41 பற்றி அராத்து எழுதியது:
சாரு தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளைப் பற்றியும் அவர்களின் கொண்டாட்டமான கலாச்சாரத்தைப் பற்றியும், அவர்களின் இலக்கியம், இசை பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கிறார். இங்கே இருக்கும் இந்திய இஸ்லாமியர்களுக்கே இதெல்லாம் விசித்திரமாக இருக்கும். இங்கே இந்தியாவில் கட்டுப்பெட்டியான இந்துக்களுக்கு நடுவே வாழ்வதால் இந்திய முஸ்லீம்கள் இறுக்கமாக வாழ்வதைத் தங்கள் கலாச்சாரமாக ஆக்கிக் கொண்டார்கள் என்று தோன்றுகிறது.
***
என் எழுத்து வாழ்க்கையில் பூச்சி தொடரைப் போல் இதுவரை எதிர்வினைகள் வந்ததில்லை. நிறைய வசை கடிதங்கள். ஆனால் இந்த வசை கடிதங்களை வசை என்று சொல்ல முடியாது. கெட்ட வார்த்தை கடிதங்கள் அல்ல அவை. கோட்பாட்டு ரீதியாக என்னைத் தாக்குபவை. என்னைத் தவறாகப் புரிந்து கொண்டவை. ஆனால் தத்துவார்த்த நோக்கில் வரும் மற்ற பல கடிதங்களைப் பிரசுரித்து அவை பற்றிய நீண்ட விவாதங்களைத் தொடரலாம். ஆனால் நேரமில்லை. நேற்றைய ஒரு கட்டுரை சுமார் ஆயிரம் வார்த்தைகள்தான் இருந்தன. ஆனால் அதை நாள் பூராவும் எழுதிக் கொண்டிருந்தேன். கம்யு பற்றியும் அல்ஜீரியா பற்றியும் எழுதிய போது அவரது அல்ஜீரியன் க்ரானிகிள்ஸின் சில கட்டுரைகளைப் படிக்க வேண்டியிருந்தது. முழுப் புத்தகத்தையுமே படித்து விட்டுத்தான் எழுத நினைத்தேன். அப்படிச் செய்தால் அது ஆய்வுக் கட்டுரையாகப் போய் விடும். இந்தப் பூச்சியின் ஓட்டம் போய் விடும். அதனால்தான் குறிப்பிட்டேன், அந்தக் காலத்துப் பாட்டுப் புத்தகத்தில் வரும் கதைச் சுருக்கம் மாதிரிதான் இந்தத் தொடர். எல்லாவற்றைப் பற்றியும் ஒவ்வொரு வரிதான்.
பின்வரும் கடிதம் ஏப்ரல் 25 அன்று எழுதியது. பூச்சி 35 குறித்து.
அப்பா,
பூச்சி 35 படித்தேன். அற்புதம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ‘க்ரனாடா’ கதை எகிப்திய நாவலாசிரியர் Radwa Ashour எழுதியது என்று இணையத்தின் வழியாகத் தெரிந்துகொண்டேன். அந்த நாவலை வாசிக்க ஆர்வமாக இருக்கிறது. கூடிய விரைவில் வாசித்துவிடுவேன். இந்தக் கதையை முன் வைத்து சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். (இதை நாம் பேசும்போது பகிர்ந்துகொள்ள ஆசைதான்; ஆனால் நீங்கள் அழைக்கும்போது பேச வரவில்லை – தமிழ்நாட்டுப் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் விஜய்யோ அஜீத்தோ தன்னுடைய ரசிகனுக்கு போன் செய்து பேசினால் எப்படி இருக்குமோ அதே மனநிலையில் இருப்பேன்.) அதனால்தான் பேசும்போது பேசாமல் இப்போது எழுதுகிறேன்.
