்.  (ஸ்ரீராம், அதன் காணொளியை இங்கே பகிர்ந்தால் நலம்.)   அதையே இங்கே திரும்பச் சொல்லி நேரத்தை விரயம் பண்ண விருப்பம் இல்லை.  சுருக்கமாகச் சொல்கிறேன்.  தலித் வாழ்க்கை பன்றிகளின் வாழ்க்கை போன்றது.  அவன் உயர வேண்டுமானால் பிராமணப் பெண்ணை மணந்து உயர்குடிக் கலாச்சாரத்தைப் பேண வேண்டும்.  இதில் உள்ள இரண்டாவது விஷயத்தைக் கூட விட்டு விடலாம்.  முதல் விஷயம்தான் ஜெயமோகனின் அரசியல் பார்வை.  என்னைப் பொறுத்தவரை, தலித்துகளின் வாழ்க்கை அதற்கே உரிய அழகியல் கூறுகளையும் கலாச்சாரத்தையும் உள்ளடக்கியது.  அதை மேட்டுக்குடியினரால் புரிந்து கொள்ளவே இயலாது.  ஜெயமோகன் ஒரு படைப்பாளியாக எங்கே வெற்றிக்கொடி நாட்டுகிறார் என்றால், நூறு சிம்மாசனங்கள் கதையை கேரளத்தில் தலித்துகளே பெரிதும் கொண்டாடினார்கள்.  அப்படியாக அந்தக் கதை பின்னப்பட்டிருந்தது.  நான் அந்தக் கதையை ஒரு ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அஜெண்டா என்று வாதிட்டேன்.  இந்துத்துவா தத்துவ அறிக்கை (Manifesto) என்று சொன்னேன்.   சமீபத்தில் கூட யா தேவி என்று ஒரு கதையைப் படித்தேன்.  பெரிதும் சிலாகிக்கப்பட்ட கதை.  என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் என்னால் யா தேவி போன்ற ஒரு கதையை எழுத முடியாது.  கலாபூர்வமாக அது நூறு சிம்மாசனங்கள் கதை போல் வெற்றி அடைந்தது என்று சொல்ல முடியாத, ஒரு தட்டையான கதை.  ஒரு மட்டையாளன் எப்போதுமே செஞ்சுரி போட்டுக் கொண்டிருக்க முடியாது.  அது பற்றி எனக்குப் புகார் எதுவும் இல்லை.   ஆனால் யா தேவியும் ஒரு இந்துத்துவ அஜெண்டா.  இந்தியா ஒளிர்கிறது கதை.  இந்தியா போற்றுதும் கதை.  இதைப் படித்ததும் எனக்கு தில்லி பஸ் வன்கலவிச் சம்பவம் மட்டுமே ஞாபகம் வந்தது.  ஒருத்தன் ஏன் அந்த தில்லி பஸ் சம்பவத்தை ஒரு கதையாக எழுதக் கூடாது?  ஆனால் அதுவா இந்தியா?  அதுவா இந்தியாவின் ஆன்மா?  சிறுகதை என்றால் அதில் ஒரு முழுமையான, absolute-ஆன உண்மையைச் சொல்லி விட முடியாது. சொல்ல முயன்றால் தோல்விதான் ஏற்படும்.  மாறாக, ஒரு மின்னல் பொறிதான் சிறுகதை.  ஆனால் யா தேவியில் ஒரு absolute truth உள்ளது.  அந்தக் கதை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டால் நிச்சயம் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் பிடிக்கும்.  ஜெயமோகனுக்கு பத்மபூஷனும் கிடைக்கலாம்.  கிடைக்க வேண்டும்.  அவர் அந்த விருதுக்குத் தகுதியானவர்தான்.  அதில் சந்தேகம் இல்லை.  ஆனால் யா தேவி இம்மாதிரியான சிந்தனைப் போக்கு உள்ளவர்களுக்குத்தான் பிடிக்கும்.  அம்மாதிரியான சிந்தனைப் போக்குதான் இந்தியாவில் வெகுஜனப்பரப்பிலும் இலக்கியத்திலும் முன்னணியில் இருப்பதால்தான் ஜெயமோகனும் பெரும்பான்மையானவர்களுக்குப் பிரீத்தியானவராக இருக்கிறார்.  இதில் ஏதும் ஆச்சரியமோ முரணோ இல்லை. 

ஆனால் நண்பரே, நான் எந்தக் காலத்திலாவது இப்படி ஒரு அரசியல் நிலைப்பாட்டை வந்தடைய முடியுமா?  நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. 

