எதை எழுதுவது எதை விடுவது என்றே தெரியவில்லை. என் அம்மா அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்தான். எங்கள் வீட்டில் வாரம் மூன்று நாளாவது மீன் இருக்கும். நைனா காய்கறி வாங்கினதாக எனக்கு ஞாபகமே இல்லை. ஊரில் அப்போது காய்கறிக் கடையும் இல்லை. தெருவிலும் யாரும் காய் விற்றுக் கொண்டு போய் பார்த்ததில்லை. முதல் விஷயம் ஐம்பதுகளில் நாகூரைப் போன்ற ஒரு சிற்றூரில் காய்கறியெல்லாம் கடைகளில் வாங்கக் கூடியது என்றே எங்களுக்குத் தெரியாது. வீட்டுக் கொல்லையில் விளையும் காய்கறிகள்தான். கீரை இருக்கும். மற்றபடி கொடி வகைகள்தான். சுரைக்காய், பூசணிக்காய், பறங்கிக் காய் இப்படி. கொத்தாச்சாவடியில் ராமு பழக்கடை இருந்தது. அங்கேதான் கருணைக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்ற “காய்கறி”களைப் பார்த்திருக்கிறேன். கடையின் முன்னே வாழைப்பழத் தார் தொங்கும். இதற்குத்தான் பழக்கடை. காய்கறிக்கடை என்றால் என்னவென்று தெரியாது என்பதால்தான் பழக்கடை என்று சொன்னார்கள் போல.
அம்மா கோழி வளர்ப்பார்கள். மீனோ கீரையோ கிடைக்காத நாட்களில் அந்தக் கோழி குழம்பாக மாறி விடும். அம்மாதான் கோழியின் கழுத்தை அரிவாள்மனையில் அறுப்பார்கள். அப்போதெல்லாம் எனக்கு அதன் வலி தெரிந்ததில்லை. அம்மாவுக்கும்தான். ஆனால் மீன் கழுவும் போதெல்லாம் நாலைந்து பூனைகளுக்கு மீன் குடல் கிடைக்கும். காகங்களும் சாப்பிடும். பாம்பு அதிகம். பாம்பு வீட்டுக்குள் வந்து விட்டால் யாருமே அடிக்க மாட்டோம். அடிப்பது பற்றி யோசிப்பது கூட இல்லை. அம்மாதான் கொழந்தைங்க பயப்படுதுடா, போய்டு, அம்மா வந்து பால் குடுக்குறேன் என்று குரல் கொடுப்பார்கள். பாம்பும் பதவிசாகப் போய் விடும். அம்மா போய் பால் கொடுத்து விட்டு வருவார்கள். அதேபோல் காகங்களுக்கு உணவிடாமல் நாங்கள் ஒருநாளும் சாப்பிட்டதில்லை. இதுதான் இந்தியாவின் எல்லா தாய்மார்களின் கதையும்.
என் அம்மாவிடம் நீங்கள் பூனை வளர்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் அவர்களுக்கு அந்தக் கேள்வியே புரியாது. பூனையை எப்படி வளர்க்க முடியும்? ஆக, எல்லா ஜீவராசிகளும் மனிதர்களோடு சகஜமாக கூட வாழ்ந்தன. யாரும் எதையும் வளர்ப்பதில்லை. அதே சமயம் உணவுக்காக அடித்தும் சாப்பிடத் தயங்கினதில்லை. மாட்டைத் தவிர. ஏனென்றால், மாடு குல தெய்வம். இந்தியர்களின் குல தெய்வம் என்றுதான் எழுத கை வருகிறது. ஆனால் எல்லா இந்தியர்களின் சார்பாகவும் நான் எப்படி எழுத முடியும்? அதனால் கொஞ்சம் மாற்றி இந்துக்களின் குல தெய்வம் என்று எழுதுகிறேன்.
