பூச்சி – 29

ஓ, இந்தப் பசு விஷயத்திலிருந்து அடுத்த அடி வைக்கலாம் என்று பார்த்தால் முடிய மாட்டேன் என்கிறது.  நேற்று சொல்ல மறந்த விஷயம்:  பல ஆண்டுகளாக அன்பு சிக்கன் கடைக்குப் போவதை நிறுத்தி விட்டேன்.  அன்பு பற்றி எக்ஸைலில் எழுதியிருக்கிறேன்.  கோழி விற்றுக் கோடீஸ்வரன் ஆனவர்.  சில பல ஆண்டுகளுக்கு முன்பு அன்பு ஒரு புதிய இடத்திலிருந்து விற்பதற்காகக் கோழி வாங்கியிருக்கிறார்.  மற்ற கறியெல்லாம் ஜவ்வு மாதிரி இழுக்கும்.  இல்லாவிட்டால் நார் நாராக வரும்.  தமிழ்நாடு பூராவும் சிக்கன் கறி என்ற பெயரில் பொதுமக்களும் நான்வெஜ் கடைகளும் இந்த ரப்பர் ஜவ்வையும் தேங்காய் நாரையும்தான் சிக்கன் என்ற பெயரில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இன்று வரை.  ஆனால் அன்பு சிக்கன் இருட்டுக்கடை ஹல்வா மாதிரி உள்ளே போகிறது.  கோடீஸ்வரன் ஆகி விட்டார்.  இருந்தாலும் நான் செல்வதில்லை.  நான் ப்ராய்லர் கோழி சாப்பிடுவதில்லை.  நாட்டுக் கோழிதான்.  ஆனால் நாட்டுக் கோழியை கறியாக விற்க மாட்டார்கள்.  நாம் கேட்கும்போதுதான் கழுத்தை அறுப்பார்கள்.  அப்போது அந்தக் கோழி போடும் கூச்சலைக் கேட்டால் யாருக்காவது சிக்கன் சாப்பிட மனசு வருமா?  ஓரிரு தடவைகளில் அங்கே போவதை நிறுத்தி விட்டேன்.  அப்புறம் வெறும் மீன் தான். 

இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தது எது தெரியுமா?  தருண் தேஜ்பால் எழுதிய The Alchemy of Desire.  அது ஒரு காதல் கதைதான் என்றாலும் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றிலிருந்து எது எதை எடுத்துக் கொள்கிறோம் என்பது நம்முடைய இடத்தைப் பொறுத்திருக்கிறது இல்லையா?  நான் அந்த நாவலிலிருந்து இயற்கையோடு உரையாடுவது என்ற விஷயத்தை எடுத்துக் கொண்டேன்.  அதைப் படித்த பிறகுதான் 400 பக்க எக்ஸைல் 1000 பக்கமாக மாறியது.  அதனால்தான் எக்ஸைலை தருணுக்கு சமர்ப்பணம் செய்தேன்.  இப்போது தருண் பெயரைச் சொல்வதே ஏதோ ஒரு தீண்டத்தகாத விஷயமாகப் போய் விட்டது.  என்ன செய்வது?  கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான். 

என் பள்ளி பற்றி எழுதியிருந்தேன்.  அதில் நிர்மலும் ஒருவர்.  என் பள்ளியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.  இந்தியா போன்ற ஒரு ஜனநாயகப் பள்ளி.  அல்லது, இந்து மதம் போன்ற ஒரு பள்ளி.  ஒருத்தன் ராமர் சிலையை செருப்பால் அடிப்பான்.  ஒருத்தன் அதற்கு தீபாராதனை காட்டுவான்.  இப்போது நிர்மலின் கடிதம்:

”அன்பும் கருணையும் ஓர் அளவுக்குத்தான் வேலை செய்யும்.   