மற்றபடி இந்தியத் தத்துவங்கள், இந்திய வாழ்க்கை, இந்தியத் தொன்மை, இந்தியக் கலாச்சாரம், இதன் uniqueness பற்றியெல்லாம் எனக்கு உயர்வான கருத்துக்கள் உண்டு.  அதை வைத்து நான் ஜெயமோகனை வந்தடைந்து விட்டேன் என ஒருவர் முடிவுக்கு வர முடியாது.  ஏனென்றால், எப்போதுமே நான் Absolute Truthக்கு எதிரானவன்.  நீங்கள் கடைசியில் குறிப்பிட்டிருக்கும் ஜெயமோகனின் மேற்கோள் Absolute Truthக்கான அப்பட்டமான உதாரணம்.  அது விஞ்ஞான அணுகுமுறைக்கு நேர் எதிரானது.  விஞ்ஞானம் என்பதை இங்கே சரியான பொருளில் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.  அசட்டுத்தனமான மேற்கத்திய விஞ்ஞானத்தை நான் சொல்லவில்லை.  பின் நவீனத்துவ அழகியலுக்கு அடித்தளம் அமைத்த இம்மானுவல் காண்ட் (Immanuel Kant), காண்ட் ஒரு sophisticated christian என நிராகரித்த நீட்ஷே, அதற்குப் பிறகான அமைப்பியல்வாதிகளின் விஞ்ஞான அணுகுமுறை – இவை எல்லாவற்றையும்தான் விஞ்ஞானம் என்று குறிப்பிடுகிறேன்.   சமத்துவம் குறித்த பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சிந்தனைகள், அதிகாரம் குறித்த இருபதாம் நூற்றாண்டு ஃப்ரெஞ்ச் சிந்தனைகள் எல்லாம் மனித வரலாற்றில் புத்தம் புதியவை.  எந்தவிதப் பாரம்பரியச் சரடோ நீட்சியோ இல்லாதவை.   

மேலும், இந்தப் பூச்சி தொடரில் நான் எழுதும் எதையுமே புதிதாக வந்தடைந்து எழுதவில்லை.  ஸீரோ டிகிரி நாவல் எவ்வாறு முடிவடைகிறது என்று யோசியுங்கள்.  அந்த நூலைப் புரட்டிப் பாருங்கள்.  மற்றும் எக்ஸைல் முழுக்கவுமே இந்தப் பூச்சி தொடரின் முன்னோடிப் பக்கங்கள்தான்.  மேலும், உன்னத சங்கீதம் என்ற கதையை எழுதிய ஒருவரும் ஜெயமோகனும் எப்படி ஒரே வண்டியில் பயணம் செய்ய முடியும்?  என்னால் எப்படி ஒரு நூறு சிம்மாசனங்களையோ யா தேவியையோ எழுத முடியாதோ அதேபோல் ஜெயமோகனாலும் ஒருபோதும் உன்னத சங்கீதத்தை எழுத முடியாது.   அந்தக் கதை வ்ளதமீர் நபக்கோவையே தாண்டியது.  நபக்கோவின் லொலிதாவில் குற்ற உணர்ச்சி தென்படும்.  உன்னத சங்கீதத்தில் அது இல்லை.   

பசு பற்றிய என் கருத்துக்களையும், மோடியின் காஷ்மீர் சட்டத் திருத்தம், குடியுரிமைச் சட்டத் திருத்தம் ஆகியவற்றுக்கு என் ஆதரவு போன்ற விஷயங்களை வைத்துக் கொண்டா நான் ஜெயமோகனை வந்தடைந்து விட்டதாக முடிவு செய்தீர்கள்?  பல்லுயிர் ஓம்புதல் என்ற கருத்தை நான் நாற்பது ஆண்டுகளாக விடாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  மற்ற இரண்டு அரசியல் கருத்துக்களையும் நான் 25 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.  மோடியெல்லாம் நேற்று வந்தவர்.  மற்றபடி கனிந்து விட்டேன் என்று எதை வைத்துச் சொல்கிறார்கள் என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. 

உங்கள் கடிதத்தை நான் ரொம்பவே ரசித்தேன், ஒரே ஒரு இடத்தைத் தவிர.  அது ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கர.  அது புலி எலியான கதை.  நானும் ஜெயமோகனும் எப்போதுமே புலிகள்தான்.  ஒருபோதும் எலிகளாக மாட்டோம்.