காந்தி பல விஷயங்களை சொல்லவில்லை. கோடி காட்டி விட்டுப் போய் விட்டார். அல்லது வேறு எங்காவது எழுதியோ பேசியோ இருக்கலாம். மாடு இல்லாமல் இந்தியர்களின் வாழ்க்கை இல்லை. போக்குவரத்து, வேளாண்மை ஆகிய விஷயங்களைத் தவிர்த்து, மனித வாழ்வின் அத்தனை விஷயங்களிலும் மாடு இருந்தது. ஒரு புது வீட்டுக்குக் குடி போக வேண்டும் என்றால் கூட பசுதான் முதலில் அதன் உள்ளே போக வேண்டும். திருமணத் தம்பதி ஆனாலும் பசுவின் ஆசீர்வாதம்தான் முதல். குல தெய்வம்தான் தம்பதியை முதல் ஆசீர்வாதம் செய்ய வேண்டும். உடம்பு சரியில்லையா, பசுவின் சிறுநீர்தான் மருந்து. இதைக் கிண்டல் செய்பவர்களை அடி மடையன்கள் என்றே சொல்வேன். ஏனென்றால், இது எதுவுமே நம்பிக்கை இல்லை. முழுக்க முழுக்க அறிவியல். இந்திய அறிவியல். சித்தர்களின் அறிவியல். இந்துத்துவா ஆள் செய்கிறான் என்பதற்காக திருமூலரையும் தன்வந்தரியையும் அகத்தியரையும் நான் மறுதலிக்க முடியுமா, சொல்லுங்கள்?
பசுவின் சிறுநீருக்கு மருத்துவ குணம் உண்டு; பசுவின் சிறுநீர் மட்டுமல்ல; கழுதை, குதிரை, ஒட்டகம், யானை, எருமை, வெள்ளாடு, செம்மறியாடு போன்ற பிராணிகளின் சிறுநீரிலும் மருத்துவ குணம் உண்டு என்று சொல்கிறது அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற ஆயுர்வேத நூல். இது ஏதோ போகிற போக்கில் சொல்லிச் செல்வதல்ல. அந்த நூல் ஆயுர்வேதப் பட்டப்படிப்பின் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
வில்வாதி குடிகா என்ற ஒரு பிரபலமான ஆயுர்வேத மருந்து உள்ளது. அது ஒரு விஷமுறி மருந்து. பாம்புக் கடி, தேள் கடி, சிலந்திக் கடி, எலிக் கடி, வாய்வுத் தொல்லை, காலரா, அஜீர்ணம் மற்றும் ஜுரத்துக்குக் கொடுக்கப்படும் மருந்து இது. வில்வ இலை, துளசி, புங்கப் பழம், தகரை, திரிபலா, திரிகடுகம், மஞ்சள், தேவதாரு, மரமஞ்சள் மற்றும் வெள்ளாட்டு மூத்திரம் என்ற பத்து மூலிகைகள் சேர்ந்தது இந்த மருந்து. இப்படி பத்து என்று சொல்வது கூட தவறு. ஏனென்றால், திரிபலா என்றால் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கலப்பு. வில்வாதி குடிகா மருந்து டப்பாவில் என்னென்ன மூலிகைகள் கலந்துள்ளன என்ற பட்டியலின் கடைசியில் அஜமூத்ரா என்று எழுதியிருக்கும். அஜமூத்ரா என்றால் வெள்ளாட்டு மூத்திரம்.
கோரோஜனை (கோரோசனை) என்ற மருந்து பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குழந்தையாக இருக்கும்போது நிச்சயம் கோரோஜனை ஒருமுறையாவது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். சிறு குழந்தைகளுக்குக் கபம், மாந்தம், சீதளம், இருமல், ஜுரம் போன்ற பிரச்சினைகளுக்குக் கோரோசனை கொடுப்பார்கள். இப்போது எல்லாமே அலோபதியாகிவிட்டபடியால் யாருக்கும் கோரோசனை பற்றித் தெரிய வாய்ப்பில்லை.
இந்தக் கோரோசனை இன்னொரு முக்கியமான விஷயத்துக்கும் பயன்படுகிறது. இதற்கு நாம் அஷ்டமாசித்தி என்பது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். (ஒவ்வொரு சித்திக்கும் எட்டு மூலிகைகள் தேவை. ஆக, 64 மூலிகைகள் அடிப்படை மூலிகைகள்.)
- உச்சாடனம் – மூலிகைகளை அடித்து மந்திர உச்சாடனம் செய்து விஷத்தை இறக்குவது. (பேயையும் இப்படித்தான் ஓட்டுவர்!)