இந்த மனிதர்களின் ஆளுமை குறித்த புரிதலை இன்னும் நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. மற்ற எல்லா உயிரினங்களையும் தீர்மனிக்கும் இடத்தில் நாம் இருக்கிறோம் என சொல்லுவதிலும் அதை ஒத்துக் கொள்வதிலும் தயக்கம் இருக்கிறது. நாம் இயற்கைக்கு முன் சிறியவர்கள், பூமியின் சிறு அசைவுக்கு ஈடு கொடுக்க முடியாதவர்கள் என நம்மை நாமே போலியாக தாழ்த்திக் கொள்கிறோம். என்றோ நடக்கும் பூமி அதிர்ச்சி, கொரோனா, புயல் போன்றவைகளினால் பாதிக்கப்படும் பொழுது மட்டுமே நாம் நம்மை ஆராய்ந்து பார்க்கிறோம். மற்ற விலங்குகளுக்கும் செடி கொடிகளுக்கும் பூச்சிகளுக்கும் மனிதர்களோடு வாழும் ஒவ்வொரு நாளும் கொரானா இடர் காலத்துக்கு இணையானாதே.

மனிதனே மற்ற உயிரினங்களின் கடவுள்.  இப்போது கடவுளின் ஆட்டம்.  கடவுள் ஆடாவிட்டால் அவர் கடவுளாகவே இருக்க முடியாதே?  எப்படியாவது இந்த eco systemத்தை அவர் ஒழுங்கிபடுத்தியாக வேண்டுமே?”

எனக்கு நிர்மலின் கடிதம் உண்மையில் புரியவில்லை.  ஒவ்வொரு வாக்கியத்தை முந்தைய வாக்கியத்தை மறுத்தபடி செல்கிறது.  எப்படியிருந்தாலும் என் பதிலைச் சொல்லி விடுகிறேன்.  ஒருசில மதங்கள் மனிதனின் தலைமைப் பண்பை முதன்மைப்படுத்துகின்றன என்று தெரியும்.  விலங்கினங்களும் பூமியும் மனிதனுக்காக, மனிதனின் நுகர்வுக்காக சிருஷ்டிக்கப்பட்டவை. 

இங்கே நான் திரும்பவும் இந்து மதம் சொல்வதையே நம்பத் தலைப்படுகிறேன்.  குறிப்பாக ஆதி சங்கரர்.  அத்வைதம்.  பாரதியை இங்கே மேற்கோள் காண்பிக்கலாம்.  இதன் மூலம் பாரதி அல்ல.  வேதத்தை அவரது அற்புதமான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.  எக்ஸைல் நாவலின் சாரமும் அதுதான் என்பதால் அதை நாம் திரும்பவும் இங்கே வாசிக்கலாம். 

தயவுசெய்து பின்வரும் நீண்ட கவிதையை வாய் விட்டு வாசியுங்கள்.  உங்கள் குழந்தைகளும் உங்கள் அருகே இருந்து நீங்கள் வாசிப்பதைக் கேட்க வேண்டும்.  உங்கள் கணவரும்/ உங்கள் மனைவியும் இதைக் கேட்க வேண்டும்.  ஒரு அரை மணி நேரம் இதற்காக ஒதுக்குங்கள்.  வேறு எதைப் பற்றியும் நினையாதீர்கள்.  அலுவலகம் போக வேண்டும்.  அந்த வேலையை முடிக்க வேண்டும்.  இந்த வேலையை முடிக்க வேண்டும்.  அந்த சாமான் வாங்க வேண்டும்.  இந்த சாமான் வாங்க வேண்டும்.  எதுவும் இல்லை.  போனை சைலண்ட் மோடில் போடுங்கள்.  யாரும் உங்கள் வீட்டின் அழைப்பு மணியை அடிக்க மாட்டார்கள்.  கீழே வருவது பாரதி எழுதியது அல்ல.  பாரதியின் பெயர்தான் போட்டிருக்கும்.  ஆனால் பாரதி எழுதியது அல்ல.  இதை எழுதியது கடவுள்.  நீங்கள் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும் அற்புதங்களில் நம்பிக்கை உண்டா?  எட்டு வயதாக இருக்கும் போது மொஸார்ட் தனது முதல் சிம்ஃபனியை எழுதினான் அல்லவா?  அதை விஞ்ஞானரீதியாக விளக்க முடியுமா?  அப்பேர்ப்பட்ட ஒரு மனம்தான் இதை எழுதியது என்று நம்புங்கள்.  இதுதான் வேதத்தின் சாரம்.  இப்போது இதை வாய்விட்டுப் படிக்க ஆரம்பியுங்கள்.  ஒருமுறை படித்த பிறகும் திரும்பவும் படியுங்கள்.  இரண்டாவது முறை வாசிக்கும்போது உங்கள் குழந்தைகளும் மனைவியும் அல்லது கணவனும் உங்களை விட்டு நகர்ந்திருப்பார்கள்.  அப்போது இதை மெதுவாக மனதுக்குள் ஒவ்வொரு வார்த்தையையும் காட்சியாக மனதில் கொண்டு வந்து கொண்டு வந்து வாசியுங்கள்.  மனதுக்குள்.

