பூச்சி 28

கணேஷின் கேள்விகள் சாதாரணமாகப் புறக்கணித்து விடக் கூடியவை அல்ல.  அதனால்தான் இத்தனை விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இதே கேள்விகளை, சந்தேகங்களைத் தாங்களும் கொண்டிருப்பதாகப் பலரும் எனக்கு எழுதியிருக்கின்றனர். 

”ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மாடுகளைக் கொடூரமாக கொல்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு உயிரைக் கொல்வதே கொடூரம்தான்! மனிதன் சாப்பிடுவதற்காக ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் இறால், புறா, காடை, இன்னபிற என அனைத்தையுமே கொல்லத்தானே செய்கிறான்? கொல்வதில், கொடூரமாகக் கொல்வது அன்பாகக் கொல்வது என தனித்தனியாக ஏதேனும் இருக்கிறதா?”

இது கணேஷ்.  இஸ்லாமியர் பிஸ்மில்லாஹ் என்று சொல்லி விட்டுக் கொல்வது எதனால் என்று நினைக்கிறீர்கள்?  எங்களுக்கான உணவுக்காக இந்தப் பிராணியைக் கொல்கிறோம், மன்னித்து விடு இறைவா என்பதுதானே அதன் உட்பொருள்?  Life of Pi படத்தில் படகில் மாட்டிக் கொண்ட இளைஞன் பல நாட்கள் பட்டினி கிடந்த நிலையில் ஒரு மீனைப் பிடித்து அதனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெட்டித் தின்பான் இல்லையா?  நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஐரோப்பியரும், பல கிழக்காசிய நாட்டினரும், சீனரும், அமெரிக்கரும் எல்லா மிருகங்களையும் பார்த்து “உங்களைக் கொலை செய்து தின்பது எங்கள் உரிமை” என்பது போல் கொல்லுகின்றனர்.  அவர்களின் வாழ்வியல் நோக்கில் மிருகங்களின் மீதான அடிப்படைப் பரிவு இல்லை.  ஐரோப்பிய நகரங்களில் உள்ள பெரிய இறைச்சிக் கடைகளைப் பார்த்தால் அவை மிருகக்காட்சி சாலை போல் தோற்றமளிக்கின்றன.  சீனன் நாயை உயிரோடு சட்டியில் போட்டு சமைக்கிறான்.  தாய்லாந்துக்காரன் உயிரோடு பாம்பின் தோலை உரிக்கிறான்.  உயிரோடு குரங்கின் தலையை இளநீர் சீவுவது போல் சீவி மூளையில் ஸ்ட்ரா போட்டுக் குடிக்கிறான்.  இப்போது கொஞ்சம் மாறியிருக்கலாம்.  ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதுதான் தாய்லாந்து கிராமப்புறங்களில் நிலைமை.  நான் இன்னமும் நம்புகிறேன்.  மனிதனின் அகங்காரத்தினால்தான், மனிதனின் திமிரினால்தான், மனிதனின் ஆணவத்தினால்தான் இந்தக் கொரோனா வைரஸ் அவனைப் பீடித்திருக்கிறது.   நான் மட்டுமேதான் இந்த உலகில் வாழ்வேன் என்ற திமிர்.  இல்லாவிட்டால் இத்தனை மரங்களையும் காடுகளையும் மிருகங்களையும் அழிப்பானா?  தென்னமெரிக்கக் காடுகளை அழித்து அங்கே வாழை மரங்களைப் பயிரிட்டு பழங்கள் வட அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.  அதிலும் உயர்ரகப் பழங்கள் எப்படிப் பயிரிடப்படும் தெரியுமா?  ஒருமுறை பயிரிட்ட காட்டில் அடுத்த முறை பயிரிட மாட்டார்கள்.  பழத்தின் ருசி கம்மியாகி விடும் என்று காட்டின் இன்னொரு பகுதியை அழித்துப் புதிதாக வாழையைப் பயிரிடுவார்கள்.  (1870-இல்தான் அமெரிக்காவில் வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டது.  1000 சதவிகித லாபத்தில் விற்கப்பட்டாலும் அது ஆப்பிளை விட அப்போது மலிவாக இருந்தது.  இதிலிருந்துதான் Banana Republic என்ற வார்த்தையும் பழக்கத்தில் வந்தது)

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற தத்துவமே மேற்கத்தியர்களுக்குத் தெரியாது.  அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பணமும் அதிகாரமும்தான்.  அதனால்தான் வெள்ளையர்கள் இந்தியாவில் நுழைந்து கொள்ளையடிக்க முடிந்தது.  அப்போது மரங்களில் குங்குமம் இட்டு, மரங்களைச் சுற்றி வந்து வணங்கும் இந்தியர்களைப் பார்த்து அவர்கள் காட்டுமிராண்டிகள் என்று ஏகடியம் பேசினார்கள்.  ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் கழித்து அவர்களே சுற்றுச்சூழலியல் என்று பேச ஆரம்பித்தார்கள்.  அந்த ஈகாலஜி இங்கே 3000 ஆண்டுகளாக இந்தியக் கலாச்சாரத்தில் இருந்தது.   எனவே எல்லா கொலையும் ஒரே கொலை அல்ல.