- ஆகர்ஷணம் – பேய், பிசாசு, தேவதை மற்றும் இறந்தவர்களை – அதாவது, ஆவிகளை – வரவழைத்துப் பேசுதல்.
- பேதனம் – பேதலிக்கச் செய்தல் (செய்வினை செய்து புத்தியை பேதலிக்கச் செய்வார்கள் இல்லையா, அந்த மாதிரி)
- மோகனம் – மயங்கச் செய்தல் (ஹிப்னாடிசம்)
- வசியம் – விளக்கம் தேவையில்லை
- துவேஷனம் – ஒருவரிடம் வெறுப்பை உண்டாக்குதல்
- மாரணம் – வன்முறை எதுவும் பிரயோகிக்காமல் எதிரியைக் காலி செய்தல்; தூரத்தில் இருந்து கொண்டே ஒருவரை மரணிக்கச் செய்தல்
- தம்பனம் – ஸ்தம்பிக்கச் செய்தல் என்கிறோம் இல்லையா, அதுதான். ஒருவரது செயலை நிறுத்துதல்.
இந்த எட்டாவது சித்தை மட்டும் கோரோசனையின் உதவியுடன் சோதித்துப் பார்த்திருக்கிறேன். நூறு சதவிகித வெற்றி. தம்பனம் என்பதைக் கட்டுதல் என்றும் சொல்வர். கணேஷ், வாஸ்தோ போன்ற முற்போக்குத் தம்பிகள் இதைச் செய்து பார்க்கலாம். விந்து தம்பனம் என்பார்கள். ஒரு கிராம் கோரோசனையை நாட்டு மருந்துக் கடையில் வாங்குங்கள். ஆனால் கலப்படமில்லாத ஒரிஜினல் கோரோசனையாக இருந்தால் நலம். ஒரு கிராம் நூறு ரூபாய் என்றால் அது கலப்பட கோரோசனை. 500 ரூபாய் என்றால் ஒரிஜினல். கடைக்காரரே உண்மையைச் சொல்லி விடுவார். அவரிடமே சொல்லி வைத்தால் ஒரிஜினல் கிடைக்கும். அங்கேயே பச்சைக் கற்பூரமும் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கிராம் கோரோசனையையும் கொஞ்சமாக பச்சைக் கற்பூரத்தையும் கல்வத்தில் போட்டு நைசாக அரைத்து எடுத்து அதை எங்கே தேவையோ அந்த இடத்தில் தடவிக் கொண்டு காரியத்தில் இறங்கினால் தம்பி தம்பித்து விடுவான். அதாவது பழைய நிலைக்கே போக மாட்டான். வயகரா கியகரா எல்லாம் இதற்கு முன்னால் பிச்சை கேட்க வேண்டும்.
இந்தக் கோரோசனை, வயகாரா போன்றவற்றுக்கும் நாம் பேசிக் கொண்டிருந்த பசு சமாச்சாரத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? கோரோசனை என்றால் என்ன தெரியுமா? பதினைந்து வயதைத் தாண்டிய நாட்டுப் பசுவின் வயிற்றில் உள்ள பித்தப்பையில் உள்ள பித்தம்தான் கோரோசனை. காராம்பசுவாக இருந்தால் இன்னும் சிலாக்கியம். மாடு தானாக இறந்த பிறகு இந்தக் கோரோசனையை மாட்டின் பித்தப்பையிலிருந்து எடுப்பார்கள். இதைக் காய வைத்து மருந்துக்கும் மாந்த்ரீகத்துக்கும் பயன்படுத்துவர். இதில் விசேஷம் என்னவென்றால், அதிகம் துன்புறுத்தப்பட்ட மாடுகள் (தார்க்குச்சி இத்யாதி) என்றால் அதன் வயிற்றில் இந்தக் கோரோசனை இருக்காது. (கஸ்தூரி மானிலிருந்தும் கோரோசனை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இப்போது அது கிடைப்பதில்லை.)