இதோ பாரதி.  இதோ வேதம்.  இதோ கடவுள். 

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.

ஞாயிறு நன்று; திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம்
மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.

கடல் இனிது, மலை இனிது, காடுநன்று. ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும், காயும், கனியும் இனியன.

பறவைகள் இனிய. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம் இனியவை, நீர் வாழ்வனவும் நல்லன.

மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.

                                                    2

உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன. உயிர் சுவையுடையது. மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம். உணர்வே அமுதம். உணர்வு தெய்வம்.

                                                    3
மனம் தெய்வம். சித்தம் தெய்வம். உயிர் தெய்வம். காடு, மலை, அருவி, ஆறு, கடல், நிலம், நீர், காற்று, தீ, வான், ஞாயிறு, திங்கள், வானத்துச் சுடர்கள் – எல்லாம் தெய்வங்கள்.

உலோகங்கள், மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன, மனிதர்- இவை அமுதங்கள்.

                                                     4
இவ்வுலகம் ஒன்று. 

ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு- இவையனைத்தும் ஒன்றே.

ஞாயிறு, வீட்டுச்சுவர், ஈ, மலையருவி, குழல், கோமேதகம் – இவ்வனைத்தும் ஒன்றே.

இன்பம், துன்பம், பாட்டு, வண்ணான், குருவி, மின்னல், பருத்தி – இஃதெல்லாம் ஒன்று.

மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி- இவை ஒரு பொருள்.

வேதம், கடல் மீன், புயற்காற்று, மல்லிகை மலர்- இவை ஒரு பொருளின் பல தோற்றம்.

உள்ளதெல்லாம் ஒரே பொருள்;  ஒன்று.

இந்த ஒன்றின் பெயர் ‘தான்’; ‘தானே’ தெய்வம், ‘தான்’ அமுதம், இறவாதது.

                                                  5
எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க. ‘தான்’ வாழ்க. அமுதம் எப்போதும் இன்பமாகுக.


                                                6

தெய்வங்களை வாழ்த்துகின்றோம். தெய்வங்கள் இன்ப
மெய்துக. அவை வாழ்க. அவை வெல்க. தெய்வங்களே!

என்றும் விளங்குவீர்; என்றும் இன்பமெய்துவீர்; என்றும் வாழ்வீர்; என்றும் அருள் புரிவீர். எவற்றையும் காப்பீர். உமக்கு நன்று தெய்வங்களே!

எம்மை உண்பீர், எமக்கு உணவாவீர், உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர். உமக்கு நன்று. தெய்வங்களே!

காத்தல் இனிது, காக்கப் படுவதும் இனிது. அழித்தல் நன்று, அழிக்கப்படுதலும் நன்று. உண்பது நன்று, உண்ணப்படுதலும் நன்று. சுவை நன்று, உயிர் நன்று, நன்று, நன்று,


                                                    7

உணர்வே நீ வாழ்க.

நீ ஒன்று நீ ஒளி.

நீ ஒன்று நீ பல.

நீ நட்பு நீ பகை.

உள்ளதும் இல்லாததும் நீ.

அறிவதும் அறியாததும் நீ.

நன்றும் தீதும் நீ. 

நீ அமுதம் நீ சுவை.

நீ நன்று. நீ இன்பம்.

***

இயற்கையின் முன்னால் சரணடைதல்.  அண்டமும் பிண்டமும் ஒன்றென உணர்தல்.  அகண்ட பிரபஞ்சத்தை என் பிண்டத்தில் உணர்ந்து வணங்குதல். 