அந்தக் கதையின் பின் இருக்கும் வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கிறேன். Inquisition இந்தக் கதை நிகழும் நூற்றாண்டில் தலைவிரித்தாடியது. ‘நல்ல’ காரணத்திற்காகத்தான் Inquisition ஆரம்பமானது. (‘நல்ல’ என்று குறிப்பிடக் காரணம் கொஞ்ச நேரத்தில் சொல்கிறேன்.) கிறிஸ்துவத்தின் அடிப்படையான போதனைகள் தவறான போதனைகளால் சவாலுக்குள்ளானபோது தொமினிக்கன் சபை துறவிகள் சரியான போதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏற்படுத்தப்பட்டதுதான் Inquisition. (சரியான தமிழ் வார்த்தை அகப்படவில்லை). இதற்கு முன் நடந்த சிலுவைப் போர்கள் ஏற்படுத்தாத தாக்கத்தை தொமினிக்க சபையின் அறிவு சார்ந்த போதனைகள் நிகழ்த்தின. அதேபோல இயேசு சபை வேறொரு பாதையில் மதத்தை போதித்தது. தொமினிக்க சபை ப்ளேட்டோவின் தத்துவங்களால் கவரப்பட்ட அகஸ்டினின் வழியைப் பின்பற்றி வந்தது. அந்த சபையின் முக்கியமான ஒரு துறவி தாமஸ் அக்வினாஸ். அக்வினாஸ் அரிஸ்டாடிலின் தத்துவங்களால் கவரப்பட்டவர். கதையின் ஆன்மா என்றும் நான் நினைக்கும் இடத்தில் இந்த இருவரின் பெயர்களும் வருகிறது.
//மனித விந்துவைச் சேகரித்து அதை புருஷர்களின் சரீரத்தில் வைத்துப் பாதுகாக்கும் சைத்தான்கள் பற்றி ஞானி அகஸ்டின் தனது புனித நூலின் மூன்றாம் பாகத்தில் சொல்லுகிறார். மேலும், மிகப்பெரும் அறிஞரான Walafrid Strabo-வும் யாத்ராகமம் 7க்கான வியாக்கியானத்தில் பூமியெங்கும் சுற்றியலையும் சைத்தான்கள் எல்லாவிதமான வித்துக்களையும் சேகரித்து, அவற்றின் மூலம் அசாதாரணமான ஜீவன்களை உருவாக்குவதாகக் குறிப்பிடுகிறார்.//
(மிகப்பெரும் அறிஞர்… அதற்குப் பிறகு வரும் பெயர் தாமஸ் அக்வினாஸ் பெயராகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அகஸ்டினின் எந்தப் புத்தகத்தில் இந்தக் குறிப்பு வருகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நாவலில் எதுவும் குறிப்பிட்ட நூலின் பெயர் வருகிறதா என்பதை பிறகு சொல்லுங்கள்.)
கிறிஸ்துவ போதனைகளைக் காப்பற்ற – அதாவது யாரும் தவறான போதனைகளைப் பின்பற்றினால் அவர்களுக்கு சரியான போதனைகளை வழங்க ஏற்படுத்தப்பட்ட Inquisition, பிறகு தவறான புரிதல் உள்ளவர்களை தண்டிக்க ஆரம்பித்தது. தண்டனை வழங்குவதில் ருசி கண்டவர்கள் அதையே முழுநேரமாக செய்ய ஆரம்பித்தார்கள். எளிய மனிதர்களின் நம்பிக்கைகள் ஒடுக்கப்பட்டன. இப்படியாகk கொலை செய்யபட்டவள்தான் ஜோன் ஆஃப் ஆர்க். பிறகு தாங்கள் இழைத்த தவறை உணர்ந்து திருச்சபை ஜோனுக்கு புனிதர் பட்டமளித்து கௌரவித்தது. The Name of the Rose நாவலிலும் ஒரு Inquisition வரும். அதைத் திரைப்படமாகத்தான் பார்த்தேன். படத்தில் தண்டிக்கும் தொமினிக்க துறவியாக நடித்தது ஆப்ரஹாம் முரே. (அமெதேயஸ் படத்தில் சலியேரியாக நடித்தவர்).
‘நல்ல’ என்று குறிப்பிட்டதன் காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். கதையின் ஆன்மா என்று நான் கருதும் பகுதி இதுதான்: புன்னகைத்தார் நீதிபதி; அவர் எப்போதுமே தனது உதவியாளர்களிடம் பரிவுடனும் கருணையுடனும்தான் நடந்து கொள்வார். ஏனென்றால் அவருக்கு நன்கு தெரியும்: திருச்சபையின் மீது அவர்களுக்கு இருக்கும் அளவு கடந்த நம்பிக்கையே அந்தக் கோபத்தின் காரணம் என்று.
“என் அருமை அலோன்ஸோ, சைத்தான் என்பது ஆவி ரூபத்தில் இருப்பது. அதற்கு உடம்பு கிடையாது. அதனால் ஒரு ஜீவனை உண்டு பண்ண முடியாது.”