(பசுவின் சிறுநீரைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை: பசு நோய்வாய்ப்பட்டிருக்கக் கூடாது. காலை மாலை வேளைகளில் மட்டுமே அதன் சிறுநீரை எடுக்க வேண்டும். முதலில் வரும் சிறுநீரையும் கடைசியில் வருவதையும் விட்டுவிட்டு இடைப்பட்ட நேரத்தில் வருவதையே எடுக்க வேண்டும். எடுத்த சிறுநீரை எட்டாக மடிக்கப்பட்ட துணியில் வடிகட்டிப் பயன்படுத்தலாம். இது ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டது.)
மாந்த்ரீகத்தில் கோரோசனைக்கு இன்னொரு பலன் சொல்லப்படுகிறது. மேலே குறிப்பிட்ட மோகனம்தான் அது. கோரோசனை பற்றித் தெரிந்தவர்களும் தாந்த்ரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் கோரோசனையை சந்தனத்துடன் கலந்து நெற்றியில் இட்டுக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
தம்பனம் என்றதும் எனக்கு வேறு ஒரு முக்கியமான விஷயம் ஞாபகம் வருகிறது. அது கொஞ்சம் மகாத்மா விஷயத்துக்கு சம்பந்தம் இல்லாதது. சற்று எதிரானதும் கூட. இருந்தாலும்… இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதுமே ஆண் பெண் தாம்பத்ய உறவில் தீராத சிக்கல் இருந்து வருகிறது. ஆஃப்கன், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அந்தப் பிரச்சினை இல்லையே தவிர மற்ற எல்லா நாடுகளிலும் அது பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் ஆஃப்கன், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நிலவும் ஆணாதிக்கம் ஆண் பெண் உறவில் வேறு பல மோசமான விளைவுகளை உண்டாக்குகின்றன. அது வேறு. தாம்பத்ய உறவுச் சிக்கலுக்குக் காரணம், துரித ஸ்கலிதம். இதற்கு ஒரு அபாரமான மருந்தைச் சொல்கிறார்கள் அகத்தியரும் கோரக்கரும்.
காமப்பா
கலவியிலே தம்பனத்தைக் கேளு
கட்டாக நிஷ்டைமுறை கருத்தில் வையே
வையப்பா வாசிதனை மூலத்தூட்டி
மகத்தான மூலமதால் ரேசகத்தை பற்றி
செய்யப்பா பூரகத்தில் கும்பகத்தில் நின்று
செபித்திடுவாய் வசியசிவ வென்று மாறி
பய்யப்பா பாவையர்மேல் ஆசைகொண்டால்
பதறாது விந்துவது செயமாய் நிற்கும்
மெய்யப்பா இம்மொழியை உலகத்தோர்க்கு
விள்ளாதே குற்றம்வரும் செயமாய் நில்லே”.
– அகத்தியர் கலைஞானம் 1200
போகத்தில் இந்திரியம் பொங்கா துய்யா
புத்தியுடன் புகன்றிடுவேன் அறிந்து கொள்வீர்
பாகமுடன் பரிஎன்ற வாசி பூட்டிப்
பக்குவமாய் ஓம்சிவய வசிஎன்றே
ஏகமனம் பேசாது நூறு செப்பி
எகராமல் கும்பித்துப் புணர்வாயானால்
தாகமுறும் மாமயில் ஆசை நீங்கும்
தங்கிவிடும் உன்விந்திந்த விதமுமாமே.
-கோரக்கர்
சந்திரரேகை
இருவர் சொல்வதும் ஒன்றேதான். புணர்ச்சிக்கு முன்னே சிவயவசி என்று நூறு முறை சொல்லுங்கள். அவ்வளவுதான் மேட்டர். என்ன இது மூட நம்பிக்கை என்று உங்களுக்குத் தோன்றும். மனதைக் கட்டுதல். மனத் தம்பனம். கோபப்பட்டாலோ அதீத துக்கத்திலோ நம்முடைய சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் எல்லாம் தாறுமாறாக எகிறுகிறது அல்லவா? மருத்துவர்கள் நம்மை உணர்ச்சிவசப்படாதீர்கள் என்கிறார்கள். மனதை ஒருமுகப்படுத்தினால் இதெல்லாம் கட்டுப்படும். தியானம். சிவ என்று வருகிறதே என்றால், இந்த இடத்தில் ஜீஸஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள். மனம் ஒருமுகப்பட வேண்டும். அவ்வளவுதான். இது உடல் விஞ்ஞானம்தான். ஒரே வார்த்தையை நூறு முறை சொல்லும்போது சுவாசம் சீராகிறது. சுவாசம் சீரானால் எல்லாமே சீராகிறது.