மேலும், இந்திய சமூகத்திலும் கலாச்சாரத்திலும் மாடுகளின் பங்கு உயர்ந்த இடத்தில் இருந்ததற்குக் காரணம், இங்குள்ள தட்பவெப்பம்.  தரையை சாணத்தால் மெழுகுவது போன்ற விஷயங்களை மேனாட்டினரால் புரிந்து கொள்வது கூடக் கடினம்.  மைனஸ் பத்து மைனஸ் இருபது டிகிரி குளிரில் தரையெல்லாம் பனிக்கட்டிகளாக இருக்கும் நிலத்தில் மாடுகளின் இடமே வேறு.  மாட்டுச் சிறுநீரின் மருத்துவ குணம் பற்றி எழுதியிருந்தேன்.  அது நாட்டுப் பசுவுக்கு மட்டுமே பொருந்தும்.  அதிலும் புல்லும் புண்ணாக்கும் சாப்பிடும் பசுக்கள்.  இங்கே நகரங்களில் உள்ள சினிமா போஸ்டர்களைத் தின்னும் மாடுகள் மற்றும் சீமைப் பசுக்களின் சிறுநீர் அல்ல.

கணேஷ் எழுப்பியிருக்கும் கேள்விகள் எனக்குள் 45 ஆண்டுகளாகக் கனன்று கொண்டிருக்கின்றன.  அப்போது நான் வள்ளலாரை குருவாகக் கொண்டிருந்தேன்.  அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் பூமியில் மனித சிருஷ்டி குறித்த பல விடை காண முடியாத கேள்விகளை எனக்குள் எழுப்பின.  ஒருமுறை அவர் திருவொற்றியூர் மீனவ மக்களிடம் சென்று இனிமேல் மீன் பிடிக்காதீர்கள் என்றும் மீன் சாப்பிடுவதை நிறுத்தி விடும்படியும் பேசியிருக்கிறார்.  சிருஷ்டியே மிகவும் வன்முறையும் குரூரமும் நிறைந்ததாக இருக்கும்போது இவர் எப்படி ஒரு சிறிய கிராமத்து மனிதர்களைப் பார்த்து சைவ உணவுக்கு மாறச் சொல்ல முடியும் என்று எண்ணினேன்.  புலி மானை அடித்துத் தின்கிறது.  மனிதன் விலங்குகளை அடித்துத் தின்கிறான்.  அவன் ஏன் ஒரு யானையைப் போலவோ ஆடு மாடு குதிரை போலவோ சைவ உணவை மட்டுமே உட்கொள்ளுபவனாக சிருஷ்டிக்கப்படவில்லை?  இதை நான் ஸீரோ டிகிரி நாவலிலேயே விவாதித்திருக்கிறேன்.  மின்மினிப்பூச்சியோ அல்லது அதைப் போன்ற ஒன்றோ அதன் பெண்பால் பூச்சி சிட் சிட் என்று சப்தத்தை எழுப்பும்.  உடனே ஆண் பூச்சி அதனிடம் சென்று கலவி கொள்ளும்.  கலவி முடிந்ததும் பெண் பூச்சி ஆண் பூச்சியைத் தின்று விடும்.  என்னய்யா இது, இத்தனை குரூரமான சிருஷ்டியாக இருக்கிறது உலக வாழ்க்கை என்று கடவுளைக் கேட்டிருப்பேன். 