“ஆனால் தந்தையே! சைத்தான் இந்தப் பூமியின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு அலைந்து உயிரின் வித்துக்களைத் தேடியெடுத்து புருஷர்களின் வித்துகள் உட்பட தான் விரும்பும் தீய உயிர்களை உருவாக்குகிறதே? மனித விந்துவைச் சேகரித்து அதைப் புருஷர்களின் சரீரத்தில் வைத்துப் பாதுகாக்கும் சைத்தான்கள் பற்றி ஞானி அகஸ்டின் தனது புனித நூலின் மூன்றாம் பாகத்தில் சொல்லுகிறார். மேலும், மிகப்பெரும் அறிஞரான Walafrid Strabo-வும் யாத்ராகமம் 7க்கான வியாக்கியானத்தில் பூமியெங்கும் சுற்றியலையும் சைத்தான்கள் எல்லாவிதமான வித்துக்களையும் சேகரித்து, அவற்றின் மூலம் அசாதாரணமான ஜீவன்களை உருவாக்குவதாகக் குறிப்பிடுகிறார். அதே வியாக்கியானத்தில் ராட்சஸப் பிறவிகள் என்பவை காமாந்தகரமான சைத்தான்கள் ஸ்த்ரீகளுடன் வெட்கங் கெட்டு சம்போகம் செய்வதால் ஜனிப்பவை என்ற குறிப்பும் இடம்பெறுகிறது.”
மிகெல் அகிலாரின் ஆழ்ந்த வாசிப்பும், நீண்ட கால அனுபவமும் அவரது குரலில் ஒரு சுய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தன. அவருடைய வாதம் மிகுந்த நிதானமாகவும் தெளிவாகவும் அமைந்திருந்தது.
“அருள்தந்தை அந்தோனியோ கூறியதுபோல் சைத்தான் ஒரு ஆவி. குழந்தையை உருவாக்குவதென்பது ஸ்தூல சரீரம் ஒன்றின் குணாம்சம் சைத்தான்கள் எவ்வளவு வலிமையுடைவையாக இருந்தாலும், அவைகளின் திறமை எவ்வளவு விசேஷமானதாக இருந்தாலும், அவைகள் பீடித்திருக்கும் சரீரத்தின் மூலமாக அவைகளால் ஒரு ஜீவனை உருவாக்க முடியாது. இந்தப் பூமியில் அவைகளால் வியாதிகளைப் பரப்ப முடியும். புயல்களை உருவாக்க முடியும். புருஷர்களை நபும்ஸகர்களாக மாற்ற முடியும். அவைகள் எங்கே சென்றாலும் தங்களோடு நரகத்தையும் உடன் எடுத்துச் செல்ல முடியும். தங்களை எதிர்க்காத சரீரத்தைப் பிடித்துக் கொள்ள முடியும். மனிதர்களைத் துன்புறுத்தவும் அழிக்கவும் முடியும். சைத்தான்களால் இது எல்லாம் முடியும். சைத்தான்காளால் இது எல்லாம் முடியும். ஆனால் ஒரே ஒரு உயிருள்ள ஜூவனைக்கூட மனித சரீரத்தில் அவைகளால் உருவாக்க முடியாது.
“அப்படியானால் அந்தக் குழந்தை சைத்தானுடையது இல்லை?”
அலோன்ரஸோவின் குரல் பரிதாபமாக இருந்தது.
அதற்குள் அருள் தந்தை அகாபிதா பதில் சொன்னார். “இல்லை, அந்தக் குழந்தை சைத்தானுடையது அல்ல. அது வேறொரு மனிதனுடையது. அவனிடமிருந்த விந்து ஒரு சைத்தானால் நேரடியாகவோ அல்லது வேறொரு சைத்தான் மூலமாகவோ கையகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் சைத்தான்கள் பலவிதமானவை. இந்த வழக்கில் அந்தக் குழந்தை சைத்தானின் சக்தியால் உருவாகவில்லை. ஆனால் அதில் சைத்தானின் பங்கு மறைமுகமாக உள்ளது. நமக்கோ, குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்ணுக்கோ தெரியாத ஒரு மனிதனின் மூலமாக சைத்தான் அந்தக் காரியத்தை நடத்தியுள்ளது.”