இந்துத்துவவாதிகள் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறார்கள். அதைப் பார்த்து மதச்சார்பற்ற நடுநிலையாளர்கள் கேலி பேசுகின்றனர். நான் இருவரின் பக்கமும் இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இந்துத்துவவாதி பசுவின் சிறுநீரைக் குடிக்கிறான் என்பதற்காக அதை நான் ஏகடியம் பேச மாட்டேன். ஏனென்றால், இந்துத்துவவாதி செய்கிறான் என்பதற்காக நான் எனது ஆதி விஞ்ஞானிகளை நிராகரிக்க முடியாது. இந்த இந்துத்துவவாதிகளுக்காக நான் தன்வந்தரியையும் அகத்தியரையும் போகரையும் கோரக்கரையும் மறுதலிக்க முடியாது. எத்தனை பேர் கிண்டல் செய்தாலும் பசுவின் சிறுநீர் இந்தியாவில் புனித நீர்தான். (கோமியம் என்றால் பசுவின் சிறுநீர் அல்ல; பசுஞ்சாணமே கோமியம்) பசுவின் சிறுநீரையோ அல்லது சாணத்தைக் கலந்த நீரையோ தெளித்துத்தான் நம் முன்னோர் கிருமிகளை விரட்டினார்கள். பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த அந்த வழக்கம் தென்னிந்திய வாழ்க்கை நகரமயமாகி விட்ட போது காணாமல் போனது. தென்னிந்தியாவில் சில ஆதிகுடிகளின் வசிப்பிடங்களைத் தவிர மற்ற எல்லா கிராமங்களுமே நகர கலாச்சாரத்தின் அவல நீட்சியாகவும் கேலிச் சித்திரமாகவும் மாறி விட்டன. அதாவது, நகரத்தின் நச்சுக் கலாச்சாரம் அனைத்தும் கிராமத்தில் உண்டு. ஆனால் நகரத்தின் வசதி வாய்ப்புகள் – மருத்துவமனை, கல்விச்சாலைகள் இன்ன பிற – கிராமத்தில் இல்லை. அதேபோல் பசுவின் சாணம்தான் கிராமத்து வீடுகளில் தரையில் மெழுகப்பட்டது. காய்ந்ததும் அந்தத் தரையில் அமர்ந்தால் குளுமையாக இருக்கும். பசுவின் முடியிலிருந்து சிறுநீர் வரை எல்லாமே ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுகிறது.
’பசுவும் ஆடும் ஐந்தறிவு உடையன. (தொல்காப்பியர்) அப்படியானால் ஆட்டைச் சாப்பிடலாம். மாட்டைச் சாப்பிடக் கூடாதா?’ என்ற கேள்வி எழலாம். அதற்குள் செல்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். யாருடைய உணவுப் பழக்கத்தையும் விமர்சிக்க எனக்கு உரிமை கிடையாது. ஆனால் நான் எதிர்பார்ப்பது என்னவென்றால், மாட்டுக் கறி உண்பவருக்கு மாடு என் குலதெய்வம், மாடு எனக்குத் தாய் என்பது தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான். குறைந்த பட்ச எதிர்பார்ப்பு இவ்வளவுதான். உதாரணமாக, என் எதிரே ஒரு சீக்கியர் அமர்ந்திருக்கிறார். நான் புகைக்க வேண்டும். புகைப்போமா? மாட்டோம்தானே? வேறு இடம் நகர்ந்து போய்த்தானே புகைப்போம்? வேறு இடமே இல்லாவிட்டால் அவரிடம் குறைந்த பட்சம் ஒரு மன்னிப்புக் கேட்டு விட்டுத்தானே புகைப்போம்? இந்தக் குறைந்த பட்சப் புரிந்து கொள்ளலை மட்டுமே நான் பிறரிடமிருந்து எதிர்பார்க்கிறேன். இங்கே