ஒரு விருட்சத்தின் முன்னே ஒரு மலையின் முன்னே சமுத்திரத்தின் முன்னே சூரியனின் முன்னே நட்சத்திரங்களின் முன்னே நான் விழுந்து வணங்குகிறேன். 

***

அதனாலேயே என் மனதில் கொரோனா இல்லை.  நேற்று அவந்திகா என்னிடம் மலர்ச்சியாகச் சொன்னாள். 

”சாரு, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது.” 

“I see, corona doesn’t exist in my world.”

இதை நான் இன்று ராகவனிடம் சொன்னேன்.  என்ன சொன்னாலும் அவர் ஒரு கதை சொல்வார்.  ஜனகன் மாதிரியே இருக்கிறீர்கள் என்றார்.  எனக்கு ஜனகனின் பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருந்தது.  ஜனக மகாராஜா என்பார்களே?  ஒருவேளை சீதையின் தந்தையோ?  ஆனாலும் நிச்சயமாகத் தெரியாமல் வாயை விடக் கூடாது.  எனக்கு அடிக்கடி ராமாயணக் கதையும் மகாபாரதமும் குழம்பி விடும்.  சரி, ஜெயமோகனின் மகாபாரதத்தையாவது படித்து ஜென்ரல் நாலட்ஜை வளர்த்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் அது வால்மீகியை விட கடினமாக இருக்கிறது.  ஓ மை காட்.  மகாபாரதம் எழுதினது வியாசன் ஆயிற்றே?  சரி, மாற்றி வாசித்துக் கொள்ளுங்கள்.  அதனால் நைஸாக ராகவனிடம் கேட்டேன், ”ஆமா, இந்த ஜனகன் யாரோ ஒரு முக்கியஸ்தரின் அப்பா இல்லியோ?”  அதற்கு ராகவன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “ஆமா சார், சீதையின் தகப்பனார்.  சரி, கதையைக் கேளுங்கோ” என்று ஆரம்பித்தார்.  நீங்களும் சிறு வயதில் படித்திருப்பீர்கள்.  இதெல்லாம் ராகவன் சொல்லத்தான் திரும்பவும் ஞாபகம் வருகிறது. 

ஜனகன் சின்னப் பையனாக குருகுல வாசம் செய்து கொண்டிருந்தபோது நடந்தது.  குருகுலத்தில் மற்ற பையன்களுக்கு ஜனகன் மீது பொறாமை.  குரு ஜனகனுக்கு மட்டும் தனிச்சலுகை காட்டுகிறார் என்று நினைக்கிறார்கள்.  அதை குருவிடமும் சொல்கிறார்கள்.  ஒருநாள் குருகுலத்தில் தீ என்ற சப்தம் வருகிறது.  படித்துக் கொண்டிருந்த மாணாக்கர்கள் விழுந்தடித்து ஓடுகிறார்கள்.  தீ எதுவும் இல்லை.  திரும்பி வந்தவர்களிடம் குரு கேட்கிறார்.  உங்களுடைய உடைமை என்ன என்று.  இரண்டு வேட்டிகளும் இரண்டு கௌபீனங்களுமே உடைமை.  ஒரு கோமணத் துணிக்கே இந்த ஓட்டம் ஓடுகிறீர்களே, இவனைப் பாருங்கள்.  இளவரசன்.  இவனுடைய குடிலில் பட்டும் மணியும் கிடக்கின்றன.  இவனோ எதனாலும் பாதிக்கப்படாமல் படித்துக் கொண்டிருக்கிறான்.  அதனால்தான் இவன் உங்களுக்கு முன்னே நின்று கொண்டிருக்கிறான்.  நான் சலுகை காண்பிப்பதால் அல்ல. 

