அய்யங்கார்களின் மரபணு – பொதுவாகவே பிராமணர்களின் மரபணு பற்றி எழுதினேன். அதில் இன்னும் நிறைய பாக்கி உள்ளது. ஸ்ரீரங்கத்தில் பார்த்திருக்கிறேன். அய்யங்கார் பையனும் அ-பிராமணப் பையன்களும் ஒன்றாகச் சேர்ந்து குடித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டு கிடப்பான்கள். கல்லூரி மாணவர்கள். தேர்வுகள் வரும். அ-பிராமணப் பையன்கள் தேர்வில் தோல்வி அடைந்து விடுவான்கள். அய்யங்கார் பையன் மட்டும் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டு வாங்கித் தேர்ச்சி அடைவான். இத்தனை எடுத்தும் மெடிக்கல் கிடைக்கவில்லை; இட ஒதுக்கீடே கூடாது என்றும் புலம்புவான். அதன் பிறகு வாழ்நாள் பூராவும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவே வாதம் பண்ணிக் கொண்டிருப்பான். மத்திய வயதில் தீவிர இந்துத்துவாவாகவோ தீவிர இடதுசாரியாகவோ தீவிர பெரியாரிஸ்டாகவோ மாறுவான். அப்படி ஒருசில அய்யங்கார் பையன்களை எனக்குத் தெரியும். இதையெல்லாம் வெறுப்பினால் சொல்லவில்லை. பொறாமையினால் சொல்கிறேன். இந்த அய்யங்கார் மரபணுவில் ஏதாவது புரட்சி கிரட்சி பண்ணி நம்முடைய மரபணுவில் கலந்து ஒட்டு மாங்காய் மாதிரி பண்ணினால்தான் நமக்கும் ஏதாவது விடிவு வருமா என்று கூட நான் யோசித்ததுண்டு. சும்மா விளையாட்டுக்கு சொல்லவில்லை. கொஞ்சம் பக்கங்களைப் பின்னால் தள்ளினால் ரோகு மீனை வெறுமனே உச்சரிக்க என்ன பாடுபட்டார் நம் ஆள் என்று எழுதியிருக்கிறேன். அதேபோல் ஜெகா ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார், பாருங்கள்.
தம்பி கடைக்கு போவோமா?
அண்ணே நீங்க இருங்கண்ணே நா போய் வாங்கிட்டு வர்ரே.
ரைட்டு, தம்பி parsley ந்னு ஒரு பாக்கெட் இருக்கும், coriander ந்னு ஒரு பாக்கெட் இருக்கும். ரெண்டும் ஒரே மாதிரி இருக்கும்ன்றதால இத சொல்றே. Corianderந்னு இருக்குற பாக்கெட்ட வாங்கிக்க. அந்த ரேக்குலயே மேல துருவுன தேங்கா இருக்கும் அதையும் வாங்கிக்க.
இடைல நாலஞ்சு கால்.
ரிசல்ட்: மல்லிப் பொடி பாக்கெட்டு, முழு தேங்கா குடுமியுடன்.
எங்க புள்ளிங்கோ எல்லா பயங்கரோம்.
பொதுவாக விபரம் தெரிந்த பிராமணர்கள் தஞ்சாவூர்ப் பக்கம் பெண்ணோ மாப்பிள்ளையோ எடுக்க மாட்டார்கள், கொலைகாரப் பேர்வழிகள் என்று. பேச்சிலேயே எதிராளி நாண்டுகிட்டு சாகணும். அப்படி ஒரு பேச்சு. அப்படி ஒரு குயுக்தி. அப்படி ஒரு தந்திரம். ஆனால் தஞ்சாவூர் அ-பிராமணன் ஒரு அசடு. மேலே பார்க்கிறீர்கள் அல்லவா, அதேதான். இல்லையென்றாலும் பிரபு கங்காதரன், சாரு நிவேதிதா போன்றவர்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
எனக்கு நெருங்கிய ஒரு நண்பர். அவர் வாழ்ந்த இடம் கொஞ்சம் விளிம்புநிலை மனிதர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. நண்பருக்கு சேர்வார் தோஷத்தினால் படிப்பு வரவில்லை. பள்ளி இறுதியில் பார்டரில் பாஸ். மேலே படிக்கவில்லை. ஆனால் ஒரு சர்வதேச வங்கியில் வைஸ் பிரஸிடெண்ட்டாக இருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்னால் துபாயில் 40000 திர்ஹாம் ஊதியம் வாங்கியவர். பட்டப் படிப்பு இல்லாமல் அந்தப் பதவி கிடைப்பதில் தடங்கல் ஏற்படும் போல் தெரிந்ததால் முன்கூட்டியே பட்டப் படிப்பையும் தபாலில் முடித்து விட்டார். தேர்வுகளுக்கும் படிக்கவில்லை. சும்மா காண்டாக்ட் கிளாஸில் கேட்டவைதான். என்ன சமூகம் என்று சொல்லத் தேவையில்லை. அய்யர்.