நான் என்பது சாரு நிவேதிதா அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆடு மாடு வேறுபாடு. தொல்காப்பியரின் விதிப்படியே பார்த்தாலும் இரண்டு பிராணிகளும் ஒரே பிரிவில் வருகின்றன. இருந்தாலும் மாடு புனிதமானது. ஏன் என்றால், மாடு நம் குலதெய்வம். நம் தாய். இந்த இடத்தில் நீங்கள் ”நம்” என்பதை எடுத்து விட்டு ”என்” என்று போட்டுக் கொள்ளலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை. Wolf Totem நாவலை தயவுசெய்து படித்துப் பாருங்கள். அது அழகான மொழிபெயர்ப்பில் தமிழிலும் வந்துள்ளது. ஓநாய் குலச்சின்னம். அதில் வரும் நாயகனான சீனன் மங்கோலிய பூர்வகுடி மனிதனிடம் ஒரு கேள்வி கேட்கிறான். மான்களைக் கொன்று சாப்பிடும் குரூரமான பிராணியான ஓநாயை எப்படி உங்கள் குலதெய்வம் என்கிறீர்கள்? நீங்கள் ஆவணப் படங்களில் பார்த்திருக்கலாம், ஓநாய் மானை வேட்டையாடி எப்படித் தின்கிறது என்று. ஒரு குழந்தையைக் கொன்று தின்பதைப் போலிருக்கும். அந்த சீனனின் கேள்விக்கு மங்கோலியன் சொல்கிறான்: ”ஓநாய் இல்லாவிட்டால் மங்கோலியா மனிதர்கள் இல்லாத மயானமாக மாறி இருக்கும். ஏனென்றால், மான்கள் மிக அதிகமாக இனப்பெருக்கம் செய்பவை. மங்கோலியாவோ வெறும் பனிப்பாலைகளால் நிரம்பியது. அங்கே அபூர்வமாக முளைக்கும் புல்பூண்டுகளையும் விளைநிலங்களையும் எல்லா மான்களும் காலி செய்து விட்டால் நாங்கள் உணவின்றி செத்துப் போவோம். அல்லது, வேறு நிலத்துக்குப் போய் விட வேண்டியிருக்கும். அதனால் ஓநாய்தான் எங்கள் குலதெய்வம்.” இதையே இந்தியாவில் பொருத்திப் பார்த்தால் மாடுதான் இங்கே குலதெய்வம். இந்திய வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் இருப்பது கோமாதா. பால், வெண்ணெய், நெய் என்று இந்தியர்களின் உணவும் மாட்டை வைத்துத்தான் இருக்கிறது. இன்னும் எல்லாமே.
இந்தத் ஓநாய் குலச்சின்னத்தில் வரும் இன்னொரு இடத்தையும் சொல்ல வேண்டும். கதையின் ஆரம்பத்தில் சீன மாணவன் மங்கோலியாவில் வந்து இறங்கி முதல் முறையாக வெளியே செல்லும்போது ஒரு ஓநாய்க் கூட்டம் அவனைச் சூழ்ந்து கொள்ளும். அப்போது அவன் அந்த ஓநாய்க் கூட்டத்தின் தலைமையாக இருக்கும் ஆஃல்பா ஓநாயிடம் உயிருக்காக மன்றாடுவான். அது ஓர் பிரார்த்தனை. அந்த ஆல்ஃபா ஓநாய் தன் கோஷ்டியை அழைத்துக் கொண்டு ஓடி விடும். நாவலில் கடைசியில் அந்த ஆல்ஃபா ஓநாய்க்கு வயதாகி முதுமை அடைந்த நிலையில் சீன அதிகாரிகள் வந்து அங்கே இருக்கும் ஓநாய்க் கூட்டத்தை அழிப்பதற்காக துப்பாக்கியால் சுடுவார்கள். அப்போது அந்த ஆல்ஃபா ஓநாயைக் காப்பாற்ற முயல்கிறான் சீனன். கடைசியில் அது தற்கொலை செய்து கொள்வதாக படத்தில் வருகிறது. நாவலின் முடிவை மறந்து விட்டேன்.