தாவரங்களைச் சாப்பிடுவதும் உயிர்க் கொலை இல்லையா என்று மகாப் பெரியவரை ஒரு பக்தர் கேட்கிறார்.  பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தது.  தெய்வத்தின் குரல் ஐந்து பாகம் உள்ளது.  அதில் எந்த இடத்தில் வருகிறது என்று தெரியவில்லை.  தெரிந்தால் அப்படியே மகாப் பெரியவரை மேற்கோள் காட்டியிருப்பேன்.  இல்லாததால் இப்போது ஞாபகத்திலிருந்து சொல்கிறேன்.  வீடே ஒரு கசாப்புக் கடைதான் என்கிறார் மகாப் பெரியவர்.  அதே வார்த்தை.  கசாப்புக் கடை.  இவருக்கு எப்படி இந்த வார்த்தையெல்லாம் தெரிந்திருக்கிறது என்று படித்தபோது ஆச்சரியப்பட்டேன்.  மகாப் பெரியவரிடம் அப்படி ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்கலாம்.  குடும்பங்களில் உள்ள மிக நுணுக்கமான விஷயங்களையெல்லாம் சொல்வார்.  அதெல்லாம் ஒரு துறவிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.  அதிலும் மகாப் பெரியவர் மிக இளம் வயதிலேயே துறவியானவர்.  சரி, வீடு எப்படிக் கசாப்புக் கடை?  துடைப்பத்தால் பெருக்கும்போது பல புழு பூச்சிகள் எறும்புகள் எல்லாம் சாகின்றன.  கரப்பான் பூச்சிகள் சாகின்றன.  கத்தரிக்காயில் புழு இருந்தால் அதை என்ன பண்ணுகிறோம்?  அது ஒரு கொலை.  அரிசி களையும்போது புழுக்கள் தண்ணீரில் போகின்றன.  இதெல்லாம் கொலை ஆயிற்றே என்று சாப்பிடாமல் இருந்து விடுகிறோமா?  இதற்குப் பிறகு பார்த்தால் வயிற்றிலேயே ஏகப்பட்ட ஜீவராசிகள் வாழ்கின்றன.  இப்படி வீடு என்று பார்த்தால் அதில் ஒரு கசாப்புக் கடை மாதிரி நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின்றன.  இதற்கெல்லாம் நாம் ஒண்ணும் பண்ண முடியாது.   ஆனால் உயிர்களிடத்திலே அன்பு பரிபாலிக்க வேண்டும், ஜீவகாருண்யம் வேண்டும் என்று சொல்லி, நம் முன்னோர் எப்படி சக உயிர்களிடத்திலே கருணையோடு வாழ்ந்தார்கள் என்று விளக்குகிறார்.   இந்தக் கருணையைப் பற்றித்தான் நான் பண்ணிப் பண்ணிப் பேசுகிறேன்.   

***

எதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பார்கள்.  அதேபோல் எனக்கு இரண்டு பக்கத்திலிருந்தும் இடி.  பிராமணர்களும் என்னைத் திட்டுகிறார்கள்.  இஸ்லாமியரும் என்னைத் திட்டுகிறார்கள்.  அப்படிப் பல கடிதங்கள் வந்தன.  இரண்டு சாராரிடமிருந்தும் மாதிரிக்கு ஒவ்வொரு கடிதத்தை இங்கே தருகிறேன்.   

அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் உங்கள் எழுத்துக்களை படிப்பதில்லை.காரணம் அது ஆபாசம் நிறைந்தது என்று கேள்விபட்டுள்ளேன்.ஆபாசம் நிறைந்தவைகளை சிந்திப்பதேஎங்கள் மார்க்கத்தில் ஹராம்.அதனால் இனியும் உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் எண்ணமில்லை.ஆனால் எனது நண்பன் ஒரு பெரியாரிஸ்ட். அவன் உங்கள் எழுத்துக்களை வாசித்து கடுமையாக திட்டிக் கொண்டிருப்பான். அவன் மூலமாகத்தான் நீங்கள் தொடர்ந்து இஸ்லாமியர் மீது வெறுப்பைக் கக்குவதை கேள்விபட்டேன். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்கள் ஏற்கெனவே அடக்குமுறைக்கு உள்ளாவது போதாதா? நீங்கள் ஆபாசக் கதை எழுதுங்கள், சரோஜாதேவி கதை எழுதுங்கள்.  அது உங்கள் விருப்பம். ஆனால் ஏன் எங்கள் மார்க்கத்தவரை இழித்துப் பேச வேண்டும்? தில்லி ஜமாஅத் கூட்டத்தினால்தான் இந்தியாவில் கொரோனா பரவியதா? அதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

இறை அடிமை

பிராமணரின் கடிதத்தை இங்கே வெளியிட முடியாது.  மிகவும் ஆபாசமாக எழுதப்பட்டிருக்கிறது.  நீண்ட கடிதம் வேறு.  அதன் சாராம்சம் நான் முஸ்லீம்களுக்கு ஆதரவாக எழுதுகிறேனாம்.  பிராமணர்களுக்கு விரோதமாக எழுதுகிறேனாம். 

இந்த இரண்டு கடிதங்களுக்கும் நாளை காலையிலேயே பதில் எழுதி விடுகிறேன்.