ஏன் இதை கதையின் ஆன்மா என்று சொல்கிறேன் என்றால் அறிவு சார்ந்த உரையாடல் இதில் இருக்கும். தர்க்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தன்னை நிறுவிக்கொள்ளும் அதிகாரம் வெளிப்படுகிறது. தரவுகள் முக்கியப்படுத்தப்படுகின்றன. ஒரு பெண்ணையும் அவளது குழந்தையையும் தண்டிக்க நியாயம் கற்பிக்கப்படுகிறது. ஒரு மதம் தன்னை நிறுவிக்கொள்ள இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறது. ஆனால் நீங்கள் சொல்வது போல இலக்கியங்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை. சூஃபிகள், சித்தர்களின் ஆன்மிகத்தை இலக்கிய ஞானம் இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது என்று நினைக்கிறேன். தாமஸ் அக்வினாஸ் பற்றிச் சொல்லியிருந்தேன் அல்லவா? எனக்கு தாமஸ் அக்வினாஸ் எழுதிய Summa Theologica (அநேகமாக உலகில் எழுதப்பட்ட மிகப் பெரிய புத்தகம் இதுவாகதான் இருக்கும். ஜெயமோகனின் ‘வெண்முரசு’ அந்த சாதனையை முறியடிக்கலாம்) படிப்பதற்கு மிகவும் சலிப்பாக இருக்கும். Metaphysics படிக்காமல் அந்ப் புத்தகத்தைப் புரிந்துகொள்ள முடியாது. கடவுளை முழுமையாகப் புரிந்துகொள்ள எழுதப்பட்ட புத்தகம். தன் வாழ்நாளின் இறுதியில் தான் எழுதிய அந்தப் பொக்கிஷத்தை நெருப்பில் தூக்கிப்போட முனைந்தார். பின்னர் அது காப்பற்றப்பட்டு அச்சானது. கடவுளைப் புரிந்து கொள்ள எவ்வளவு எழுதினாலும் எல்லாம் குப்பைதான் என்ற ஞானத்தை அடைகிறார். எனக்கு பேரறிஞர் தாமஸை விட பின்னாளைய தாமஸைத்தான் பிடிக்கும். நற்கருணை கத்தோலிக்கக் கிறிஸ்துவத்தின் ஆணிவேர். அதைப் புரிந்து கொள்வது மிகவும் சிரமம். தாமஸ் பற்பல பக்கங்கள் அதைக் குறித்து எழுதியுள்ளார். ஆனால் அதை விட சிறந்ததாக நான் கருதுவது அவர் எழுதிய ஒரு கவிதையை
Down in adoration falling,
Lo! the sacred Host we hail,
Lo! oe’r ancient forms departing
Newer rites of grace prevail;
Faith for all defects supplying,
Where the feeble senses fail.
தமிழில்…
மாண்புயர் இவ்வருள் அனுமானத்தைத்
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக.
அதுவும் அந்தக் கடைசி மூன்று வரிகள் போதும். இதைத்தான் இலக்கியம் செய்கிறது.
அதேபோல கதையின் ஆன்மா என்று நான் குறிப்பிட்ட இடத்தில் ஒரு ‘பேரன்பு’ வெளிப்படுவதையும் கவனித்தேன். நீங்கள் அடிக்கடி சொல்வதுபோல ‘அன்பு’ எப்படியெல்லாம் கொலை செய்கிறது என்பதை கவனித்தேன். நான் அன்புக்கு எதிரானவன் அல்ல. கிரேக்க மொழியில் அன்பு என்ற சொல்லுக்கு எனக்குத் தெரிந்த அளவில் மூன்று சொற்கள் இருக்கின்றன. அதில் இயேசுவும் சித்தர்களும் சூஃபி ஞானிகளும் விட்டுச்சென்ற அன்பு Agape. கொலை செய்யும் அன்பை போன்றதல்லாமல் சுதந்திரமானது அந்த அன்பு. ‘க்ரனாடா’ கதையில் சலீமா கழுமரத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படும்போது அந்த அன்பைத்தான் மௌனமாக போதிக்கிறாள். மிகவும் அற்புதமான கதை.
கதையில் ‘அகாபிதா’ என்ற வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை. நேரம் கிடைக்கும்போது தெளிவுபடுத்துங்கள்.
வளன்
***
அன்புள்ள சாரு அப்பாவிற்கு,
நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று ஒரு ஆசை உண்டானது. காரணம் பூச்சி.
பூச்சி தொடரைத் தவறாமல் படித்து வருகிறேன்.
பாத்திரம் தேய்ப்பதில் தொடங்கி மிஷல் ஃபூக்கோவை எவ்வாறு அணுக வேண்டும் என்பது வரை ஒரு மனிதன் எழுத முடியுமா? அதுவும் சுவாரசியமாக? முடியும், அது என் இலக்கியத் தந்தையால்.
நான் ஓஷோவின் புத்தகத்தில் படித்த வரி ஒன்றை இங்கே கூற விரும்புகிறேன். See things as they are. அந்த வரியை வாசித்ததோடு சரி, அதை வாழ்வில் பயன்படுத்துவதைப் பற்றி நினைத்தது கூட இல்லை. பின்னாளில் முயற்சிக்கவும் முடியவில்லை. ஆனால் ஒரு ஆன்மிகத் தேடலில் கிடைக்காத ஒன்று என் வாழ்வில் ஒரு எழுத்தாளரிடமிருந்து கிடைத்தது என்பதுதான் உண்மை.
உங்களை நோக்கி என்னை ஈர்த்த உங்கள் எழுத்து எனக்கு போதித்த பாடம் அந்த வரிகள்தான். முக்கியமாக பூச்சி தொடர் மீண்டும் மீண்டும் எனக்கு அதை உரக்க சொல்லிக்கொண்டே இருந்தது. ஜீவகாருண்யம், மத நம்பிக்கை, தனிமைப்படுத்தப்பட்ட வெகுஜன மனோபாவம் போன்ற தலைப்பில் எழுதிய மற்றும் விவாதித்த உங்கள் கட்டுரைகள் கூறுவது ஒன்றுதான்.
சாரு என்ற மனிதனின் தனிப்பட்ட கருத்து அல்ல அவை. அவை அனைத்தும் இருத்தலியல் உண்மையென்று (existential truth) தான் கூற வேண்டும். அதையும் ரசிக்கும் மற்றும் எளிதாக விளங்கிக்கொள்ளும் வகையில் கற்பிக்கும் ஆசான்தான் நீங்கள்.
வாழ்வின் சாரத்தை அடியோடு உறிஞ்சும், நம்மையும் நம் உணர்ச்சிகளை அடிமைப்படுத்தும் உத்தியோகத்தையும் பணத்தையும் பெரிதென நினைக்கும் கூட்டத்தின் நடுவே வாழ்கிறோம். இவர்களுக்கு இடையிலிருந்துகொண்டு பார்க்கையில் எனக்கு உங்கள் எழுத்து ஒரு கலங்கரை விளக்கம். ஆன்மிகம் கூட ஒரு புள்ளிக்கு மேல் வியாபாரமாக மாறிவிடுகிறது அப்படி மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. வெகுஜனக் கூட்டத்திலிருந்து அகதியாக வெளியேறுபவர்களுக்கு எழுத்தாளன் மட்டும்தான் தன் தோணியுடன் மறுகரைக்கு அவர்களைக் கூட்டிச்செல்லக் காத்துக்கொண்டிருக்கிறான். அப்படிப் பட்ட அகதி எனக்கு உங்கள் தோணியில் இடம் கொடுத்ததற்கு நன்றி என்ற வார்த்தை போதாது.
See things as they are. அது வாக்கியம் அல்ல, அறிவு அல்ல, அது ஒரு உணர்தல். அது உங்கள் எழுத்து மூலம் எனக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கிறது.
உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
முடிப்பதற்கு முன், வெறும் ABCD சொல்லிக் கொடுப்பதற்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவு செய்யும் பெற்றோர்களில் நானும் ஒருவன். அப்படி இருக்கையில் ஒரு ஆண்டு முழுவதும் உட்கார்ந்து படித்தால் கூட உங்கள் எழுத்தில் உள்ள தகவல்களை அறிவது கடினம். ஆகையால் எனக்கு நானே மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன். இது இலவசமாகப் படிக்கும் எழுத்து அல்ல. மூன்று மாதத்திற்கு உரிய சந்தா கட்டிவிட்டேன். வரும் மாதங்களில் அதைக் கண்டிப்பாகத் தொடர்வேன்.
I will always pray for your good health and your family!
இப்படிக்கு உங்கள் அன்பான வாசகன்,
கார்த்திக்.