இதெல்லாம் கதைக்காக எழுதப்பட்ட புருடா அல்ல. நடந்துதான் இருக்க வேண்டும். ஏனென்றால், சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் இந்துவில் தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். சுருக்கமாகச் சொல்கிறேன். வாதநாராயண மரமோ என்னவோ, அவர் வீட்டு மரம் தங்கள் வீட்டுக்குத் தொந்தரவு தருவதாக பக்கத்து வீட்டுக்காரர் அட்டூழியம். இங்கே என் பக்கத்து வீட்டுக்காரர் என் பூனைகளுக்காக என் மீது போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுக்கப்போவதாகச் சொன்னார் இல்லையா, அது போல. கவிராயரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. நாளாக நாளாக பக்கத்து வீட்டுக்காரரின் தொல்லை தாங்க முடியாமல் ஒருநாள் அரிவாளை எடுத்துக் கொண்டு வெட்டப் போகிறார். அந்த நேரம் பார்த்து மின்சார வாரியத்திலிருந்து ஆள். இந்த நாட்டில் மின்வாரியம் கடவுள் மாதிரி இல்லையா? ஓங்கின அரிவாளைப் போட்டு விட்டு அவர்களை கவனிக்கப் போய் விடுகிறார். மரம் வெட்டுவது நின்று போகிறது. மறுநாள் பார்த்தால் அந்த மரம் பட்டுப் போயிருக்கிறது. கவிராயருக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது கவிராயரின் மனைவி சொன்னாராம். அந்த மரம் நம் மீது கோபித்துக் கொண்டு இறந்து போயிற்று. அரிவாளை எடுத்து வெட்டப் போய் விட்டீர்கள் அல்லவா? அதனால்தான்.
அதனால்தான் மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றும் போது அதனோடு பேசிக் கொண்டே கொஞ்சிக் கொண்டே நீர் ஊற்றுவார்கள். அப்படியானால் அதை வெட்டி சாப்பிடுகிறாயே? இல்லை. இங்கே மரத்தை யாரும் கதறக் கதற வெட்டவில்லை. அதன் காய் கனிகளையே நாம் உண்ணுகிறோம்.
ஓ, நாம் ஆடு மாடு பிரச்சினையையே இன்னும் முடிக்கவில்லை அல்லவா? மாடு நம் குடும்பம். நம் தாய். நம் குலதெய்வம். அதற்குப் பெயரெல்லாம் உண்டு. லட்சுமி, காமாட்சி, மீனாட்சி என்று. ஆடு அப்படியல்ல.
மீனைத் துடிக்கத் துடிக்கக் கொன்று தின்றோமே? விரால் மீன் தானே? அந்த மீனை மட்டும்தான் உயிரோடு அடித்துத் தின்கிறோம். அதை நான் நிறுத்தி விட்டேன் கணேஷ். அப்படித் துடிக்கத் துடிக்க அடித்துக் கொன்று சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் மற்ற மீன்களின் கதை வேறு. இரண்டு அறிவுப் பிராணி. வலையிலிருந்து எடுத்ததும் அது வெறும் உடல். நாம் சாப்பிடுவது வெறும் உடலை. ஆனால் மாடும் நாயும் பூனையும் அப்படி அல்ல. அவை நம்மோடு பேசுகின்றன. உறவாடுகின்றன. நம்மில் அவை அடக்கம். நம் குடும்பம். நம் குழந்தைகள். எனக்கு நாயைக் கொன்று சாப்பிடுவது மனிதனைக் கொன்று சாப்பிடுவது போலத்தான் தோன்றுகிறது. இரண்டுக்கும் வித்தியாசமே தெரியவில்லை. ஆடு என்னோடு பேசுவதில்லை. நாய் என்னோடு பேசுகிறது. மாடு என்னோடு பேசுகிறது. யானை என்னோடு பேசுகிறது. மனிதனோடு பேசுகின்ற, பேசக் கூடிய பிராணிகளையாவது மனிதன் விட்டு விடலாமே என்பது என் தாழ்மையான கருத்து.
இன்னும் கணேஷின் கேள்விகளுக்குள் நுழையவில்லை. இதோ வருகிறேன்.
***
பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai