கணேஷுக்கான பதிலை எழுத இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் பத்தரை ஆகி விட்டது. தூக்கம் கண்களைச் சுழற்றுகிறது. நாளை மதியத்துக்குள் இதன் தொடர்ச்சியை எழுதி விடுவேன். படியுங்கள்:
மாட்டு இறைச்சியையோ பூனை நாய் உண்பவர்களையோ நான் கொடூரமானவர்களாக நினைக்கவில்லை. எப்படி நாயை உண்கிறார்கள் என்ற பதற்றத்தையே நான் அப்படி வெளிப்படுத்தினேன். மீனும் நாயும் ஒன்று அல்ல. மீனும் மாடும் ஒன்று அல்ல. மீனும் யானையும் ஒன்று அல்ல. மீனும் குதிரையும் ஒன்று அல்ல. மீனும் ஒட்டகமும் ஒன்று அல்ல. இதை நான் எக்ஸைலில் விளக்கியிருக்கிறேன்.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி
வதுவே அதனொடு நாவே
மூன்றறி
வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி
வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி
வதுவே அவற்றொடு செவியே
ஆறறி
வதுவே அவற்றொடு மனமே
நேரிதின்
உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே…
ஓரறிவு உயிர்கள் – உடம்பினாலே உணரும் உயிர்கள் – தாவரங்கள்
ஈரறிவு உயிர்கள் – உடம்பு மற்றும் வாய் – நத்தை, சங்கு, சிப்பி, மீன்.
மூன்றறிவு உயிர்கள் – உடம்பு, வாய், மூக்கினால் அறியும் உயிர்கள் – எறும்பு, அட்டை போன்றன.
நான்கறிவு – உடம்பு, வாய், மூக்கு, கண் – நண்டு, வண்டு போன்றன.
ஐந்தறிவு – உடம்பு, வாய், மூக்கு, கண், செவி – மாடு, யானை, ஆ, நாய் போன்றன.
ஆறறிவு – மேற்கண்ட ஐந்தோடு மனமும் சேர்கிறது.
அடுத்த பாடல்:
புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே…
நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே…
சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே…
நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே…
மாவும்
புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே…
மக்கள்
தாமே
ஆறறி
வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே…
தொல்காப்பியம் பொருள் அதிகாரத்தில் உள்ள இந்தப் பாடல்களை எக்ஸைல் நாவலில் கொடுத்து விளக்கமும் எழுதியிருக்கிறேன். ஆனாலும் தமிழ்ச் சூழலில் சொன்னதையே சொல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் மீண்டும் சொல்கிறேன். இது கட்டுரை என்பதால் சற்றே விளக்கமாக. புல்லும் மரனும் ஓர் அறிவு ஜீவிகள். புல் என்றால் தமது வித்துக்களில் ஒரு வித்திலைக் கொண்ட தாவரம். உதாரணம்: நெல், கோதுமை, தென்னை. வித்திலை என்றால், விதை இலை. ஆங்கிலத்தில் monocotyledon. மோனோகோட்டிலிடான். மோனோ என்றால் ஒன்று. Cotyledon என்றால் விதையிலை. அதாவது, ஒரு விதையைத் தன் வித்தில் வைத்திருக்கும் தாவரங்கள். மரன் என்றால், Dycotyledon. டை என்றால் இரண்டு. ஆக, இரு வித்திலைத் தாவரங்கள். அவை, மா, பலா, வேம்பு, தேக்கு போன்றன.
முதலில் குறிப்பிட்ட பாடலில் மிகத் தெளிவாக பரிணாம வளர்ச்சி பற்றிக் கூறுகிறார் தொல்காப்பியர். ஆனால் இங்கிலீஷ் அடிமைகளான நாம் பரிணாம வளர்ச்சி பற்றிக் கண்டு பிடித்தவர் சார்ல்ஸ் டார்வின் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இல்லை, தொல்காப்பியர் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. கடைசி வரியைப் பாருங்கள். நான் சொல்லவில்லை. என் முன்னோர் சொன்னார்கள் என்கிறார். நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. அவர்கள் நெறிப்படுத்தியதையே நான் இங்கே சொல்கிறேன். இது தொல்காப்பியர். அடுத்த பாடல்களுக்கு வருவோம் அங்கே இன்னின்ன உயிர்கள் இன்னின்ன குணங்கள் என்று வகுக்கிறார்.
”அது சரி, புல்லும் மரனும் ஓரறிவினவே. சரி. ஆனால் இதுதான் மோனோகோட்டிலிடான், டைகோட்டிலிடான் என்ற தாவரவியல் உண்மையை நீயேதானே இந்தப் புல்லும் மரனும்மில் ஏற்றி விட்டு ஜல்லியடிக்கிறாய்?” என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை. இதையும் தொல்காப்பியரே வேறொரு பாடலில் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று மிகத் தெளிவாக விளக்குகிறார்.
புறக்காழனவே புல் என மொழிப
அகக்காழனவே மரனென மொழிப
இங்கேயும் கவனியுங்கள், தொல்காப்பியர் “நான் சொல்லவில்லை; என் முன்னோர் மொழிவர்” என்கிறார். புறக்காழ், அகக்காழ் என்றால் என்ன? தென்னை பனை போன்றவை புறக்காழ் உள்ள புற்கள். அதாவது, வெட்டப்பட்ட தென்னை பனையின் உள்ளே சொதியாகவும், வெளியே வைரம் பாய்ந்தும் இருக்கும். இது புறக்காழ். மேலும் புறக்காழ் தாவரங்களுக்குக் கிளை இருக்காது. விதைகளும் இரண்டாகப் பிளவுபட்டிருக்காது. இவை புல்லினம் என்று அழைக்கப்பட்டன. தென்னை, பனை, நெல், கரும்பு, மூங்கில் எல்லாம் புல்லினம். அகக்காழ் தாவரங்கள் மரம் என அழைக்கப்பட்டன. விதை இரண்டாகப் பிளவுபட்டிருக்கும். கிளைகள் இருக்கும். உதாரணம்: மா, பலா, புளி, வேம்பு, இலுப்பை, புன்னை, வாகை, தேக்கு. இதையெல்லாம் இன்றைய தாவரவியலில் சமீபத்தில் கண்டுபிடித்ததாக எண்ணிப் படிக்கிறார்கள். இங்கே 3000 ஆண்டுகளுக்கும் முன்னே அறிவியல்ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பாடலில் பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே என்று வருகிறது. இந்தக் கிளையில் இப்போது சொல்லப்பட்ட இரண்டோடு கூட இன்னும் உள்ளன என்று பொருள். ஆனால் மனிதனைப் போல் என்ன உள்ளது என்று முதலில் மிகவும் குழம்பினேன். பிறகு உரையாசிரியர் அது அரக்கர், தேவர் என்று விளக்கியிருக்கிறார்.
இன்னொரு விஷயம். சங்கப் பாடல்களில் ஏதோ ஒன்றின் உரையில் படித்தேன். கூரான இலையுள்ள மரங்கள் பிராண வாயுவை அதிகம் விடும். அதனால்தான் கூரான இலைகளைக் கொண்ட வேப்பமரம், மாமரம் போன்ற மரங்களை வீட்டில் வைத்தார்கள். மொழுக்கையான இலைகளை உடைய புளியமரம் போன்றவற்றை சாலைகளில் வைத்தார்கள். இத்தனை பாகுபாடுகள் இருக்கும்போது நாம் ”மாட்டுக்கும் உயிர் இருக்கு, மீனுக்கும் உயிர் இருக்கு. ரெண்டையும் அடிச்சி தின்னா என்னா தப்பு?” எனக் கேட்கிறோம்.
***