என் தம்பி. சொந்தத் தம்பி. கடைசிப் பையன். படிப்பு வரவில்லை. அ-பிராமணர்களுக்குப் படிப்பு வரவில்லை என்றால், திருடலாம். கூலி வேலை செய்யலாம். அரசியலில் சேர்ந்து சொத்து சேர்க்கலாம். குடிகாரன் ஆகலாம். தற்கொலை செய்து கொள்ளலாம். அவன் கூலி வேலையைத் தேர்ந்தெடுத்தான். வீட்டுக்கு மின்சார வேலை செய்வார்கள் இல்லையா, அம்மாதிரி வேலைகளுக்கு எடுபிடி. மேலே ஏறி வேலை செய்ய வேண்டும். பிறகு கொத்தனார் வேலை. இப்படிப் பல வேலைகள். அவன் இப்படி சிரமப்படுவதைப் பார்த்து விட்டு கோழிப் பண்ணை வைக்க உதவி செய்தேன். ஒரே ஆண்டில் கோழிகள் அனைத்தும் சீக்கு வந்து செத்து விட்டன. ஒரே கடன். பிறகு நைனா அவனுக்கு என்னென்னவோ உதவிகள் செய்தார்கள். ஒன்றும் விளங்கவில்லை. ஆள் சினிமா ஆக்டர் மாதிரி இருப்பான். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. கோபமே வராது. தங்கம் என்றால் அப்படித் தங்கம். அதைப் பார்த்து ஒரு பணக்கார வீட்டில் பெண் கொடுக்க முன்வந்தார்கள். அவர்களின் சொத்து பத்துகளைப் பார்த்துக் கொண்டு பெண்ணையும் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டோடு மாப்பிள்ளை எல்லாம் இல்லை. தனிக் குடித்தனமே இருந்து கொள்ளட்டும். ஆள் மசியவில்லை. ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தான். ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையோடு இருந்தாள் பெண். அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு ஒரு வளர்ப்பு மகள் இருந்தாள். இதிலெல்லாம் தப்பு எதுவும் இல்லை. புரட்சி செய்ய வேண்டியதுதானே? ஆனால் என்ன பிரச்சினை என்றால், இவனும் பிச்சைக்காரன். அவளும் பிச்சைக்காரி. படிப்பும் இல்லை. சமைக்கவும் தெரியாது. இவன் நன்றாக சமைப்பான். குழந்தையும் பெற்றுக் கொள்ள இயலாது. பார்க்கவும் அச்சு அசல் கமலா காமேஷ் மாதிரி இருப்பாள். அது சரி, ஷேக்ஸ்பியர்தான் அழகாகச் சொல்லியிருக்கிறாரே, Beauty is in the eye of the beholder என்று. எல்லாம் சரி, கண்ணில்லாத ஒருவன் வாய் பேசாத காது கேளாத ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்பதே என் சந்தேகம். படிப்புதான் வரவில்லை, வாழ்க்கையில் ஒரு காரியத்தைக் கூடவா ஒழுங்காகச் செய்யக் கூடாது? நானும் செய்ய மாட்டேன். சொதப்புவேன் தான். ஆனால் ஒருமுறை அப்படி ஆகி விட்டால் உஷாராகி அதற்குப் பிறகு அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்காமல் எதுவுமே செய்ய மாட்டேன். அவந்திகாவைத் திருமணம் செய்து கொள்ளும் போது கூட, ஏற்கனவே ஒரு முறை அடி வாங்கியிருக்கிறோமே, இன்னொரு முறை உயர்குடியில் போய் மாட்டலாமா என்று அவந்திகாவை அழைத்துக் கொண்டு போய் என் நண்பரிடம்தான் கேட்டேன். வாழ்க்கையில் ரொம்பவும் முன்னேறிய அதிபுத்திசாலியான ஒரு அய்யர் அவர். தம்பி கதை முடிவும் சோகமாகவே முடிந்தது. நாற்பத்தைந்து வயதிலேயே புற்றுநோய் வந்து குரூரமான முறையில் இறந்து போனான். சென்ற அத்தியாயத்தில் என் சொந்தக்காரர்கள் புழலில் இருக்கிறார்கள் என்று வேடிக்கையாகச் சொன்னேன். புழலில் இருந்தால் கூடப் பரவாயில்லை. உயிரோடு இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். எல்லாம் பொட்டு பொட்டென்று நாற்பது வயதிலேயே ஹார்ட் அட்டாக் வந்து போய்ச் சேர்ந்து விட்டார்கள். எல்லாம் குடி.
ஏன் நம் சீனியையே எடுத்துக் கொள்ளுங்கள். ஆதி திராவிடர் நலப்பள்ளியில் படித்தவர். இப்போது எப்படி இருக்கிறார்? அவரிடம் நான் அடிக்கடி சொல்வேன். நீங்கள் மட்டும் ஜெயலலிதாவிடம் இருந்திருந்தால் ஜெ. பிரதம மந்திரி ஆகியிருப்பார் என்று.
அந்த மரபணுவில் ஏதோ விஷயம் இருக்கிறது. அதற்காக வெஜ் சாப்பிடு, பூண்டு வெங்காயம் சாப்பிடாதே என்று சொன்னால் உதைப்பேன். ஆனால் இப்போதைய பிராமண சமூகம் திராவிடத்தைப் பார்த்து இதோ நானும் வருகிறேன் உன் கூட என்று சொல்லி போட்டி போட்டுக் கொண்டு புழுதியில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். எங்களையா படிக்கிறோம் என்று சொன்னாய்? இதோ பார் என்று சரஸ்வதியைத் தம் குலத்திலிருந்தே விரட்டி விட்டு விட்டு லட்சுமியே சரணம் என்று விழுந்து விட்டார்கள். நாலு வீடா? போதாது. எட்டு வீடு கட்டு. டாலரைக் குவி. ஒரு ஆள். கலிஃபோர்னியாவில் தனி வில்லாவில் இருக்க வேண்டிய அளவுக்கு சம்பளம். ஒண்டுக் குடித்தனம் மாதிரி டப்பா அபார்ட்மெண்ட்டில் வாழ்ந்தார். கிடைக்கிற டாலரெல்லாம் இங்கே தி. நகரில் வீடுகளாக மாறிக் கொண்டிருந்தன. வில்லாவில் இருந்திருந்தால் கொரோனா பயம் இல்லாமல் இருந்திருக்கலாம். இப்போது நெருக்கமான அபார்ட்மெண்ட்டில் ஒரே கதவை எல்லோரும் திறக்கிறார்கள். பயம். உயிருக்கே பயம். பிராமணனின் வாழ்க்கை இப்படிப் போய் விட்டது.
இன்னொன்று சொல்கிறேன். பிராமணன் எப்படி ஆகி விட்டான் என்பதற்கு ஒரு உதாரணம். இது காயத்ரி சொன்னது. காயத்ரி வீட்டில் நோ கார்லிக், நோ ஆனியன். முதல் தளம். கீழே வீட்டின் உரிமையாளர். பிராமணர். ஒருநாள் பிறந்து சில தினங்களே ஆன, வழி தவறி வந்து விட்ட ஒரு பூனைக்குட்டிக்குப் பால் கொடுத்திருக்கிறாள். உடனே வீட்டுக்கார மாமா, முகத்தைச் சுளித்தபடி, “இதுக்குப் பேசாமல் பூண்டு வெங்காயமே சாப்பிட்டுண்டு இருக்கலாம்” என்றாராம். ஈரமற்றுப் போய் விட்டார்கள். அறம் தாழ்ந்து விட்டது. அறம் வீழ முதல் அடி எடுத்து வைத்தவன் பிராமணன்.
இதைச் சொல்லும் போது சில நல்ல பிராமண இயல்புகளையும் சொல்ல வேண்டும். சமீபத்தில் ஒரு மலையாளப் படத்தில் நாயின் பெயர் பிரபாகரன் என்று வந்தது குறித்து நடந்த சர்ச்சை. அதே படத்தில் ஒரு தமிழ் அய்யர் அவர் வீட்டுக்குக் குடி வந்த மலையாளியிடம் பீஃப் கொடு என்று கேட்பது பற்றி எந்த பிராமணனும் கம்பைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு வரவில்லை என்பதை கவனியுங்கள். அவன் தன் முன்னேற்றத்தைப் பார்க்கிறான். ஆனால் மற்றவன்களோ எதற்கெடுத்தாலும் சண்டை, சண்டியர்தனம். அதுவும் உண்மைத்தன்மையோடு இருந்தாலும் பரவாயில்லை. பொய்ப் போராட்டம். Fake. ஈழத்தில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது இத்தனை வீரம் இவர்களுக்குப் பொங்கவில்லையே? இப்போது மட்டும் பொங்குகிறதே? காரணம், சும்மா வெற்றுச் சவடால். இப்படிப் பண்ணிப் பண்ணியே இவர்கள் உருப்படாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மாதிரி சூழலிலிருந்துதான் நான் வந்தேன். என் சண்டியர் மாமாக்களையும் படித்துப் பெரிய ஆளாகி விட்ட மாமாவையும் பார்த்து படிப்பே நம்மை விடுதலை செய்யும் என்று உணர்ந்தேன்.