அதனால் எந்தக் கொரோனா வந்தாலும் வராவிட்டாலும் ஒரு கர்ம யோகிக்கு அவனுடைய கர்மம்தான் கவனம்.  அதில் மட்டுமே அவன் மனம் ஒருமுகப்பட்டுக் கிடக்கிறது.  உங்களுக்குத் தெரியும்தானே அர்ஜுனன் கதை.  துரியோதனனுக்கும், துச்சாதனனுக்கும், தருமனுக்கும் மரம் தெரிந்தது, கிளை தெரிந்தது, இலை தெரிந்தது, மரத்துக்கு மேலே உள்ள வானம் தெரிந்தது, வானத்தில் மிதந்த மேகங்கள் தெரிந்தன.  பறவையும் தெரிந்தது.  அர்ஜுனனுக்கு மட்டுமே மரம் தெரியவில்லை, கிளை தெரியவில்லை, இலை தெரியவில்லை, வானம் தெரியவில்லை, மேகம் தெரியவில்லை.  மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்திருந்த பறவையின் கழுத்து மட்டுமே தெரிந்தது.  அவன் யோகி.  கர்ம யோகி.  அதனலேதான் என் உலகில் கொரோனா இல்லை.  அதற்காக பொறுப்பின்றி இருக்க மாட்டேன் என்பதல்ல.  மூன்று முறை வெளியே செல்கிறேன்.  காலையில் மாடிக்கு வாக்கிங்.  மற்ற இரண்டு முறை பூனைகளுக்கு உணவு கொடுக்க.  மூன்று முறையும் கையில் சானிடைஸர், முகத்துக்கு முகமூடி.  மற்றபடி கஷாயங்கள். 

உங்களில் பலரும் நெட்ஃப்ளிக்ஸே கதியென்று கிடப்பதைக் காண வருத்தமாக இருக்கிறது.  பழுப்பு நிறப் பக்கங்களில் நூற்றுக்கணக்கான  நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.  தி. ஜானகிராமனை ஆரம்பித்தாலே முடிக்க ஒரு ஆண்டு தேவைப்படும்.   எல்லாமே இணையத்தில் கிடைக்கிறது என்பது கூட யாருக்கும் தெரியுமா என்று தெரியவில்லை.  அவருடைய பெரும்பான்மையான எழுத்துக்கள் கிண்டிலில் கிடைக்கின்றன.  மொத்த சிறுகதைகளும் கிண்டிலில் காலச்சுவடு வெளியிட்டுள்ளது.  சி.சு. செல்லப்பாவுக்கு ஒரு ஆண்டு பிடிக்கும்.  க.நா.சு.வுக்கு ஒரு ஆண்டு வேண்டும்.  எழுதிக் குவித்திருக்கிறார்கள்.  உங்களிடமே கூட புத்தகங்கள் இருக்கலாம்.  புத்தக விழாவில் வண்டி வண்டியாக வாங்கிக் கொண்டு போகிறீர்கள்.  இப்போது கூடப் படிக்காமல் வேறு எப்போது படிக்கப் போகிறீர்கள்?  உங்கள் குழந்தைகள் படிக்க மாட்டார்கள்.  படிப்பு என்பது இந்தியாவில் காணாமல் போகப் போகிறது.  வாசிப்பின் கடைசித் தருணத்தில் இருக்கிறோம்.  இப்போதும் படிக்கவில்லையானால்?  மனோகரன் முகநூலில் கொடுத்திருந்த மூன்று வெப்சீரீஸைப் பார்க்க முயற்சித்தேன்.  ம்ஹும்.  ஒரு எபிசோட் கூட நகர்த்த முடியவில்லை.  எனக்கெல்லாம் வெப்சீரீஸ் என்றால் La Reina del Sur, The Inmate, Toy Boy, Lucifer மாதிரி இருக்க வேண்டும்.  இந்திய வெப்சீரீஸ் இந்திய porn மாதிரியே சவலையாக இருக்கிறது.  இருந்தாலும் She, Sacred Games ரெண்டும் பரவாயில்லை.  பரவாயில்லை ரகம்தான்.  பிரமாதம் என்று சொல்ல முடியாது.  The Family Man பார்க்க ஆரம்பித்தேன்.  முடியவில்லை.  Mirzapur ரசிக்கக் கூடியதாக இருந்தது.   மற்றபடி El Dragon: Return of a Warrior சீரீஸின் முதல் சீஸன்  பார்த்தவர்களுக்கு ஓர் நற்செய்தி.  இரண்டாவது சீஸன் வந்து விட்டது.  இதிலும் ட்ராகன் ஜெண்டில்மேனாகவும் மகாத்மாவாகவும்தான் இருக்கிறார்.  சரி, படியுங்கள். 

***

பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai